Published:Updated:

கழிவுநீருக்குக் கல்வாழை, பருத்தி எடுக்கும் கருவி, மக்காச்சோள விதை!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

கழிவுநீருக்குக் கல்வாழை, பருத்தி எடுக்கும் கருவி, மக்காச்சோள விதை!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘சோப்பு, ஷாம்பு கலந்த குளியல் அறை நீரைச் சுத்திகரித்து, வீட்டுத்தோட்டங்களுக்குப் பயன்படுத்துவது எப்படி?’’

எம்.எம்.எஸ் தாயுமானவன், மயிலாடுதுறை.

சென்னையைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட முன்னோடியும் ‘ஹோம் எக்ஸ்னோரா’ தலைவருமான ‘பம்மல்’ இந்திரகுமார் பதில் சொல்கிறார்.

‘‘சோப்பு, ஷாம்பு கலந்த குளியல் அறை நீரைச் சுத்திகரிக்காமல் வீட்டுத்தோட்டங்களுக்குப் பயன்படுத்தினால், மண்ணும் கெட்டுவிடும். செடி, கொடிகளும் வளராது. நிலத்தடி நீரையும் கெடுத்துவிடும். ஆகையால், சுத்திகரிப்புச் செய்து நீரைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. மிகவும் எளிய முறையில் சுத்திகரிப்புச் செய்ய முடியும். பல ஆண்டுகளாகக் குளியல் அறை நீரைச் சுத்திகரிப்புச் செய்து, வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். இந்த நுட்பத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் தான்.

அமைப்பு
அமைப்பு


உதாரணத்துக்கு, 10 நபர்கள் உள்ள வீட்டில் தினமும் 400 லிட்டர் குளிக்க, துணி துவைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நீரைச் சுத்திகரிக்க 5 அடி நீளம், 4 அடி அகலம், 1 அடி ஆழத்தில் சிமென்ட் தொட்டிக் கட்டிக்கொள்ளவும். தண்ணீர் வெளியேற, அடிப் பாகத்தில் மூன்று இன்ச் பம்ப் அமைக்கவும். தொட்டியின் உள்ளே கருங்கல் ஜல்லியை 2 அங்குல உயரத்துக்குப் போடவும். அடுத்து, முக்கால் ஜல்லியை 2 அங்குல உயரத்துக்குப் போடவும். இதன் மேலே கப்பி மணல் 4 அங்குல உயரத்துக்குக் கொட்டி, அதன் மீது கல்வாழை, நீர் சேம்பு, வெட்டிவேர் என இதில் உங்கள் பகுதியில் கிடைப்பதை நடவு செய்யலாம். மறக்காமல், குளியல் அறை நீர் விழும் இடத்தில் ஒரு டைல்ஸ் பதிக்கவும். இதனால், நீரின் வேகம் மட்டுப் படுத்தப்படும். தொட்டியில் உள்ள மண்ணும் அடித்துச் செல்வது தடுக்கப்படும்.

கல்வாழை
கல்வாழை


ஒரு வாரத்தில் செடிகள் தழைத்து விடும். முதலில் தொட்டியிலிருந்து மெதுவாக நீர் வெளியேறும். சில நாள்களில், நீர் வேகமாக வெளியேறத் தொடங்கும். இந்த நீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சினால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. காரணம், நாம் வளர்க்கும் செடிகளின் வேர்களும் அதில் வாழும் நுண்ணுயிர்களும் கழிவு நீரில் உள்ள பாஸ்பரஸ் என்ற பொருளை பாஸ்பேட்டாக (மணிச்சத்து) மாற்றிவிடுகின்றன. இதனால், செடி கொடிகளுக்கு இந்த நீரைப் பாய்ச்சும்போது, சிறப்பாக வளர்கின்றன.

மேலும், இந்த நீரைக் குடிக்கும் அளவுக்குத் தூய்மையானது என்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது என்று சொன்னால், ஆச்சர்யப்பட வேண்டாம். சேப்பு, ஷாம்பு கலந்த நீரை சுத்திகரிக்கும் தன்மை கல்வாழைக்கு உண்டு.’’

தொடர்புக்கு, ‘பம்மல்’ இந்திரகுமார்,

செல்போன்: 99410 07057.

ஆஷா ராணி, இந்திரகுமார்
ஆஷா ராணி, இந்திரகுமார்

‘‘பருத்தி எடுக்கும் கருவியைப் பயன்படுத்திப் பருத்தி எடுக்கலாமா, இதன் விலை என்ன?’’

சி.பாலன், பெரம்பலூர்.

கோயம்புத்தூரில் உள்ள தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகச் செயலர் ஆஷா ராணி பதில் சொல்கிறார்.

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட பருத்தி எடுக்கும் கருவி இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கருவியின் செயல் பாடு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிகமான தூசுடன் பருத்தியை எடுப்பதும், கருவியில் கோளாறு ஏற்படுவதும் சீனக் கருவியில் உள்ள முக்கியமான குறைபாடுகளாக இருந்தன.

தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், புதிய கருவியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. 5-6 ஆள்கள் மூலமாக, எடுக்கும் பருத்தியை, இந்த ஒரு கருவி மூலம் ஒரே நாளில் எடுக்க முடியும். இதில் 12V பேட்டரியுடன், பருத்தி சேகரிக்கும் பை, ஒரு கூடுதல் மோட்டார் மற்றும் உபகரணங்கள் இணைந்துள்ளன. பருத்தி எடுப்பவர் இடுப்பில் கருவியைக் கட்டிக்கொண்டு பயன்படுத்தலாம்.

பருத்தி எடுக்கும் கருவி
பருத்தி எடுக்கும் கருவி

ஒரு ஏக்கருக்கு 12 குவிண்டால் பருத்தி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பருத்தியை ஆள்கள் மூலமாக எடுப்பதற்கான செலவு 22,000 ரூபாய்க்கு மேல் ஆகும். இந்தக் கருவியின் தற்போதைய விலை 7,500 ரூபாய் (வரி தனி). பருத்தி எடுக்கும் செலவில் மூன்றில் ஒரு பங்கு தொகையில், இதை வாங்கிவிட முடியும். ஒரு மணி நேரத்தில் 5 கிலோ வரை பருத்தி எடுக்க முடியும். மாசற்ற தரமான பருத்தியை எடுக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம். கடந்த மார்ச் மாதம் வாரை உழவன் செயலி மூலம் இந்தக் கருவிக்கு 40 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிதி ஆண்டில் எவ்வளவு மானியம் என்பது விரைவில் தெரியும். இன்றைக்கு விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால், இந்தக் கருவியை வாங்குபவர் களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் எங்கள் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளவும்.’’

பருத்தி எடுக்கும் கருவி
பருத்தி எடுக்கும் கருவி

தொடர்புக்கு, தென்னிந்தியப் பஞ்சாலை கள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், 41, ரேஸ் கோர்ஸ் சாலை, கோயம்புத்தூர்-641018

தொலைபேசி: 0422 2220079,

செல்போன்: 98429 07765.

புறா பாண்டி
புறா பாண்டி

‘‘தரமான மக்காச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்?’’

வெங்கடேஷ், கள்ளக்குறிச்சி.

‘‘கோழித்தீவன உற்பத்தி, மாட்டுத்தீவன உற்பத்தி, ஸ்டார்ச் உற்பத்தி… எனக் கிட்டத்தட்ட 150 பொருள்களுக்கு மக்காச்சோளம் மூலப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகே உள்ள வாகரையில் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய மக்காச்சோளம் ரகங்களின் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மக்காச் சோள ரகங்களின் விதைகளும் இங்கு கிடைக்கும். எந்தப் பருவத்தில், எந்த ரகத்தைச் சாகுபடி செய்யலாம் என்ற தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்குவார்கள்.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை,

பழனி, திண்டுக்கல் மாவட்டம்.

தொலைபேசி: 04545 292900/292910/267373.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism