Published:Updated:

கேரளாவின் ராஜவிருந்தும் மக்கள் மருத்துவமும்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

கேரளாவின் ராஜவிருந்தும் மக்கள் மருத்துவமும்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

ல ஆண்டுகளுக்கு முன்பு பசுமை மிளிரும் கேரளா மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற நல்வாழ்வு முகாமுக்குச் (Wellness Camp) சென்றிருந்தேன். திரும்பிய திசையெங்கும் ஆயுர்வேத மருத்துவமனைகள், மசாஜ் சென்டர்கள் தென்பட்டன. வெளிநாட்டுக் காரர்களை ஈர்க்க ஆயுர்வேத மருத்துவமனை என்று பயமுறுத்தாமல் நல்வாழ்வு மையங்கள் (Wellness Centre) என்று நேர்மறையாக பெயரிட்டுள்ளார்கள். கீற்றுக்கொட்டகை முதல் ஐந்து நட்சத்திர வசதி கொண்டவை என நல்வாழ்வு மையங்கள் வித விதமாக இருந்தன.

எப்படி உட்கார வேண்டும், எப்படி உணவு அருந்த வேண்டும், எப்படித் தூங்க வேண்டும்... என்று மூன்று நாள்களும் நாம் அன்றாடம் செய்வதை, மாற்றிச் செய்ய வைத்து, அதன் பலன்களைப் பட்டியலிட்டார்கள். எங்களுக்கு பயிற்சிக் கொடுத்த தாடி வைத்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் 80 வயதைக் கடந்தவர். சட்டை அணியாமல், வேட்டியும் மேலுக்கு துண்டும் மட்டுமே அணிந்திருந்தார். நன்றாகவே தமிழ் பேசினார். மலையாளிகள் தமிழ் பேசுவது ஆச்சர்யமல்ல. அவர் பேசியது செந்தமிழ். அதுமட்டுமல்ல, சித்தர் பாடல்களை மனமுருகி பாடவும் செய்தார்.

‘‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே’’ என்று திருமந்திரத்தை ராகத்துடன் பாடியவர். ‘‘மனித குலம் ஒன்றுதான். அனைவருக்கும் ஒரே இறைதான். இதை இயற்கை என்றும் சொல்லலாம். நல்லது செய்தால், நன்மையே நடக்கும். எந்நாட்டவருக்கும் பொருந்தும்படி, திருமூலர் வழியில் வாழும் மனிதனுக்குத் துன்பம் வராது’’ என்றார்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம்


அடுத்து, ஆயுர்வேதத்துக்குள் புகுந்து, அதன் அருமை, பெருமைகளைப் பேசினார். மதிய உணவு இடைவேளையில் அதுவரை கண்டிராத உணவுகள் இருந்தன. ‘‘தண்ணீர் குடிக்க வேண்டுமானால் முதலிலேயே குடித்து விடுங்கள்... இடையில் தர மாட்டோம்’’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு, ‘‘நீங்கள் சாப்பிடும் உணவு சாதாரணமானது அல்ல. அந்தக் காலத்தில் கேரளாவில் உள்ள மன்னர்கள் உண்ட ராஜ உணவு. உங்கள் இலையில் முதலில் இரண்டு துண்டு நேந்திரன் பழத்தில் தேங்காய்த் துருவல் போட்டுக் கொடுப்போம். இதைச் சாப்பிட்டால், நல்ல பசி எடுக்கும். அடுத்து, சாறு, அவியல், பொரியல்... என்று தேனில் வந்து உணவு முடியும். இப்படி வரிசையாக உண்பதுதான், முழுமையான உணவு. இதில் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என்று அறுசுவைகள் இருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது இந்த உணவுகளைச் சாப்பிட்டால், உங்களுக்கு எந்த நோயும் எட்டிப்பார்க்காது. அவசர மில்லாமல் சாப்பிடுங்கள். நீங்கள் சரியான முறையில் சாப்பிட்டால், 30 நிமிடங்கள் ஆகும்’’ என்று விளக்கமும் கொடுத்தார்கள். அங்கு சமைக்கப்பட்ட பொருள்கள் எதுவுமே, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது அல்ல. பஞ்சலோக பாத்திரத்தில் சமைத் திருந்தார்கள். முதல் முறை சாப்பிடும்போது, வித்தியாசமாக இருந்தது. அதன் பிறகு, அந்த உணவைத் திரும்பவும் சாப்பிட மாட்டோமா என்று ஏங்கும் அளவுக்கு இருந்தது. பின்பு இதே வடிவில் சென்னையில் ‘சஞ்சீவனம்’ என்ற உணவகத்தில் ராஜவிருந்து கொடுக் கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, பலமுறை நண்பர்களுடன் சென்று பாராட்டுக் களைப் பெற்றிருக்கிறேன். மெடிமிக்ஸ் சோப்பு நிறுவனம் நடத்தும் உணவகம் இது. இந்த ராஜ உணவு பற்றிச் சொல்ல நிறைய உண்டு. பிறகு சொல்கிறேன்.

இப்போது, ஆயுர்வேதத்தைப் பார்ப்போம். அந்தத் தலைமை ஆயுர்வேத மருத்துவர் அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்றேன். அவருக்கும் எனக்கும் தலைவாழை இலை விரித்து, வித விதமான உணவுகளைப் பரிமாறினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் உணவை மட்டுமே முழுக் கவனத்துடன் உண்டு கொண்டிருந்தார். 30 நிமிடங்கள் கழித்து, கைகளைக் கழுவிட்டுத்தான், என் முகத்தைப் பார்த்தார்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

‘‘சாப்பிடும்போது பேசுவது, சரியான முறையல்ல. ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்று தமிழில் பழமொழி இருக்கிறதே. முடிந்தவரை சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்ப்பது நோய் அணுகா விதிகளில் ஒன்று. ‘உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு’ என்று யாரோ ஒரு அம்மை சொல்லியிருக்கிறார்தானே.’’

ஆம், ஔவையார் என்றேன். ‘‘சபாஷ் ஔவையார்தான். சாப்பிட்டதும் கொஞ்சம் உடம்பு ஓய்வு கேட்கும். அதற்காகப் பாய் விரித்துப் படுக்க வேண்டாம். கொஞ்சம் ஓய்வாக இருந்தால், பத்து நிமிடங்களில் உடம்பு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். நாம் மாலை வெயிலில் பேசுவோம். ‘காலை வெயில் கழுதைக்கு; மாலை வெயில் மனிதனுக்கு’ என்று தமிழ்நாட்டில் சொல்வார்கள்தானே?’’ என்று அந்தத் தாடிக்காரர் என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார்.

மாலை நேர யோகா பயிற்சி வகுப்பு முடித்தவுடன், தாடிக்காரரிடமிருந்து அழைப்பு வந்தது. தென்னை மரங்கள் சூழ்ந்த அழகிய தோட்டத்தில் நடந்தபடி, ‘‘எனக்கு எப்படி, சித்தர் பாடல்கள், ஔவையார் அம்மை பற்றியெல்லாம் தெரியும் என்று தானே?’’ என்று என் மனதிலிருந்ததை வார்த்தைகளாக உச்சரித்தார். மெல்லியதாகச் சிரித்துவிட்டு, அவரே அதற்கான விளக்கத்தைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘திருவனந்தபுரத்தில் பிறந்தேன். நாடு சுதந்திரம் பெறாத காலம் அது. தமிழ்நாடு, கேரளா என்ற பிரிவினை இல்லை. பேசும் மொழிதான் வேறு. அதுவும் ஆயிரம் ஆண்டு களாகத்தானே. அதற்கு முன் தமிழ் தானே. மலையாளத்தில் உள்ள சம்ஸ்கிருதத்தை நீக்கிவிட்டால், மலையாளிகளும் தூய தமிழ் பேசுவார்கள். வீட்டில் வறுமை. கன்னியாகுமரி பக்கம் இருந்த பாட்டி வீட்டில் வளர்ந்தேன். அந்த ஊரில் சித்த மருத்துவம், சிலம்பம், வர்மக்கலை தெரிந்த ஆசான் இருந்தார்.

இளம் வயதில் சிலம்பம் கற்கத்தான், அவரிடம் சென்றேன். ஆனால், சித்த மருத்துவம் என்னை இழுத்துக்கொண்டது. ஆசான், மாணவர் முறையில்தான் படிப்படியாக எல்லாவற்றையும் கற்றேன். ‘என்னிடம் படித்தது போதாது, பாபநாசம், கொல்லிமலை... என்று தேசாந்திரியாகத் திரிந்து கற்றுக்கொள். உன்னிடம் நான் கொடுத்துள்ள இந்த மருத்துவம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சித்தர்கள் பாதுகாத்து வந்த பொக்கிஷம். எக்காரணத் தைக் கொண்டும், அதீத ஆசையில் பொருள் சேர்க்கப் பயன்படுத்திவிடாதே. உன்னை நாடி வருபவர்களின் துயரத்தைப் போக்க மருத்துவம் செய். அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள். வாய் திறந்து பணம், பொருள் கேட்காதே. உன் தொழிலுக்கு நீ நேர்மையாக இருந்தால், செல்வம் தானாகவே வந்து சேரும். இதுதான் எனக்குக் கொடுக்கும் குரு தட்சணை’ என்று சொல்லி, சில ஓலைச் சுவடிகளையும் கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழ்ந்த பகுதிகளில் சுற்றினேன். நிறைய கற்றுக்கொண்டேன்.

கூடவே, தமிழ்நாட்டில் சித்த மருத்துவத் துக்கு மதிப்பில்லை என்று தெரிந்து கொண்டேன். நேராகக் கோட்டயம் வந்து, ஆயுர்வேதம் படித்தேன். அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது. கேரளாவில் ஆயுர்வேத மருத்துவம் என்று சொல்வதில், பாதிக்குப் பாதிச் சித்த மருத்துவம் கலந்துள்ளது. ஒரு காலத்தில் மன்னர்கள், பிரபுக்களுக்கு மட்டுமே, ஆயுர்வேத மருத்துவம் செய்யப் பட்டது. இதனால், இதை ‘ராஜ மருத்துவம்’ என்று சொல்வார்கள். காரணம், இதற்கான மருந்து பொருள்கள், தயாரிப்புகள் செலவு பிடித்தவை. செலவு குறைவாக எளிய மக்களுக்காகக் கொண்டு செல்ல நினைத்த ஆயுர்வேத மருத்துவர்கள் சித்த மருத்துவத் திலிருந்து பலவற்றை எடுத்துக்கொண்டார்கள். ஆனால், அதை வெளியில் சொல்லவில்லை அவ்வளவுதான். இந்த உண்மை இரண்டு மருத்துவ முறைகளும் கற்றவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். இதன் பிறகு, கேரளாவில் ராஜ மருத்துவம், மக்கள் மருத்துவமாக மாறி வளர்ந்தது.

சஞ்சீவனம் உணவகத்தின் ராஜவிருந்து
சஞ்சீவனம் உணவகத்தின் ராஜவிருந்து

ஆங்கில மருத்துவத்தைவிட ஆயுர்வேத மருத்துவத்தைத்தான், மலையாளிகள் நம்புகிறார்கள். பல்லாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் சித்தர்களின் கடும் உழைப்பில் உருவான சித்த மருத்துவம் முன்பு மக்கள் மருத்துவமாக இருந்தது. எதிலும் புதுமையை விரும்பும் தமிழர்கள், தங்கள் மொழியில் உருவான மருத்துவப் புதையலை மதிக்க வில்லை. சித்த மருத்துவம் என்றாலே, தாழ்ந்தது என்ற எண்ணம் உருவானது. இன்னும் இதன் பெயரைக் கெடுக்க, சிலர் வெறும் 5 ரூபாய் மருந்தை, 5,000 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

ஆக, தமிழ்நாட்டில் பணம் படைத்தவர்கள் மட்டுமே, சித்த மருத்துவத் தைப் பெற முடியும் என்ற அளவுக்கு ராஜ மருத்துவ மாகவும், பணம் பறிக்கும் தொழிலாக மாறி வருகிறது’’ என்று கவலை தோய்ந்த குரலில் சொல்லிவிட்டு என் கண்களை உற்றுப் பார்த்தார், அந்தத் தாடி மருத்துவர்.

அவர் சொல்லியதுபோலச் சித்த மருத்துவத்தை ராஜ மருத்துவமாகச் செய்பவர்களை நேரில் பார்க்கும் ‘பாக்கியமும்’ கிடைத்தது. அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism