Published:Updated:

மா கவாத்து அவசியம்... வீட்டுத்தோட்டத்தில் அதலைக்காய்... நபார்டு வங்கி நிதி உதவி...

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

மா கவாத்து அவசியம்... வீட்டுத்தோட்டத்தில் அதலைக்காய்... நபார்டு வங்கி நிதி உதவி...

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘மா மரங்களுக்கு செப்டம்பர் மாதம் கவாத்து செய்ய வேண்டும் என்ற செய்தியைப் பசுமை விகடன் இதழில் படித்தேன். நாங்கள் நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் கவாத்து செய்கிறோம். இது சரியா? கவாத்து செய்யாமல் விட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?’’

ஆர்.முனுசாமி, பாலக்கோடு.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் பதில் சொல்கிறார்.

மா கவாத்து
மா கவாத்து

‘‘களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பார்கள். இதுபோல கவாத்து செய்யாத மாமரம் கால் மரம் என்று அழைக்கலாம்.

மாமரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சம் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்துக்குள் கவாத்து செய்து விட வேண்டும். வழக்கமாக, மா மரங்களில் டிசம்பர் மாதத்தில் கொழுந்து எடுத்து, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பூ பூக்கத் தொடங்கும். அதனால், செப்டம்பர் மாதத்திலேயே கவாத்து செய்வது மிகவும் அவசியம். கொழுந்து வரும் தருணத்தில் கவாத்து செய்தால், மா மரங்கள் சரியாக விளைச்சல் கொடுக்காது. பருவம் தப்பி செய்வதால், நீங்கள் செய்யும் செயலுக்கு முழுப் பலன் கிடைக்காது.

மா கவாத்து
மா கவாத்து

மா மரங்களை ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முறையாகக் கவாத்து செய்வதன் மூலம், நல்ல மகசூல் எடுக்கலாம். கவாத்து என்றால் சில, பல கிளைகளை வெட்டிவிடுவது என்று சிலர் நினைக்கிறார்கள். இது ஒரு தொழில்நுட்பம். இதை முறை யாகச் செய்ய வேண்டும்.

மா கவாத்து
மா கவாத்து

அதிக கிளைகள், இலைகள் கொண்ட மா மரங்கள் அதிக மகசூல் கொடுக்கும் என்று விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இது உண்மையல்ல. ஆண்டுதோறும் மரத்தில் உள்ள அனைத்து கிளை களிலும் பூக்கள் வந்துவிடாது. சரியான தருணத்தில் முறையாகக் கிளைகளை வெட்டி காவத்து செய்து, புதிய கிளைகளை உருவாக் கினால்தான் மகசூல் அதிகரிக்கும். கவாத்து மூலம் தண்டு துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல், போர்டோ ரசாயன கலவைக்கு மாற்றாகக் குப்பைமேனியை பயன் படுத்துதல், மகசூல் மேலாண்மை... என மா சாகுபடியில் நிறைய நுட்பங்கள் உள்ளன. இதற்கான பயிற்சிகள் அந்தந்தப் பருவ காலங் களில் வேளாண் அறிவியல் நிலையங்களில் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்டு பயன் பெறுங்கள்.’’

செந்தூர்குமரன்,  சரவணக்குமார்
செந்தூர்குமரன், சரவணக்குமார்

‘‘அதலைக்காய் பற்றிக் கேள்விப்பட்டோம். இது வீட்டுத் தோட்டத்தில் வளருமா? இதன் பயன்பாடு என்ன?’’

ஆர்.எம்.குமுதவள்ளி, பொழிச்சலூர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பர்ய விதைச் சேகரிப்பாளர் சரவணக்குமார் பதில் சொல்கிறார்.

‘‘தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பிரபலமான காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’. இது பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இது பேச்சுவழக்கில் ‘அதலக்காய்’ என்று அழைக்கப்படுகிறது. கோவைக்காய் போல் கண்மாய்க் கரைகள், வேலி யோரங்கள் போன்றவற்றில் தானாகவே வளரும் கொடி வகை அதலக்காய்.

தென் மாவட்டங்களில் நீர்நிலைகள் மற்றும் நிலங்களின் வேலியோரங்களில் அதலக்காய் அதிகமாக காணப்படுகிறது. இன்றும் கூட பலர் இதைச் சேகரித்து வந்து விற்பனை செய்கிறார்கள். காய்க்கும் பருவத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், இந்த காயைச் சேகரித்து விற்பனை செய்து, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதை பார்க்கலாம்.

இப்போது சில விவசாயிகள், இதைத் தனிப் பயிராகவே சாகுபடி செய்து வருகிறார்கள். இதன் கிழங்கை நிலத்தில் நடவு செய்துவிட்டால் போதும், எந்தவித பரமாரிப்பும் தேவையில்லை. பருவ மழைக் காலங்களில் செழிப்பாக விளைந்து அதலைக்காய் செடிகள் காய்கள் கொடுக்கும். மழைக்காலம் முடிந்த வுடன், காய்ப்பு ஓய்ந்துவிடும். அடுத்த பருவமழையின் போது, மீண்டும் காய்த்துக் குலுங்கும். ஆக, ஒரு முறை நடவு செய்துவிட்டால், தென்மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவமழைக் காலங் களில் இரண்டு முறை அறுவடை செய்யலாம். கூடுதல் மகசூல் பெற நினைத்தால் இயற்கை இடுபொருள்கள் கொடுக்கலாம். அதலக்காய் சாகுபடி என்பது மானாவாரி விவசாயிகளுக்கு கைகொடுக்கும். இந்தக் காய் சராசரியாக கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அதலைக்காய்
அதலைக்காய்

இதை வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கலாம். தொட்டி யில் வளர்ப்பதை நேரடியாக மண் தரையில் வளர்ப்பது சிறந்தது. இதற்கு நீங்கள் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டிய அவசியமில்லை. மழைநீர் கிடைத்தாலே போதும். சிறப்பாக வளரும். குறைந்த பட்சம் 10 கிழங்குகள் நடவு செய்யலாம். ஒரு கிழங்கு விலை 10 ரூபாய்தான். சென்னை, பெங்களூரு, சேலம், ஈரோடு, கோவை... மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தென் மாவட்டங்களிலிருந்து அதலைக் காயை வாங்கிச் செல்கிறார்கள்.

‘அதலைக்காயை வத்தலாகப் பயன்படுத்தலாம். இதன் காம்புகளை நீக்கிவிட்டு துண்டு துண்டாக வெட்டி, உப்பு சேர்த்த மோரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் வெயிலில் காயவைத்து வத்தலாக்கி, கடலை எண்ணெயில் பொரித்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதன் மூலம் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். அதலக்காய் பொரியலும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும். அதலக்காய் மருத்துவ குணம் நிறைந்தது என்றும் நீரிழிவு மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படாத தகவல்’ எனச் சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்.’’

தொடர்புக்கு, சரவணக்குமார், செல்போன்: 99949 64714.

‘‘நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலை பாதுகாப்புக்கு தொடர்பான பணிகளுக்கு நபார்டு வங்கி நிதி உதவி செய்வதாகக் கேள்விப்பட்டோம். இதற்கு யாரைத் தொடர்பு கொள்வது?’’

@மு.பாலசுப்பிரமணியன்

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) நீர் மேலாண்மை, நீர்நிலைப் பாதுகாப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்குதல்... எனப் பல பணிகளை செய்து வருகிறது. இதன் தமிழ்நாடு மண்டல அலுவலகம், சென்னையில் செயல்பட்டு வருகிறது. தொடர்புகொண்டு பயன் பெறவும்.’’

தொடர்புக்கு, தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி, 48, மகாத்மா காந்தி சாலை, நுங்கம் பாக்கம், சென்னை-600034. தொலைபேசி: 044 28276088.

மா கவாத்து களப்பயிற்சி!

‘மா கவாத்துச் செய்யுங்கள்... லாபத்தைப் பெருக்குங்கள்!’ என்ற தலைப்பில் நேரடி களப் பயிற்சியை (ரூ.999 கட்டணப் பயிற்சி) பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் 9-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூரை அடுத்த வடபட்டினம், ஈ.சி.ஆர் சாலை அருகில் உள்ள மாந்தோட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. மாமரங் களில் கவாத்து செய்யும் தொழில்நுட்பத்தைக் கற்று, பலன் பெற விரும்பும் மா விவசாயிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முன்பதிவுக்கு: https://bit.ly/3vDpYz6
நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு,

செல்போன்: 99400 22128.