Published:Updated:

`அவர்களின் புலம்பல் என்னை யோசிக்க வைத்தது!'- நீர் நிலைகளைக் காக்க வெளிநாட்டு வேலையை உதறிய இன்ஜினீயர்

பேராவூரணியில் நீர் நிலைகளையும், விவசாயத்தையும் மீட்பதற்காக கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

நிமல்ராகவன்
நிமல்ராகவன் ( ம.அரவிந்த் )

பேராவூரணியில் விவசாயம் மற்றும் நீர் நிலைகளை அழிவிலிருந்து காக்கவும், கடைமடைக்குப் பாய்வது போல் காவிரி ஆறான கல்லணை கால்வாயை மீட்கவும் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கிய வேலையை உதறிவிட்டு `மீண்டும் மீண்டு வருவோம்' என்ற வாசகத்துடன் எல்லோருடனும் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

குழுவினர்
குழுவினர்

பேராவூரணியில் உள்ளது 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் ஏரி. இந்த ஏரியை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து `கைபா' என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ரூ.24 லட்சம் செலவில் பெரும் முயற்சி எடுத்து ஏரியைத் தூர் வாரி முடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்போது பெரியகுளம் ஏரியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் நிரம்பிக்கொண்டிருக்கிறது. இதற்காக பாடுபட்டவர்களின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்துள்ளது.

இதற்கு முதல் புள்ளியாக இருந்து வித்திட்டவர் நிமல்ராகவன் என்ற இளைஞர். துபாயில் நல்ல வேலை, கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் மண்ணுக்கு ஆபத்து வருகிறது என்றதுமே அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு நீர் நிலைகளையும், காவிரியின் கிளை ஆறான கல்லணை கால்வாயை மீட்டெடுக்கும் முயற்சியில் எல்லோருடனும் இணைந்து கரம் கோத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவரை இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஏரி
ஏரி

நிர்மல்ராகவனிடம் பேசினோம்.``பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். எங்க அப்பா விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். நான் துபாய் நாட்டில் அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனியில் மென்பொருள் இன்ஜினீயராகப் பணியாற்றினேன். கடந்த வருடம் விடுமுறைக்காக ஊருக்கு வந்தேன். அப்போது வீசிய கஜா புயல் எங்க பகுதியையே கலைத்துப் போட்டுவிட்டது.

தென்னை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்துவிட்டன. பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்தனர். அப்போது பல இளைஞர்கள் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்ட 90 கிராமங்களில் மீட்புப் பணிகள் செய்தோம். அந்த மக்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுத்தோம். செல்வச் செழிப்போடு வாழ்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டு நிற்பதைப் பார்த்த போது இதயம் சுக்கு நூறாக உடைந்ததுபோல் இருந்தது.

நிமல்ராகவன்
நிமல்ராகவன்

மீண்டும் மக்களையும், விவசாயத்தையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனக் களத்தில் இறங்கினோம். `மீண்டும் மீண்டு வருவோம் சோழ நாடு' என்ற அடைமொழி அடங்கிய ஸ்டிக்கரை இரண்டு சக்கர வாகனத்தில் ஒட்டிக்கொண்டு இந்தப் பணிகளில் ஈடுபட்டோம். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தென்னை மரக்கன்றுகள் கொடுத்து ஊன்ற வைத்தோம். எல்லாம் ஓரளவிற்குச் சரியான பிறகு மீண்டும் துபாய்க்குக் கிளம்புவதற்குத் தயார் ஆனேன்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களை அவர்களின் பெற்றோர்கள் "இங்கு எல்லாமே அழிஞ்சு போச்சு இப்ப ஊருக்கு வராத" எனச் சொல்லத் தொடங்கினர். கஜா ஏற்படுத்திய பாதிப்பு எல்லோர் மனதிலும் ஒரு விரக்தியான மனநிலைக்குத் தள்ளியது. யாரைப் பார்த்தாலும் புலம்பத் தொடங்கி விடுவர். "இனி வாழ்வதற்கு நாம என்ன செய்யப்போறோம் என்று தெரியவில்லை" என விம்மினர். இது என்னை யோசிக்க வைத்தது.

ஏரி
ஏரி

அந்த நேரத்தில் நாம இங்கேயே இருந்து அழிந்து வரும் நீர் நிலைகளை மீட்க வேண்டும். விவசாயத்தைக் காக்க வேண்டும் என முடிவெடுத்து உடனே என்னோட வேலையை ராஜினாமா செய்தேன். அதன் பிறகு மற்ற நண்பர்கள், மூத்தவர்கள் என எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது விவசாயத்திற்கு ஆதாரமே தண்ணீர்தான். இப்போது தண்ணீரை சேமிப்பதே இல்லை. பெரிய குளம் ஏரியே பல வருடமாக வறண்டு கிடக்குது. முதலில் அந்த ஏரியை மீட்டு தூர்வாரி பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தோம்.

அடுத்த நொடியே ஒத்த மனதுடன் இதில் அனைவரும் கரம் கோத்து நிதி திரட்டி ஏரியை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். ஏரி தூர்வாரிய பிறகு கரைகளில் 6,000 பனை விதைகள் விதைத்தோம். கரைகளை பலப்படுத்துவதற்காக 25,000 வெட்டி வேர் ஊன்றினோம். ஏரிக்குள் மூன்று இடத்தில் குருங்காடுகள் அமைப்பதற்காக மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். இப்போது ஏரியில் நீர் நிரம்புவதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அடுத்ததாக கல்லணையிலிருந்து கடைமடை வரும் காவிரி ஆறான கல்லணை கால்வாய் 148 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

குழுவினர்
குழுவினர்

இவைதான் எங்க பகுதிக்கு உயிர் நாடி. இன்று இந்த ஆறு பல இடங்களில் கரைகள் பலம் இல்லாமலும், செடி கொடிகள் மண்டிக் கிடக்கிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் கல்லணை கால்வாய் பலம் இழந்து வருகிறது. இதனால் 4,200 கன அடி தண்ணீர் திறக்க வேண்டிய இந்த ஆற்றில் 3,000 கன அடி வரைதான் திறக்கப்படுகிறது. இதனால் முழுமையாக கடைமடை தண்ணீர் வந்தடைவது இல்லை. இதனால் கல்லணை கால்வாயை மீட்டு தூர்வாரி கரைகளை பலப்படுத்த இருக்கிறோம். இது பெரிய வேலை. அதனால் அரசின் உதவியை நாடியிருக்கிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஆர்வமுடன் நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி அனுப்பியிருக்கின்றனர்.

இந்தப் பணி முடிந்தால் எங்க பகுதியில் மட்டும் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். அத்துடன் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி நெல், உளுந்து பயிர் செய்துள்ளேன். நான் வேலையை விடுவேன் என எங்க வீட்டில் யாரும் நினைக்கலை. வேலையை விட்டுட்டேன் என்றதும் அதிர்ந்தனர். என்னோட முடிவை ஒரு விவசாயியான அப்பாவும் புரிந்து ஏற்றுக்கொண்டார்.

அமைச்சர் உதயகுமாருடன் குழுவினர்
அமைச்சர் உதயகுமாருடன் குழுவினர்

சொந்தக்காரங்கதான் கை நிறைய சம்பளம் வரும் வேலையை விட்டுட்டு மண்ணைக் காக்கிறேன், குளத்தைக் காக்கிறேன் எனச் சுத்திக் கொண்டிருக்கியே எனப் பேசினார்கள். அதை நான் கண்டு கொள்ளாமல் விவசாயத்தையும், நீர் நிலைகளையும் காக்கும் முயற்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு கூட்டு முயற்சிதான். எல்லோருடைய உழைப்பும் இதில் கலந்து இருக்கிறது. மீண்டு வருவோம். அதற்காகவே ஓடிக்கிட்ருக்கிறேன்'' என்றார்.