Published:Updated:

காய்க்காத நெல்லிக்கு நம்மாழ்வார் சொல்லிய தீர்வு!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

காய்க்காத நெல்லிக்கு நம்மாழ்வார் சொல்லிய தீர்வு!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘எங்கள் தோட்டத்தில் 5 வருஷம் ஆன நெல்லி மரங்கள் உள்ளன. ஆனால், இவை இன்னும் காய்க்கவில்லை. என்ன காரணம், காய்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?’’

டாக்டர் டி.அருள்மொழிவர்மன், முசிறி.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மனோகரன் பதில் சொல்கிறார்.

‘‘உங்களைப் போலவே என் தோட்டத் திலிருந்த நெல்லி மரங்களும் காய்க்காமலிருந்தன. 2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என் வாழ்கையில் மறக்க முடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டு கோளுக்கு இணங்க பண்ணைக்கு வந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா. என் ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்துச் சுற்றிப் பார்த்தார். ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்குச் சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பாருங்க...

நெல்லி
நெல்லி

மலைப்பயிர்கள் இயற்கையாக வளரக்கூடியவை. உரம், தண்ணீர் தேவையில்லை. காய்ச்சலும் பாய்ச்சலுமான பாசனம்தான் அதற்கான தொழில்நுட்பம். அதோடு மழைக்காலத்துக்கு முன்பாக ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 25 கிலோ ஆட்டு எருவைக் கொட்டி, அது மேல வளமான செம் மண்ணைக் கொட்டி மூடி விடணும். 2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தைச் சுற்றிலும் நேரடியாக ஊற்றணும். வருஷத்துக்கு இரண்டு முறை இதைச் செய்து பார்த்துட்டு என்கிட்ட சொல்லுங்க’னு சொன்னார். அதே போல செய்தேன் நெல்லிக்காய் காய்த்து, குலுங்கியது. இப்போதும் அந்த நெல்லி மரங்கள் நன்றாகக் காய்த்து வருகின்றன. தற்போது கூடுதலாக இன்னொரு தொழில் நுட்பத்தையும் பின்பற்றி வருகிறேன். பூ எடுப்பதற்கு முன்பு 10 லிட்டர் நீரில் 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்கிறேன். இதன் மூலம் நெல்லி மரங்களில் காய்ப்புத்திறன் கூடி வருகிறது. பொதுவாக நெல்லி காய்க்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கும். ஒன்று சத்துப் பற்றாக்குறை. இரண்டாவது, ஒரே ரகத்தைச் சாகுபடி செய்தால் அயல் மகரந்த சேர்க்கை ஏற்படாது. எனவே, மூன்று ரகங்களைக் கலந்து நடவு செய்ய வேண்டும்.

நன்றாகப் பராமரிப்பு செய்தால் 3-ம் ஆண்டிலிருந்து பூ எடுக்க ஆரம்பிக்கும். நெல்லிக்குப் பட்டம், பருவம் இல்லை. ஆண்டு முழுக்கவே காய்க்கும். பருவமழை முடிந்தவுடன் அதிகமா பூ எடுக்கும். அந்தச் சமயத்தில் நீர்ப் பாசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும். இந்தத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றினாலே, உங்கள் நெல்லி மரங்கள் காய்க்கத் தொடங்கிவிடும்.’’

தொடர்புக்கு,

மனோகரன், செல்போன்: 94430 08689.

மனோகரன், ரம்யா
மனோகரன், ரம்யா


‘‘எங்கள் வீட்டுத்தோட்டத்தில் அணில் தொல்லை அதிகமாக உள்ளது. காய்களைக் கடித்துவிடுகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?’’

பார்த்தசாரதி, சென்னை.

சென்னையைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆர்வலரும் ஆலோசகருமான ரம்யா பதில் சொல்கிறார்.

‘‘நகரத்தில் வீட்டுத்தோட்டம் வைத்துள்ள வர்களுக்கு அணில் தொல்லை என்பது வழக்கமானதுதான். என் வீட்டுத்தோட்டத்தில் 500 செடிகள் உள்ளன. ஆரம்பகாலத்தில் அணில் களைக் கண்டால், கோபம், கோபமாக வரும். ஆசையாக வளர்க்கும் காய்கறிச் செடிகளில் ஒரு காயை விடாது. கடித்து, கடித்துப் போட்டுவிடும். நண்பர் களிடம் ஆலோசனை கேட்டேன். பழைய சி.டி டிஸ்கை கட்டித் தொங்கவிடச் சொன்னார்கள். உடனே, இதைச் செய்தேன். என்ன ஆச்சர்யம். அந்தப் பக்கம் அணில்கள் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், என் மகிழ்ச்சி சில மாதங்கள்தான் நீடித்தது. மீண்டும், அணில்கள் வரத்தொடங்கிவிட்டன. அடுத்து, செடிகள் மீது, துணிகளைக் கட்டி விடச் சொன்னார்கள். இதுவும் சில மாதங்களுக்குத்தான் பலன் அளித்தது. காரணம், நாம் என்ன செய்து வைத்தாலும் அணில்கள் அதற்குப் பழகிக் கொண்டு, வீட்டுத்தோட்டத்துக்கு வரத்தொடங்கின.

அணில்
அணில்

கடைசித் தீர்வாக, அணில்களுக்கு எனத் தினமும் மீதமான சோறு, அரிசி, பருப்பு... போன்ற உணவுப் பொருள்களை ஓர் இடத்தில் வைக்கத் தொடங்கினேன். இந்த உணவைத் தின்றுவிட்டு அணில்கள் ஓடிவிடுகின்றன. இதன் பிறகு, வீட்டுத்தோட்டத்தில் ஒரு காயில்கூடச் சேதம் ஏற்படவில்லை. நகரத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காத காரணத் தால்தான், வீட்டுத்தோட்டத்தில் உள்ள காய்களைக் கடிக்கின்றன. அவற்றுக்கு உணவு கொடுத்துவிட்டால், நிச்சயம் பிரச்னை தீரும். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை. என் தோழி ஒருவர் அணில்களை விரட்ட ஒரு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறார். அதாவது, ஒரு கைப்பிடி அளவுக்குப் பூண்டை எடுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து குலுக்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தண்ணீரை வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகள் மீது தெளித்து வந்தால் ஓர் அணில்கூட அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என்று சொன்னார். ஆகையால், அணில்களுக்கு உணவுக் கொடுக்கலாமா, பூண்டு கரைசலை தெளிக்கலாமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.’’

தோட்டம்
தோட்டம்‘‘எங்கள் பட்டா நிலத்தில் உள்ள தேக்கு மரங்களை விற்பனை செய்ய விரும்புகிறேன். இதற்கு வனத்துறையில் அனுமதி வாங்க வேண்டுமா?’’

எஸ்.ரமேஷ், தேவக்கோட்டை.

‘‘தேக்கு என்பது வனத்துறையின் பட்டி யலில் உள்ள மரம். பட்டா நிலத்தில் உள்ள தேக்கு மரங்களை வெட்டுவதாக இருந்தால் 15 நாள்களுக்கு முன்பு உங்கள் மாவட்ட வனப் பாதுகாவலருக்குத் தகவல் சொல்ல வேண்டும். வெட்டிய மரங்களை இருப்பு வைக்கச் சொத்து உரிமை குறியீடு பெற வேண்டும். வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வாகனத்தில் கொண்டு செல்லவும் அனுமதி பெற வேண்டும். இதற்காக வனத் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். தமிழ்நாடு வனத் துறையின் இணையதளத்தில் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்தால் போதும், வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு, அனுமதி வழங்குவார்கள். இந்த நடை முறையைப் பின்பற்றாமல் தேக்கு மரங்களை விற்பனை செய்தால், அது வனத்திலிருந்து வெட்டப்பட்ட தேக்கு மரம் என்று குற்றம்சாட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது, எனவே, ஆன்லைன் மூலம் அனுமதி பெற்று உங்கள் தேக்கு மரங்களை விற்பனை செய்யவும்.’’

தமிழ்நாடு வனத்துறையின்
இணையதள முகவரி:

www.forests.tn.gov.in