Published:Updated:

பாட்டன், பூட்டன் காத்த பூமி... காடா மாறிச்சு, நம்ம நாடா மாறிச்சு, வீடா மாறிச்சு!

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பம்

வெளிநாட்டு விவசாயம்-21

டந்த டிசம்பர் மாத இறுதியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தலைமையகத்திலிருந்து இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. நாட்டில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் மத்திய அமைச் சரவையின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டிருந்தது அந்த அறிக்கை. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் இயற்கை விவசாயத்தை விவசாயி களிடம் முன்னெடுக்கும் செயல் திட்டங்களைக் கட்டாயமாக அமல்படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளன. மேலும், அதில் இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் வேளாண் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து வேளாண்மை இளம் அறிவியல் மற்றும் முதுகலை அறிவியல் படிப்புகளில் இயற்கை வேளாண்மையை அதிகம் வலியுறுத்தும் பாடத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய காலகட்டங்களை விட தற்போது இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் பணி இந்தியாவில் தீவிரம் அடைந்துள்ளது. இருப்பினும், இந்த முன்னெடுப்பு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இயற்கை வேளாண்மையின் கூறுகளை இன்னும் அதிகமாக ஆய்வு செய்து, செம்மைப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு, பெரிய அளவில் விவசாயிகளிடம் பிரபலப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்க் கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது இந்தியாவில் மட்டுமே ஏற்பட்டுள்ள மாற்றம் கிடையாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில வருடங்களில் வேளாண்மையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

பாட்டனும் பூட்டனும் செய்த விவசாயம்

மேலை நாடுகளில் சமீப காலமாக, இயற்கை விவசாயத்தை இரண்டு பெயர்களில் அழைக்கிறார்கள். ஒன்று, வேளாண் சூழலியல் அணுகுமுறைகள் (Agroecological approaches); மற்றொன்று, மீளுருவாக்க வேளாண்மை (Regenerative agriculture). இன்னும் ஒருசிலரோ இயற்கை விவசாயத்தை வெறும் அங்கக விவசாயமாக (Organic agriculture) மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இயற்கை விவசாயம் என்பது காலங் காலமாக நமது பாட்டனும் பூட்டனும் செய்துவந்த விவசாயம்தான். அதற்குத்தான் மேலை நாட்டினர் புதிய பெயர்களைச் சூட்டி மீண்டும் நமக்கே அறிமுகப்படுத்துகிறார்கள். உதாரணமாக, மீளுருவாக்க வேளாண் மையை எடுத்துக்கொள்வோம். இதற்குச் சுழற்சி வேளாண்மை (Circular farming) என்றொரு பெயரும் உண்டு. அதாவது, பண்ணையிலிருந்து கழிவுகள் என்று எதையுமே தூக்கிப் போடாமல், மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சுழற்சி விவசாயம்.

இயற்கையோடு இணைந்த விவசாயம்

அந்தக் காலத்தில் பெரும்பாலான தானியங்கள், பயறுவகைகள் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை அறுவடை செய்த பிறகு, அந்தச் செடிகளை உலர வைத்துக் கால்நடை களுக்குத் தீவனமாகப் பயன்படுத்திக்கொண்டோம். கால்நடைகளின் கழிவுகளை மட்கவைத்து உரமாகப் பயன்படுத்திக் கொண்டோம். தோட்டங்களைச் சுற்றிலும் உயிர் வேலிகள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் இலை தழைகளைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும் (Green leaf manure) பயன்படுத்திக் கொண்டோம். அந்த வேலிகளில் இருந்த மரம் மற்றும் செடி கொடிகளில் பூக்கும் பூக்களைத் தேடி மகரந்தச் சேர்க்கைக்கு உதவிபுரியும் தேனீக்கள், குளவிகள் வந்தன. மேலும் அந்தப் பூக்கள், நமது பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழித்தொழிக்கும் இயற்கை எதிரிகளான ஒட்டுண்ணிகளையும், இரைவிழுங்கிகளையும் ஈர்த்து வந்தன. ஆக, அன்றைய விவசாயம் இயற்கையோடு இணைந்த விவசாயமாக இருந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தில் நெல் அறுவடைக்குப் பின்னர் உழவில்லாமல் பயிரிடப்பட்டுள்ள தக்காளி
அஸ்ஸாம் மாநிலத்தில் நெல் அறுவடைக்குப் பின்னர் உழவில்லாமல் பயிரிடப்பட்டுள்ள தக்காளி

இந்தத் தத்துவத்தைத்தான் இன்றைக்கு வேளாண் சூழலியல் அணுகுமுறைகள், சுழற்சி விவசாயம், மீளுருவாக்க விவசாயம் என்று வெவ்வேறு பெயரிட்டு இந்த உலகம் அழைத்துக்கொண்டிருக்கின்றது. உழவு மாடுகளையும், ஆட்டுப்பட்டிகளையும், உயிர்வேலிகளையும் முற்றிலும் துறந்துவிட்ட நாமும் ஏதோ இந்தத் தொழில்நுட்பங்கள் தேவதூதர்களால் நமக்கு அனுப்பப்பட்டவையைப்போல வியந்து பார்த்து, பாராட்டிக் கொண்டிருக்கின்றோம். இனியாவது கம்பி வேலிகளுக்குள் டிராக் டர்களை வைத்து உழவு செய்துகொண் டிருக்கும் நாம், விவசாயத்தை மீளுருவாக்கம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

விவசாய மீளுருவாக்கம்

முதலில், தேவையில்லாமல் மண்ணைக் கிளறிக்கொண்டிருக்கக் கூடாது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், தேவையில்லாமல் உழுதுகொண்டிருக்கக் கூடாது. இதுதான் மீளுருவாக்க வேளாண்மை யின் முதல் மற்றும் முக்கியக் கூறு.

பெரிய பெரிய இயந்திரக் கலப்பைகளைக் கொண்டு மண்ணை உழுது கொண்டிருந்தால், மண்ணில் இருக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்கள், மண்புழுக்களை அழித்துக்கொண்டிருக் கின்றோம் என்று பொருள். அது மட்டுமன்றி, மண்ணின் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு மண் துகள்களாகப் பொடிக்கப்படுகின்றது. இது மண் அரிப்பை அதிகப்படுத்துகிறது. மண்ணில் இருக்கும் கரிமப்பொருள்களின் அளவும் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், மண்ணிலிருந்து மிக அதிகமாகக் கரியமில வாயு வெளிப்பட்டு, பருவகால மாறுபாட்டுக்கும் வித்திடுகிறது. எனவே, தேவையில்லாமல் மண்ணில் கலப்பைகளைப் போட்டு உழாமல் இருந்தால் மேற்சொன்ன அத்தனை கெடுதல்களையும் தவிர்க்கலாம்.

செர்ரி தக்காளி செடிகளும் பழங்களும்
செர்ரி தக்காளி செடிகளும் பழங்களும்

அறுவடைக்குப் பிறகு நடவு

‘அது எப்படி? ஒரு பயிரை அறுவடை செய்த பிறகு, நிலத்தை உழுது தயார்ப் படுத்தினால்தானே அடுத்த பயிரைப் பயிரிட முடியும்’ என்று நினைக்கலாம். ஆனால், அது தேவையில்லை என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நெல் அறுவடை முடிந்தவுடனே அதில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறுகளை ஊன்றவோ, விதைக்கவோ செய்யலாம். வயலில் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்திலேயே அவை முளைத்துவிடும். அங்குத் தேவையில்லாமல் உழுதுவிட்டு, அதற்குப் பிறகு, இந்தப் பயறுகளை விதைத்தால் ஒன்று நீர்பாய்ச்ச வேண்டும்; அல்லது மழையை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும். இப்படி நெல் அறுவடைக்குப் பிறகு, நேரடி நடவு அல்லது விதைப்பு என்பது ஏதோ பயறுவகைகளுக்கு மட்டும் பொருந்தக் கூடியது என்று நினைக்கக் கூடாது.

காய்கறிகளைக்கூட அப்படிப் பயிரிட முடியும் என்பதை அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த இரண்டு வருடங்களில் நிரூபித் திருக்கின்றோம். நெல் அறுவடை முடிந்த பிறகு, மண்வெட்டியால் குழிகளை எடுத்து அவற்றில் தக்காளி நாற்றுக்களை நடவு செய்து, வெற்றிகரமாக அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. எனவே, உழவில்லாமல் பயிரிடுதல் அல்லது குறைந்தபட்ச உழவில் பயிரிடுதல் என்பது சாத்தியமான ஒன்றுதான்.

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

பசுமைப்புரட்சிக்குப் பிறகு, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் ஒற்றைப்பயிர் அல்லது இரட்டைப்பயிர் சாகுபடி. நெல் அல்லது கோதுமை பயிரிடும் மாநிலங்களை எடுத்துக்கொள்வோம். ஆண்டின் பெரும்பகுதி, அவர்களின் நிலங்களில் நெல்-நெல் என்றோ, கோதுமை-நெல் என்றோதான் இருக்கும். நெல்லும் கோதுமையும் வேறு வேறு பயிர்தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால், இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.

ஆந்திராவின் மதனப்பள்ளி பகுதியில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியைத் தவிர வேறு பயிர்களே கிடையாது. கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் ஆண்டு முழுவதும் காய்கறிகள் சாகுபடியைத் தவிர வேறொன்றும் கிடையாது. ஆனால், இது போன்ற சாகுபடி முறைகள் எல்லாம் நிலவளத்துக்கு மிகப்பெரும் தீங்கை விளைவிப்பவை. இதற்கு மாற்று வழிகள் உண்டு.

- அடுத்த இதழில் நிறைவு பெறும்.