Published:Updated:

`தட்கல் திட்டத்தால் எங்களுக்கு பாதிப்புதான்!’ - இலவச மின் இணைப்பு பற்றி விவசாயிகள் வருத்தம்

``தமிழ்நாடு மின்சார வாரியம், மறைமுகமாக தட்கல் திட்டத்தை ஊக்கப்படுத்துகிறது. மேலும், இதற்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து விவசாயிகளுக்கு உணர்த்துகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விவசாய மின் இணைப்பு வழங்குவதில், ஏற்கெனவே பதிவு செய்து காத்திருக்கும் சிறு, குறு ஏழை விவசாயிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் எனவும், தட்கல் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் பணம் செலுத்தி உடனடியாக மின் இணைப்பு பெறும் திட்டத்தை, தமிழக அரசு ஊக்கப்படுத்தக் கூடாது எனவும் விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

தட்கல் திட்டத்தின்கீழ், விவசாய மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் (விநியோகம்) சிவலிங்கராஜன், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ``விரைவு மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின்கீழ், வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏற்கெனவே மின்இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளவர்கள், தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பினால், அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

விவசாயம்
விவசாயம்
மின் இணைப்புக்காக காத்திருக்கும் 4.23 லட்சம் விவசாயிகள்; நாளையேனும் அறிவிப்பு வருமா?

இத்திட்டத்தின்கீழ், முற்றிலும் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்படும். இது, ஏற்கெனவே மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களின் பதிவு மூப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. தாழ்வழுத்த பிரிவில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் அதிகபட்சமாக 15 குதிரைத்திறன் வரையுள்ள மோட்டார் மின் இணைப்பு விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், 5 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.5 லட்சம், 5 முதல் 7.5 குதிரை திறனுக்கு ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத்திறனுக்கு ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சம் எனக் கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஒருமுறை கட்டணம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். தட்கல் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே பரிசீலனை செய்ய வேண்டும். இணைப்பு வழங்குவதற்கான திட்ட மதிப்பீடு, பணியைச் செயல்படுத்துதல், கெப்பாசிட்டருடன் கூடிய மோட்டார் பம்ப் செட் தயார்நிலையில் இருப்பதை, மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``தமிழ்நாடு மின்சார வாரியம், மறைமுகமாக தட்கல் திட்டத்தை ஊக்கப்படுத்துகிறது. மேலும், இதற்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து விவசாயிகளுக்கு உணர்த்துகிறது.

சுகுமாறன்
சுகுமாறன்

ஏராளமான சிறு, குறு விவசாயிகள் சாதாரண மற்றும் சுயநிதி திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்புக்காகப் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இவர்களுக்குதான் முன்னுரிமை தர வேண்டும். இவர்கள் தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதென்பது சாத்தியமில்லாதது.

குறைந்தபட்சம் 5 ஹெச்.பி மோட்டாருக்கு மின் இணைப்பு பெற தட்கல் திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை. பெரும் பணக்கார விவசாயிகள் குறிப்பாக, மற்ற துறைகளில் இருந்துகொண்டு, கூடுதல் தொழிலாக விவசாயம் பார்க்கக்கூடிய பணக்காரர்கள் மிக எளிதாக தட்கல் திட்டத்தின் மூலம் பலன் அடைந்துவிடுவார்கள். அந்தத் திட்டத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்துவெதென்பது, ஏழை விவசாயிகள், விவசாயமே பார்க்க வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது.

`ஒரே அறிவிப்பில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்; இதுதான் முதல் முறை!' - நெகிழும் விவசாயிகள்

தட்கல் திட்டத்தை ஊக்கப்படுத்தினால், விவசாய மின் இணைப்புக்காகப் பதிவு செய்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் சிறு, குறு ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளில் அதிகபட்சம் 10 சதவிகிதம் மட்டுமே தட்கல் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு