Published:Updated:

நிலம் வாங்கும்போது கவனம்... தென்னை வாடல் நோய்க்குத் தீர்வு... நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்...

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

நிலம் வாங்கும்போது கவனம்... தென்னை வாடல் நோய்க்குத் தீர்வு... நம்மாழ்வார் ஆராய்ச்சி மையம்...

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

‘‘விவசாய நிலம் வாங்க உள்ளோம். இதில் சட்டம் மற்றும் ஆவண ரீதியாகக் கவனிக்க வேண்டிய தகவல்களைச் சொல்லுங்கள்?’’

எஸ்.பானுமதி, காஞ்சிபுரம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்.ரமேஷ் பதில் சொல்கிறார்.

‘‘இங்கே குறிப்பிடப்போகும் தகவல்கள் விவசாயம் நிலம் மட்டுமல்ல வீட்டு மனை வாங்கவும்கூட பயன்படும்.

முதலில் நீங்கள் வாங்கப்போகும் மனை, யார் பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதை, கடந்த 30 ஆண்டுகளுக்கு அதற்கான மூலப் பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும். சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் உள்ள பத்திரங்களைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

சொத்தின் தற்போதைய உரிமையாளர் பெயரில் வழங்கப்பட்டுள்ள பட்டா மற்றும் நில அளவை விவரங்களைப் பார்க்கவும். இதன் மூலம் வருவாய்த்துறை ஆவணங்களில் அந்தச் சொத்து யார், யாரிடமிருந்து கைமாறியிருக் கிறது என்பதையும் சரிபார்க்கலாம். நிலத்தின் பயன்பாட்டுத்தன்மையைத் தெரிவிக்கும் வரைபடங்களையும் கட்டாயம் பார்க்கவும். உதாரணத்துக்கு, நிலத்தின் பயன்பாடு குடியிருப்புப் பகுதி என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப் பட்டிருந்தால், அந்த இடத்தை வணிகத் தொழில்களுக்குப் பயன்படுத்த முடியாது.

விவசாய நிலம்
விவசாய நிலம்

அடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக நில உரிமையைச் சரிபார்க்கவும். அடமானத்திலோ, நீதிமன்ற வழக்குகளிலோ இல்லை என்பதை உறுதி செய்யவும். வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்ப்பது அவசியம். நீங்களே வில்லங்கச் சான்றிதழின் விவரங்களை இணையத்தில் எடுத்துச் சரிபார்க்கவும்.

சில சமயம் பத்திரம், பட்டா, சிட்டா... போன்ற ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும். ஆனால், நேரில் சென்று பார்த்தால், அதிர்ச்சி அடையும் வகையில் இருக்கும். எனக்குத் தெரிந்த நண்பர், நிலம் வாங்கினார். பத்திரப் பதிவு செய்யும் முன்பு, அந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும்படி சொன்னேன். நானும் கூடவே சென்றேன். அப்போதுதான் நிலத்தை விற்க முன்வந்தவர் சொல்லிய தகவல்கள் அனைத்தும் தவறு என்று கண்டறிந்தோம். எங்களிடம் சொல்லிய இடத்துக்கும், நேரில் சென்று பார்த்தபோது உள்ள இடத்துக்கும் வேறுபாடுகள் இருந்தன. ‘‘சாலை ஓரத்தில், எந்தச் சிக்கலும் இல்லாத அருமையான இடம். விட்டால் கிடைக்காது வாங்கி விடுங்கள். நிறைய பேர் கேட்டுக் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு விலையைக் குறைத்துக் கொடுக்கிறோம். இன்றே பத்திரப் பதிவு செய்யுங்கள்’’ என்றெல்லாம் ஆசை வார்த்தைச் சொல்வார்கள். இதற்கு மயங்கி பணத்தைக் கொடுத்துவிட்டால், ஏமாற்றப் படுவீர்கள். ஆகையால், நேரில் சென்று நிலத்தையோ, மனையையோ பார்க்காமல் வாங்கக் கூடாது. மேலும், அந்தப் பகுதி வி.ஏ.ஓ மற்றும் தலையாரிகளிடம் நிலத்தைப் பற்றி விசாரிக்கவும். ஆவணங்களில் இல்லாத தகவல்களை இவர்கள் சொல்வார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரிக்கவும். அப்போது நிலத்தின் உரிமையாளர் குறித்த உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். தற்போது, தமிழ்நாட்டில் நில மோசடிகள் நிறைய நடந்து வருகின்றன. ஆகையால், நிலம் வாங்கும்போது, எச்சரிக்கை யுடன் செயல்படுவது நல்லது.’’

புறாபாண்டி
புறாபாண்டி


‘‘பொள்ளாச்சிப் பகுதியில் தென்னை வேர் வாடல் நோய் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு என்ன?’’

சி.ராமன்,வேட்டைக்காரன்புதூர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறையின் பேரா சிரியர் மற்றும் தலைவர் முனைவர் கா.கார்த்திகேயன் பதில் சொல்கிறார்.

என்.ரமேஷ், கார்த்திகேயன்
என்.ரமேஷ், கார்த்திகேயன்


‘‘இதைக் கேரளா வாடல் நோய் என்று அழைப்போம். காரணம், கேரளாவிலிருந்துதான், இது தமிழ்நாட்டுக்குப் பரவியது. குறிப்பாகக் கேரளா மாநில எல்லையில் உள்ள பகுதியில், இந்த நோயின் தாக்கம் இருக்கும். அவ்வப்போது வந்து மறையும். அந்த வகையில் பொள்ளாச்சி பகுதியில், இப்போது இதன் தாக்கம் தெரிகிறது. அண்மையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு பொள்ளாச்சி பகுதியைப் பார்வையிட்டோம். அதன் பிறகு, வாடல் நோயைக் கட்டுப்படுத்த பரிந்துரைகளையும் வழங்கினோம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். வேர் வாடல் நோயின் அறிகுறிகள் ஓலைகள் கீழ்நோக்கி வளைந்து மனிதனின் விலா எலும்புபோலக் காணப்படும். ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதோடு ஓரங்கள் கருகி இருக்கும். மரத்தின் குருத்துப் பகுதி மற்றும் பூங்கொத்துகள் கருகும். வேர்கள் அழுகிவிடும். இந்த நோய் பைட்டோபிளாஸ்மா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நுண்ணு யிரியானது, தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சிகளின் மூலம் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்குப் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த சரியான வடிகால் வசதி செய்ய வேண்டும்.

ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு 50 கிலோ தொழு உரம், 5 கிலோ வேப்பம் பிண்ணாக்கை அளவில் சரி பாதியாகப் பிரித்து ஆறு மாத இடைவெளியில் இரண்டு முறை இட வேண்டும். மேலும், ஒரு மரத்துக்கு 100 கிராம் டிரைக்கோடெர்மா ஏஸ்பரெல்லம் மற்றும் 100 கிராம் பேசில்லஸ் சபடிலிஸ் என்ற எதிர் நுண்ணுயிரிகளை 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வட்டப்பாத்தியில் மூன்று மாத இடைவெளியில் இட்டு மண்ணைக் கிளறிவிட வேண்டும். ஒரு மரத்துக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் பாஸ்போபாக்டீரியா மற்றும் 50 கிராம் வேம் எனும் வேர்உட்பூசணம் ஆகியவற்றை 5.0 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஆண்டுக்கு இரு முறை இட வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து ஆண்டுக்கு இரு முறை வேர் மூலம் செலுத்த வேண்டும்.

தென்னை
தென்னை

நோய் பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான கண்ணாடி இறக்கை மற்றும் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மரம் ஒன்றுக்கு வேப்பம் புண்ணாக்கு பவுடர் 200 கிராம் அளவுக்கு எடுத்து மணலுடன் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இட வேண்டும். மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ‘கோகோகான்’ இயற்கை நுண்ணுயிரியைப் பெருக்கம் செய்ய, 150 லிட்டர் நீரில் 10 கிலோ நாட்டுச் சர்க்கரை மற்றும் 5 லிட்டர் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு, 5 லிட்டர் ‘கோகோகான்’ தாய்க்கலவையைச் சேர்த்து மூங்கில் கம்பு கொண்டு நன்கு கலக்க வேண்டும். கடைசி யாகச் சமையல் உப்பு 500 கிராம் சேர்த்துக் கலக்க வேண்டும். இக்கலவையைச் சாக்குப் பையால் மூடி நிழற்பாங்கான இடத்தில் 5 - 7 நாள்கள் வரை வளர்க்க வேண்டும். தினமும் மூன்று முறை சுத்தமான மூங்கில் கம்பால் நன்கு கலக்கி விட வேண்டும். இவ்வாறு பெருக்கம் செய்த கோகோகான் நுண்ணுயிரி 2 லிட்டருடன் 8 லிட்டர் நீர் கலந்து மரத்தின் வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு மூன்று மாத இடைவெளியில் ஊற்றவும். இதன் மூலம் மரத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இங்கு குறிப் பிட்டுள்ள தொழில்நுட்பங்களைப் பின்பற்றி னால், வாடல் நோய் கட்டுப்படும். புதிய மட்டைகள் உருவாகி மரம் பழைய நிலைக்குத் திரும்பும். ’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

பயிர் நோயியல் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-641 003

0422 - 6611226.


‘‘கோயம்புத்தூரில் உள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் என்ன விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன?’’

ம.மணிவண்ணன், கோபிசெட்டிபாளையம்.

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் செயல்படும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில், இயற்கை முறையில் பயிர் சத்துகள் மேலாண்மை, களை மேலாண்மை, இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம் போன்ற தலைப்பு களில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. கட்டணம் உண்டு.’’

தொடர்புக்கு,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003.

தொலைபேசி: 0422 - 6611206, 2455055.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism