நாட்டு நடப்பு
Published:Updated:

செலவு குறைந்த இ.எம் தயாரிப்பு... மாடு சினை பிடிக்க மூலிகை... முதல் வீரிய ஒட்டு தென்னை...

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘இ.எம் வளர்ச்சி ஊக்கியை எப்படித் தயாரிப்பது, எந்த அளவில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்?’’

மு.சபாபதி, வடலூர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி யவரும், விஞ்ஞானியுமான முனைவர் அ.உதயகுமார் பதில் சொல்கிறார்.

‘‘முதலில் செறிவூட்டப்பட்ட இ.எம் (Effective Microorganisms) குறித்துப் பார்ப்போம். ஒரு லிட்டர் இ.எம் தாய்த் திரவத் திலிருந்து 20 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். இ.எம் தாய்த் திரவம் லிட்டர் ரூ.600 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இது நிறுவனங்களுக்குச் சாதகமானது. என் ஆய்வின்படி ஒரு லிட்டர் இ.எம் தாய்த் திரவத்திலிருந்து 100 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில், 100 லிட்டர் இ.எம் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது, டிரம்மில் உள்ள காலி இடத்தில் வாயுக்கள் உருவாகும்.

விவசாயம்
விவசாயம்

இது இ.எம் கரைசலின் வீரியத்தை பாதிக்கும். டிரம்களை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். டீசல் மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்திய டிரம்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல செறிவூட்டப்பட்ட இ.எம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர், குளோரின் கலக்கப்படாத சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். குளோரின் கலந்த கார்ப்பரேஷன் தண்ணீர் மட்டுமே கிடைக்கும் சூழ்நிலையில், அந்தத் தண்ணீரை நான்கு நாள்கள் வைத்திருந்து, பிறகு பயன்படுத்தலாம். 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் டிரம்மை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 94 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். 5 கிலோ வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். வெல்லத்துக்குப் பதிலாக 5 கிலோ மொலாசஸ் அல்லது கழிவுச் சர்க்கரையையும் கரைத்து ஊற்றலாம்.

இவையிரண்டும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலோ, கிடைப்பது அரிதாக இருந்தாலோ, வெள்ளைச் சர்க்கரை யைப் பயன்படுத்தலாம். இதில், ஒரு லிட்டர் இ.எம் தாய்த் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் இருக்குமாறு, மூடிவைக்க வேண்டும். இந்த டிரம் மீது நேரடியாக வெயில் படக் கூடாது. மாட்டுக்கொட்டகை, திண்ணை போன்ற நிழலான இடங்களில் வைத்துக்கொள்ளலாம். தினமும் மூடியைத் திறந்து, உடனே மூடிவிட வேண்டும். கலக்கத் தேவையில்லை. ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். எட்டாவது நாள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும். நாம் தயாரித்துள்ள செறிவூட்டப்பட்ட இ.எம், பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதைச் சில அறிகுறிகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். எட்டாவது நாளில் டிரம்மில் உள்ள செறிவூட் டப்பட்ட கரைசலிலிருந்து நல்ல மணம் வரும். அப்படி வந்தால் அது பயன்பாட்டுக்கு ஏற்றது. மாறாக, துர்நாற்றம் வீசினால், அதைப் பயன்படுத்தக் கூடாது. அதிகபட்சம் 90 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம்.

முனைவர் அ.உதயகுமார்
முனைவர் அ.உதயகுமார்

பயிர்களுக்குத் தெளிக்கும்போது எச்சரிக் கையாக இருக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 20 மி.லி. மட்டும் கலந்து தெளிக்க வேண்டும். இதன் அளவு கூடினால், பயிர் கருகிவிடும். யூடியூபில் உலா வரும் ‘திடீர் வல்லுநர்கள்’ சொல்வதைக் கேட்டு, 100, 200 மி.லி கலந்து அடித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பார்த்துள்ளேன். ஆகையால், எச்சரிக்கையாக இருக்கவும்.’’

தொடர்புக்கு, முனைவர் அ.உதயகுமார்,

செல்போன்: 94425 42915.


‘‘எங்கள் பண்ணையில் உள்ள சில பசுங்கன்றுகள் சினைப் பிடிக்கவில்லை. சில மாடுகளில் கருப்பிடித்தாலும் சினை நிற்காமல் உள்ளது. இதைச் சரி செய்வது எப்படி?’’

அ.தயாநிதி, திருக்கழுக்குன்றம்.

செங்கல்பட்டு மாவட் டத்தில் உள்ள காட்டுப் பாக்கம் வேளாண்மை அறிவியல் மையத்தின் உதவி பேராசிரிர் முனைவர் தேவகி பதில் சொல்கிறார்.

‘‘கலப்பினம் என்றால் பொதுவாக 18 மாத வயது கொண்ட கன்று பருவத்துக்கு வந்து விட வேண்டும். இதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், பிரச்னை உள்ளது என்று அர்த்தம். ஆகையால், கால்நடை மருத்துவரிடம் காட்டி உரியப் பரிசோதனை செய்ய வேண்டும். அடுத்து நாட்டு இனக் கன்று என்றால் இரண்டு ஆண்டுகளுக்குள் பருவத்துக்கு வர வேண்டும். இதைத் தாண்டினால், உரிய சிகிச்சை அவசியம்.

மாடுகள்
மாடுகள்

கருப்பை வளர்ச்சி இன்மை, போதிய ஊட்டச்சத்துக் கிடைக்காமை, கருப்பைக் கட்டி... என இன்னும் பல காரணங்களால் பருவத்துக்கு வருவது தாமதம் ஆகும். பரிசோதனை மூலம்தான், அந்தப் பிரச்னை யைக் கண்டறிய முடியும்.

மாடுகளில் சினை தங்காமல் உள்ளதற்கும் பல காரணங்கள் உள்ளன. இதைக் குணப் படுத்த இதற்கு ஆங்கில மருந்துகள் உள்ளன. இதைவிட மரபு வழி மூலிகை சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைப்பதைப் பார்த்து வருகிறோம். எங்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் புண்ணியமூர்த்தி அவர்கள், இதை ஆய்வு செய்து தகுந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளார். முதல் நான்கு நாள்களுக்குத் தினமும் ஒரு வேளை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையும், உப்பும் சேர்த்துக்கொடுக்கவும்

அடுத்த நான்கு நாள்களுக்கு, சோற்றுக் கற்றாழை மடல் முட்கள் சீவிவிட்டு தினமும் ஒருவேளை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையும், உப்பும் சேர்த்துக் கொடுக்கவும்.

இதற்கு அடுத்த நான்கு நாள்களுக்கு, நான்கு கையளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையும், உப்பும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

அடுத்த நான்கு நாள்களுக்கு, நான்கு கையளவு அப்போது பறித்த பிரண்டையுடன் (தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையும் உப்பும் சேர்த்துக்கொடுக்கலாம்.

முனைவர் தேவகி
முனைவர் தேவகி

இறுதியாக அடுத்த நான்கு நாள்களுக்கு, நான்கு கைப்பிடி அளவு அப்போது பறித்த கறிவேப்பிலையை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையுடன், உப்பும் சேர்த்துத் தரலாம். ஆக, 20 நாள்களுக்கு இதைக் கொடுப்பதன் மூலம் கறவை மாடுகளில் கட்டாயம் சினை நிற்கும். இல்லை எனில் சில நாள் இடைவெளி விட்டு, மீண்டும் 20 நாள்களுக்கு இந்த மூலிகை மருந்துகளைக் கொடுத்து வந்தால், கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை நீங்கும். விரைவில் சினைப்பிடித்துச் சிறந்த கன்று ஈனும்.’’

தொடர்புக்கு, முனைவர் தேவகி,

செல்போன்: 94452 58978.

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது? இதன் தொடர்பு முகவரிக் கொடுக்கவும்?’’

@ஆர்.நடராஜன்

‘‘தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தென்னை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. வேப்பங்குளம் வீரிய ஒட்டுத் தென்னை -1 (வி.எச்.சி-1) என்ற ரகம் இங்குதான் வெளியிடப்பட்டது. இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் வீரிய ஒட்டுத் தென்னை இது.’’

தொடர்புக்கு, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம்.

தொலைபேசி: 04373 260205.