Published:Updated:

மானாவாரியில் சவுக்கு... மீன் வளர்ப்புக்கு மானியம்... முந்திரிப் பருப்பு எடுக்கும் கருவி...

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

மானாவாரியில் சவுக்கு... மீன் வளர்ப்புக்கு மானியம்... முந்திரிப் பருப்பு எடுக்கும் கருவி...

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘சவுக்கு சாகுபடி செய்ய விரும்பு கிறோம். எங்கள் பகுதியில் நன்றாக வளருமா, விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?’’

கே.பாலமுருகன், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

சவுக்கு மர ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றவரும் கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானியுமான முனைவர் ஏ.நிக்கோடிமஸ் பதில் சொல்கிறார்.

‘‘வடிகால் வசதி நன்றாக உள்ள நிலமாக இருந்தால், உங்கள் பகுதியில் நிச்சயமாக சாகுபடி செய்யலாம். குறைந்த கால அளவில் ஒரு மரத்தை வளர்த்து அதிகமாகப் பயன்பெற முடியுமென்றால் அது சவுக்கு மரச் சாகுபடியாகத்தான் இருக்கும். சவுக்கு மரங்களை இரண்டு ஆண்டுகளிலேயே அறுவடை செய்யலாம். சவுக்கு சாகுபடிக்கு குறைவான பராமரிப்பு, குறைந்த தண்ணீரே போதுமானது. மகசூலைப் பொறுத்தவரை மூன்று பகுதிகளில் மூன்று விதமான அளவு களில் மகசூல் கிடைக்கின்றது. அதாவது, நல்ல மழையும் சிறப்பான மண்வளமும் இருக்கும் கடலோரப் பகுதிகளில் ஏக்கருக்கு 100 டன் வரை கிடைக்கும். மிதமான மழைப்பொழிவு மற்றும் பாசன நீர் கொடுக்கப்படும் பகுதிகளில் ஏக்கருக்கு 75 டன் வரை கிடைக்கும். குறைவான மண்வளம் மற்றும் குறைந்த மழைப் பொழிவு கொண்ட பகுதிகளில் 50 டன் வரை மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு 50 டன் மகசூல் என்பது சவுக்கில் நல்ல லாபம்தான்.

சவுக்கு மரங்கள்
சவுக்கு மரங்கள்

தேர்வு செய்யும் ரகம், சரியான இடைவெளி, களை மேலாண்மை, நீர்ப் பாசனம், முறையான பராமரிப்பு ஆகிய ஐந்து வழிகளைக் கையாண்டால் சவுக்கில் நிச்சயம் நல்ல மகசூல் எடுக்கலாம். உதாரணமாக மானாவாரி நிலங்களிலும், களர், உவர் நிலங்களிலும் CJ-9 என்கிற ஜூங்குனியானா என்ற ரகத்தைப் பயிரிடலாம். வீரிய ரகமான ஜூங்குனியானா, அதிக வறட்சியையையும் தாங்கும் தன்மை கொண்டது. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குறிப்பாக, மானாவாரி பகுதியில் சாகுபடி செய்ய ஏற்றது. அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மை கொண்டது.

CHI-1, 2, 5 ஆகிய கலப்பின ரகங்கள், களிமண் தவிர மற்ற அனைத்து மண் வகை களிலும் வளரும்.

ஏ.நிக்கோடிமஸ்
ஏ.நிக்கோடிமஸ்

தமிழ்நாட்டில் இரண்டு வகையான தேவை களுக்குத்தான் சவுக்கு மரங்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிக்கும், காகிதக்கூழ் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. இதுபோக மீதம் இருப்பது விறகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் ஆய்வின்படி தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் சவுக்கு மரங்களுக்கான தேவை இருக்கிறது. இதனால் தாராளமாகச் சவுக்குப் பயிரிடலாம். விற்பனையிலும் பிரச்னை இல்லை. கூடுதல் தகவல் தேவைப் பட்டால், எங்கள் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தை அணுகவும். தேவையான தொழில்நுட்ப உதவி வழங்கு கிறோம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94425 59070.


‘‘புதியதாக மீன் பண்ணை அமைக்க விரும்புகிறோம். இதற்கு அரசு மானியம் கிடைக்குமா?’’

@ஜோதிமணி, திண்டுக்கல்.

‘‘தமிழ்நாட்டில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் (PMMSY) செயல்படுத்தப் கிறது. ஒரு ஹெக்டேர் மீன் குளம் அமைக்க ரூ.7,00,000 செலவாகும் என்று மீன்வளத் துறையில் கணக்கீடு செய்துள்ளார்கள். இதன் அடிப்படையில் புதிய மீன் வளர்ப்புக் குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவிகிதம் மானியமாக ரூ.2,80,000 மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவிகிதம் மானியமாக ரூ.4,20,000 வழங்கப்படுகின்றன.

மீன் வளர்ப்பு
மீன் வளர்ப்பு

இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், நிலத்தின் ஆவணங்கள், நீர் மற்றும் மண் பரிசோதனை முடிவுகளுடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இத்துறையின் அலுவலர்களின் ஆய்வுக்குப் பின் தகுதியுள்ள விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அரசின் வழி காட்டுதல்படி விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கான மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், நேருஜி நகரில் செயல்பட்டுவருகிறது. இங்கு நேரில் சென்று கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளவும்.

மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மூலம் புதிய நன்னீர் மீன்குஞ்சு பொரிப்பகம் அமைத்தல், புதிய நன்னீர் இறால் குஞ்சு பொரிப்பகம் நிறுவுதல், புதிய மீன் வளர்ப்பு (குஞ்சுகளுக்கு) குளங்கள் அமைத்தல், புதிய மீன் வளர்ப்பு குளங்களின் கட்டுமானம், கூட்டு மீன் வளர்ப்பு, உவர் நீர் பொரிப்பகம் அமைத்தல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகின்றன.

மேலும் கடலில் மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, சந்தைப்படுத்துதல்... எனச் சுமார் 56 பிரிவுகளின் கீழ் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மீன் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... அந்தந்தப் பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.’’

தொடர்புக்கு,

மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம்,

B4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர்,

திண்டுக்கல் - 624001.

தொலைபேசி 0451 2900148.

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘முந்திரி, பாதாம் கொட்டைகளிலிருந்து பருப்பு எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்?’’

ஐ.வி.சண்முகம், வேலூர்.

‘‘கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) செயல்பட்டு வருகிறது. இங்கு வேளாண் விளைபொருள்களுக்கான அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டும் வழிமுறைகள், மதிப்புக் கூட்டும் கருவிகள், புதிய உணவு தானியப் பயிர்களை அறிமுகப்படுத்துதல், ஆலோசனைகள்... எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்கள்.

விவசாயிகளின் தேவைக்குத் தக்கபடி புதிய கருவிகளையும் வடிவமைத்துக் கொடுக் கிறார்கள். நீங்கள் கேட்டுள்ள முந்திரி, பாதாம் கொட்டைகளுக்கான கருவியையும் வடிவமைத்துக் கொடுப்பார்கள். இதற்குக் கட்டணம் உண்டு. தொடர்புகொண்டு பயன் பெறவும்.’’

தொடர்புக்கு,

Chief Information and Public Relations Officer,

Central Food Research Institute,

Mysuru -570020.

Phone: 0821 2514534 / 2515910.