Published:Updated:

கடன் உதவி... 90 சதவிகிதம் மானியம்! - கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்!

கயிறு வாரியம்

பிரீமியம் ஸ்டோரி
ந்தியத் தென்னை நார் தொழிற்சாலை களிலிருந்து 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கின்றன.

இதில் உள்ள மூலப்பொருள்களால், இது விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென்னை நாரைப் பயன்படுத்தி கயிறு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கயிறு தொழிலில் கேரள மாநிலத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகம் உள்ளது. ஆனாலும், பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது.

கடன் உதவி... 90 சதவிகிதம் மானியம்! - கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்!

இதற்காக மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) தென்னை நார் (கயிறு) தொழிலின் மேம்பாட்டுக்குப் பல்வேறு மானியங்களையும் பல பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தென்னை நாரிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க வழிகாட்டுவதோடு பயிற்சி பெற்றவர்களுக்குத் தொழில் தொடங்க மானியமும் பெற்றுத் தருகிறது. விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து தரும் நோக்கில் 1952-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது கயிறு வாரியம். இந்தக் கயிறு வாரியத்தின் செயல்பாடுகளைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ள, பசுமை விகடன் சார்பில் கடந்த ஜூன் 11-ம் தேதி ‘கயிறு வாரியம் வழங்கும் தொழில் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் நேரலை ஆன்லைன் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் கயிறு வாரியம் வழங்கும் மானியங்கள், திட்டங்கள், கயிறு வாரியத்தின் செயல்பாடுகள், தென்னை நார் கழிவுகளைப் பயன்படுத்தும் யுக்திகள் ஆகியவை இடம்பெற்றன. கயிறு வாரியத்தின் செயலாளர் எம்.குமாரராஜா, அதன் உறுப்பினர் எஸ்.கே.கௌதம் மற்றும் ஏசியன் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்ரா துரைராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கயிறு வாரிய செயலாளர் குமாரராஜா பேசும்போது, “தேங்காய் மட்டையை மட்டும் வைத்துத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிப் பசுமையைக் காப்பதுதான் எங்கள் பணி. கயிறு வாரியம் மூலம் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தொழில் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. 20,000 தொழிற்சாலைகளுக்கு மேல் இருக்கின்றன. ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்றுமதி மட்டும் 2,000 கோடிக்கும் மேல் நடைபெறுகிறது. வீணாகத் தூக்கி எறியும் தேங்காய் மட்டையிலிருந்து இவ்வளவு வருமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. எங்கள் தயாரிப்புகள் எப்போதுமே தண்ணீரை மிச்சப்படுத்தி, மரங்களையும் மண்ணையும் பாதுகாக்கும். இந்தியாவில் இருக்கும் கயிறு வாரியத்தின் மண்டல அலுவலகங்கள் மொத்தம் 42. அதில் ஒன்று தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் இருக்கிறது. மதுரையிலும், சென்னையிலும் விற்பனையகங்கள் இருக்கின்றன. தஞ்சாவூரில் மிகப்பெரிய பயிற்சி மையம் உள்ளது.

குமாரராஜா, கௌதம்,  சித்ரா துரைராஜ்
குமாரராஜா, கௌதம், சித்ரா துரைராஜ்

தேங்காய்நார் உற்பத்தியில் உலகளவில் முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான். தமிழ்நாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். உதவத் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்தும் இந்தத் தேங்காய் நார் தொழிலை ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்கும்போது 90 சதவிகிதம் வரை மானியம், வங்கிக் கடன் வாங்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். உதாரணமாக 500 பேர் சேர்ந்து 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க வேண்டுமென்றால் 10 சதவிகிதப் பணம் மட்டுமே நீங்கள் வைத்திருந்தால் போதும், மீதி பணம் எங்கள் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். வாரியம் சார்பில் பல பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதை எங்கள் இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேங்காய்நாரைப் பயன்படுத்தித் தோட்டக்கலை, வீட்டு உபயோகப் பொருள்கள் என 32 பயன்பாட்டுப் பொருள்கள் தயாரித்து வருகின்றனர்” என்றவர், வாசகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கயிறு வாரிய உறுப்பினர் எஸ்.கே.கெளதம் பேசும்போது, “தேங்காய்நார் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கடந்த 5 வருடங்களில் தேங்காய் நார்களைப் பற்றிப் பசுமை விகடனில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதனால் தேங்காய் நார் பயன்பாடு அதிகமாயிருக்கிறது. தேங்காய் நார் ஒரு ‘பழுப்பு நிற தங்கம்’ என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயத்துக்கு 80 சதவிகிதமும் மனிதர்களுக்கு உபயோகப்படும் ஒரு பொருளாக 20 சதவிகிதமும் தேங்காய் நார் பயன்பட்டு வருகிறது. அதிக ரசாயன உரங்களைப் போட்டு நமது நிலத்தை மலடாக்கி வைத்திருக்கிறோம். அதைக் குறைத்து நீரைச் சேமித்து வைக்கும் பணிகளில் இந்தத் தேங்காய் நார்கள் பயன்பட்டு வருகின்றன. கயிறு வாரியத்தில் பயிற்சி எடுங்கள். தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் ஏற்றுமதி பற்றியும் தெரிந்துகொள்ளலாம். செடிகளுக்குத் தண்ணீரைச் சேமிக்க, மண்ணில் சத்துகளை நிலை நிறுத்த, இயற்கையைச் சீராக்க, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க எனப் பல காரணங்களால் தேங்காய்நார் இன்று அவசிய பொருளாக இருக்கிறது. உலக மொத்த தேங்காய் நார் உற்பத்தியில் 60 சதவிகிதம் இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. உலக சந்தையில் தேவை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. உற்பத்திதான் குறைவாக இருக்கிறது. மாடித்தோட்டத்திலும் தேங்காய் நாரின் பங்கு இன்று அதிகம்” என்றார்.

இறுதியாகப் பேசிய ஏசியன் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்ரா துரைராஜ், “தேங்காய் நார் இன்று மாடித்தோட்டங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இப்போது நாம் உண்ணும் காய்கறிகள் பெரும்பாலும் வெளியிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இவை எங்கு விளைந்தன, என்ன உரங்கள் போடப்பட்டன உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாது. அதனால், உடல் உபாதைகள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உண்டு. அதற்கு ஒரே தீர்வு வீட்டுக்கு ஒரு காய்கறித் தோட்டம் அமைப்பதுதான். மாடித்தோட்டத்தில் தேங்காய் நார் மண்ணின் தேவையைக் குறைத்து, தளம் அதிக பாரமாவதைத் தடுக்கிறது. தண்ணீரை அதிகமாக உறிஞ்சிக்கொண்டு சேமித்து வைத்துப் பயன்படுத்துவதால் தண்ணீர் தேவை குறைகிறது. இதுபோக வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களிலும் தேங்காய் நார் பொருள்களின் தேவை அதிகமாகியிருக்கிறது. இது தொடர்பான தொழில் வாய்ப்புகளும் அதிகம். நானும் கயிறு வாரியத்தில் பயிற்சி எடுத்துத் தேங்காய் நார் உற்பத்தி தொழிலைச் செய்து வருகிறேன்” என்றார்.

கேள்வியும் பதிலும்!

“தென்னைநார் இல்லாமல் பனை நார்களை மட்டும் வைத்துக்கொண்டு பனைப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியுமா?”

“பனையும் நல்ல தொழில்தான். தேங்காய் நாரையும், பனை நாரையும் கலந்து பொருள்கள் செய்ய முடியாது. இரண்டையும் தனித்தனியாக வைத்து பொருள்கள் தயாரிக்கலாம்.”

“தென்னைநார் தொழில்களைச் சென்னைப் போன்ற பெருநகரங்களில் தொடங்க முடியுமா, மாநகராட்சி அதற்கான அனுமதி தருமா?”

“தென்னையிலிருந்து நார் எடுக்கும் தொழிலை, மாநகராட்சி எல்லைக்குள் செய்ய முடியாது. அது தென்னை சார்ந்த பகுதியில் இருக்க வேண்டும். ஆனால், தென்னைநார் கிடைத்துவிட்டால், அதை வைத்து பொருள்களைத் தயாரிக்க அனுமதி உண்டு. மதுரவாயல் போன்ற சென்னையின் எல்லைப் பகுதிகளில் தொழிலைச் செய்யலாம்.”

“தென்னைநார் இறக்குமதியாளர்களை அடையாளம் காண்பது எப்படி?”

“இணையத்தில் அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. வெளிநாட்டு இறக்குமதியாளர்களின் விவரங்கள் எங்கள் இணையதளத்திலேயே இருக்கின்றன.”

“தென்னைநாரை வைத்து என்னவிதமான தொழில்களைத் தொடங்கலாம்?”

“தென்னைநார்க் கட்டிகள், கயிறுகள், தோட்டக்கலைத்துறை பொருள்கள் உள்ளிட்ட 35 வகையான பொருள்களைத் தயாரிக்கும் தொழில்களைத் தொடங்கலாம்.”

“தென்னைநார்ப் பொருள்கள் தயாரிக்க பயிற்சிகள் எங்கெங்கு கொடுக்கப்படுகின்றன?”

“தஞ்சாவூரில் பயிற்சி மையம் உள்ளது. அங்கு பயிற்சி எடுக்கலாம். அதேபோலப் பொள்ளாச்சி உட்பட மொத்தம் 14 மையங்கள் இருக்கின்றன. அவற்றிலும் பயிற்சிகள் எடுக்கலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு