ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

நகரத்திலும் நாய் விற்பனை... சூரிய சக்தி பம்ப்செட் திட்டம்... கயிறு வாரியத்தின் 90 சதவிகித மானியம்!

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘சென்னையில் வசிக்கிறோம். இங்கு நாய் வளர்த்து விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கு வழிகாட்டுங்கள்?’’

எம்.ஆர்.பாலாஜி, மேற்கு மாம்பலம்.

நாய் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் பதில் சொல்கிறார்.

‘‘சென்னை மாநகர சூழ்நிலைக்கு ஏற்ற நாய் இனங்கள் உள்ளன. 10-க்கு 10 அடி இடம் இருந்தால்கூட போதும். இந்த இடத்தில் நாய்கள் வளர்த்து நல்ல வருமானம் பெற முடியும். என் அனுபவத்தில் ‘அழகிய சிட்சு நாய்’ (CUTE SHITZU DOG) என்ற நாய் இனம் சிறிய இடத்தில் வளர்க்க ஏற்றது. இது பார்வைக்கு அழகாக இருக்கும். சிறிய உருவத்தில் கவர்ந்து இழுக்கும். பெரிய அளவில் குரைக்காது. அமைதியான செல்லப்பிராணியாக இருக்கும். பாதுகாப்புக்கும் காவலுக்கும் ஏற்றது அல்ல.

அழகிய சிட்சு நாய்
அழகிய சிட்சு நாய்

இந்த ரகத்தில் 3 பெண் நாய்கள், 1 ஆண் நாய் இருந்தால் போதும். இதை வாங்க 1 லட்ச ரூபாய் செலவாகும். ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி ஈன வைப்பது சிறந்தது. ஒரு தாய் நாய் ஆண்டுக்கு 8 குட்டிகளை ஈனும். ஆக, 3 நாய்கள் மூலம் 24 குட்டிகள் கிடைக்கும். ஒரு குட்டியைக் குறைந்தபட்சம் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். நாய் வளர்ப்பவர் களுக்காக நடத்தப்படும் கே.சி.ஐ என்றழைக்கப்படும் கென்னல் கிளப் ஆஃப் இந்தியா (Kennel Club of India) என்ற அமைப்பில் உறுப்பினராக இணைந்துவிடுங்கள். மேலும், நீங்கள் தாய் நாய்களை வாங்கும் போதே, இந்திய கென்னல் கெஜட் (INDIAN KENNEL GAZETTE) சான்றிதழ் பெற்றிருந்தால், குட்டிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். மைக்ரோ சிப்புடன் நாயின் தாய், தந்தை என அதன் பிறப்பு விவரங்கள் அத்தனையும் இருக்கும். திரும்ப வருமானத் துக்கு வருவோம். ஒரு குட்டி 15,000 ரூபாய் விலையில் விற்பனை செய்தால், 24 குட்டி களுக்கு 3,60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 60,000 ரூபாய் செலவுக்குச் சென்றாலும் 3 லட்சம் ரூபாய் நிகர லாபமாக நிற்கும். ஆகையால், நகரத்திலும் நாய் வளர்ப்பு என்பது நன்றாகவே லாபம் தரும்.’’

மணிகண்டன்,
மணிகண்டன்,

தொடர்புக்கு, மணிகண்டன்,

செல்போன்: 88707 77420.

‘‘சூரிய சக்தி பம்ப்செட் அமைக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அதைப் பெறுவது எப்படி?’’

ம.சி.முருகன், கடலூர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் முருகேசன் பதில் சொல்கிறார்.

‘‘மத்திய அரசுடன் இணைந்து முதலமைச் சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத் தைத் தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை செயல்படுத்தி வருகிறது. சிறு, குறு (ஐந்து ஏக்கருக்குக் குறைவாக உள்ளவர்கள்) விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட் 70 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவிகித மானியத்துடன் கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது.

சோலார் பேனல்கள்
சோலார் பேனல்கள்

இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் சூரிய சக்தியால் தனித்து இயங்கும் AC மற்றும் DC பம்ப்செட்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் கட்டணமில்லாமல் பராமரிப்பு செய்வதுடன், காப்பீட்டு வசதியும் செய்து தருகிறோம். சரி, இதற்கான தகுதிகள் என்னவென்று பார்ப்போம்.

ஏற்கெனவே கிணறு அமைத்து, மின் இணைப்பு இல்லாமல் டீசல் என்ஜின் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளாக இருக்க வேண்டும். புதிதாகக் கிணறு அமைக்கும்பட்சத்தில், அரசு வரையறுத்துள்ள நிலநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் (Safe Firka) மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அனுமதிக்கப்படும். சூரிய சக்தி பம்ப்செட்டை நிறுவியபின், நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்துப் பாசனம் மேற்கொள்வதற்கு விவசாயி உறுதிமொழி அளித்திட வேண்டும். இலவச மின் இணைப்புக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) ஏற்கெனவே விண்ணப்பித்திருந் தால், தங்கள் மூதுரிமையின்படி, இலவச மின் இணைப்புப் பெறும்போது, சூரிய சக்தி பம்ப்செட்டை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை வழங்க வேண்டும்.

பேனல்கள்
பேனல்கள்

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://pmkusum.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உப கோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத் துக்குச் சென்று நேரிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆதார் அட்டையில் நகல், நிலத்துக்கான ஆதி திராவிட, பழங்குடியின விவசாயி என்றால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகியவை அவசியம். இணையதளத்தில் விண்ணப்பித்தாலும், நேரில் சென்று விண்ணப்பம் அளித்தாலும் இந்த ஆவணங்கள் அவசியம்.’’

பம்ப்செட்
பம்ப்செட்

‘‘தென்னை நார் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கொடுக்கிறார்கள்?’’

@ஆர்.ஈஸ்வரி நடராஜன்.

‘‘கேரளா மாநிலம் கொச்சியில் மத்திய அரசின் கீழ் கயிறு வாரியம், செயல்பட்டு வருகிறது. தென்னை நார்களைப் பயன் படுத்தித் தோட்டக்கலை, வீட்டு உபயோகப் பொருள்கள் என 32 பயன்பாடுகளுக்கான பொருள்களைத் தயாரிக்க வழிகாட்டி வருகிறார்கள். இந்த வாரியம் மூலம் பயிற்சிகள் மட்டுமல்ல கடனுதவிகளையும் மானியங் களையும் வழங்கி வருகிறார்கள். அதிகபட்சம் 90 சதவிகித மானியம்கூட கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

உதாரணமாகத் தனி விவசாயி அல்லது பல விவசாயிகள் ஓர் அமைப்பாக இணைந்து 1 கோடி ரூபாய் முதலீட்டில், தென்னை நார் தொழில் தொடங்க விரும்பினால், 10 சதவிகித பணம் மட்டுமே நீங்கள் வைத்திருந்தால் போதும். மீதித் தொகையைக் கயிறு வாரியம் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள். முதலீடு செய்யப் பணம் இல்லை என்று கவலைப்பட வேண்டாம். எங்களிடம் வாருங்கள் என்று அழைப்புவிடுக்கிறது கயிறு வாரியம்.

புறாபாண்டி
புறாபாண்டி

தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத் தென்னை நார்க் கயிறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தஞ்சாவூரில் மண்டல விரிவாக்க மையத்தை அமைத்துள்ளார்கள். இங்கு பயிற்சி, கருத்தரங்கு, பயிலரங்குகளை நடத்தி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு சமயத்தில் கயிறு வாரியத்துடன் இணைந்து பசுமை விகடன் இதழ் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியபோது, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியத்தின் மையத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறவும்.’’

தொடர்புக்கு,

வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்ப்பட்டி (அஞ்சல்) வல்லம் (வழி), தஞ்சாவூர் - 613403, தொலைபேசி: 04362 264655