Published:Updated:

செர்ரி தக்காளி, காய்கறி சோயா, இலைக்கடுகு...

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

வெளிநாட்டு விவசாயம்

செர்ரி தக்காளி, காய்கறி சோயா, இலைக்கடுகு...

வெளிநாட்டு விவசாயம்

Published:Updated:
வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டு விவசாயம்

நாம் பயிரிடும் வெவ்வேறு வகையான பயிர்களின் வேர்களிலிருந்து நிறைய ஊட்டச் சத்துகள் மண்ணில் விடுக்கப்படுகின்றன. அவை அனைத்தும் மண்ணில் இருக்கும் பல்வேறு வகையான நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு ஆதாரமாக விளங்கி, அவற்றைப் பன்மடங்கு பெருகச் செய்கின்றன. அந்த நுண்ணுயிரிகள் நமது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும், பயிர்களைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பையும் கொடுக்கின்றன. எனவே, பயிர் சுழற்சி என்பது மீளுருவாக்க வேளாண்மையின் அடுத்த அதிமுக்கிய காரணி ஆகும்.

இந்த இடத்தில் நாம் நமது விவசாயத்தில் நவீனத்துவத்தையும் புகுத்த வேண்டும். புரியும்படி சொல்வதென்றால், நாம் கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும். காலம்காலமாகப் பயிரிடும் பயிர்கள் மட்டுமன்றி, புதிதாக ஏதேனும் பயிர் வகைகளைப் பயிரிட இயலுமா என்று முயன்று பார்க்க வேண்டும். நம் ஊரில் அவ்வளவாகப் பிரபலம் இல்லாத, ஆனால் மண்வளத்துக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்ற அதிக லாபம் தரும் ஒருசில பயிர்களைப் பற்றிச் சொல்கிறேன்.

செர்ரி தக்காளி செடிகளும் பழங்களும்
செர்ரி தக்காளி செடிகளும் பழங்களும்
செர்ரி தக்காளி செடிகளும் பழங்களும்
செர்ரி தக்காளி செடிகளும் பழங்களும்

செர்ரி தக்காளி

தக்காளி என்று சொன்னவுடனே நமக்கு நினைவில் வருவது சமையலுக்குப் பயன் படுத்தும் பெரிய, புளிப்புச்சுவை மிகுந்த தக்காளிப் பழங்கள்தான். இன்னும் சொல்லப் போனால் நாம் அதை ஒரு காய்கறியைப் போலத்தான் சமையலில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படை யில் தக்காளி ஒரு பழம். அதாவது கொய்யா, ஆப்பிள், திராட்சைப்போல தக்காளியும் ஒரு பழமே! தக்காளியில், ‘செர்ரி தக்காளி’ (Cherry Tomato) என்றொரு வகை உண்டு. செர்ரிப் பழங்களைப் போன்ற நிறத்திலும், திராட்சைப் பழங்களைப் போன்ற அளவிலும் இருக்கும். இவை, திராட்சைப் பழங்களைப் போல கொத்துக் கொத்தாகக் காய்க்கும். இந்த ரகங்கள் ஐந்தாறு மாதங்களில் அறுவடை முடியக்கூடியவை அல்ல. நன்கு பராமரிக்கப்பட்டால் சுமார் 8 முதல் 10 மாதங்கள் வரை வளர்ந்தும் காய்த்தும் பயன் தரக்கூடியவை. எனவே, இந்தச் செடிகளுக்குப் பந்தல் அமைப்பது அவசியமாகிறது. சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இவற்றின் பழங்கள் பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சியாக இருக்கும். அவற்றுள் ஆரஞ்சு நிறப் பழங்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.

பொன்னிறத் தக்காளி (Golden Tomato) என்றழைக்கப்படும் இந்தப் பழங்களில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். ஒரு பழம் ஒரு குழந்தையின் ஒரு நாளைய வைட்டமின் ‘ஏ’ தேவையைப் பூர்த்திச் செய்யும். அறுவடை முடிந்த உடனே பயன்படுத்துவது மட்டுமன்றி, இந்தப் பழங்களைப் பேரீச்சம் பழங்களைப் போன்று உலரவைத்தும் உண்ணலாம். உலகக் காய்கறி ஆய்வு மையத்திலிருந்து நிறைய செர்ரி தக்காளி ரகங்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காய்கறி சோயா பீன்ஸ்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காய்கறி சோயா பீன்ஸ்

காய்கறி சோயா

சோயா பீன்ஸ் என்றவுடனே நமக்கு நினைவில் தோன்றுவது மொச்சை வாசனை மிகுந்திருக்கும் சோயா மொச்சைகளும், சோயா எண்ணெயும்தான். பெரும்பாலும் சோயா பீன்ஸின் மணிகளை உலர வைத்து, பயறுகளை உணவாகவும் மாட்டுத் தீவன மாகவும் பயன்படுத்துவோம். சோயா பீன்ஸில் புரதம் மட்டுமன்றி, எண்ணெய்ச்சத்தும் அதிகம். எனவே, அது எண்ணெய்வித்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சோயா பீன்ஸில் ‘காய்கறி சோயா’ (Vegetable Soybean) என்றொரு வகை உண்டு. மணிகள் முதிர்ந்த பசுங்காய்களை அறுவடை செய்து, அவரையைப்போல அவித்து உண்ணலாம். மணிகளைப் பிரித்துப் பல்வேறு வகையான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். அதிக புரதம் மட்டுமன்றி, பச்சைப் பட்டாணியைப் போல இருமடங்கு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம், 60 சதவிகிதம் கால்சியம் மற்றும் 6 மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டிருக்கும் காய்கறி சோயாவில் பல்வேறு வைட்டமின்களும், இரும்புச் சத்தும் நிறைந்திருக்கின்றன. எனவே, சைவ உணவாளர்களுக்கு இது ஒரு கிடைத்தற்கரிய நல்லுணவுப் பண்டம் என்றே சொல்லலாம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காய்கறி சோயா பீன்ஸ்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காய்கறி சோயா பீன்ஸ்

ஸ்வர்ண வசுந்தரா

இது காய்கறி சோயா பீன்ஸ் ரகம். காய்கறி போல சமைத்து உண்ணலாம். ஜப்பான், தைவான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இதற்கு மிக அதிக தேவை இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் ரகங்களை உலகக் காய்கறி ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றைக் கொண்டு இந்திய வேளாண் ஆய்வுக் கழகம், ‘ஸ்வர்ண வசுந்தரா’ உள்ளிட்ட ரகங்களை உருவாக்கி, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் நீள்தட்டை காய்கள்
தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் நீள்தட்டை காய்கள்

நீள் தட்டை

தட்டைப்பயறு நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பயிர்தான். அதில் பொரியல் தட்டை என்றொரு வகை உண்டு. தட்டைக்காய்கள் பீன்ஸ் போன்று பசுமையாக முதிர்ந்திருக்கும் தறுவாயில் அறுவடை செய்து, காய்கறியாகப் பயன்படுத்துவோம். ஆனால், தட்டைப்பயறில் ‘நீள் தட்டை’ (Yard-long bean) என்றொரு வகை உண்டு. ஒவ்வொரு காயும் அரை மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையில்கூட வளரும். நமது நாட்டில் கேரளா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் ஒருசில இடங்களில் பயிரிடப்பட்டாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் இது மிகவும் பிரபலம். சொல்லப்போனால் தென்கிழக்கு ஆசியாவில் இதைப் பயிரிடாத காய்கறி விவசாயிகளே இருக்க மாட்டார்கள். வியட்நாம் போன்ற நாடுகளில் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 9 டன் வரையிலும் மகசூல் கிடைக்கும். பயிரிட்ட 45-ம் நாளிலிருந்து அடுத்த 45 முதல் 75 நாள்கள் வரையிலும், ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யப்படும். இந்தப் பயிரின் மூலம் ஏக்கருக்கு ஒன்றே கால் லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதைவிட முக்கியம், ஒரு ஏக்கரில் அவரை அல்லது பீன்ஸ் மூலம் கிடைக்கும் புரதத்தை விட நீள் தட்டையில் கிடைக்கும் புரதத்தின் அளவு அதிகம்.

தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் நீள்தட்டை காய்கள்
தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் நீள்தட்டை காய்கள்

இலைக்கடுகு

கீரை என்றவுடன் நமது மனக்கண்ணில் உதிப்பவை சிறுகீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, புதினா, கொத்தமல்லி, மணத்தக்காளி, புளிச்சைக்கீரை போன்றவை தான். ஆனால், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையான கீரை வகைகள் எல்லாமே முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சார்ந்தவைதான். இலைக்கடுகு (Leafy mustard), சீன முட்டைக்கோஸ் (Chinese cabbage), பரட்டைக்கீரை (Kale), பக்சோய் (Pak-choy) மற்றும் சோய்சம் (Choysum) போன்ற இந்தக் கீரை வகைகள் எல்லாம் 45 முதல் 60 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஏக்கருக்கு 6 டன் வரை மகசூலைக் கொடுக்கும். இவை, குறுகிய காலத்திலேயே ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும் வருமானம் கொடுக்கிறது. அதைவிட முக்கியம் இவற்றில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கடுகு எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட சத்துப்பொருள்கள். இந்தக் கீரை வகைகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் மக்களுக்கு, பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருவதற் கான வாய்ப்புகள் குறைகின்றன என்கின்றன ஆய்வு முடிவுகள். மேலும், இந்தப் பயிர்களைப் பயிரிட்ட நிலங்களில் பயிர்களுக்கு நோய்களை உண்டாக்கும் பாக்டீரியங்களும் நூற்புழுக்களும் அழிக்கப்படுகின்றன. எனவே, மண்வளம் வலுப்பெறுகிறது.

பக்சோய் கீரை
பக்சோய் கீரை
சீன முட்டைக்கோஸ் கீரை
சீன முட்டைக்கோஸ் கீரை

தழைச்சத்து தேவை 40 சதவிகிதம் குறையும்

அதேபோல, உளுந்து, பாசிப்பயறு, காய்கறி சோயா அல்லது நீள் தட்டை பயிரிடும் நிலங்களில் அதிக தழைச்சத்து நிலைநிறுத்தப் படுகிறது. அது, அதற்கடுத்து அந்நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கான ரசாயன உரங்களின் தேவையைக் குறைக்கிறது. தொடர்ந்து நெல் பயிரிடப்படும் நிலங்களை விட, பாசிப்பயறு அல்லது தட்டைப்பயறுக்கு அடுத்துப் பயிரிடப்படும் நெல்லில் தழைச் சத்து தேவை 40 சதவிகிதம் வரையிலும் குறைகிறது. நீள் தட்டைக்குப் பிறகு, பயிரிடப்படும் நெல்லின் உரத்தேவை பாதியாகக் குறைகிறது. பாசிப்பயறுக்குப் பிந்தைய சோளம் அல்லது கோதுமையின் மகசூல் பன்மடங்கு அதிகரிக்கிறது. எனவே, மண்வளம் மற்றும் மனிதவளம் காப்பது மட்டுமன்றி, சூழல் வளத்தைக் காப்பதிலும், மகசூலை அதிகரிப்பதிலும் பயிர் சுழற்சியின் பங்கு அதிகம் என்பதால், அது மீளுருவாக்க வேளாண்மையில் மிகமுக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.

இலைக்கடுகு
இலைக்கடுகு
பரட்டைக்கீரை
பரட்டைக்கீரை

ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு...

எனவே, இயற்கை வேளாண்மை என்பது கைக்கெட்டாத கானல் நீர் அல்ல; அள்ளிக் குடிக்கும் ஆற்று நீர்தான். அதை இந்தியா மட்டுமல்ல, உலகமே உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால், ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் இயற்கை வேளாண்மையின் கூறுகளை வடிவமைக்க வேண்டியது ஆராய்ச்சியாளர்களின் கடமை. அதேபோல, இயற்கை வேளாண்மை என்பது நவீனத் துவத்துக்கு எதிரானது அல்ல. இயற்கை வேளாண்மையோடு இயைந்து போகும் நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களை ஆராய்ந்து இணைக்க வேண்டிய பொறுப்பும் வேளாண் ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்கிறது. வரும் காலங்களில் அதை இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களும், இந்திய வேளாண் ஆய்வுக் கழகமும் முன்னெடுக்கும் என்று நம்புவோம். அதன் பலனாக, மண்ணின் நலம், சூழலின் நலம் மற்றும் மனிதர்களின் உடல்நலம் என அனைத்து நலன்களும் ‘இயற்கை வேளாண்மை’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் வலுப்பெறும் என்றும் நம்புவோம்.

- முற்றும்

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

மனமார்ந்த நன்றிகள்

இதுவரையிலும் இந்தத் தொடர் மூலமாகச் சூழலோடு இயைந்து விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய மற்றும் எளிய தொழில்நுட்பங்களைச் சொல்லி வந்தேன். இதுவரை நான் சொல்லியிருப்பவை அறுவடை வரையிலான மண்வளம் மற்றும் பயிர் வளம் காக்கும் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மட்டுமே. ஆனால், வேளாண்மையின் மதிப்புச் சங்கிலியில் செம்மை விவசாயச் சாகுபடி முறைகள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதலில் புதுப்புது யுக்திகள் என்று இன்னும் எத்தனை எத்தனையோ எளிய தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவை அத்தனையையும் இந்தத் தொடரிலேயே சொன்னால் அது ‘அளவுக்கு மீறியதாக’ (Overdose) ஆகிவிடும். எனவே, இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது. இதுவரை இத்தொடருக்கு வரவேற்பு அளித்த பசுமை விகடன் வாசகர்களுக்கும், ஆதரவு நல்கிய விகடன் குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism