Published:Updated:

சிறுதானியத்திலும் பொரி தயாரிக்கலாம்! மகசூலைக் கூட்டும் மண்புழு நீர் !

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

சிறுதானியத்திலும் பொரி தயாரிக்கலாம்! மகசூலைக் கூட்டும் மண்புழு நீர் !

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

‘‘சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறோம். சிறுதானியங்கள் மூலம் பொரி தயாரிக்க முடியும் என்று கேள்விப்பட்டோம். இதற்கான கருவி எங்கு கிடைக்கும்?’’

@மா.ஆனந்தி, தர்மபுரி.

கோயம்புத்தூரில் உள்ள மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனத்தின் (Central Institute of Agriculture Engineering) தமிழ்நாடு மண்டலத் தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி, முனைவர் பாலசுப்பிரமணியன் பதில் சொல்கிறார்.

சிறுதானியத்திலும் பொரி தயாரிக்கும் இயந்திரம்
சிறுதானியத்திலும் பொரி தயாரிக்கும் இயந்திரம்

‘‘பாப் கார்ன் என்ற பெயரில் விற்கப்படும் மக்காச்சோளப் பொரியை, அதிக விலைகொடுத்து வாங்கினாலும், அதில் ஆரோக்கியம் குறைவுதான். அரிசி மூலம் செய்யப்படும் பொரியும்கூட, பெரும்பாலும் சரியான முறையில் பொரிக்கப்படுவதில்லை. இதனால், இதைச் சாப்பிடுபவர்களுக்கு உடல் நலக்கேடு வர வாய்ப்புகள் உண்டு. இவற்றுக்கு மாற்றாகத்தான், எங்கள் மையத்தில் கம்பு, தினை, சாமை, வரகு, பனி வரகு, குதிரைவாலி மற்றும் கேழ்வரகு ஆகியவற்றைப் பொரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இயந்திரம், ஒரு முனை மற்றும் மும்முனை மின்சார உதவியுடன் செயல்படக்கூடியது. அனைத்து வகைச் சிறு தானியங்களையும் பொரிக்கும் திறன் கொண்டது. அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், சுகாதாரமான மற்றும் சத்தான சிறுதானிய பொரியை இந்த இயந்திரம் உற்பத்தி செய்கிறது. சத்துமிகுந்த சிறுதானிய பொரி மூலம் பல உணவுப் பண்டங்களைத் தயாரிக்க முடியும். ஒரு மணி நேரத்தில் 2 கிலோ பொரி வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.80,000. இது குறித்துக் கூடுதல் விவரங்கள் பெறவிரும்புவர்கள், எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.”

தொடர்புக்கு,

தலைவர் மற்றும் முதன்மை விஞ்ஞானி,

மண்டல அலுவலகம்,

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்,

கோயம்புத்தூர் - 641 003.

செல்போன்: 86810 17811.

‘‘செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிப்பது எப்படி? பயிர்களுக்கு எந்த அளவில் பயன்படுத்த வேண்டும்?’’

எம்.கன்னியப்பன், பள்ளிப்பட்டு.

மண்புழு விஞ்ஞானியும் தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் பதில் சொல்கிறார்.

மண்புழு உரம்
மண்புழு உரம்


‘‘சத்துக்கள் நிறைந்த, செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிக்க முன் வந்தமைக்கு வாழ்த்துக்கள். முதலில் சதுரமாக ஓர் அடி உயரம், மூன்று அடி அகலத்துக்கு செங்கற்களை அடுக்கி, அதன் மேல் 200 முதல் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம் ஒன்றை வையுங்கள். அதன் மேல்பகுதியைத் திறந்தவாறு வைத்து, கீழ்ப்பகுதியில் டி-ஜாயின்டைப் பொருத்தி, ஒரு முனையில் குழாயையும், இன்னொரு முனையில் மூடியையும் பொருத்த வேண்டும். கீழ்ப் பகுதியில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால், இந்த மூடியைத் திறந்து சுத்தம் செய்து கொள்ளலாம்.

மண்புழு நீர்
மண்புழு நீர்

இப்போது டிரம்மின் அடிப்பகுதியில், ஏறத்தாழ ஒர் அடி உயரத்துக்கு... கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லிகளைப் (¾ அல்லது 1½ ஜல்லி) போட வேண்டும். வேறு கற்களைப் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மேலே மணல் கப்பியை ஏறத்தாழ ஓர் அடிவரை நிரப்பித் தண்ணீர் விட வேண்டும். இந்த இரண்டு அடுக்குகள் அமைக்கப்பட்டவுடன்... அதற்கு மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு, நாம் மண்புழுக்களைச் சேகரித்து எடுக்க, நிலத்திலிருந்து கொண்டு வந்த மண்ணை கொட்டி நிரப்ப வேண்டும். அதில் 50 முதல் 100 மண்புழுக்களை விட்டு, தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு, இந்த அடுக்கின் மேல் வைக்கோலைப் பரப்பி, ஆங்காங்கே வறட்டி களையோ, சாண உருண்டைகளையோ வைத்துத் தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

முதல் 15 நாள்களுக்குக் கீழேயுள்ள குழாய் திறந்தே இருக்கட்டும். அதாவது, வடிநீரைச் சேகரிக்காமல் அப்படியே வடியுமாறு விட்டு விடுங்கள். செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிக்கும் அமைப்புத் தன்னைக் கட்டமைத் துக் கொள்வதற்காக இந்த அவகாசம் தேவை. 16-ம் நாள் முதல் மண்புழு நீரைக் கீழேயுள்ள குழாயிலிருந்து பிடித்துப் பயன்படுத்தலாம். டிரம்மின் மீது தண்ணீர் தெளிக்க, ஒரு பூவாளியைத் தொங்கவிட்டு... இரவு நேரத்தில் மட்டும் தண்ணீர் சொட்டுமாறு ஏற்பாடு செய்யுங்கள். செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிக்கும் டிரம்மின் அளவு 50 லிட்டர் எனில், பூவாளியில் 1 லிட்டர் தண்ணீர் நிரப்பலாம். டிரம்மின் அளவைப் பொறுத்துத் தண்ணீரின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.

மண்புழு நீர் சேகரிப்பு
மண்புழு நீர் சேகரிப்பு


இரவெல்லாம் தண்ணீர் சொட்டி, மண்புழுக்கள் உண்டாக்கியிருக்கும் மண் துளைகளின் வழியே வடிந்து செறிவூட்டப் பட்ட மண்புழு நீர் கீழ்ப்புறம் சேகரமாகும். காலையில் குழாயைத் திறந்து இதைப் பிடித்துக்கொள்ளலாம். 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பிளாஸ்டிக் டிரம்கள் இருந்தால், அமைத்த 20 நாள் களிலிருந்து தினமும் 5 லிட்டர் அளவு செறிவூட்டப்பட்ட மண்புழு நீரைத் தயாரிக்க முடியும். வறட்டியையும் வைக்கோலையும் அவ்வப்போது, மாற்றி வர வேண்டும். பத்து, பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, முழு அமைப்பையும் டிரம்மிலிலிருந்து எடுத்து விட்டு, மீண்டும் மாற்ற வேண்டும்.

இன்று, செறிவூட்டப்பட்ட மண்புழு நீர் தயாரிப்பது மிகவும் எளிமையான விஷயமாக மாறிவிட்டது. எந்தப் பொருளையும் வெளியில் வாங்காமல், உங்கள் வீட்டிலுள்ள உடைந்த தண்ணீர் கேனைக் கொண்டோ, டப்பாக்களைக் கொண்டோ செறிவூட்டப் பட்ட மண்புழு நீரைத் தயாரித்து விட முடியும். நாம் பயன்படுத்தும் அமைப்பின் கொள்ளளவைப் பொறுத்து கருங்கல் ஜல்லி, மண் கப்பி, மண், மண்புழுக்கள், வைக்கோல், வறட்டி ஆகியவற்றின் அளவும் தண்ணீர் தெளிக்கும் அளவும் மாறுபடும்.

சுல்தான் இஸ்மாயில், பாலசுப்பிரமணியன்
சுல்தான் இஸ்மாயில், பாலசுப்பிரமணியன்


இப்படித் தயாரிக்கும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர், சத்துக்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே, 1 லிட்டர் மண்புழு நீரில், 9 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். இதைப் பயிர்களுக்குத் தெளித்து வந்தால், பத்தே நாளில் மிகச் சிறந்த பலன்களைப் பார்க்க முடியும். 1 லிட்டர் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர், 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 8 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையைக் கலந்தும் தெளிக்கலாம். இந்தக் கலவை வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.

10 லிட்டர் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர், 3 லிட்டர் பஞ்சகவ்யா, 87 லிட்டர் தண்ணீர் அல்லது 10 லிட்டர் மண்புழு நீர், 5 லிட்டர் பஞ்சகவ்யா, 85 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்தும் பயிர்களுக்குத் தெளிக்கலாம். இதனால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் மிகச் சிறப்பாக இருக்கும். செறிவூட்டப்பட்ட மண்புழு நீர், பழத்திறமி போன்றவற்றைச் சீரான இடைவெளியில் தெளித்து வந்தால், பயிர்கள் செழித்து வளர்வதோடு மண் நலனும் கூடும். ஆனால், ஊட்டம் தருகிறது என்று செறிவூட்டப்பட்ட மண்புழு நீரை அளவுக்கு அதிகமாகப் பயன் படுத்தக் கூடாது.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், செல்போன்: 93848 98358.

புறாபாண்டி
புறாபாண்டி


‘‘எங்கள் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்குத் தீர்வு சொல்லுங்கள்?’’

டி.அசோக்குமார், சிறுகரம்பலூர்,

கடலூர் மாவட்டம்.

‘‘தோட்டங்களில் குரங்களின் தொல்லை அதிகமாக இருந்தால், அதுகுறித்து, அருகில் உள்ள வன உயிரினக் காப்பாளர் அல்லது மாவட்ட வனப் பாதுகாவலருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வனத்துறையினர் கூண்டுகள் கொண்டு வந்து பிடித்துச் சென்று காடுகளில் விட்டுவிடுவார்கள். தோட்டத் திலிருந்து குரங்களை வனத்தில் கொண்டு சென்று விடுவதற்குச் சம்பந்தப்பட்ட விவசாயி கட்டணம் செலுத்த வேண்டும்.

குரங்குகளைக் கட்டுப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு, மின்சாரம் பாய்ச்சுவது, விஷ உணவுகள் வைப்பது போன்ற செயல்களைச் சிலர் செய்து வருகின்றனர். இப்படிச் செய்வது சட்டப்படி தவறு.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism