நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

கொடுக்காப்புளியை தனிப்பயிராகச் சாகுபடி செய்யலாமா?

 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘எங்கள் வாழைத் தோட்டத்தில் தண்டு துளைப்பான் தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது எப்படி?’’

ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம்.

கரூர் மாவட்டம், பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி கோபால கிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

‘‘இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தோட்டங்களில் தண்டு துளைப்பான் பெரும்பாலும் தாக்காது. ரசாயனங்களை அள்ளிக் கொட்டப்படும் தோட்டங்களில் இதன் சேதம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, நேந்திரன், கற்பூரவள்ளி, ரொபஸ்டா, ரஸ்தாளி ரகங்களில் அதிகம் பாதிக்கிறது. தண்டு துளைப்பான் வண்டுகள் ஐந்து முதல் ஏழு மாத வயதுள்ள வாழைத் தண்டை விரும்பி உண்ணும். தண்டில் வட்ட வடிவில் ஓட்டை போட்டு, தண்டுப் பகுதியைப் பாதிக்கும். சேதப்படுத்தப்பட்ட தண்டின் வழியாக நீர் மற்றும் சத்துகள் மரத்தின் மேல்பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுவதால், இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மரங்களின் அருகில் சென்றால் துர்நாற்றம் வீசும். இதனால் மகசூல் இழப்பும் ஏற்படும்.

கோபால கிருஷ்ணன்
கோபால கிருஷ்ணன்


இதை இயற்கை முறையிலான தொழில் நுட்பத்தை வைத்து எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். வாழையின் தண்டிலிருந்து பிசின் போன்ற திரவம் வெளிவருவது, தண்டு துளைப்பான் வண்டு தாக்குதலின் ஆரம்ப அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் காணப் பட்டால், வண்டுப் பொறி தயாரித்துக் கட்டுப்படுத்தலாம். இதற்கு வாழைத்தண்டை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதை இரண்டாகப் பிளக்க வேண்டும். அடுத்து, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, வாழை மரங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். இப்படி ெஹக்டேருக்கு, 100 வாழைத்தண்டு பொறிகள் வைக்கலாம். நாம் வெட்டி வைத்துள்ள வாழைத்தண்டில் தண்டு துளைப்பான் வண்டுகள் வந்து உண்ணும். இதைச் சேகரித்து அழித்து விட வேண்டும்.

அடுத்து, பவேரியா பேசியானா என்ற உயிர் பூஞ்சணத்தை, தண்டுப் பொறியின் மீது தூவியும் வைக்கலாம். இந்தத் தண்டுகளை உண்ணும் வண்டுகள், உடனே இறந்துவிடும். மேலும், இந்த உயிர் பூஞ்சணத்தை ஏக்கருக்கு மூன்று கிலோ அளவில் தொழுஉரத்தில் கலந்தும், வாழைக்கு வைக்கலாம். இதன் மூலம் வாழையைச் சேதப்படுத்தும் தண்டு துளைப்பான் வண்டுகளைக் கட்டுப்படுத்த முடியும்.’’

தொடர்புக்கு, கோபாலகிருஷ்ணன், செல்போன்: 94431 48224

விவசாயம்
விவசாயம்


‘‘கொடுக்காய்ப்புளியைத் தனிப்பயிராகச் சாகுபடி செய்வது எப்படி? கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

எஸ்.சிபி, சூலூர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொடுக்காய்ப்புளி விவசாயி கிருஷ்ணசாமி பதில் சொல்கிறார்.

‘‘கொடுக்காய்ப்புளி, அனைத்து வகையான மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண் சரளை நிலங்களில் நன்றாக வளரும். நடவு செய்யவுள்ள நிலத்தில் மூன்று அடி நீளம், அகலம், ஆழத்தில் குழியெடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குழியில் இரண்டடி உயரத்துக்கு வண்டல், குப்பை எருவைப் போட்டு குழியை ஒருமாதம் ஆறவிட வேண்டும். அதற்குப் பிறகு, செடியை நடவு செய்து, தண்ணீர் பாய்ச்சலாம். மானா வாரியிலும் வளரும், என்றாலும் தண்ணீர் வசதி இருந்தால் மகசூல் கூடுதலாகக் கிடைக்கும். கொடுக்காய்ப்புளி நடவுக்குப் புரட்டாசி, ஐப்பசி (செப்டம்பர், அக்டோபர்) மாதங்கள் ஏற்றவை. இந்த மாதங்களில் நடவு செய்தால், தொடர்ந்து கிடைக்கும் மழையில் செடி வளர்ந்துவிடும். ஒவ்வொரு குழிக்கும் முப்பது அடி இடைவெளி இருக்க வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 50 செடிகள் வரை நடலாம். இதில் எந்த விதமான பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படுவ தில்லை. நடவு செய்த ஆறாவது மாதத்தி லிருந்து பூக்கள் வரும். அவற்றை உதிர்த்து விட வேண்டும். அப்போதுதான் மரம் பருமனாகவும் வலுவானதாகவும் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பூக்களை அனுமதித்தால், இரண்டாவது ஆண்டி லிருந்து கொடுக்காய்ப்புளி மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி, ஏப்ரல் மாதம்வரை கொடுக்காய்ப் புளியின் மகசூல் காலம்.

புறாபாண்டி
புறாபாண்டி


ஆண்டுக்கு இரண்டு முறை, மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழு உரம் கொடுத்தால் போதும். காய்ப்பு வரும் நேரத்தில் ஜீவாமிர்தம், அமுதக் கரைசல், ஹுயூமிக் ஆசிட்... என்று ஏதாவது ஒரு வளர்ச்சி ஊக்கியை நீரில் கலந்து விட்டால் போதும். நான்காவது ஆண்டிலிருந்து ஒருமரத்தில் 50 முதல் 100 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ குறைந்தபட்சமாக 150 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. இதன்படி மரம் ஒன்றுக்கு 50 கிலோ காய்கள் என்று வைத்துக்கொண்டாலே 7,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஏக்கருக்கு 3,75,000 ரூபாய் கிடைக்கும். செலவு 75,000 ரூபாய் போனாலும், 3,00,000 ரூபாய் லாபம் கிடைக்கும். கொடுக்காய்ப்புளியை தனிப்பயிராகத்தான் என்று இல்லை. வரப்பு ஓரங்களிலும் ஊடுபயிராகவும்கூட சாகுபடி செய்யலாம். இவ்வளவு லாபம் கிடைக்க வேண்டும் என்றால், தரமான ஒட்டுக்கன்று வாங்கி நடவு செய்ய வேண்டும். இந்தக் கன்றுகள் நன்றாகவும் காய்க்கும். பழங்களும் ருசியாக இருக்கும். தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் கொடுக்காய்ப்புளி ஒட்டுக் கன்றுகள் கிடைக்கும். இங்கு விவசாயிகளைவிட நர்சரிக்காரர்கள்தான், கொடுக்காய்ப்புளி கன்றுகளை அதிக அளவு வாங்கிச் சென்று வெளியில் விற்பனை செய்கிறார்கள். ஆகையால், தோட்டக்கலைக் கல்லூரியில் எப்போது கன்று கிடைக்கும் என்று விசாரித்து வைத்துக் கொள்ளவும். உடனடியாகக் கன்றுகள் தேவை என்றால், தனியார் நர்சரிகளில் வாங்கியும் பயன்படுத்தலாம். விலை சற்றுக் கூடுதலாக இருக்கும்.’’தொடர்புக்கு:

1. கிருஷ்ணசாமி, செல்போன்: 94892 50517.

2.தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்,

தேனி மாவட்டம்

தொலைபேசி: 04546 - 231726.

‘‘விவசாயத்துடன் தேனீ, காளான் வளர்ப்பு என்று பண்ணைத் தொழில்களையும் செய்ய விரும்புகிறேன். இதற்கான வழிகாட்டுதல் எங்கு கிடைக்கும்?’’

அ.தேன்மொழி, பவானி.

‘‘ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மைராடா- வேளாண் அறிவியல் நிலையத்தில் ‘வேளாண் தொழில் முனைவோர் சேவை மையம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு சென்றால், உங்களின் வசதி, வாய்ப்புகளுக்குத் தக்கப்படி எந்தப் பண்ணைத் தொழில் ஏற்றது என்ற ஆலோசனை வழங்குவார்கள்; அதற்கான பயிற்சியையும் கொடுப்பார்கள்.’’

தொடர்புக்கு:

வேளாண் தொழில்முனைவோர் சேவை மையம், வேளாண் அறிவியல் நிலையம்,

272, பெருமாள் நகர், புதுவள்ளியாம்பாளையம் ரோடு, கோபிசெட்டிபாளையம்-638453.

செல்போன்: 84899 39504.