Published:Updated:

50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி! - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!
நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

பண்ணை

பிரீமியம் ஸ்டோரி
“என் மாந்தோப்பை ஒருத்தருக்கு குத்தகை விட்டிருந்தேன். அவங்க மாம்பழத்தோட விளைச்சலை அதிகப்படுத்துறதுக்காக எக்கச்சக்கமான மருந்துகளைத் தெளிச்சாங்க. அவங்க அடிச்ச மருந்துகள் நான் வெச்சிருந்த தேனீப் பெட்டிகள்ல பட்டு தேனீக்களைக் கொன்னுடுச்சு.

அப்பதான் ரசாயன மருந்துகளோட கொடூரமான முகம் எனக்குத் தெரிய வந்துச்சு. உடனே அவங்களோட போட்ட ஒப்பந்தத்தை முடிச்சுகிட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்” என்று உறுதியாகப் பேச ஆரம்பித்தார், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள மின்னல் சித்தாமூரைச் சேர்ந்த அருள்மொழி வர்மன். அடர்ந்த வனம்போல இருந்த இவரது பண்ணையில் ஒரு காலை வேளையில் அவரைச் சந்தித்தபோது தொடங்கியதுதான் இந்த உரையாடல்.

வயலில் மனைவியுடன் அருள்மொழி வர்மன்
வயலில் மனைவியுடன் அருள்மொழி வர்மன்

“நான் பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்திலிருந்து வரவில்லை. ஆரம்பத்துல எனக்கு விவசாயம் பத்தி அவ்வளவா தெரியாது. என் அப்பா கண் மருத்துவர். அவர் வழியிலயே நானும் கண் மருத்துவர். 20 வருஷத்துக்கு முன்ன இருந்து விவசாயம் செய்யணும்னு ஒரு ஆசை இருந்துச்சு. அதனால 2000-ம் வருஷத்துல இந்த நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமா வாங்கினேன். இப்போ மொத்தமா 50 ஏக்கர் இருக்கு. மருத்துவத் தொழிலோடு விவசாயமும் செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல இருந்தே ரசாயனத்தைப் பயன்படுத்தக் கூடாதுங்குறதுல உறுதியா இருந்தேன். நான் வாங்கும்போது கொஞ்சம் மரங்கள் இருந்தன. இதை ஓர் இயற்கைச் சூழல் பண்ணையா மாத்தணும்னு நினைச்சேன். அதுக்காக இந்தப் பண்ணையில எல்லா வகையான மரக் கன்றுகளையும் நட்டு வச்சேன். என் தோட்டத்துல முந்திரியில இருந்து செம்மரம் வரைக்கும் மரக்கன்றுகளை நட்டேன். அதுபோலவே வாழை, மல்லிகை, மஞ்சள், தென்னை, காய்கறிகள், நெல்லுனு எல்லா வகையான பயிர்களும் பயிர் செய்து கிட்டு வர்றோம். இயற்கை உரங்களை வெளியில இருந்து வாங்கினப்போ அதுக்கான செலவுகள் அதிகமா இருந்தது. அதனால என் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய ஆரம்பிச்சோம். நாட்டு மாடுகள் இல்லாம ஒரு பண்ணை முழுமையடையாதுங்குறது என் எண்ணம். அதனால் சாஹிவால், கிர், காங்கிரேஜ்னு நாட்டு மாடுகளை வாங்கினேன். அதுங்களோட எருவைத்தான் பயிர்களுக்குப் பயன்படுத்துறோம்” என்று முன்கதை சொன்னவர் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேசினார்.

வாழை, மல்லி, மஞ்சள் தோட்டத்தில்
வாழை, மல்லி, மஞ்சள் தோட்டத்தில்

“என் பண்ணையில மொத்தம் 70 நாட்டு மாடுகள் இருக்கு. நம்ம நாட்டு மாடுகளைப் பொறுத்தவரைக்கும் அதைப் பாதுகாக் குறதுக்கு ரொம்ப மெனக்கெடத் தேவை யில்லை. மொத்த மாடுகளும் பண்ணைக்கு உள்ளயே மேய்ச்சலுக்குப் போகுது. அதுல இருந்து வர்ற பாலை மோராக்கி பண்ணைக்கு வெளியில இருக்குற என்னோட கடையில வெச்சு விற்பனை செய்றோம். அதுல மீதமாகுற மோரை வெச்சு, தேமோர் கரைசல் தயார் செய்றோம். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு இயற்கை இடுபொருள்களையும் தயார் செய்றோம். மூன்று குடில்கள் அமைச்சு மண்புழு உரத்தை உற்பத்தி செய்றோம். எல்லாப் பயிர்களுக்கும் மண்புழு உரம்தான் கொடுக்குறோம். 10 தொட்டிகள்ல அசோலாவை வளர்க்குறோம். அதை மாடு களுக்கும் கோழிகளுக்கும் தீவனமா கொடுத்துக் கிட்டிருக்கோம்.

‘‘இப்போ உயிர்ச்சூழல் பண்ணையா மாறியிருக்குங்குறதுதான் என் மனசுக்கு சந்தோசமா இருக்கு.’’

கிணறுகள் அவசியம்

இதுதவிர, என் பண்ணையில 3 ஏக்கர்ல ஒரு பண்ணைக்குட்டையும், ரெண்டு ஏக்கர்ல 2 பண்ணைக்குட்டைகளும் வெட்டியிருக்கோம். இந்தக் குட்டைகளை மூலதனமா வெச்சு, 6 கிணறுகள் இருக்கு. பண்ணையில போர்வெல் அமைக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை. கிணறுங்கதான் தண்ணீர் வளத்தைப் பெருக்குறதுக்கான ஒரே வழினு நம்புறேன். அதுக்காகத் தொழில்நுட்பத்துக்கு எதிரானவன் நான் இல்லை. தொழில்நுட்பம் நமக்கும் சூழலுக்குமானதாக இருக்கணும். சூழலைப் பாழ்படுத்தக்கூடியதாக இருக்கக் கூடாது. போர்வெல் அமைச்சதுதான் தண்ணீர் வளம் குறைஞ்சதுக்கான ஒரே காரணம். கிணறுகள்ல இருந்து தண்ணீரை எடுத்து ஒரு தொட்டி கட்டி, அதுல இருந்து சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு பாசனம் செய்றோம். 100-க்கும் குறைவான எண்ணிக்கை யிலதான் கோழிகள் இருக்கு. இப்போதைக்கு வீட்டு உபயோகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்திகிட்டு இருக்கேன்.

அசோலா வளர்ப்பு
அசோலா வளர்ப்பு

சபாஷ் சணப்பு

என் தோட்டத்துல டிராக்டர் இருந்தாலும், மாடுகளை வெச்சுதான் அதிகமா உழவு செய்றோம். அதனால மண் நல்லா இருக்குது. 20 சென்ட்ல மாப்பிள்ளைச் சம்பா, குண்டு நெல் ரகங்களை நாற்று விட்டிருக்கோம். நெல் வயலைத் தயார் செய்றதுக்கு முன்னாடி சணப்பை விதைச்சிருவோம். அது காடு மாதிரி வளர்ந்து நிற்கும். அதை அப்படியே மடக்கி உழுதுட்டுதான் நெல் வயலைத் தயார் செய்வோம். நெல்லுக்கு இது நல்ல அடியுரமா இருக்கு. இங்க 1,000-க்கும் மேல தென்னை மரங்கள் இருக்கு. 10 ஏக்கர்ல மா மரங்கள் இருக்கு. 10 ஏக்கர்ல சப்போட்டா, கொய்யா, நெல்லி, முந்திரினு பல வகை மரங்கள் இருக்கு. தென்னைக்குள்ள ஊடுபயிரா மஞ்சள் பயிர் செய்திருக்கோம். நல்ல விளைச்சல் கிடைச்சிருக்கு. 50 சென்ட்ல தென்னைக்கு ஊடுபயிரா கற்பூரவள்ளி வாழை பயிர் செய்திருக்கோம். பண்ணையைச் சுற்றிலும் முழுக்க மூங்கில்களும் பனைமரங்களும் வேலியா இருக்குது. அதுபோக 5 ஏக்கர்ல நிலக்கடலைப் பயிர் செய்திருக்கோம். அதுல இருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்றோம். தென்னையில இருந்து கிடைக்கிற தேங்காய்கள்ல இருந்தும் எண்ணெய் எடுத்து விற்பனை செய்றோம். நாட்டு மாடுகள்ல இருந்து கிடைக்கிற பால்ல நெய் தயார் செய்றோம்” என்றவர் களைப்பு தீர இளநீரைப் பருகக் கொடுத்தார்.

‘‘தென்னையில இருந்து கிடைக்கிற தேங்காய்கள்ல இருந்தும் எண்ணெய் எடுத்து விற்பனை செய்றோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி! - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

பண்ணை பராமரிப்பில் கேமராக்கள்

சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு பேசத்தொடங்கியவர், “என் பண்ணையில இருந்து எந்தப் பொருளும் வேஸ்ட்னு சொல்லி வெளியே போகாது. அதுபோல இடுபொருள்னு சொல்லி எதுவும் வெளியில இருந்து உள்ள அனுமதிக்கவே மாட்டேன். மாந்தோப்புல விழுகுற மா இலைகள் எல்லாத்தையும் வருஷம் ஒருமுறை அப்படியே உழுதிருவோம். அதிகமா இருந்ததுன்னா, எடுத்துத் தென்னைக்கு மூடாக்கா போட்டிருவோம். நான் ஒரு மருத்துவரா இருக்குறதால, வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) மட்டும்தான் வருவேன். ஆனா, தினமும் தொடர்ந்து பண்ணையைப் பார்க்கிற மாதிரி 40 கேமராக்கள் பண்ணைக்குள்ள இருக்கு. பண்ணையில என்ன நடந்தாலும், அதை உடனடியா பார்த்து சரி செய்றேன். விவசாயம் செய்ற நிலம், அதை வெச்சு வருமானம் எடுக்கலாம்னு நான் நினைக்கல. இது ஒரு உயிர்ச் சூழல் பண்ணையா இருக்கணும்கிறதுக்காகத்தான் இதை உருவாக்கி இருக்கேன்.

தென்னை, மாமரங்கள்
தென்னை, மாமரங்கள்

என் பண்ணையில மூலிகைகள் முதல் மரப்பயிர்களான செம்மரம், தேக்கு, குமிழ்னு மர வகைகளும் அதிகமா இருக்கு. பண்ணையைச் சுற்றிலும் 15-க்கும் மேல தேனீப் பெட்டிகள் இருக்கு. 5 சென்ட்ல தனியா ஒரு நர்சரி அமைச்சு, அதுல எனக்குத் தேவையான நாற்றுகளை நானே தயார் செய்றோம். இந்தப் பண்ணைக்கு அதிகமான மாணவர்கள் பயிற்சி எடுக்குறதுக்காக வர்றாங்க. இங்க பண்ணையில கிடைக்கிற பொருள்களை வெளியில ஸ்டால் அமைச்சு விற்பனை செய்றோம். இதுபோக என் மருத்துவமனையில வெச்சும் விற்பனை செய்றேன்” என்றவர் தொடர்ந்தார்.

மண்புழு உரம்
மண்புழு உரம்

செலவும் குறைவு... விலையும் குறைவு!

“மொத்தமா 50 ஏக்கர் பண்ணையை வெச்சுகிட்டு லாபம் எடுக்கலையானு எல்லோரும் கேப்பாங்க. லாபம்னு தனியா கணக்குப் போடுறமாதிரி விரிவா விளக்க முடியாது. ஒரு பயிரோட செலவுக்கும் பராமரிப்புக்கும், இன்னொரு பயிரோட லாபத்தைச் செலவழிக்க வேண்டி இருக்குது. என் பண்ணையில மொத்தம் 15-க்கும் மேல ஆட்கள் வேலை செய்துகிட்டு இருக்காங்க. அவங்களுக்குச் சம்பளம், மின்சாரக் கட்டணம், போக்குவரத்துனு பண்ணைச் செலவுகளும் இருக்கு. என் பண்ணையில உற்பத்தியாகுற பொருள்களுக்கு உற்பத்திச் செலவு கம்மிதான். அதனால நானும் விலை குறைவாத்தான் விற்பனை செய்றேன். உதாரணமா அரை லிட்டர் சுத்தமான நாட்டுமாட்டோட மோர் 10 ரூபாய்னுதான் விற்பனை செய்றோம். இதை வெச்சே நான் லாபத்துக்காகப் பண்ணையை நடத்தலைனு புரிஞ்சுக்கலாம்’’ என்றவர் நிறைவாக,

50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி! - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

“இந்தப் பண்ணையை நான் 15 வருஷமா நேரடியா பார்த்துக்கிட்டிருக்கேன். ஆனா, தினம் தினம் கத்துகிட்டுத்தான் இருக்கேன். இப்போ உயிர்ச்சூழல் பண்ணையா மாறியிருக்குங்கிறதுதான் என் மனசுக்கு சந்தோஷமா இருக்கு. இதை முழுமையான வணிகரீதியான பண்ணையா மாத்துனா, மருத்துவத்துல வர்ற வருமானத்தைவிட, இந்தப் பண்ணையில அதிகமான வருமானம் கிடைக்கும்” என்றபடி விடைகொடுத்தார் அருள்மொழி வர்மன்.

50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி! - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

நடிகர் அஜித் விரும்பிய இந்தப் பண்ணையின் வீடியோவைப் பசுமை விகடன் யூடியூபில் காண இந்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது இந்த லிங்க்கில் https://bit.ly/33GFiw7 சென்று பார்க்கவும்

50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி! - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

கரி மூடாக்கு!

ரியை மரங்களுக்கு மூடாக்காகப் பயன்படுத்துவதைப் பற்றி பேசிய அருள்மொழி வர்மன், “வருஷம் ஒரு தடவை மாமரங்களைக் கவாத்து செய்றோம். அந்தக் கவாத்து கிளைகளை எரிச்சு அதைக் கரியாக்கி, மரங்களுக்கு வேர்ப்பகுதியில போடுவோம். இது அதிகமான ஈரப்பதத்தை உறிஞ்சு வெச்சு, பயிர்களுக்குத் தேவைப்படும்போது கொடுத்துடும். இதுவும் ஒருவகை மூடாக்குதான்’’ என்கிறார்.

“நானும் விவசாயம் செய்யணும்!”

நடிகர் அஜித்குமாரின் ஆசை!

50 ஏக்கரில் தென்னை, வாழை, மஞ்சள், மல்லி! - நடிகர் அஜித்குமாரின் ‘ஆசை’ பண்ணை!

ண்ணைக்கு அஜித்குமார் வருவதை நினைவு கூர்ந்த அருள்மொழி வர்மன், “நடிகர் அஜித்குமார் இந்தப் பண்ணைக்கு அப்பப்போ வருவார். அதனால இந்தப் பகுதி மக்கள் எல்லோரும் அஜித்குமார் பண்ணைனு பேர் வெச்சுட்டாங்க. அதுகூட எனக்கு ஒருவகையில சந்தோஷம்தான். பண்ணையில தனியா ஓர் இடம் இருக்கு. அதுல பெங்களூரு, ஹைதராபாத்னு வெளியில இருந்து ஆட்கள் ரிமோட் ஹெலிகாப்டர் பறக்க விடுறதுக்காக வருவாங்க. அப்போதான் என் நண்பரும் ஒளிப்பதிவாளருமான அரவிந்த் மூலமா நடிகர் அஜித்குமார் இந்தப் பண்ணைக்கு வந்தார். அதுல இருந்து அவருக்கு இந்தப் பண்ணை பிடிச்சுப் போச்சு. இப்போ இருக்குற ‘தார் ட்ராக்’ அவர் செலவுல போட்டதுதான். அவர் இங்க வந்து டிராக்டர் ஓட்டுவார். பண்ணையைச் சுற்றிப் பார்ப்பார். என்கிட்ட ‘இதுமாதிரி இடம் இருந்தா எனக்கு நிலம் வாங்கிக் கொடுங்க. நானும் விவசாயம் செய்யணும்’னு சொன்னார். கூடிய சீக்கிரம் நடிகர் அஜித்குமாரை விவசாயியாகவும் பார்க்கலாம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு