கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

கொம்புகளுக்கு இயற்கை வண்ணம்; விவசாய மின் இணைப்புக்குச் சலுகைகள்; குறைவான மழையிலும் விளையும் சாமை!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘பொங்கல் சமயத்தில் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் அடிக்க உள்ளோம். இயற்கை வண்ணங்கள் உண்டா? இதைத் தயார் செய்வது எப்படி?’’

ம.பாலமுருகன், ராஜபாளையம்.

மதுரையைச் சேர்ந்த பாரம்பர்ய இன கால்நடை வளர்ப்பு ஆர்வலரும் சேவா அமைப்பின் செயலருமான பெ.விவேகானந்தன் பதில் சொல்கிறார்.

‘‘ரசாயன வண்ணங்கள் வருவதற்கு முன்பு நம் ஊரில் இயற்கை வண்ணங்களைத்தான் மாடுகளின் கொம்புகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இயற்கை வண்ணத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு ரசாயனத்தின் தீமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

மாடுகளுக்கு கொம்பில் வண்ணம்
மாடுகளுக்கு கொம்பில் வண்ணம்

அலங்காரம் என்ற பெயரில் நமக்குப் பிடித்த வண்ணங் களைக் கொண்டு கொம்புகளை நிறம் மாற்றுகிறோம். இந்த வண்ணங்கள் எல்லாமே முழுக்க ரசாயனங்கள் கொண்டு உருவாக்கப்படுவதால், கொம்புப் பகுதியில் ஒவ்வாமை ஏற்படலாம். சில நேரங்களில் மாடுகளின் உயிருக்கும்கூட பாதிப்பு ஏற்பட்டுவிடும். கொம்புகள் இயற்கையான நிறத்தில் இருப்பதுதான் அழகு. வண்ணங்கள் தீட்டித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால், இயற்கையில் வண்ணம் தரும் பொருள்கள் நிறைய உள்ளன. மஞ்சள் தூளுடன், சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தண்ணீர் சேர்த்தால்... இளஞ்சிவப்பு நிறக் கலவை கிடைக்கும். இதைக் கொம்புகளுக்குத் தடவி விட்டால், அழகுடன் இருக்கும். மேலும், மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பதால் ஏற்கெனவே கொம்புக்குள் நோய் இருந்தாலும் அதை விரட்டும்.

 விவேகானந்தன்,
விவேகானந்தன்,

இன்றும்கூட சில பகுதிகளில் கன்று போட்டவுடன் மாடுகளின் கொம்புகளில் சுண்ணாம்பு அடிக்கும் பழக்கம் உள்ளது. கன்று போட்டதன் மூலம் மாட்டுக்கு கால்சியம் மற்றும் தாதுஉப்புக்கள் பற்றாக் குறை ஏற்படும். இதனால் பால் காய்ச்சல் வர வாய்ப்பு உண்டு. இழந்த கால்சியத்தைப் புதுப்பிக்கத்தான் இப்படிச் சுண்ணாம்பு பூசுகின்றனர். ஆக, இயற்கை வழியில் செய்யும் போது பலவிதமான பலன்கள் கிடைக்கும்.’’

தொடர்புக்கு, விவேகானந்தன்,

செல்போன்: 77088 52334.


‘‘தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு பகுதி யிலிருந்தும், விவசாய மின் இணைப்பை வேறு எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் இடமாற்றம் செய்ய முடியும் என்ற செய்தியை வாட்ஸ் அப்பில் படித்தேன். இது உண்மையா?’’

@ஆர்.நடராஜன்.

‘‘தமிழ்நாட்டில் இந்த வசதிகள் 2020-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்தத் தகவல் இன்னும் விவசாயி களுக்கு முழுமையாகச் சென்று சேராமல் உள்ளது. பசுமை விகடன் இதழிலும், விகடன் இணையதளத்திலும் அவ்வப்போது இதைப் பற்றி எழுதி வருகிறோம். இந்தத் தகவல் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேர, ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் அறிவிப்பாக வைக்க வேண்டும்.

சரி, விஷயத்துக்கு வருவோம். 10.9.2020 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இது குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதைப் பார்ப்போம்.

‘விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் பதிவு செய்வதிலும் மின் இணைப்பு பெறுவதிலும் அதை உபயோகப் படுத்து வதிலும் மற்றும் இடமாற்றம் செய்வதிலும் இதுவரை நிலவி வந்த நடைமுறை சிக்கல்கள் அகற்றப்பட்டுத் தாமதமின்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளில் திருத்தங்கள் நடைமுறைப்படுத்தி ஆணை வழங்கியுள்ளது.

மின்சார வாரியத்தின் அறிவிப்பு
மின்சார வாரியத்தின் அறிவிப்பு

மின் இணைப்புக் கோரப்படும் விவசாயக் கிணறு, கூட்டு உரிமையாக இருக்கும் பட்சத்தில்... கூட்டுச் சொந்தக்காரர் ஒப்புதல் தர மறுத்தால் விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதுமானது. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பதிவு செய்யப்படும். விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் கிணறு மற்றும் நிலத்துக்கான உரிமைச் சான்று மட்டும் போதுமானது. இதர ஆவணங்கள் தேவை யில்லை. குறைந்தபட்சம் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்க வேண்டும்.

மின்மோட்டார் மற்றும் மின்தேக்கி ஆகியவற்றை வாங்கிப் பொருத்தி தயார் நிலையை மின்னிணைப்பு வழங்குவதற்கான ஆரம்பத்திலேயே தெரிவிக்கத் தேவையில்லை. மின்மாற்றி மற்றும் மின்கம்பி சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடிவுற்ற பின் விண்ணப்பதாரருக்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். அப்போது தயார் நிலையைத் தெரிவித்தால் போதும். தயார்நிலையைத் தெரியப்படுத்திய 3 நாள்களுக்குள் மின்னிணைப்பு வழங்கப்படும்.

ஒரே சர்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும்பட்சத்தில் தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருப்பின் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின்னிணைப்பு அனுமதிக்கப்படும்.

ஒரே கிணற்றின் உரிமைதாரர்கள் அனைவரும் ஒவ்வோர் மின்னிணைப்புக்கும் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்கும் பட்சத் தில் அதே கிணற்றில் தனித்தனியாக மின் இணைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே கிணற்றில் விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காகத் தண்ணீர் இறைத்துக் கொள்ள அதற்குரிய விகிதப்பட்டியலில் மற்றொரு மின்னிணைப்பு வழங்க அனுமதிக் கப்படும்.

தமிழ்நாட்டுக்குள் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் விவசாய மின்னிணைப்பை இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். இடமாற்றத்துக்கான காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

நிலம் விற்கப்பட்டுக் கிணறு மட்டும் இருந்தால் கூட அதில் உள்ள மின்னிணைப்பை இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்’ என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பயனுள்ள ஆணையை வெளியிட்டுள்ளது. இதில் ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப் பட்டால், இந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறவும் அழைப்பு விடுத்துள்ளது.’’

தொடர்புக்கு,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

எண்.19-A, ருக்மனி லட்சுமிபதி சாலை

(மார்ஷல்ஸ் சாலை),

எழும்பூர், சென்னை - 600008.

தொலைபேசி : 044-2841 1376 /28411378 /28411379

இணையதளம் : www.tnerc.gov.in

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘சாமை சாகுபடி செய்ய விரும்புகிறோம். குறைவான மழையிலும் விளைச்சல் கொடுக்கும் ரகம் எது? விதை எங்கு கிடைக்கும்?’’

ம.ஜெயதுர்கா, விழுப்புரம்.

‘‘சிறுதானியங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்க ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு - 2023’ கொண்டாடப்படும் நேரம் இது. தமிழ்நாட்டில் பாரம்பர்ய சாமை ரகங்கள் உள்ளன. இதில் சிறப்பாக விளையும் ரகங்களைத் தேர்வு செய்து அதிலிருந்து புதிய ரகங்களைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல், சிறுதானிய மகத்துவ மையம் வெளியிட்டு வருகிறது.

இந்த மையம் மூலம் ‘அத்தியந்தல்-1’ என்ற சாமை ரகத்தை வெளியிட்டுள்ளார்கள். இது குறைவான மழையிலும் சிறப்பாக வளரக்கூடியது. காற்றடித்தாலும் பயிர்கள் சாயாமல் இருக்கும். இந்த ரகத்தின் விதை இம்மையத்தில் கிடைக்கும்.’’

தொடர்புக்கு,

தொலைபேசி: 04175 298001.