நாட்டு நடப்பு
Published:Updated:

தண்டு துளைப்பான் தடுப்பு... ஷாம்பு இஞ்சி வளர்ப்பு... கடற்பாசியில் உணவு...

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘எங்கள் மாந்தோட்டத்தில் தண்டு துளைப்பான் தாக்குதல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைச் சொல்லுங்கள்?’’

கே.மாணிக்கம், ஆரம்பாக்கம்.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செந்தூர்குமரன் பதில் சொல்கிறார்.

‘‘கவாத்து செய்யாத மா மரங்களில்தான் இந்தப் பிரச்னை உருவாகும். மரத்தின் தூர்ப் பகுதியில், ஆட்கள் நுழைய முடியாதபடி அடர்ந்துள்ள மரங்கள், தரையைத் தொடும் கிளைகள் உள்ள மரங்கள், தூர்ப் பகுதியில் காய்ந்த இலைகள், குப்பைகள் உள்ள மரங்கள்... இவைதான் தண்டு துளைப்பானுக்குப் பிடித்தமான இடங்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன மா மரங்களைத்தான் தண்டு துளைப்பான் அதிகம் தாக்கும். தண்டு துளைப்பான் தாக்குதலுக்கு உள்ளான மா மரத்தின் பட்டையில், முதலைத் தோல் போல வெடிப்புகள் இருக்கும். மா மரங்களின் தண்டுப் பகுதியிலிருந்து மரத்தூள் வெளியேறி இருக்கும். இவைதான் இதன் அறிகுறிகள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தண்டு துளைப்பான் தாய் அந்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் முட்டையிடும்.

மாந்தோட்டம்
மாந்தோட்டம்

மா மரங்களின் அடித்தண்டுகளில் இருக்கும் பட்டைகளுக்கு இடையில் முட்டை வைக்கும். இந்த முட்டைகளிலிருந்து வெளியே வரும் புழுக்களால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த புழுக்கள் 100 நாள்கள் வரை மரத்தின் தண்டுப் பகுதியில் தங்கி இருக்கும். இவற்றின் உடல்பகுதி... மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், தலைப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இந்தத் தலைதான், அரவை இயந்திரம்போல் செயல்படுகிறது. தலை மூலம் தண்டுப் பகுதியைக் குடைந்து கொண்டே செல்லும். இது ஒரே இடத்தில் குடையாமல், வளைவு, வளைவாகக் குடைந்து கொண்டே செல்லும். புழுப் பருவம் முடிந்து, கூட்டுப்புழுப் பருவத்தில் 19 முதல் 34 நாட்கள் வரை மரத்தினுள் இருக்கும். அதற்கு மேல் வளர்ந்த பூச்சியாகக் கூட்டை விட்டு வெளியே வரும் பூச்சி, மரங்களுக்கு அருகில் உள்ள காய்ந்த இலைகள், குப்பைகளில் குடியேறி இனப்பெருக்கப் பணிகளில் ஈடுபடும். 25 வயது கொண்ட மரமாக இருந்தாலும் தண்டு துளைப்பான் தாக்கினால், சரிந்து விழுந்துவிடும். மரத்தின் தண்டுப்பகுதியைத் தட்டிப்பார்க்கும் போது, பட்டைகள் உரியும், தூள் போல கொட்டும். நீர், உணவு கடத்துத் திசுக்களைக் (சைலம் மற்றும் புளோயம்) தின்றுக் கொண்டிருக்கும். தண்டு துளைப்பான் மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ துளைப் போட்டுக் கொண்டு சென்றிருக்கும். சைக்கிளுக்கு ஆயில் விடும் கேன் மூலம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், வேம்புக் கரைசல்... என இதில் ஏதாவது ஒன்றை துளையின் உள்ளே செலுத்தி, பஞ்சு வைத்து, அதன் மீது களிமண் வைத்து துளையை நன்றாக மூடிவிட வேண்டும். பஞ்சகவ்யா உள்ளிட்ட கரைசல் தண்டு துளைப்பானுக்கு ஒவ்வாத வாடையை உருவாக்கும். பஞ்சு, களிமண் போட்டு மூடுவதால், மூச்சு விட முடியாமல் தண்டு துளைப்பான் உள்ளேயே இறந்துவிடும்.

செந்தூர்குமரன்
செந்தூர்குமரன்

இதை செய்யாமல், அரிவால் கொண்டு புழுக்களை தோண்டி எடுக்கிறோம் என்று மரத்தை கொத்தி வைத்தால், மரம்தான் பாதிக்கப்படும். தாக்குதல் நடத்திய பின் நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. திரும்பவும் சொல்கிறேன். அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இருக்கக் கூடாது. தரையை நோக்கி செல்லும் கிளைகளை அகற்றிவிட வேண்டும். மா மரங்களின் அடியில் காய்ந்த இலைகள், குப்பைகள் இல்லாமல் தோப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயம் செய்யும் தோட்டமாக இருந்தாலும், மரத்தின் கீழ் இலைகளை வைத்திருந்தால், தண்டு துளைப்பான் இனப்பெருக்கம் செய்ய நாமே இடம் கொடுத்தது போல ஆகிவிடும். ஆகையால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இயற்கை வழி முறைகளில் மட்டுமே தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.’’

‘‘ஷாம்பு இஞ்சி வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கலாமா, இதன் பயன்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்?’’
@ஶ்ரீ 

‘‘ஜிங்ஜிபர் ஜெரம்பெட் (Zingiber Zerumbet) என்ற தாவரவியல் பெயர் கொண்ட, இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஷாம்பு இஞ்சி (Shampoo Ginger) இந்தியாவில் அதிகம் பிரபலம் இல்லாத செடி வகையாகும். ஆனால், இதன் தாயகம் தெற்கு ஆசியா நாடு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதன் தாயகம் இந்தியாதான். இங்கிருந்து, இலங்கை, மலேசியா, தாய்லாந்து... என்று தெற்கு ஆசியாவில் பரவி பிறகு மேற்கு நாடுகளுக்குப் பரவியிருக்கும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதை மெய்பிக்கும் விதமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவை ஒட்டிய வனப்பகுதிகளில் இது காட்டுச் செடியாகவும் வளர்ந்துள்ளதைப் பார்த்துள்ளேன். கூடவே, மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு பயணம் செய்யும்போது, இந்த செடிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அழகுக்காகவும் மருந்துக்காகவும் உணவுக்காகவும் ஷாம்புக்காவும் வளர்க்கிறார்கள். இதன் மருத்துவக் குணம் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

ஷாம்பு இஞ்சி
ஷாம்பு இஞ்சி

மேற்கத்திய நாடுகளில் இந்த செடியைக் கொண்டாடுகிறார்கள். நிழல் விரும்பி தாவரமான இது, இஞ்சி விளையும் பகுதிகளில் நன்றாக வளரும். ஷாம்பு இஞ்சி செடியில் பல வகைகள் உள்ளன. பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் சிவப்பு நிறத்தில் உள்ள ரகத்தைத்தான் வீட்டுத்தோட்டத்தில் விரும்பி வளர்க்கிறார்கள். நன்றாக வளர்ந்த செடியில் தேன் கூடு போலப் பூக்கள் இருக்கும். இதை அழுத்தினால் ஷாம்பு போலத் திரவம் வெளிவரும். இதை வெளிநாட்டினர் தலைக்கும் உடலுக்கும் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால்தான், ஷாம்பு இஞ்சி என்று பெயர் வந்துள்ளது. இதன் பூ, இலை, தண்டு, கிழங்கு உள்ளிட்டவற்றை உண்ணலாம். இஞ்சி சுவையில் இருக்கும் இது 4-6 அடி உயரம் வளரும். 12 மாதங்களில் முதிர்ந்த இஞ்சி கிடைக்கும். ஒரு செடியை வைத்துவிட்டால், அப்படியே அந்த இடம் முழுக்கப் பரவி வளரும் தன்மை கொண்டது. இது சென்னை, பெங்களூரு... போன்ற பெரு நகரங்களில் உள்ள தனியார் நர்சரிகளில் கிடைக்கின்றது. அமேசான் இணையதளத்தில் விதைக் கிழங்கு விற்பனை செய்கிறார்கள்.’’

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘கடற்பாசி மூலம் உணவுப்பொருள்கள் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கு எங்கு பயிற்சிக் கிடைக்கும்?’’

ம.ஜெனிபர், பொன்னேரி.

‘‘சென்னை மாதவரம் பகுதியில், மீன் ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், இக்கல்லூரியில் கடற்பாசி மூலம் உணவுப்பொருள்கள் தயாரிக்கும் பயிற்சிக் கொடுக்கிறார்கள்.’’

தொடர்புக்கு, தொலைபேசி: 044 25550359.