Published:Updated:

தனிப்பயிராக மருதாணி சாகுபடி செய்யலாமா?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘கிளரிசீடியா, அகத்தி... போன்றவற்றை உயிர்வேலியாக வைத்தால் கால்நடைகள் கடித்து சேதப்படுத்தும். மருதாணிச் செடியை உயிர்வேலியாக நடவு செய்தால் கடிக்காது என்று கேள்விப்பட்டேன். இதைத் தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாமா?’’

@அழகர்ராஜ், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் மருதாணிச் சாகுபடி செய்துவரும் முன்னோடி விவசாயி ராஜகோபால் பதில் சொல்கிறார்.

‘‘பல ஆண்டுகளாக மருதாணிச் சாகுபடி செய்து வருகிறேன். எனக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனாலும், விவசாயம் செய்வதைத் தொடர்கிறேன். 10.04.2011 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் மருதாணிச் சாகுபடி குறித்த என் பேட்டி வெளிவந்த பிறகு, இதைப் பயிரிட பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ராஜகோபால்
ராஜகோபால்


என் அனுபவத்தில் மருதாணி அனைத்து வகை நிலங்களிலும் நன்றாக வளரும். தண்ணீர் குறைவாக உள்ள இடங்களுக்கு ஏற்ற பயிர். விதை மற்றும் குச்சி (போத்து) மூலமாக நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். நன்கு வளர்ந்த மருதாணிச் செடியில் பென்சில் தடிமன் உள்ள குச்சிகளை 9 அங்குல நீளத்துக்கு வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

தொழுவுரம், மண் ஆகியவற்றை நாற்று தயாரிக்கும் பாலித்தீன் பைகளில் நிரப்பி... அதில் மருதாணிக் குச்சிகளை நட்டு, நிழலில் வைத்துத் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். மூன்று மாதங்கள் வளர்ந்த பிறகு, வயலில் நடவு செய்யலாம். பருவமழை தொடங்கும் முன்பு நடவு செய்தால், செடிகள் நன்றாக வேர்விட்டு வளரத் தொடங்கும். மருதாணியில் முள் ரகம், முள்ளில்லா ரகம் என இரு ரகங்கள் உண்டு.

முள் ரகம் உயிர்வேலிக்கு ஏற்றது. உயிர் வேலியாக மருதாணி நடவு செய்வதன் மூலம் கால்நடைகளும் கடிக்காது, உயிர் வேலியில் உள்ள மருதாணி இலைகளைப் பறித்து விற்பதன் மூலம் வருமானமும் கிடைக்கும்.

புறா பாண்டி
புறா பாண்டி


தனிப்பயிர் சாகுபடிக்கு முள்ளில்லா ரகம் ஏற்றது. நடவு செய்த 6-ம் மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என... 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஓர் அறுவடைக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். இன்றைய சந்தை விலை படி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அழகு சாதனப் பொருள்கள், இயற்கைச் சாயம், மருந்துப் பொருள்கள்... எனப் பலவற்றுக்கும் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இத்தனை ஆண்டுகளில் மருதாணி விற்பனையில் எனக்கு பிரச்னை வரவில்லை. அந்த அளவுக்குத் தேவை உள்ளது. மதுரை மாவட்டத்திலேயேகூட இதை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் உள்ளனர். இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தில் மருதாணி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. புதிய ரகங்களும் அங்கு கிடைக்கின்றன.’’

தொடர்புக்கு, ராஜகோபால்,

செல்போன்: 98421 75940.‘‘5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளேன். தற்போது நெற்பழ நோய்த் தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்?’’

கே.காமராஜ், கற்பகநாதர்குளம், திருத்துறைப்பூண்டி.

கடலூர் மாவட்டம் காமதேனு இயற்கை உழவர் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பதில் சொல்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

‘‘எங்கள் பகுதியிலும் இந்த நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திக் கட்டுப் படுத்தினோம். இது பூக்கும், பால் பிடிக்கும் மற்றும் கதிர் முற்றும் தருணங்களில் நெற்பயிரைத் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். சில பகுதிகளில் இதை ‘ஊதுபத்தி நோய்’ என்றும்கூட அழைப்பார்கள்.

இது பூஞ்சணம் மூலம் பரவும் நோய். விதைகள் மூலமும், காற்றின் வழியாகவும்கூடப் பரவும். நெற்பயிர் பூக்கும்போது, மேக மூட்டம், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், இந்த நோய் வேகமாகப் பரவும். நெற்பயிர் மீது முதலில் இளம் ஆரஞ்சு நிறத்தில் பஞ்சுபோல இருக்கும். பிறகு, மஞ்சள் நிறமாக மாறும். இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் 35 சதவிகிதம் வரை விளைச்சலைக் குறைத்துவிடும்.

இதைத் தடுக்க, முதலில் வயலை சுத்தமாகக் களைச்செடிகள் இன்றி வைத்திருக்கலாம். அதிக தண்ணீர் இல்லாமல் காய்ச்சலும் பாய்ச்சலு மாகப் பாசனம் செய்ய வேண்டும். யூரியா போன்ற அதிக தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டாம். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் நீரில் அரைக்கிலோ துளசியை அரைத்து, 12 மணி நேரம் ஊற வைக்கவும். இதில் ஒரு லிட்டர் எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கலாம். ஏக்கருக்கு 10 டேங்க் பிடிக்கும். இப்படி 5 நாள்கள் இடைவெளியில் மீண்டும் முறை தெளித்தால், நெற்பழ நோய் கட்டுப்படும்.

நெல்
நெல்


இதைத் தெளிக்க வாய்ப்பில்லாதவர்கள், 10 லிட்டர் நீரில் 50 மி.லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற உயிர் பூஞ்சணக்கொல்லியை மாலை 4 மணிக்கு மேல் தெளிக்கலாம். இதுபோல 5 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்கவும். இதன் மூலம் நோய்க்கட்டுப்படுத்தப்படும். வழக்கமாக நெல் பயிரில் கதிர் வந்துவிட்டால், பூச்சிக்கொல்லியை தெளிக்கக் கூடாது என்று சொல்வார்கள். காரணம், கதிர் வந்த பிறகு, ரசாயன விஷத்தை மீது தெளித்தால், அது நெல்மணியிலும் இறங்கி உணவை விஷமாக்கிவிடும். நாம் பயன்படுத்துவது இயற்கை இடுபொருள்கள் என்பதால், தேவை ஏற்படும்போது, தெளிக்கலாம். இதனால், பாதிப்பு ஏற்படாது. நோய் அறிகுறி தெரிந்த உடனே, இந்தக் கரைசல்களில் ஒன்றைக் கட்டாயம் தெளித்தால், மகசூல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.’’

தொடர்புக்கு, கிருஷ்ணமூர்த்தி,

செல்போன்: 99943 99195.

‘‘சிப்பிக் காளான் வளர்த்து வருகிறோம். தாய் வித்து உற்பத்தி செய்ய எங்கு பயிற்சி பெறலாம்?’’

@ந.சிவகாமி

‘‘கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறையில் ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. சிப்பிக்காளான், பால் காளான், மொட்டுக்காளான்… எனப் பல வகையான காளான் வளர்ப்புப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. பயிற்சியின் ஒரு பகுதியாகத் தாய் வித்து உற்பத்தி குறித்தும் கற்றுக்கொடுக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் உண்டு.’’

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர்,

பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

தொலைபேசி: 0422 6611336.