Published:Updated:

பால் லிட்டர் ரூ.60... நெல் குவிண்டால் ரூ.3,000... பட்ஜெட் ஆலோசனை!

ஆலோசனைக் கூட்டத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆலோசனைக் கூட்டத்தில்...

கூட்டம்

பால் லிட்டர் ரூ.60... நெல் குவிண்டால் ரூ.3,000... பட்ஜெட் ஆலோசனை!

கூட்டம்

Published:Updated:
ஆலோசனைக் கூட்டத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
ஆலோசனைக் கூட்டத்தில்...

ட்சியிலுள்ள கட்சி தன் தேர்தல் அறிக்கையின் சில அம்சங்களைக் கருத்தில் கொண்டும், அவ்வப்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும் ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த முறை வேளாண்மை தொடர்பாக பட்ஜெட்டில் இடம்பெறவிருக்கும் அம்சங்கள் குறித்துப் பொதுமக்களிடமும் நிறுவனங்களிடமும் கருத்துகளைக் கேட்டிருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். அதையொட்டி விவசாயம், பாசனம், சுற்றுச்சூழல் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு, விவாதித்து, தேவையான பரிந்துரைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது பசுமை விகடன்.

நாகப்பன்
நாகப்பன்

அதற்காக, ‘மத்திய, மாநில பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்’ என்ற தலைப்பில் முன் ஆலோசனைக் கூட்டம் சென்னை, மெட்ரோ மேனர் ஹோட்டலில் நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அங்கு விவாதிக்கப்பட்ட கருத்துகளில் சில இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலோசனைக் கூட்டத்தில்...
ஆலோசனைக் கூட்டத்தில்...

கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பொருளாதார நிபுணர் வ.நாகப்பன், “ஐம்பது ஆண்டுகாலமாகப் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள், விளைபொருள்கள், மின்சாரம் ஆகியவற்றுக்கு மானியம் கொடுக்கப்பட்டுவருகிறது. கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைத்த நன்மை என்ன, அவர்களுடைய விளைபொருள் விற்பனை சரியாக இருக்கிறதா, அவர்களின் வாழ்வு மேம்பட்டிருக்கிறதா என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். எனவே, விவசாயிகளுக்கென்று தனிநிதியை ஒதுக்கிச் சூழலுக்கு ஏற்ப உதவ வேண்டும்” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தூரன் நம்பி
தூரன் நம்பி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி, “எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவோடு 50 சதவிகிதத்தைக் கூட்டி விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், `ஒரு ஏக்கருக்கான நெல் உற்பத்திச் செலவு 1,900 ரூபாய்’ என்றது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். ஆனால், அரசு இப்போதும் 1,700 ரூபாய்தான் கொடுக்கிறது. இது போதாது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 3 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும். குறிப்பாக, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை இல்லை. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 40 ரூபாய் செலவாகிறது. உற்பத்திச் செலவோடு 50 சதவிகிதம் என்ற பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு லிட்டருக்கு 60 ரூபாய் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் கிராமங்களில் ஒரு மாடு, இரண்டு மாடுகள் வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்குப் பால் உற்பத்தி லாபகரமானதாக இருக்கும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியும்” என்றார்.

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், “அரசு விளைபொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. விலை உயர்ந்தால் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறது. இதைத் தளர்த்த வேண்டும். குறிப்பாக, குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஒரு திட்டமாக இருக்கிறது. அதைச் சட்டமாகக் கொண்டு வர வேண்டும். துவரம் பருப்பை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மானாவாரி நிலங்களில் துவரையை உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை இல்லை. இனிவரும் நிதிநிலைகளில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ஒவ்வொரு பயிருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

பயிர்வாரி முறையைச் சட்டமாக்க வேண்டும். 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

குத்தகை விவசாயிகளையும் விவசாயிகளாக அங்கீகரித்துச் சலுகைகள் வழங்க வேண்டும். கேரளாவில் கடன் நிவாரணக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாய விளைபொருளை விற்க முடியவில்லையென்றாலோ, அதன் மூலம் கடன் ஏற்பட்டாலோ அந்தக் குழு உதவி செய்கிறது. அதைப் போன்ற குழுக்களை இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இந்திய விவசாயத்தில் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகிவருகிறது. அதற்கான திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்” என்றார்.

வையாபுரி
வையாபுரி

ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சி.வையாபுரி, “ ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று திருக்குறள் சொல்கிறது. அந்த ஊழ்வினைதான் தற்போது இருக்கும் பருவநிலை மாற்றம். பூமியில் தண்ணீர் இல்லை. இருந்த தண்ணீரையெல்லாம் உறிஞ்சி மானாவாரி நிலங்களை இறவை நிலங்களாக மாற்றிவிட்டோம். இன்று அந்த இறவை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்துகொண்டிருக்கின்றன. இதற்குத்தான் பயிர்வாரி முறையைச் சட்டமாக்க வேண்டும் என்று கூறுகிறோம். இந்த வகை நிலங்களில் இந்தப் பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால்தான், இருக்கும் நிலங்களைக் காப்பாற்ற முடியும். தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து மீள முடியும். பூமியில் நிலத்தடி நீர் குறையாமல் இருக்கச் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

ஆறுபாதி கல்யாணம்
ஆறுபாதி கல்யாணம்

தற்சார்பு பசுமை கிராமங்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஆறுபாதி கல்யாணம், “1990-களில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் விவசாயம் ஒடுக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட்கள் வாழ்கின்றன. ஒன்றரை லட்சம் கிராமங்களை நகரங்கள் விழுங்கிவிட்டன. இந்தியாவில் 45 ஹெக்டேர் நிலங்கள் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றன. இருக்கும் கிராமங்களில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நுண்ணிய அளவில் திட்டமிட்டு பசுமை கிராமங்களை உருவாக்க வேண்டும். இதுதான் இன்றைய விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்கும் வழி. இதைத்தான் ஜே.சி. குமரப்பா சொல்கிறார்.

‘‘பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை இல்லை. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 40 ரூபாய் செலவாகிறது. உற்பத்திச் செலவோடு 50 சதவிகிதம் என்ற பரிந்துரைப்படி பார்த்தால், ஒரு லிட்டருக்கு 60 ரூபாய் வழங்க வேண்டும்.’’

வரும் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிகராக விவசாயத்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை. எங்களுக்கு தள்ளுபடி தேவையில்லை. குறைந்த வட்டியில், தேவையான நேரத்தில் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு 4 சதவிகிதத்துக்கு மேல் வட்டி இருக்கக் கூடாது” என்றார்.

வீரப்பன்
வீரப்பன்

மூத்த பொறியாளர் வீரப்பன், ‘’தெலங்கானா மாநிலத்தில் ‘ஜலயக்ஞம்’ என்ற பெயரில் 1,86,000 கோடி ரூபாயை ஒதுக்கி நீர்நிலைகளில் நீரைச் சேமிப்பதற்கான மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கியிருக்கிறது அம்மாநில அரசு. அதைப் பின்பற்றி மத்திய அரசும், தமிழக அரசும் நாடு தழுவிய ஒரு ஆக்கபூர்வமான திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவரும் நிலையில் ஆறுகளில் மணல் எடுப்பதை முற்றிலும் தடைசெய்யச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள 80 அணைகளையும் ஆழப்படுத்தினால் 300 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம். தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள், குளங்களை ஆழப்படுத்தினால் 250 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்க முடியும்” என்றார்.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளால் வேலை செய்ய முடிவதில்லை. அதனால், அவர்களுக்கு ஓய்வூதியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே பிரதமர் ஓய்வூதியத் திட்டம் இருக்கிறது. ஆனால், அது பிரீமியம் கட்டுவது போன்றதாக இருக்கிறது. அதை மாற்றி 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும்” என்றார்.

அனந்து
அனந்து

பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, “இந்தியாவில் 12 மாநிலங்களில் இயற்கை வேளாண் கொள்கை இருக்கிறது. மத்திய அரசு அதைப் பின்பற்றி இயற்கை வேளாண் கொள்கையைக் கொண்டு வந்து, அதற்கென ஒவ்வோர் ஆண்டும் 10,000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். இயற்கை விவசாயம் தொடர்பாக முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும். மரபு விதைகளைத் திரும்பவும் பரவலாக்க வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நஞ்சில்லாத உணவை அமல்படுத்துவது அரசின் கடமை. அதை உறுதிசெய்ய வேண்டும்’’ என்றார்.

ரமேஷ் கருப்பையா
ரமேஷ் கருப்பையா

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, “விவசாயம் என்பது ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படும் முதலீடு. விவசாயத்துக்கு ஒதுக்கும் நிதியில் 5-10 சதவிகிதம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒதுக்கப்படுவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். நாட்டின மாடுகளைப் பெருக்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

மரபு விதை வங்கிகளை உருவாக்கி, தேவைப்படும் காலங்களில் விதை வழங்க வேண்டும். மண்வளம் பெருக வேண்டுமென்றால் வண்டல் மண் அவசியம். அதை நீர்நிலைகளில் நீர் வற்றும்போது விவசாயிகள் எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.

ராம சுப்ரமணியன்
ராம சுப்ரமணியன்

பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஆலோசகர் ராம சுப்ரமணியன், “கிராமங்களுக்கு பஞ்சாயத்துதான் முக்கியமானது. அதை வலுப்படுத்த வேண்டும். விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விவசாயம் குறித்துப் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். பருவநிலை மாற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அமைப்பு இருக்க வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்க 1,000 விவசாயிகள் கட்டாயம் என்பதை, குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் இருந்தால்கூடத் தொடங்கலாம் என்று மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.

பூவுலகு சுந்தர்ராஜன்
பூவுலகு சுந்தர்ராஜன்

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பூவுலகு சுந்தர்ராஜன், “இந்தியாவுக்கு சரியான காலநிலை மாதிரி (Climate Model) கிடையாது. நம் பட்ஜெட்களில் பருவநிலை மாற்றம் என்ற வார்த்தைகூட இடம் பெறுவதில்லை. மத்திய அரசு உருவாக்கும் செயல் திட்டங்களில் கடல்மட்டம் உயர்ந்தால், எந்தெந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தகவல்கூடக் கிடையாது. நிலக்கரி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்காக நேஷனல் கிளீன் எனர்ஜிக்கு ஒதுக்கப்பட்ட 60,000 கோடி ரூபாயை வேறு திட்டங்களுக்காக மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டது மத்திய அரசு. இனியாவது அப்படிச் செய்யாமல் சுற்றுச்சூழலுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை அதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். நுண்ணூட்டச்சத்து பாதுகாப்புக்கு சிறுதானியங்கள் போன்ற பயிர்களின் சாகுபடியை உயர்த்த வேண்டும்” என்றார்.

கமாலுதீன்
கமாலுதீன்

வேளாண் ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், “நாம் ஏற்றுமதி செய்யும் அரிசியில் பெரும்பங்கு சிங்கப்பூருக்குச் செல்கிறது. துறைமுகத்தில் எல்லாப் பொருள்களும் ஓரிடத்திலேயே வைத்து அனுப்பப்படுகின்றன. அப்படியில்லாமல் வேளாண் பொருள்களை வைப்பதற்குத் தனிக் கிடங்கை ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உணவுப் பரிசோதனைக்கூடங்களே இல்லை.

“இந்தியாவில் 12 மாநிலங்களில் இயற்கை வேளாண் கொள்கை இருக்கிறது. அதைப் பின்பற்றி, மத்திய அரசு இயற்கை வேளாண் கொள்கையைக் கொண்டு வந்து, அதற்கென ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்.’’

ஏற்றுமதியில் பெரும்பான்மையான பொருள்களுக்குப் பரிசோதனை சான்றிதழ் அவசியம். அதேபோல இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் அஃப்லாடாக்ஸின் பாதிப்பு இருக்கக் கூடாது என்று பெரும்பான்மையான நாடுகள் சொல்கின்றன. ஆனால், அதன் பாதிப்பை அறிவதற்கான சோதனை நிலையங்கள் இங்கே இல்லை. வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

சிவக்குமார்
சிவக்குமார்

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார், “எந்தெந்தப் பகுதியில் எந்தெந்தப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை வகுக்க வேண்டும். நுகர்வோர், விவசாயிகள், அரசு ஆகியவை இணைந்த ஓர் அமைப்பை உருவாக்கி இயற்கை விவசாயச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். சூழல் பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.

அரசும் தனியார் நிறுவனங்களும் இந்தியாவிலுள்ள 60 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயத்தை விரிவுபடுத்தினால் மட்டுமே அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும்” என்றார்.

அனைவரின் கருத்துகளையும் பதிவுசெய்து, விவாதித்துப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனை மத்திய, மாநில அரசுகளிடம் சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது பசுமை விகடன்.