Published:Updated:

நம் உடலுக்குள் ஒரு டாக்டர் உள்ளார்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

நம் உடலுக்குள் ஒரு டாக்டர் உள்ளார்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

கொரோனா கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த நேரம். ஊடரங்கில் நாடே அடங்கியிருந்தது. ‘இன்னும் எத்தனை கொடிய கிருமி வந்தாலும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று வெள்ளி முளைத்த அதிகாலை நேரத்தில் வாட்ஸ்அப் தகவல் வந்தது.

அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி... என்பதைக்கூட அமைதியாகச் சொல்லக்கூடிய வள்ளலார் சன்மார்க்க அமைப்பினர்தான், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில் நம்பிக்கையான தகவல் அனுப்பியிருந்தார்கள். பொழுது விடியும் வரை காத்திருக்காமல். அந்த அமைப்பில் உள்ள நண்பரை, உடனே தொடர்புகொண்டேன், ‘‘மந்திரம், தந்திரம் கிடையாதுங்க ஐயா. காய்கறி, பழங்கள், மூலிகைகள் மூலமா, நம்ம உடம்புல உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிச்சுக்கிட்டா போதும். எந்தக் கிருமியும் நம்மை அண்டாது. நம்ம சன்மார்க்க அமைப்புல உள்ள நண்பர்கள் இதைக் கடைப்பிடிக்கிறோம். இதை நாங்க புதுசா கண்டு பிடிக்கல. எல்லாம், நம்ம சித்தர்களும், வள்ளலார் ஐயாவும் சொல்லியதைத்தான், இந்தக் கொடிய நேரத்துல நினைவுபடுத்துறோம்’’ என்றார் அடக்கத்துடன்.

எனக்கு உடனே, திருமந்திரம் நினைவுக்கு வந்தது.

‘உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்

உடம்பினுக்கு உள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்பு உளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே.’

இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், இறைவனைப் பற்றிப் பாடியுள்ளதுபோலப் பொருள் தரும். ஊன்றிப் பார்த்தால், உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத்தான், ‘உறு பொருள் கண்டேன்’ என்று திருமூலர் சொல்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். கொரோனாவுக்கு மட்டுமல்ல, சாதரண சளி, காய்ச்சல் வராமல் காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். இம்மண்ணில் நாம் நல்ல வண்ணம் வாழ நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே, நம்மைக் காத்து நிற்கும்.

இதனால்தான், தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு முன்பு, ‘மக்கள் தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்’ என்று உலகச் சுகாதர நிறுவனமே தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வந்தது. இரண்டு ஆண்டுகள் பூமிப் பந்தில் சடுகுடு ஆடிய கொரோனா கிருமிகள், இப்போதும் பற்பல அவதாரம் எடுத்த வண்ணம்தான் உள்ளன.

‘‘நாம் பிறக்கும்போதே, உள்ளுக் குள் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் உருவாகிவிடுகிறது. ஆங்கிலத்தில் இதை ‘இம்யூன் சிஸ்டம்’ (Immune system) என்கிறோம். இதை நம் உடலில் உள்ள டாக்டர் என்றுகூட சொல்லலாம். இந்த டாக்டரை முறையாகக் கவனித்துக் கொண்டால், வெளியில் உள்ள டாக்டர் களுக்குக் கட்டணமாக, கத்தை கத்தையாகப் பணம் கொடுக்கும் நிலை வராது. ஆனால், நம் உடம்புக்குள் உள்ள டாக்டருக்கும்கூட கட்டாயம் கட்டணம் கொடுக்க வேண்டும். தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருப்பதுதான், அவருக்கு நீங்கள் கொடுக்கும் கட்டணம். காய்கறிகள், பழங்கள்... என்று உணவு மூலமும் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் என்றாலும், சூரிய ஒளிதான் அதில் பிரதானமானது. சூரிய ஒளியில் வைட்டமின் டி மட்டுல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் உள்ளது. சத்து நிறைந்த உணவுகள், சரியான வாழ்வியல் முறைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்’’ என்று தொலைக்காட்சி பேட்டியில் மக்கள் மருத்துவர் பி.எம்.ஹெக்டே ஒரு முறை பேசினார்.

இவர் பேசி முடித்தவுடன், அடுத்த சேனலுக்குத் தாவினேன். அங்கும் ஒருவர், மருத்துவம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த முகத்தை முன்பு, எங்கோ பார்த்தது போல இருந்தது. சில நிமிடங்களில் அவர் பெயர் கீழே ஓடியது. சந்தேகமே இல்லை. அவரேதான். யார் அவர்?

‘‘சித்த மருத்துவர்கள் தாங்கள் சொல்லும் தகவல் முழுமையாக இருந்துவிடக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறார்கள்.’’


பத்து ஆண்டுகளுக்கு முன்பு பசுமை விகடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் அவரைப் பார்த்திருக்கலாம். கால்நடை களுக்கு மூலிகை மருந்து கொடுப்பது சம்பந்தமாகப் பேசி வந்தார். நன்றாகப் பேசுவார். கால்நடைகளுக்கு அவர் சொல்லும் மருந்துகளும் நல்ல பயனைக் கொடுத்தன. இதனால், தமிழ்நாடு முழுக்கப் பாரம்பர்ய கால்நடை மருத்துவம் பற்றிப் பேச இவரை அழைத்தார்கள். திடீரென ஒரு நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவம் சொல்லி முடித்தவுடன்,

‘‘மனிதர்களுக்கும் மருத்துவம் பார்ப்பேன். தீர்க்க முடியாத நோய்களுக்குக்கூட நான் மருந்து கொடுப்பேன். விருப்பம் உள்ளவங்க என்னை வந்து பாருங்க’’ என்று அறிவிப்புக் கொடுத்தார். கால்நடை மருத்துவத்தைப் பொறுத்தவரை அவர் கில்லாடி. அனுபவக் கல்வி மூலம் அதைக் கற்றிருந்தார். ஆனால், மனித மருத்துவம் பற்றி அவர் பேசிய தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தன. இதனால், அடுத்த நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதைத் தவிர்த்தோம். அதன் பிறகு, அவரை மறந்தே போனோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தாடி வளர்த்து, காவி உடை தரித்து, குறுந்தாடியுடன், மூலிகை வைத்திய பாடத்தைத் தொலைக் காட்சியில் நடத்திக்கொண்டிருந்தார். கால்நடை மருத்துவம் பேசிய காலத்தில், பேருந்தில் பயணம் செய்தார். மனித மருத்துவத்துக்கு மாறிய பிறகு, காரில் வலம் வரும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளார். ஒரு நாள் திடீரென வேறு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். பழைய தொலைக்காட்சியில் பசுமை விகடன் பற்றிச் சொல்லியிருப்பார் போல.

‘‘பாஸ், சித்த மருத்துவம் தெரிந்த, நல்லா பேசக்கூடிய சித்த மருத்துவர் இருந்தா சொல்லுங்க?’’ என்று அந்தத் தொலைக் காட்சியில் உள்ள நண்பர் கேட்டார். நானும் ஒரு நல்ல மருத்துவரைப் பரிந்துரை செய்தேன்.

‘‘என்ன பாஸ், இது. நீங்க அனுப்பிய ஆள். உண்மையா சித்த மருத்துவர்போல தெரியலையே?’’ என்று தொலைக்காட்சி நண்பர் கேட்டார். அவர் முறையாகச் சித்த மருத்துவம் படித்துப் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவர்களில் பஸ்பம், செந்தூரம் செய்யத் தெரிந்த சிலரில் இவரும் ஒருவர் என்றேன்.

‘‘எல்லாம் சரிதான். சித்த மருத்துவர்னா, தாடிகூட இல்லாம இருக்கிறாரு. சரி, தாடிக்கூட வேணாம். காவி உடை போட்டு விடலாம்னு பார்த்தா, அவரோட பெயர், பார்த்தாலே வேறு மதத்தைச் சேர்ந்தவருனு தெரியுது. சித்த மருத்துவ நிகழ்ச்சிக்குன்னு ஓர் அடையாளம் உருவாகிடுச்சு. அதனால வேற ஆள் இருந்தா சொல்லுங்க” என்று முடித்துக்கொண்டார் அந்தத் தொலைக்காட்சி நண்பர்.

தனியார் தொலைக்காட்சியில் சித்த மருத்துவம் சம்பந்தமாகப் பேச வேண்டும் என்றால், பல கல்யாண குணங்கள் இருக்க வேண்டும் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். தொலைக்காட்சியில் மட்டுமல்ல, யூடியூப் சேனல்களிலும் சினிமா, உணவு - சமையற்கலைக்கு, அடுத்தபடி, மருத்துவத் தகவல்களைத்தான் தேடித்தேடிப் பார்த்து வருகிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.

ஆனால், காலை நேரத்தில் சில காவி உடை சித்த மருத்துவர்கள் சொல்லும் மருந்து களைப் பார்வையாளர்கள் ஒருவர்கூட, சுலபமாகச் செய்துவிட முடியாது. பல விதமான மூலிகைகளைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள். கூடவே, மின்சார அடுப்புடன், ஒரு பெண்மணியை நிற்க வைத்து, அவரிடம் மருந்துகளைக் கொடுத்துக் கஷாயம் செய்யச் சொல்வார்கள். ஒருமுறை ஒற்றைத் தலைவலிக்கு மருந்து சொல்கிறேன் என்று 25 நிமிடம், ஒரு தாடிக்காரர் சொல்லிய தகவல்களைப் பார்த்த எனக்குத்தான், கடைசியில் தலைவலி வந்தது. அந்தச் சித்த மருத்துவர்கள் தாங்கள் சொல்லும் தகவல் முழுமையாக இருந்துவிடக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறார்கள். காரணம், அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், நேராக அவர்கள் மருத்துவமனைக்குப் பார்வையாளர்களை அழைப்பதுதான் நோக்கம்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


அதன் பின்பு, கையில் உள்ள மோதிரங் களுக்குத் தக்கபடிப் பணத்தைக் கறந்து கொள்வார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஆட்களைப் பிடிக்க, அவர்கள் வைக்கும் பொறி, அவ்வளவுதான்.

ஒரு விருது விழாவில் சட்டி, சட்டியாக உணவுகளைச் சமைத்துக் காட்டும் மீசைக் காரரைப் பார்த்தேன்.

ஐயா, உங்கள் சமையல் நுணுக்கங்களைப் பார்த்து யாராவது சமைத்துச் சாப்பிட்டு விட்டு, பாராட்டுகிறார்களா என்று கேட்டேன். ‘‘உண்மையில, யாராலும் இப்படிச் சமைக்க முடியாதுங்க. வித விதமா, வித்தியாசமா, விநோதமா சாப்பிடணும்னு சிலருக்கு ஆசை இருக்கும். அதை நாங்க, செய்து காட்டி, வீடியோ போட்டுப் பணம் சம்பாரிக்கிறோம்’’ என்று நரைத்த மீசையைத் தடவிக்கொண்டு, ஒளிவு மறைவில்லாமல் சொன்னார்.

பல மசாலா வகைகளை வகை தொகையில்லாமல் கொட்டி, சமையல் செய்வதைப் பார்த்தால், இதை இவர்கள் சாப்பிடு வார்களா என்று பலருக்கு கேள்வியும், சிலருக்கு வாந்தியும் கூட வரலாம். அதை மெய்யாக்கும் விதமாக, வீதியில் திரிபவர் களுக்கும் முதியோர் இல்லங் களுக்கும் தாங்கள் சமைத்த உணவைக் கொடுத்து, அந்த நொடியில் நவீன வள்ளலார் அவதாரம் எடுப்பார்கள்.

ஸ்மார்ட் போன் உள்ளவர்கள், யார் வேண்டுமானலும் வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டு, கவனத்தை ஈர்க்கும் தகவல் சுதந்திரம் உள்ள காலம் இது. இந்திய அளவில் 6 லட்சம் பேர், யூடியூப் மூலம் வீடியோ வெளியிட்டு நல்ல வருமானம் பெற்று வருகிறார்கள் என்று, அண்மையில் வெளியான ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கை சொல்கிறது. உண்மையில் இது இனிப்பான செய்திதான். ஆனால், சில யூடியூப் சேனல்கள் அதிக பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என ஆதாரமில்லாத தகவல்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு மருந்து சொல்கிறோம், என்று விதவிதமான மருத்துவ ஆலோசனை களை வாரி வாரி வழங்குகிறார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல் இப்படிச் சொல்லப்படும் வீடியோக்களை லட்சக்கணக் கானவர்கள் பார்த்து வருகிறார்கள். அந்த மீசைக்காரர் சமையல் வீடியோக்களைப் போல பார்த்து மறந்துவிட்டால், சரிதான். ஆனால், சிலர் ஆர்வக்கோளாறில் அவர்கள் சொல்லும் மருத்துவத்தை நம்பி செய்து, நொந்துபோகிறார்கள்.

எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவருக்குச் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்துள்ளது. அதற்குச் சரியான மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்காமல், கையில் செல்போன் உள்ள யூடியூபில் தீர்வு தேடியுள்ளார். கடைசியில் அவர் கண்டது ‘தேன்காய்’ (Sky Fruit) என்ற விதை. ஒரு மண்டலத்துக்குத் தினமும் நான்கு தேன்காய் விதைகளைத் தின்று வந்தால், சர்க்கரை நோய் காணாமல்போகும் என்று வீடியோவில் சொல்லியிருக் கிறார்கள். இவரும் அதை நம்பி தேன்காயைச் சாப்பிட ஆரம் பித்தார். 15 நாள்களில், வயிறு புண்ணாகிவிட்டது. சாதாரண புண் அல்ல. இன்னும் சில நாள்களில் குடல் ஓட்டையாகும் அளவுக்குப் புண் வந்துள்ளது. அதற்கு மருத்துவம் பார்த்து, மீண்டு வரவே பல மாதங்கள் பிடித்தன.

சரி, அந்தத் தேன்காயில் என்ன இருக்கிறது என்று தேடிப்பார்க்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. பெயர்தான் தேன்காய். நம்பி வாயில் வைத்தால், உடல் முழுக்கக் கடும் கசப்புப் பரவிவிடுகிறது. சீனாவில், தேன்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையுமா, குறையாதா என்று ஒரு ஆராய்ச்சியாளர் ஹைப்போதீசிஸ் (Hypothesis) என்ற கருதுகோளை சொல்லியிருக்கிறார். தேன்காய் சாப்பிடுவதால், சர்க்கரை அளவு குறையுமா, குறையாதா? அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது ஆராய்ச்சியின் முடிவில்தான் தெரியும்.

எது ஆரம்ப நிலை ஆராய்ச்சி? எது ஆராய்ச்சி முடிவு? என்ற விவரம் அறியாமல், வீடியோ வெளியிடுவதால் வரும் வினை. அரிசியில் கற்கள் இருப்பதுபோல, யூடியூபில் நல்ல வீடியோக்களுக்கு மத்தியில் சில ஆபத்தானவையும் கலந்துதான் கிடக்கின்றன. நாம்தான், கற்களைக் கலைந்து, நல்லவற்றைக் காண வேண்டும்.

‘‘சிறுதானியங்களைப் பற்றி ஆக்ஸ்போடு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளார்கள். மாப்பிள்ளைச் சம்பாவின் மருத்துவக் குணம் குறித்து இன்டெக்ஸ் ஜெர்னலில் தகவல் வெளியாகியுள்ளது...’’ என்று மேடைக்கு மேடை மணக்க மணக்கப் பேசுவார், அந்தச் சித்த மருத்துவர். இவரின் வாய்ச்சொல்லில் மயங்கி, மருத்துவம் பார்க்கச் சென்றவர்களின் அனுபவத்தை அடுத்த இதழில், சொல்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism