Published:Updated:

தினமும் நல்ல வருமானம் நிச்சயம்... ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்வது எப்படி?

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி

சீசன் நேரத்தில் ஒரு கிலோ ரூபாய் 400 வரை விற்பனையாகும். மற்ற நேரங்களில் 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும். தினமும் 10,000 முதல் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ளது வட்டவடை. பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, கேரட் போன்ற காய்கறிகளைப் பயிர் செய்யும் வட்டவடை விவசாயிகள், தற்போது ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடியில் தீவிரம் காட்டிவருகிறார்கள் என்ற தகவலின் அடிப்படையில் வட்டவடை சென்றோம். அங்கே ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி செய்யும் பரதன் என்பவரைச் சந்தித்தோம். நம்மை அவருடைய ஸ்ட்ராபெர்ரித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "2013-ம் வருஷம் ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி இங்கு தொடங்கியது. ஆனால், விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. சாகுபடி செய்த சிலரும் ஒரு கட்டத்தில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு வட்டவடையில் ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி இல்லாமல் போய்விட்டது.

தற்போது மறுபடியும் ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு நானும் ஒரு காரணம். கடந்த ஒரு வருடமாக இரண்டு ஏக்கரில் ஸ்ட்ராபெர்ரி பயிர் செய்கிறேன். புனே நகரிலிருக்கும் வேளாண்மைத்துறையிலிருந்து ஸ்ட்ராபெர்ரி நாற்றுகளை வாங்கி வந்தேன். ஒரு நாற்று 12 ரூபாய். அங்கேயிருந்து கொச்சி நகரத்துக்கு நாற்றுகள் வரும். கொச்சியிலிருந்து இங்கே கொண்டுவரச் செலவாகும். எல்லாம் சேர்த்துக் கணக்குப் பார்த்தால், ஒரு நாற்றுக்கான செலவு 15 ரூபாய். கேரள வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக ஸ்ட்ராபெர்ரி நாற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் பலரும் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்துக்கு வந்துவிட்டார்கள்" என்ற பரதன், ஸ்ட்ராபெர்ரிச் சாகுபடி முறைகள் குறித்துப் பேசினார்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி

"இங்கே பெரும்பாலும் 10 சென்ட் இடமாகத் தனித்தனியாக இருக்கும். எனவே 10 சென்ட் இடம் என்றே வைத்துக்கொள்வோம். இரண்டடி அகலத்துக்கு மண்ணை வரப்புபோல வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். நர்சரி பாய் அல்லது மல்சிங் ஷீட்டை வாங்கி அதன் மேலே போட்டு, நன்றாக மூடிவிட வேண்டும். 10 சென்ட்டில் 42 வரப்பு. ஒரு வரப்பில் 40 முதல் 44 துளைகள். இதுதான் கணக்கு. ஒவ்வொரு துளையிலும் ஒரு நாற்று நட்டுவைக்க வேண்டும். 60 நாள்களில் பூ வந்துவிடும். 90 நாள்களில் பழம் அறுவடை செய்துவிடலாம். ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை தினமும் பழங்கள் எடுக்க முடியும். 10 சென்ட்டில் தினமும் 50 கிலோ பழம் எடுக்கிறேன். முழுமையான கட்டுரையை படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37ZDHln

சீசன் நேரத்தில் ஒரு கிலோ ரூபாய் 400 வரை விற்பனையாகும். மற்ற நேரங்களில் 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும். தினமும் 10,000 முதல் 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சராசரியாக 15,000 ரூபாய் கிடைக்கும். இரண்டு வருடங்கள் முடிந்த பிறகு செடியை அகற்றிவிட்டு, புதிய நாற்றை நட வேண்டும். இதற்கு உரம், ரசாயன மருந்து என எதுவும் கிடையாது. வரப்பிலுள்ள துளையில் சிறிதளவு மாட்டுச்சாணம் போட்டால் போதும். அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். வெயில் நேரத்தில் காலை, மாலை செடியின் மீது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் அதுவும் தேவையில்லை. நான் மாடு வைத்திருப்பதால் மாட்டுச்சாணம் உள்ளது. நர்சரி பாய்க்கு மட்டும் செலவு செய்தேன். வேறு செலவே இல்லை. இயற்கையாக விளையக்கூடிய வட்டவடை ஸ்ட்ராபெர்ரிக்கு இப்போது மவுசு கூடியிருக்கிறது’’ என்று பெருமையுடன் சொன்னார்.

ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி

பரதனின் தோட்டத்துக்கு அருகேயுள்ள சிவசங்கர் என்பவரின் தோட்டத்துக்குச் சென்றோம். "10 சென்ட் ஸ்ட்ராபெர்ரி தோட்டம் வைத்திருக்கிறேன். தினமும் குறைந்தது 10 முதல் 15 கிலோ பழம் எடுத்துவிடுவேன். நேரடியாகத் தோட்டத்துக்கே சென்று ஸ்ட்ராபெர்ரி பழத்தை வாங்க முடியும் என்பதால், மூணாறு வரும் சுற்றுலாப்பயணிகள் வட்டவடை வருகிறார்கள். அவர்களுக்கு விற்பனை செய்யவே சரியாக இருக்கிறது. மீதமுள்ள பழங்களை எடுத்து, பாத்திரத்தில் போட்டு, இளம் சூட்டில் வேகவைத்து, சீனி சேர்த்து ஜாம் தயாரிப்போம். ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரிக்கு 400 கிராம் சீனி, சிறிதளவு தேன். அவ்வளவுதான். அரை மணி நேரத்தில் ஸ்ட்ராபெர்ரி ஜாம் ரெடி. 400 கிராம் பாட்டில் 350 ரூபாய்க்கு விற்கிறோம். ஸ்ட்ராபெர்ரி ஜாமில் நல்ல லாபம் கிடைக்கிறது. ஒயின் தயாரிக்க அரசுத் தடை இருப்பதால் ஒயின் தயாரிப்பதில்லை. தினமும் நல்ல லாபம் கொடுப்பதால் இங்குள்ள காய்கறி விவசாயிகள் பலர் ஸ்ட்ராபெர்ரிக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அரசும் உதவி செய்கிறது. இன்னும் சிறிது காலத்தில் வட்டவடை ஸ்ட்ராபெர்ரி பூமியாக மாறிவிடும்" என்றார்.

ஸ்ட்ராபெர்ரி பற்றிப் பேசிய உதகமண்டலம் (ஊட்டி) தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், "ஸ்ட்ராபெர்ரியில் சுமார் 100 வகைகளுக்கு மேல் உள்ளன. இவற்றில் இந்தியாவில் பிரதானமாக 15 ரகங்கள்தான் பயிரிடப்பட்டுவருகின்றன. தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் ஸ்வீட் சார்லி, ஹேம்ரோஸ், வின்டர்டோன் ஆகிய ரகங்கள்தான் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன. ஸ்ட்ராபெர்ரி குளிர்ப் பகுதிகளில் மட்டுமே வளரும். தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகள் ஸ்ட்ராபெர்ரிர்ச் சாகுபடி செய்ய ஏற்றவை" என்றார்.

- ட்ராபெர்ரிர்ச் சாகுபடி முறைகள் குறித்து பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > இனிப்பான வருமானம் தரும் ஸ்ட்ராபெர்ரி! - 10 சென்ட்... தினமும் ரூ.15,000 https://www.vikatan.com/news/agriculture/good-income-from-strawberry-cultivation

வீடியோ வடிவில்...

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு