Published:Updated:

சர்க்கரை ஆலை மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மீனாட்சி சரயோகி யார்?

குடும்பத்தினருடன் 
மீனாட்சி சரயோகி
குடும்பத்தினருடன் மீனாட்சி சரயோகி

ஒரு சிறிய புள்ளியிலிருந்துதான் எதுவுமே விஸ்வரூபம் எடுத்து வரும். அப்படி வந்தவர்தான் மீனாட்சி சரயோகி. யாருங்க இது என்று கேட்க தோன்றுகிறதுதானே... அவரது கதையைக் கேட்டால் இன்னும் விழி விரிந்து போய் நிற்பீர்கள்.

``விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை; ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யப்படும் கரும்புப் பயிருக்கே இன்னும் நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகள் கொடுக்காமல் உள்ளன. இந்த நேரத்தில் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, மேலும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு'' என முழங்கியபடி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு ஒரு பைசா பாக்கியில்லாமல், உடனுக்குடன் பணத்தைக் கொடுத்து விவசாயிகளிடம் நன்மதிப்பைப் பெற்ற சர்க்கரை ஆலை ஒன்றும் இந்தியாவில் உண்டு. அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர், மீனாட்சி சரயோகி. இப்போது அவர் உயிருடன் இல்லை. ஆனால், விவசாயிகளின் உள்ளங்களில் உயிர்ப்புடன் உள்ளார்.

மீனாட்சி சரயோகி
மீனாட்சி சரயோகி

ஒரு சிறிய புள்ளியிலிருந்துதான் எதுவுமே விஸ்வரூபம் எடுத்து வரும். அப்படி வந்தவர்தான் மீனாட்சி சரயோகி. யாருங்க இது என்று கேட்க தோன்றுகிறதுதானே... அவரது கதையைக் கேட்டால் இன்னும் விழி விரிந்து போய் நிற்பீர்கள்.

அலகாபாத்தான் மீனாட்சியின் பூர்வீகம். ரொம்ப சாதாரணமான ஒரு இல்லத்தரசியாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால், காலம் அவரை புரட்டிப்போட்டு, ஒரு மிகச் சிறந்த சர்க்கரை ஆலை ஜாம்பவானாக உயர்த்தி நிறுத்தியது. இது நிச்சயம் காலத்தின் கோலம்தான். கடந்த டிசம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார் மீனாட்சி. அவர் மரணமடைந்தபோது இந்தியாவின் ஒட்டுமொத்த சர்க்கரை ஆலைகளும் கண்ணீர் வடித்தன.

யார் இந்த மீனாட்சி? எப்படி இவர் தன் பக்கம் ஒரு துறையையே திரும்பிப் பார்க்க வைத்தார்?

1944-ம் ஆண்டு அலகாபாத்தில் சாதாரண மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர் மீனாட்சி. நைனிடாலில் படித்தார். கான்பூரில் கல்லூரிப் படிப்பு. பின்னர் தனது 20 வயதில் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்தார். தொழிலதிபர் கமல் நயா சரயோகியை மணந்தார். அவர் பல துறைகளில் ஈடுபட்டிருந்தவர். அதில் ஒன்றுதான் சர்க்கரை ஆலை பிசினஸ்.

மேற்கு வங்க மாநிலம், பல்ராம்பூரில்தான் அவர்களது சர்க்கரை ஆலை இருந்தது. திருமணமாகி 13 வருடங்கள் வரை பல்ராம்பூருக்கு அடிக்கடி போனதில்லை மீனாட்சி. கரும்பு அரவை காலத்தின்போது குழந்தைகள், கணவருடன் இணைந்து பல்ராம்பூர் போவார். வேடிக்கை பார்ப்பார். அவ்வளவுதான். அதைத் தவிர வேறு எந்தத் திட்டமும் சிந்தனையும் அவரிடம் இருக்காது. ஒரு குடும்பத் தலைவியாக சிம்பிளாக இருந்து வந்தார் மீனாட்சி. தொழில் குறித்து அவருக்கு எதுவுமே தெரியாது.

கரும்பு விவசாயம்
கரும்பு விவசாயம்

1982-ம் ஆண்டு அவருக்குள் மறைந்திருந்த அந்தத் தொழில் மூளைக்கு உயிர் கிடைத்தது. கணவர் தனது பிசினஸை கொல்கத்தாவுக்கு மாற்றியபோது, சுகர் இண்டஸ்ட்ரியில் தானும் ஈடுபட விரும்புவதாகக் கணவரிடம் தெரிவித்தார் மீனாட்சி. அவருக்கோ ஆச்சர்யம். ஆனால், மனைவியைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தார். உடனடியாகக் களத்தில் இறங்கினார் மீனாட்சி.

தனது இரு குழந்தைகளையும் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பல்ராம்பூரில் தங்கினார் மீனாட்சி. தொழிலை நேரடியாகக் கவனிக்க ஆரம்பித்தார். கணவர் கொல்கத்தாவில் தனது நிதித்துறை பிசினஸில் கவனம் செலுத்தினார். சாதாரணமாக ஆரம்பித்த மீனாட்சியின் செயல்பாடுகள் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து மிகப் பெரிய ஆலையாக அவருடைய சர்க்கரை ஆலை மாறியது. சர்க்கரை ஆலைத் தொழிலில் இந்தியாவிலேயே 2-வது இடத்தைப் பிடித்து சாதனையும் படைத்தார் மீனாட்சி.

கரும்பு அறுவடை
கரும்பு அறுவடை

பல்ராம்பூரையும் சேர்த்தே வளர்த்து ஆளாக்கினார் மீனாட்சி. அதுதான் முக்கியமானது. மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது பல்ராம்பூர். பெரிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் கிடையாது. அதை மாற்றினார் மீனாட்சி. வளம் மிக்க பகுதியாக உருவாக்கினார். அங்குள்ள விவசாயிகளுக்கு மீனாட்சி செய்து கொடுத்த வசதிகள் மிகப் பெரியவை. கல்வி அறிவை ஏற்படுத்தினார். உரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாலை வசதிகளைச் செய்து கொடுத்தார்.

ஆரம்பத்தில் சரியான விலை கிடைக்காமல் கரும்பு பயிரிடுவதற்கு விவசாயிகள் தயங்கினர். அப்போது மீனாட்சி வீடு வீடாகப் போய் அவர்களைச் சமாதானப்படுத்தினார். கரும்பு பயிரிடுமாறும் உரிய விலை தருவதாகவும் ஊக்கம் கொடுத்தார். நீங்கள் வளர்க்கும் கரும்பு ஒன்றுகூட வீணாகாது. நான் வாங்கிக் கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அன்று கொடுத்த அந்த வாக்குறுதியைப் பல்ராம்பூர் சின்னி சர்க்கரை ஆலை நிறுவனம் இன்று வரை கடைப்பிடிக்கிறதாம்.

கரும்புத் தோட்டம்
கரும்புத் தோட்டம்

ஒரு நாளைக்கு 800 டன் அரவை என்பதை தினசரி 76,500 டன் என்ற அளவுக்கு உயர்த்திய பெருமை சரயோகிக்கு உண்டு. அதேபோல தனது ஆலை மூலம் 165 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தும் அவர் சாதித்துள்ளார். எத்தனால் உற்பத்தியின் அளவையும் ஒரு நாளைக்கு 520 லிட்டர் என்ற அளவுக்கு உயர்த்தி சாதித்துள்ளார். அதேபோல தனது காலத்தில் 10 மில்களாகத் தனது ஆலையையும் விரிவுபடுத்தி அசத்தியுள்ளார் சரயோகி. இதன் மூலம் ஒரு ஆலை சரியாகச் செயல்படாவிட்டாலும்கூட மற்றவற்றை வைத்து சமாளித்துள்ளார்.

இந்தியாவின் 100 சதவிகிதம் நம்பகத்தன்மையுள்ள சர்க்கரை ஆலை என்ற பெரையும் பல்ராம்பூர் சர்க்கரை ஆலை பெற சரயோகிதான் முக்கியக் காரணம். இந்த நிறுவனம் கடந்த 2019-20 காலகட்டத்தில் ரூ.609 கோடி லாபம் சம்பாதித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளிடமிருந்து கிட்டத்தட்ட ரூ.50,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்துள்ளது என்பது முக்கியமான சாதனையாகும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தையும் பல்ராம்பூர் சர்க்கரை ஆலை பலப்படுத்தியுள்ளது. கரும்பு கொள்முதலுக்கு உடனடியாகப் பணத்தைக் கொடுத்து விடுவது இந்த நிறுவனத்தின் முக்கிய அம்சம் ஆகும். அரசு தலையீடே இல்லாமல் இத்தனையையும் சாதித்துள்ளது பல்ராம்பூர் சர்க்கரை ஆலை.

ஆலைக்கரும்பு
ஆலைக்கரும்பு

விவசாயிகளின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற பிறகு அவருக்கு தொழில், மிகவும் வேகம் பிடித்தது. தனது தொழிலாளர்களும் சரியான ஒத்துழைப்பு கொடுத்ததால் மீனாட்சி தொட்டதெல்லாம் பொன்னானது. படிப்படியாக இந்திய அளவில் உச்சம் தொட்ட மீனாட்சியின் வளர்ச்சி நாளடைவில் உலக அளவில் உச்சம் தொட்டது.

`பிசினஸ் சமுதாயத்துக்கே மிகப் பெரிய உந்துசக்தி மீனாட்சி. குறிப்பாக பெண்களுக்கு. அதுவும் தொழிலில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு மிகப் பெரிய உதாரணம்' என்று சொல்வார் பஜாஜ் நிறுவனத்தின் துணைத் தலைவர் குஷ்கர நாயன் பஜாஜ். உண்மைதான்... மீனாட்சி ஒரு மகத்தான சாதனையாளர். விவசாயிகளை மதித்தவர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

- ஆனந்தி ஜெயராமன்

அடுத்த கட்டுரைக்கு