Published:Updated:

சூப்பர் நேப்பியர் புல்லில் ஆக்ஸாலிக் ஆசிட்... கால்நடைகளுக்கு ஆபத்தா?

நீங்கள் கேட்டவை

பிரீமியம் ஸ்டோரி

‘‘சூப்பர் நேப்பியர் புல்லில், மாடுகளைப் பாதிக்கும் ஆக்ஸாலிக் ஆசிட் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?’’

கே.சரஸ்வதி, திருச்செங்கோடு.

நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத்துறை தலைவர் முனைவர் ந.அகிலா பதில் சொல்கிறார்.

`` தாய்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதியான பசுந்தீவன புல் ரகம் சூப்பர் நேப்பியர். `இந்தப் புல் வளர்ந்தால், நன்றாகக் கிளை வெடித்து, அடர்த்தியாக வளர்கிறது. இனிப்புத் தன்மை இதில் அதிகமாக உள்ளது. இதனால், மாடுகள் பால் அதிகம் கொடுக்கிறது’ என்று விவசாயிகளே புகழ்ந்து பேசியதைப் பார்த்துள்ளேன். குறிப்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளில் இதைப் பரவலாகச் சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தீவனப்புல்
தீவனப்புல்

பொதுவாக எந்த ரகப் பசுந்தீவனமாக இருந்தாலும் முதல் அறுவடையை 75-90 நாள்களில் முடிக்க வேண்டும். அடுத்து, 45 நாள்களுக்கு ஒரு முறை தீவனத்தை அறுவடை செய்ய வேண்டும். இப்படி அறுவடை செய்து கொடுக்கும் தீவனத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆக்ஸாலிக் ஆசிட் உருவாகாது. வயது முதிர்ந்த புல்லைக் கொடுக்கும்போது, அதில் ஆக்ஸாலிக் ஆசிட் அதிகமாக உருவாகி, மாடுகளின் உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும், நம் விவசாயிகள் தேதி குறித்து வைத்துக்கொண்டு 45 நாள்களுக்கு ஒரு முறை தீவனத்தை அறுவடை செய்யமாட்டார்கள். இதற்குத் தீர்வாக, மாதம் ஒரு முறை நீர்த்த சுண்ணாம்பு கரைசலை 1 லிட்டர் அளவில், ஒரு மாட்டுக்குக் கொடுக்கலாம். கால்சியம் டானிக்கும் கொடுக்கலாம். வயது அதிகமான முற்றிய புல்லை கொடுக்கும்போது, தண்டுப்பகுதியைக் கட்டாயம் கொடுக்கக் கூடாது. மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கோ-4, கோ-5 ரகப் பசுந்தீவனத்தைக் கூட முற்றிய நிலையில் கொடுத்தாலும் ஆக்ஸாலிக் ஆசிட் உருவாகும்.

முனைவர் ந.அகிலா
முனைவர் ந.அகிலா


ஆகையால், சரியான நேரத்தில் பசுந்தீவனத்தை அறுவடை செய்ய வேண்டும். வயது முதிர்ந்த தீவனத்தைக் கொடுத்தால், சுண்ணாம்புக் கரைசலைக் கொடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக் கூடாது. சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் கொடுப்பதால், மாடுகளுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சி, தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. அதன் முடிவு தெரிய சில மாதங்கள் ஆகும்.’’


‘‘எங்கள் நெல் வயலில் ஒவ்வொரு முறையும் பழ நோய் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?’’

ம.கார்த்திகேயன், ஶ்ரீரங்கம்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை விஞ்ஞானி முனைவர் முரளி அர்த்தநாரி பதில் சொல்கிறார்.

‘‘இந்த நோய் பூஞ்சணத்தால் உண்டாகிறது. முதலில் நெற்கதிரின் ஒரு சில நெல்மணிகளில் மட்டும் காணப்படும். பாதிக்கப்பட்ட நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறி, மிருதுவான பந்து போன்று 1 செ.மீ அளவுக்கு வளரும். நெல் மணிகள் முதிர்ச்சி அடையும் போது, கரும்பச்சை நிறமாக மாறும். தற்போது, இந்நோய் வேகமாகப் பரவி கணிசமாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இது பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை எளிதாகத் தாக்கும் தன்மை கொண்டது. அதிகமான மழையின்போதும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போதும், இதன் தாக்குதல் கூடுதலாக இருக்கும். வேகமாகக் காற்று வீசும்போது, பக்கத்திலுள்ள வயல்களுக்கு நோய் பரப்பும் பூஞ்சணம் எளிதில் பரவும்.

புறா பாண்டி
புறா பாண்டி


பொதுவாகப் பின்பருவ (Late Season) பயிரில், இதன் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நெல் மணிகளை நோயின் ஆரம்ப நிலையில் அழிக்க வேண்டும். இதனால், அருகில் உள்ள நெற்பயிர்களுக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம். ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் தழைச்சத்தைப் பிரித்து, இடைவெளி விட்டு இட வேண்டும். ஆண்டுதோறும் நோய் தாக்குதல் ஏற்படும் இடங்களில் முன் பருவத்தில் (Early Season) நடவு செய்ய வேண்டும். அறுவடைக்கு முன்பு பழ நோய் பாதிக்கப்பட்ட மணிகளைப் பிரித்து எடுத்து அழிக்க வேண்டும். இதன் மூலம் நெல் பழ நோயினைக் கட்டுப்படுத்த முடியும்.’’


‘‘வீரிய ஒட்டுரக ஆமணக்கு விதைகள் எங்கு கிடைக்கும். இறவை மற்றும் மானாவாரியில் விதைக்கலாமா?’’

பழனிமுத்து, அரியலூர்.

‘‘வீரிய ஒட்டு ரக ஆமணக்கு இறவை மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். நிலக்கடலை, உளுந்து, வெள்ளரி, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராகவும் பயிரிட்டுக் கூடுதல் வருமானம் பெறலாம். இதன் மூலம் பிரதானப் பயிர்களில் பூச்சித் தாக்குதலை வெகுவாகக் குறையும். வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்களைப் பொருத்தமட்டில், செடியிலுள்ள கிளையின் தன்மை, தண்டின் நிறம், சாம்பல் பூச்சு, காய்களின் தன்மை மற்றும் வயது ஆகியவை ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

ஆமணக்கு விதைகள்
ஆமணக்கு விதைகள்

அதிக விளைச்சல் தரக்கூடிய ஒய்.ஆர்.சி.எச்-1 (YRCH-1), டி.சி.எச்-519 (DCH-519) மற்றும் ஜி.சி.எச்-4 (GCH-4) ஆகிய ஆமணக்கு ரகங்களைக் கொண்டு தனிப்பயிராகச் சாகுபடி செய்யும்போது, ஏக்கருக்குச் சராசரியாக 1,500 கிலோ வரை இறவையிலும், 1,000 கிலோ வரை மானாவாரியிலும் விளைச்சல் பெறலாம். வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்கள் 150-170 நாள்களுக்குள் அறுவடை முடிந்துவிடும். முதல் அறுவடை, விதைத்த 90-ம் நாளும், இரண்டாவது அறுவடை 120-வது நாளும், கடைசி அறுவடை 150-வது நாளும் செய்யலாம். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள் கிடைக்கும்.’’

தொடர்புக்கு:

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஏத்தாப்பூர்,

சேலம் மாவட்டம் - 636 119.

தொலைபேசி: 04282 293526/221901.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு