Published:Updated:

பசுமை வீடு நுட்பம்... பால் உற்பத்தி பெருக்கம்... நல்விளைச்சல் தென்னை!

 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

பசுமை வீடு நுட்பம்... பால் உற்பத்தி பெருக்கம்... நல்விளைச்சல் தென்னை!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
 புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘மாட்டுக்கொட்டகையும் பண்ணை வீடும் கட்ட விரும்புகிறோம். ஃபெரோ சிமென்ட் முறையில் கட்டுங்கள் என்று நண்பர்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இந்தத் தொழில்நுட்பம் பற்றிச் சொல்லுங்கள்?

ஆ.செல்வி, திருத்தணி.

ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ‘ஃபெரோ சிமென்ட்’ தொழில்நுட்ப பயிற்றுநர் து.ராஜாராமன், பதில் சொல்கிறார்.

‘‘புதுச்சேரி-தமிழக எல்லையில் அமைந்துள்ள ‘ஆரோவில்’ சர்வதேச நகரத்துக்கு வந்தால்… ஃபெரோ சிமென்ட் வீடுகளைக் காண முடியும். பெரும்பாலும் வெளிநாட்டினர் வசிக்கும் இந்தப் பகுதியில், ஃபெரோ சிமென்ட் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது, தமிழ்நாட்டில் இந்தத் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி வீடுகள் கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், பசுமை விகடன் இதழ்தான். இது குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

ஃபெரோ சிமென்ட் முறை
ஃபெரோ சிமென்ட் முறை

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பண்ணை வீடுகள், மாட்டுக்கொட்டகைகள், ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள்... என்று கட்டப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முகுந்தன், பல ஆண்டுகளுக்கு முன்பே மாட்டுக்கொட்டகையை இந்தத் தொழில் நுட்பத்தில் கட்டியுள்ளார். நன்றாகக் கட்டட வேலை தெரிந்த கொத்தனார், சில நாள் களிலேயே இதைக் கற்றுக்கொள்ள முடியும்.

‘ஃபெர்ரோஸ்’ (Ferrous) என்ற வார்த்தைக்கு இரும்பு சார்ந்த பொருள் என்று அர்த்தம். செங்கல் இல்லாமல்… இரும்பு, சிமென்ட் மற்றும் மணலைக் கொண்டு மட்டுமே கட்டப்படுவதால் அதற்கு ‘ஃபெரோ சிமென்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் நீங்கள் நிறைய செலவு செய்து வீடு கட்டுகிறீர்கள். ஆனால், அந்த இடம் உங்களுக்கு ஏற்றதாக இல்லை. ‘இனி என்ன செய்ய முடியும்?’ என்று சகித்துக்கொண்டு வாழ்வீர்கள். ஆனால், ஃபெரோ சிமென்டில் இப்பிரச்னை கிடையாது. காரணம், வீட்டை அப்படியே பிரித்து, வேறு மாதிரி கட்டிக் கொள்ள முடியும். சுவர்கள், கூரை போன்றவை அச்சு போன்ற அமைப்பின்மீது வைத்து வடிவமைக்கப்படுகிறது. கதவு, ஜன்னல் என்று எதற்கும் மரங்களைப் பயன்படுத்தாமல் ஃபெரோ சிமென்ட்டை வைத்தே வேலையை முடிப்பதால், இதை ‘கிரீன் பில்டிங்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஃபெரோ சிமென்ட் முறை
ஃபெரோ சிமென்ட் முறை
ஃபெரோ சிமென்ட் முறை
ஃபெரோ சிமென்ட் முறை
ஃபெரோ சிமென்ட் முறை
ஃபெரோ சிமென்ட் முறை

வழக்கமான முறையில் கட்டடம் கட்டுவதைக்காட்டிலும் இந்த முறையில் கட்டினால் 30 சதவிகிதம் செலவு குறையும். இந்த முறையின் மூலம் பல அடுக்கு மாடிகளைக்கூட எளிதாகக் கட்டிவிடலாம். பூகம்பம், நில அதிர்வு ஏற்படும் பகுதிகளில், இந்தத் தொழில்நுட்பத்தில்தான் வீடு கட்ட வேண்டும் எனச் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பூகம்பம் (நில அதிர்வு) ஏற்பட்டபோது, அங்கிருந்த பெரிய பெரிய கட்டடங்கள்கூட சரிந்து விழுந்துவிட்டன. ஆனால், ஒரே ஒரு கட்டடம் மட்டும் அசையாமல் நின்றது. அது ஆரோவில்லில் பயிற்சிபெற்ற ஒருவரால் ‘ஃபெரோ சிமென்ட்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டடம். அதைப் பார்த்து ஆச்சர்யத்தால் அதிசயத்து நின்றவர்கள், இப்போது குஜராத்தில் இந்த வகைக் கட்டடங்களை அதிகமாக உருவாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆகையால், இந்தத் தொழில்நுட்பத்தில் மாட்டுக்கொட்டகை, பண்ணை வீடு மட்டுமல்ல, பல மாடி வீடுகளும் கட்டலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 93454 10707.

ராஜாராமன்
ராஜாராமன்

‘‘எங்கள் பண்ணையில் உள்ள மாடுகளின் பால் தண்ணீர்போல உள்ளது. என்ன காரணம்?’’

ம.பொன்முடி, மேல்சித்தாமூர், விழுப்புரம் மாவட்டம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் துரைசாமி பதில் சொல்கிறார்.

“நாம் கொடுக்கும் தீவனங்களில் குறைபாடு இருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும். பால் கறக்கும்போது, நுரை வருகிறதா என்று கவனியுங்கள். நுரை வந்தால்தான் புரதச்சத்து நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். நுரையில்லாமல், தண்ணீர்போல இருந்தால் புரதச்சத்துப் பற்றாக்குறையே காரணம் என்று எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை... போன்றவற்றைத் தீவனமாகக் கொடுத்து இதைச் சரி செய்ய முடியும். தவிர டானின் (சுருங்கிய வடிவில் உள்ள புரதம்) அதிகமாக உள்ள சவுண்டல் (சூபாபுல்), கிளரிசீடியா, வாதநாராயணன்... போன்ற மரங்களின் இலைகளையும் தீவனமாகக் கொடுக்க வேண்டும். இவற்றைப் புற வழிப் புரதங்கள் என்பார்கள் (Bypass protein).

இவை மாட்டின் இரைப்பையிலுள்ள நான்காம் அறையில் தங்கிச் செரிமானம் ஆகும். இதனால்தான் பாலில் புரதம் கூடுகிறது.

பாலில் எஸ்.என்.எஃப் என்று சொல்லப் படும் கொழுப்பு தவிர, பிற சத்துகளின் அளவு குறைவாக இருந்தால், தாது உப்புக் கலவையைக் கொடுக்க வேண்டும். சிலர் இதைத் தீவனத்தொட்டியில் மேலாகக் கொட்டிவிடுகிறார்கள். அது தவறு. அப்படிச் செய்யும்போது, தொட்டியின் அடியில் சென்று தங்கிவிடுவதால், மாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகள் கிடைக்காது.

புறாபாண்டி
புறாபாண்டி

இதைத் தவிர்க்கத் தீவனத்துடன் தாது உப்புக்களை நன்றாகப் பிசைந்து, அதனுடன் 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். இந்தத் தீவனத்தைத் தொடர்ந்து கொடுக்கும்போது ஏழு நாள்களிலேயே பாலில் மாற்றம் தெரியும். எனவே, இந்த நுட்பங்களைக் கவனமாகக் கடைப்பிடிக்கவும். தாது உப்புக்கலவையைப் பயன்படுத்தினால், கால்சியம் உள்ளிட்ட சத்துக்குறைபாடுகள் ஏற்படாது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மையங்களிலும் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை களிலும் தாது உப்புக் கலவைகள் கிடைக்கும். கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கட்டாயம், தாது உப்புக்களை ஆடு, மாடுகளுக்குக் கொடுப்பது அவசியம். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியில் கால்நடைகள் இருக்கும்.”

‘‘வி.பி.எம்-4 தென்னை ரகத்தின் சிறப்புகள் என்ன? இதன் கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

க.கீர்த்தி வர்மன், பொன்விளைந்த களத்தூர், செங்கல்பட்டு மாவட்டம்.

‘‘தஞ்சாவூர் மாவட்டம், வேப்பங்குளம் பகுதியில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட ரகம்தான் வேப்பங்குளம்-4 என்று அழைக்கப்படும் வி.பி.எம்-4. அதிக அளவில் கொப்பரை மகசூல் மற்றும் 67 சதவிகிதம் எண்ணெய் சத்தும் கொண்டது. ஆண்டுக்கு 250 காய்கள் வரை நல்ல விளைச்சல் கொடுக்கும். இந்த ஆராய்ச்சி நிலையத்தில் கன்றுகள் கிடைக்கும்.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம் – 614 906, தஞ்சாவூர் மாவட்டம்

தொலைபேசி: 04373 260205.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism