Published:Updated:

கறவை மாடுகளின் தீவனச் செலவைக் குறைக்க என்ன செய்யலாம்?

 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

‘‘கடையில் தீவனம் வாங்காமல், சுயமாகத் தீவனம் தயாரித்துக் கறவை மாடுகளை வளர்க்க விரும்புகிறோம். இதற்கான தொழில்நுட்பங்களைச் சொல்லுங்கள்?’’

ஆர்.கோமதி, கள்ளக்குறிச்சி.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி செல்வராஜ் பதில் சொல்கிறார்.

‘‘கறவை மாடுகள் வளர்க்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் கடை தீவனத்தைத்தான் வாங்கினேன். ஆண்டு முடிவில் கணக்கு பார்த்தவுடன் ஆடிப்போய்விட்டேன். பால் வரவுக்கும் தீவனச் செலவுக்கும் சரியாக இருந்தது. எவ்வளவு பெரிய பண்ணையாக இருந்தாலும் கடையில் தீவனம் வாங்கி, கறவை மாடு வளர்த்தால், லாபம் எடுக்க முடியாது என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை. நான் என்ன செய்து தீவனச் செலவை குறைத்தேன் என்பதைக் குறிப்பிடுகிறேன். தீவனச் செலவைக் குறைக்க பசுந்தீவனத்தைப் பயிரிட்டேன். 10 மாடுகள் இருந்தால் 1 ஏக்கர் நிலத்தில் கோ-1, கோ-3, கோ-4, கினியாபுல், வேலி மசால், மல்பெரி எனக் கலந்து பயிரிட வேண்டும். ஒரே தீவனத்தைவிட பலவகையான தீவனத்தைக் கொடுக்கும்போது மாடுகள் விரும்பி சாப்பிடுகின்றன.

மாடுகள்
மாடுகள்

அடர் தீவனத்தையும்கூட நானே தயார் செய்துகொள்கிறேன். அரிசி நொய்-50 கிலோ, கேழ்வரகு-25 கிலோ, மக்காச்சோளம்-25 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில், 3 கிலோ எடுத்துக் கஞ்சியாகக் காய்ச்சிக்கொள்ள வேண்டும். 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த மூன்று கிலோ கடலைப் பிண்ணாக்குடன், தீவன கஞ்சியையும் கலந்து, மாடுகளுக்குக் கொடுக்க வேண்டும். இது 10 மாடுகளுக்குப் போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் 10 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ தவிட்டைக் கலந்து கொடுக்க வேண்டும். மேய்ச்சல் இருந்தாலும், மதிய வேளையில், ஒவ்வொரு மாட்டுக்கும் 15 கிலோ பலவகையான பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். இரவில் வைக்கோல், நிலக்கடலைக் கொடி என ஒவ்வொரு மாட்டுக்கும் 3 கிலோ கொடுக்க வேண்டும்.

செல்வராஜ்
செல்வராஜ்

கறவை மாடுகள் நன்றாகப் பால் கறக்க, மாடுகளை ஆரோக்கிய மாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு கடித்தால்கூட பால் உற்பத்தி குறையும். ஆகையால், மாட்டுக்கொட்டகையில் கொசு, ஈக்கள் வராத வகையில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் இளம் வெயிலில் இரண்டு மணி நேரம் மாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை குளிப்பாட்டி விட வேண்டும். இப்படிச் செய்தாலே கறவை மாடுகள் நன்றாகப் பால் கறக்கும். கடையில் தீவனம் கொடுத்து வளர்க்கும் மாடுகளைவிட, நாமே தயாரித்துக் கொடுக்கும் தீவனத்தை உண்ணும் மாடுகள் திடகாத்திரமாகவும் நோய், நொடியில்லா மலும் இருக்கும்.’’

தொடர்புக்கு, செல்வராஜ்,

செல்போன்: 95669 07377.

‘‘சின்ன வெங்காயம் சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ளோம். இனி வரும் மாதங்களில், சின்ன வெங்காயம் விலை எப்படி இருக்கும்?’’

எம்.எஸ்.முத்துசாமி, கோபிசெட்டிபாளையம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தின் பேராசிரியர் கே.எம்.சிவக்குமார் பதில் சொல்கிறார்.

‘‘வேளாண் மற்றும் உழவர் நல அமைச் சகத்தின் மதிப்பீட்டின்படி, 2019-20-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் சின்ன வெங்காயம் 0.28 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.55 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக அளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

வெங்காயம்
வெங்காயம்

தமிழ்நாட்டில், மொத்த வெங்காயப் பரப்பளவில் 90 சதவிகிதத்துக்கும் மேல் சின்ன வெங்காயமும் மீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிக அளவு பயிரிடுகின்றனர்.

வர்த்தக மூலங்களின்படி, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பருவமழை காரணமாகப் பயிர் சேதமடைந்ததால் வெங்காயத்தின் வரத்துத் தமிழ்நாட்டுச் சந்தையில் குறைந்துள்ளது. மேலும், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தமிழ் நாட்டில் விதைக்கப்பட்ட பயிர்கள் பருவ மழையால் பாதிக்கப்பட்டதால் விளைந்த மற்றும் சேமித்து வைக்கப்பட்ட வெங்காயமும் பெருமளவு அழிந்துவிட்டன. இதனால், சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கர்நாடகாவிலிருந்து புதிய வரத்து வந்தால் மட்டுமே விலை குறைய ஆரம்பிக்கும்.

சின்ன வெங்காயத்தை அளவின் அடிப்படையில் மூன்று தரமாகப் பிரிக்கப் படுகிறது. முதல் தரம் 27 மி.மீ, இரண்டாவது தரம் 23 மி.மீ மற்றும் 18 மி.மீ மூன்றாவது தரமாகும், கடைசித் தரம் விதைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முதல் தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.75 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இன்னும் விலை உயரும். அதன் பிறகு, விலை நிலையானதாக இருக்கும். ஆகையால், இதற்குத் தக்கப்படி சாகுபடி முடிவுகளை எடுக்கலாம்.’’

தொடர்புக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 தொலைபேசி: 0422 2431405.

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘டி.எம்.வி.2 நிலக்கடலை ரகத்தின் சிறப்பு என்ன? விதை எங்கு கிடைக்கும்?’’

கே.கலைச்செல்வன், வேலூர்.

‘‘திண்டிவனம் எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிடப் பட்ட டி.எம்.வி-2 என்ற ரகம், 120 நாள்கள் வயது கொண்டது. இந்த ரகத்துக்கு ‘பட்டாணி’ என்ற பெயரும் உண்டு. மானாவாரிக்கு ஏற்ற சிறந்த ரகம். அதிகமான வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை, முளைப்புத் திறன், நல்ல உடைப்புத் திறன் கொண்ட ரகம். இதை திருத்தணி, ஆந்திரா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்கிறார்கள். மானாவாரியில் ஏக்கருக்கு 500 கிலோ அளவுக்கு (காயவைக்கப்பட்ட பிறகு) மகசூல் கொடுக்கும். இந்த ஆராய்ச்சி நிலையத்தில் இதன் விதை கிடைக்கும்.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய்வித்துப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம். தொலைபேசி: 04147 250293.