Published:Updated:

கும்பகோணத்திலிருந்து ஏமன்... பறந்து செல்லும் பாரம்பர்ய அரிசி...

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

கும்பகோணத்திலிருந்து ஏமன்... பறந்து செல்லும் பாரம்பர்ய அரிசி...

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘சென்னையில் உள்ள அபிடா மண்டல அலுவலகத்தில் ஏற்றுமதி சம்பந்தமாக என்ன விதமான வழிகாட்டல், உதவிகள் செய்கிறார்கள்?’’

ஆர்.சுப்பு, தலைவாசல், சேலம் மாவட்டம்.

அபிடாவின் தமிழ்நாடு மண்டல பொறுப்பு அலுவலர் ஷோபனா குமார் பதில் சொல்கிறார்.

‘‘1986-ம் ஆண்டு ‘வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையம்’ (APEDA-Agricultural and Processed Food Products Export Development Authority) தொடங்கப்பட்டது. இதைச் சுருக்கமாக ‘அபிடா’ என்று அழைக்கிறோம். இந்த அமைப்பு, மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. தமிழ்நாட்டில் அபிடா அலுவலகம் வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். எங்கள் ஆணையத்தின் தலைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான முனைவர் எம்.அங்கமுத்து ஐ.ஏ.எஸ் அவர்களின் முயற்சியின் மூலம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு மண்டல அலுவலகம், சென்னையில் தொடங்கப்பட்டது.

அபிடா
அபிடா

ஏற்றுமதி எண்ணத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்தும், விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு உதவியும் செய்வதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். காய்கறி, பழங்கள், பூக்கள், அரிசி, நிலக்கடலை, வெல்லம், இறைச்சி, பால் பொருள்கள், தேன், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள்... என்று ஏற்றுமதிக்கு ஏற்ற பொருள்களையும் அவற்றை எந்த நாடுகளுக்கு, எந்த நிறுவனத்துக்கு அனுப் பலாம் என்றும்கூட ஆலோசனை வழங்கி வருகிறோம்.

அபிட
அபிட

சென்னை அலுவலகம் தொடங்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியா, வியட்நாம், கானா மற்றும் அமெரிக்காவுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கை தயாரிப்புகள், கும்பகோணத் திலிருந்து கானா, ஏமன் நாடுகளுக்குப் பாரம்பர்ய அரிசி, மதுரை மல்லி அமெரிக்கா வுக்கும்... எனப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தமிழக வேளாண்மைத் துறையின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் செவ்வாழை, மா, திராட்சை, மாதுளை, மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்கள் மற்றும் அதன் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், முருங்கை மற்றும் முருங்கை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், சிறுதானியங்கள் ஏற்றுமதி சந்தைக்கு ஏற்றவையாக உள்ளன. இவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அக்ரி-ஸ்டார்ட்அப்கள்... போன்றவர்களுக்கு வழக்கமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் நடத்தப் படுகின்றன.

கூட்டம்
கூட்டம்

வேளாண் ஏற்றுமதியாளராக முதலில் அபிடாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்குக் கட்டணம் உண்டு. மேலும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 1. ஏற்றுமதி உள்கட்டமைப்பு மேம்பாடு, 2. தர மேம்பாடு, 3. சந்தை மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி உதவிகள் வழங்கப் படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். வெற்றிகரமான வேளாண் ஏற்றுமதியாளராக வாழ்த்துகள்.’’

தொடர்புக்கு,

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்,
தமிழ்நாடு மண்டல அலுவலகம்,
இரண்டாம் தளம்,
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரக வளாகம்,
திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி,
சென்னை - 600032.
தொலைபேசி: 044-29500249, 29500247.

ஷோபனா குமார், சதீஷ்குமார்
ஷோபனா குமார், சதீஷ்குமார்


‘‘நெல் வயலில் மீன் வளர்க்க முடியுமா, மேலும் மீன் குளத்தில் அசோலா வளர்ப்பது எப்படி?’’

ந.சுகந்தி, திருவள்ளூர்.

மீன் வளர்ப்பிலும் அசோலா வளர்ப்பிலும் அனுபவம் வாய்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் பதில் சொல்கிறார்.

‘‘நெல் வயலில் மீன் வளர்க்கலாம். இயற்கை வழி முறையில் விவசாய நிலத்தில் மீன் வளர்ப்பது நல்லது. குறிப்பாக, 140 நாள்கள் வயது கொண்ட நம் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வது சிறந்தது. மீன் வளர்ப்புக்குத் தேர்வு செய்துள்ள நிலத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் தண்ணீர்த் தேங்கி நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் ஒரு நுட்பமும் உள்ளது. நெல் வயலின் வரப்பு ஓரத்திலிருந்து 1 மீட்டர் தள்ளி, அரை மீட்டர் ஆழத்தில் பள்ளம் செய்து கொள்ளவும். வயலின் நீளத்துக்குத் தக்கபடி, நீளமாக இருக்கலாம். இப்படி வயலின் நான்கு பக்க புறமும் செய்யலாம். இந்த வழித்தடங்களில்தான், மீன் அதிகமாக இருக்கும்.

விவசாயம்
விவசாயம்

நெல் நாற்று நடவு செய்த பிறகு, இரண்டு விரக்கடை அதாவது 10 செ.மீ அளவுக்கு நீர் தேங்கி நிற்க வேண்டும். நடவு செய்து ஒரு வாரம் கழித்து ஏக்கருக்கு 50 கிலோ அளவு அசோலாவைத் தூவி விட வேண்டும். இதன் மூலம் அசோலா வளர்ந்து பெருக்கமடையும். அடுத்த ஒரு வாரம் கழித்து ஏக்கருக்கு 2,000 மீன் குஞ்சுகளை வயலில் விடலாம். அசோலாவை அறுவடை செய்து, பசுஞ் சாணத்துடன் 1:1 என்ற அளவில் சேர்த்து இரண்டு வாரம் மட்க வைத்து நெல்வயலில் தூவி விடலாம். இதுவும்கூட மீன்களுக்குச் சிறந்த உணவு. இதனால் மீன்களின் கழிவுப் பொருள்களும் நெற்பயிருக்கு உரமாகப் பயன்படுகின்றன. நெல் அறுவடைக்கு முன்பே மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம்.

புறா பாண்டி
புறா பாண்டி

மீன்களுக்கும் இப்போது சில விவசாயிகள் அசோலாவைக் கொடுத்து வருகிறார்கள். மற்ற உணவுகளைவிட அசோலாவை மீன்கள் விரும்பி உண்கின்றன. மீன் குளத்தில் மூங்கில் குச்சிகளைத் தொட்டி வடிவில் கட்டி மிதக்க விட்டு, அதில் அசோலாவை வளர்க்கலாம். பசிக்கும்போது, மீன்கள் அதை சாப்பிட்டுக் கொள்ளும். அசோலாவைக் காய வைத்துப் பொடி செய்து தண்ணீரில் தெளிக்கவும் செய்யலாம். இதையும் மீன்கள் சாப்பிடும். கோழிகளுக்கும் மாடுகளுக்கும் அசோலாவைத் தீவனமாகக் கொடுக்கலாம். கோழிகள் எடைகூடும், மாடுகளின் பால் உற்பத்தி பெருகும். அசோலா, அருமையான இயற்கை உரமும்கூட! இவையெல்லாம் என்னைப் போன்ற விவசாயிகளின் அனுபவம்.’’

தொடர்புக்கு, சதீஷ்குமார்,

செல்போன்: 98433 77470.


‘‘வேளாண்மைப் பொறியியல் துறையின், தலைமைப் பொறியாளர் அலுவலக முகவரியைச் சொல்லுங்கள்?’’

ம.சின்னசாமி, கண்டமங்கலம், விழுப்புரம் மாவட்டம்.

‘‘சென்னை, நந்தனத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இந்தத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்த விவரங்களைப் பெறலாம். இவற்றைப் பெறுவதில் சிக்கல் இருந்தாலும், அதைத் தலைமைப் பொறியாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, உரிய தீர்வு பெறலாம்.’’

தொடர்புக்கு, தலைமைப் பொறியாளர்,

வேளாண்மைப் பொறியியல் துறை,

எண்.487, அண்ணா சாலை,

நந்தனம், சென்னை - 600 035.

தொலைபேசி: 044 29515322, 29515422.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism