Published:Updated:

`இனிமே ஒட்டகப்பால்ல டீ போடுறா...' - வடிவேலு வசனம் நிஜமாகிறதா?

துரை.நாகராஜன்

இன்சுலின் மாதிரியான புரதச் சத்துகள் இருப்பதால், டைப்-1 சர்க்கரை நோயாளிகளும் பாலை அருந்தலாம்.

ஒட்டகப் பால்
ஒட்டகப் பால்

கடந்த ஜனவரி மாதம், இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் காந்தி நகர், அகமதாபாத் மற்றும் கட்ச் பகுதிகளில் அமுல் நிறுவனம் ஒட்டகப் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனையைத் தொடங்கியது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பிராண்டான அமுல் ஒட்டகப் பால் எளிதாகச் செரிமானம் ஆகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் தேவையான இன்சூலின் போன்ற பல மருத்துவக் குணங்களைக் கொண்டது என்றும் சொல்லியிருந்தது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஒட்டகப் பால், 500 மி.லி பாட்டில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.

ஒட்டகப் பால்
ஒட்டகப் பால்

இந்த நிலையில், புதிதாக 200 மி.லி ஒட்டகப் பால் பாட்டில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விலை 25 ரூபாய். ஏற்கெனவே பதப்படுத்தப்பட்டிருப்பதால், இந்தப் பாலை அப்படியே குடிக்கலாம். எந்த விதமான பாக்டீரியாவும் இருக்காது. ஃப்ரிட்ஜில் வைத்து பதப்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. இதில் இரும்பும், விட்டமின்-சியும் இருக்கிறது. இன்சுலின் மாதிரியான புரதச் சத்துகள் இருப்பதால், டைப்-1 சர்க்கரை நோயாளிகளும் அருந்தலாம். பாட்டிலைத் திறந்த 24 மணிநேரத்திற்குள் பாலை பயன்படுத்திவிட வேண்டும். பேக்கிங் செய்யப்பட்டு 180 நாள்கள் வரை பாலை ஸ்டாக் வைக்கலாம். 'வெற்றிக்கொடிக்கட்டு' படத்தில், வடிவேலு `ஒட்டகப்பாலில் டீ போடு' என்று காமெடியாகப் பேசியிருப்பார். அதை நிஜமாக்கும் வகையில் தற்போது ஒட்டகப்பால் விற்கப்பட உள்ளது.