Published:Updated:

`ஆச்சர்யப்பட்டு கத்துக்கணும்னு வந்தேன்'- கரூரில் வயலில் இறங்கி நடவுநட்டு அசத்திய அமெரிக்கப் பெண்!

"விவசாயம் செய்வதை இப்போதுதான் நேராகப் பார்க்கிறேன். எங்க ஊர்ல எல்லாத்துக்கும் மெஷின்தான். ஆனா, இங்கே எல்லா வேலைகளையும் மனிதர்களே செய்வதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமா இருக்கு."

நடவு நடும் மார்த்தா
நடவு நடும் மார்த்தா ( நா.ராஜமுருகன் )

தமிழர்களின் பாரம்பர்ய கலாசாரத்தையும், இன்னும் பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள வந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வயலில் இறங்கி நடவு நட்டு அசத்தினார். "விவசாயம் செய்வதை இப்போதுதான் நேராகப் பார்க்கிறேன். எங்க ஊர்ல எல்லாத்துக்கும் மெஷின்தான். ஆனா, இங்கே எல்லா வேலைகளையும் மனிதர்களே செய்வதை பார்ப்பதற்கு ஆச்சர்யமா இருக்கு" என்று அந்தப் பெண் பாராட்ட, நடவு நடும் நம் ஊர் பெண்கள் ஆச்சர்யப்பட்டனர்.

நடவு நடும் மார்த்தா
நடவு நடும் மார்த்தா
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் குப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர், குணசேகர். இவர், மாயனூரில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். அதோடு, இயற்கைமீது காதல் கொண்டவரான இவர், அதே ஒன்றியத்தில் உள்ள மாயனூர் முடக்குச்சாலை பகுதியில், 10 ஏக்கர் நிலத்தில் அடர்வனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார். இவர் மனைவி சித்ரா, அங்கே இயற்கை முறையிலான மருத்துவத்தையும் வழங்கிவருகிறார். இயற்கை விவசாயத்தையும் குணசேகர் அங்கே செய்துவருகிறார்.

Vikatan

இவரது இந்த அடர்வனத்தில்தான், அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மார்த்தா என்ற பெண் வந்து தங்கியுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள பிரபல கம்பெனிகளில் பொருளாதார ஆலோசகராக இருந்துவரும் அவர், இப்போது தமிழர்களின் பாரம்பர்ய விசயம், ஆயுர்வேத மருத்துவ முறைகள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார்.

நடவு நடும் மார்த்தா
நடவு நடும் மார்த்தா
நா.ராஜமுருகன்

கரூர் வந்த அவர், குணசேகர் அமைத்துள்ள அடர்வனத்தில் தங்கியுள்ளார். குணசேகர், ஆறு ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளும் இயற்கை விவசாய முறைகளைப் பார்த்து வியந்திருக்கிறார். அதோடு, ஒற்றை நாற்று முறையில் குணசேகர் செய்த நடவுமுறையைத் தெரிந்துகொண்டு, தானும் நடவு நடும் பெண்களோடு சேர்ந்து நடவு நட்டு அசத்தியிருக்கிறார்.

இதுகுறித்து குணசேகரிடம் பேசினோம். ``மார்த்தாவுக்கு வயது 60. ஆனா, அவங்க இதுவரை விவசாயம் செய்வதை நேரடியா பார்த்ததில்லையாம். அவங்க பிறந்து வளர்ந்து, பணிபுரிவது எல்லாமே மாடர்ன் சிட்டியான கலிபோர்னியாவில். அதனால், அவங்களுக்கு நெல் விவசாயத்தைப் பத்தி சுத்தமா தெரியாதாம். நாங்க, எங்க வயல்ல நடவு நடப்போறோம்னதும், ஆர்வமா வந்து அவங்களும் நடவு நட்டாங்க. 'சேத்துல இறங்கி நின்னுக்கிட்டு நடவு நடுறது ரொம்ப கஷ்டம். ஆனா, ஈஸியா நீங்க நடுநீங்க?'னு நடவு நடும் பெண்களைப் பாராட்டினாங்க. அதோடு, நடவு நடும் பெண்கள் பாடிய பாடல்களையும் பாடினாங்க. 'எங்க ஊர்ல எல்லாத்துக்கும் மெஷினரிதான்.

நடவு நடும் மார்த்தா
நடவு நடும் மார்த்தா
நா.ராஜமுருகன்

ஆனா, இங்கே பெரும்பாலான வேலைகளுக்கு இன்னமும் மனிதர்களை வச்சே வேலைபார்க்க வைக்கிறீங்களே, ஏன்?'னு கேட்டாங்க. அதுக்கு நான், 'நாங்க விவசாயத்தை வெறுமனே ஒரு தொழிலா மட்டும் பார்ப்பதில்லை. அதை எங்கள் வாழ்வியலோடு தொடர்புடையதா பார்க்குறோம். உணர்ச்சிபூர்வமா விவசாயத்தை அணுகுகிறோம். விவசாயத்துக்குப் பயன்படுற மாட்டை, மண்ணை, சூரியனை வணங்குவோம்'னு சொன்னதும், 'வாவ், ஃபென்டாஸ்டிக்'னு பாராட்டித் தள்ளிட்டாங்க. அடுத்து, கிணத்துல குளிக்கிறதப் பாத்து ஆச்சர்யப்படுறாங்க" என்றார்.

மார்த்தாவிடம் பேசினோம். ``தமிழர்களோட பல கலாசார விசயங்களை, குறிப்பா உணவே மருந்துங்கிற வாழ்வியல் முறையைக் கேள்விப்பட்டு, அதைக் கத்துக்கணும்னு வந்தேன். குணசேகர் மூலமா இங்கு விவசாயத்தை எவ்வளவு உயர்வா செய்றீங்கங்கிறதும் எனக்கு வியப்பை ஏற்படுத்திடுச்சு.

ஆசிரியர் குணசேகரோடு மார்த்தா
ஆசிரியர் குணசேகரோடு மார்த்தா
நா.ராஜமுருகன்

எங்க நாட்டுல அதை வெறும் தொழிலா நெனச்சுதான் பண்றாங்க. அதனால, லாபம் நிறைய கிடைக்குது. ஆனா, இங்க லாபமே இல்லைன்னாலும் விவசாயத்தை விடாம பண்றதப் பார்க்கையில், ஆச்சர்யமா இருக்கு. தமிழக விவசாயிகள் மேல பெரிய மரியாதை ஏற்படுது" என்றார், உணர்ச்சிமேலிட!