Published:Updated:

காய்க்காத எலுமிச்சைக்கு காரணம் என்ன?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

காய்க்காத எலுமிச்சைக்கு காரணம் என்ன?

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘என் தோட்டத்தில் 20 எலுமிச்சைச் செடிகளை நடவு செய்துள்ளேன். அதன் வளர்ச்சி சரியாக இல்லை, காய்ப்புக்கும் வரவில்லை என்ன காரணம்?’’

மா.தங்கராஜ், அறந்தாங்கி.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி எலுமிச்சை விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணி சாமி பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய அனுபவத்தில் ஒட்டுக்கட்டப்பட்ட எலுமிச்சை ரகங்கள் இரண்டு வருடங்களில் காய்ப்புக்கு வரவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஒன்றுதான் இருக்க முடியும். எலுமிச்சையின் தாய்ச் செடிகள் காட்டுப் பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகத்தைத் தேர்வு செய்திருப்பார்கள். இதன் மேல்பகுதியில் ஒட்டுக்கட்டும் ரகம்தான் நல்ல விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சைச் செடிகளை நடவு செய்தவுடன் அடியில் உள்ள தாய்ச்செடிகளை வளரவிடக் கூடாது. அப்படி வளரவிட்டால், ஒட்டுக்கட்டப்பட்ட பகுதியில் உள்ள செடி வளராமல், தாய்ச்செடி வளர்ந்துவிடும். இதனால், செடியும் காய்ப்புக்கு வராது. இது எலுமிச்சைக்கு மட்டுமல்ல; மா, சப்போட்டா... என ஒட்டுக் கட்டப்படும் அனைத்துச் செடிகளுக்கும் பொருந்தும். ஒட்டுச்செடிகள் நடவு செய்பவர்களுக்கான பாலபாடம் இது.

எலுமிச்சைத் தோட்டம்
எலுமிச்சைத் தோட்டம்


மேலும், ஒட்டு ரக எலுமிச்சையை நடவு செய்த ஒரு வாரம் வரை, செடியின் அடிப் பகுதியைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்துப் பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மி.லி வேப்ப எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை இப்படிப் பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

அவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் மூட்டிலிருந்து ஓர் அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. நல்ல ரகமாக இருந்தால் ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு 200 காய்களுக்கு மேல் கிடைக்கும். ஒரு வேளை உங்கள் தோட்டத்தில் உள்ள எலுமிச்சைச் செடிகளில், தாய்ச்செடிகள் தழைத்து வந்திருந்தால், அதை வெட்டி எறிந்துவிட்டு, புதிய செடிகள் நடுவதுதான் சிறந்தது.’’

தொடர்புக்கு, அந்தோணிசாமி,

செல்போன்: 99429 79141.


‘‘எங்கள் தோட்டத்தில் பார்த்தீனியம் களைச் செடி அதிகமாக உள்ளது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

கே.பாஸ்கரன், உடுமலைப்பேட்டை.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மது.ராமகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.

அந்தோணிசாமி, மது.ராமகிருஷ்ணன்
அந்தோணிசாமி, மது.ராமகிருஷ்ணன்


‘‘பார்த்தீனியம் வேகமாகப் பெருக்கமடையும் களைச்செடி, தட்ப வெப்ப மாறுதல்கள் அவற்றைப் பெரிதும் பாதிப்பதில்லை. நேரடியாகப் பார்த்தீனியத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் வழி கண்டு பிடிக்கப்படவில்லை.

அதை அழிக்க நடந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியை, அதைப் பயன்படுத்துவதற்குச் செய்திருந்தால், ஓரளவு நன்மை கிடைத்திருக்கும்.

மண்புழுக்களுக்கு ஈடாக, உலகில் பயனுள்ள ஜீவன்கள் ஏதுமில்லை என, விஞ்ஞானம் பதிவு செய்துகொண்டே இருக்கிறது. மனிதர்களின் பல்வேறு தவறுகளால் மண்புழுக்களின் பெருக்கம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மண்ணில் மண்புழுக்களும் நுண்ணுயிர்களும் இல்லாது போனால், விவசாயம் இல்லாமல் போய்விடும். இதைத்தடுக்க மண்ணுயிர் களுக்குத் தாவர, விலங்குகளின் கழிவுகளை உணவாகக் கொடுக்கலாம். இதற்குப் பார்த்தீனியத்தை உணவாகக் கொடுக்கலாம்.

பார்த்தீனிய செடிகளை வேறோடு பறித்து, நிழல்படும்படியான மண் தரையில் மொத்தமாகக் குவித்து, சாணத்தைக் கரைத்து அதன் மீது தெளிக்க வேண்டும். தென்னை ஓலைகளால் மூடி வைக்க வேண்டும். காய்ந்து போகாமல் இருக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்து வர வேண்டும். சாண வாசனைக்கு நிலத்தில் உள்ள மண்புழுக்கள் இங்கே வந்துவிடும். இதன் மூலம், 90 நாள்களில் பார்த்தீனிய செடிகள் அனைத்தும் மண்புழு உரமாக மாறிவிடும். இச்செடி கிடைக்காத சமயத்தில், மண்புழுக்களுக்குத் தீனி தயாரிக்கக் கூடுதல் செலவாகிறது.

பார்த்தீனியம்
பார்த்தீனியம்


மழை பெய்த மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் செடிகளை வேரோடு பறிப்பது சுலபம். பார்த்தீனியம் செடிகளை அகற்ற களை எடுக்க வேண்டும்; களை வெட்டுதல் கூடாது. நிலத்தைச் சுத்தப்படுத்தும்போது, சிறிதளவு பார்த்தீனியத்தை விட்டு வைத்தாலும் முற்றிலும் பரவிவிடும். விதைகள் முதிர்வதற்குள் முற்றிலும் அகற்றி விட வேண்டும். இந்த முறையை மீண்டும், மீண்டும் செய்தால், பார்த்தீனியம் செடிகள் நிலத்தில் வளர்வதைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இயற்கை சமன்பாடு எல்லை தாண்டும் போது, சமநிலையை உண்டாக்க இயற்கை எப்போதும், வழி வைத்திருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறிப்பாகக் கொய்யா, செம்பருத்திச் செடிகளில் இருந்த கள்ளிப்பூச்சி, சில ஆண்டுகளுக்கு முன் அதிகமாகப் பரவி பப்பாளி, மல்பெரி, குதிரைமசால் உள்ளிட்ட பயிர்களை அதிகமாகப் பாதித்தது. இந்தப் பாதிப்பு பார்த்தீனிய செடிகளையும் விட்டு வைக்கவில்லை. சில பகுதிகளில் கள்ளிப் பூச்சிகள் தாக்குதல் மூலம் பார்த்தீனியம் செடிகளின் வளர்ச்சி கட்டுக்குள் வந்து விட்டது. ரசாயன களைக்கொல்லிகள் மூலம் பார்த்தீனியத்தை அழிப்பது தேவையற்றது.

இயற்கை களைக்கொல்லியைத் தயாரித்து களைச்செடிகளை (பார்த்தீனியத்தை) கட்டுப்படுத்த முடியும். 10 லிட்டர் தண்ணீர், 3 கிலோ சுண்ணாம்பு, 4 கிலோ உப்பு, 3 லிட்டர் கோமியம், 2 லிட்டர் வேப்ப எண்ணெய் கொண்ட கரைசலைத் தயாரித்து, களைகள் மீது தெளித்தால் பார்த்தீனியம் கட்டுக்குள் வரும். நெல், காய்கறி செடிகளுக் கிடையிலான களைகளை அகற்ற இந்த கரைசலை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. தவறி பயன்படுத்தினால், அந்தப் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.’’

தொடர்புக்கு, மது.ராமகிருஷ்ணன்,

செல்போன்: 94424 16543.

புறாபாண்டி
புறாபாண்டி


‘‘பருத்திச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எங்கள் பகுதிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் எவை என்று எப்படி அறிந்து கொள்வது?’’

கே.காளியம்மாள், செஞ்சிக்கோட்டை.

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ‘பருத்தித் துறை’ செயல்பட்டு வருகிறது. இங்கு உங்கள் பகுதிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும்.”

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பருத்தித்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி: 0422 2456297.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism