Published:Updated:

அறிவியல் - 3 : மலைக்க வைக்கும் மாட்டுச் சிறுநீர்!

மாடு
பிரீமியம் ஸ்டோரி
மாடு

இயற்கை வேளாண்மை-ஆய்வுப் பார்வையும்... அறிவியல் உண்மையும்!

அறிவியல் - 3 : மலைக்க வைக்கும் மாட்டுச் சிறுநீர்!

இயற்கை வேளாண்மை-ஆய்வுப் பார்வையும்... அறிவியல் உண்மையும்!

Published:Updated:
மாடு
பிரீமியம் ஸ்டோரி
மாடு
யற்கை விவசாயமும் அறிவியல் அடிப்படையில் உருவானதுதான். அதைப் புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அட்சய பாத்திரமாகவே பயன்படும்.

இயற்கை விவசாயத்தை அறிவியல் பார்வையில் அலசுகிறது இந்தத் தொடர். இயற்கை விவசாயத்துக்கு ஆணிவேரைப் போன்றவை சாணமும் மாட்டுச் சிறுநீரும். சாணத்திலுள்ள சத்துக்கள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். மாட்டுச் சிறுநீரின் சிறப்பையும் அதிள்ள அறிவியல் உண்மைகளையும் இந்த இதழில் பார்ப்போம்.

வேத காலத்தில் மாட்டுச் சிறுநீரை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். வயிற்றுப்புண், கல்லீரல் பிரச்னைகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு இதை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை அதிகம் பயன்படுத்திய நாடுகள் மியன்மார், நைஜீரியா. தற்போது இந்தியாவிலும் பயன்படுத்தி வருகிறார்கள். அழியாத பானங்கள் வரிசையில் `வாழ்க்கை நீராகப் பயன்பட்ட பானம்’ என்றும், `கடவுளின் தேன்’ என்றும் இதை அழைக்கிறது வேதம்.

மாடு
மாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நன்கு பராமரிக்கப்படும், சரிவிகித தீவனம் எடுத்துக்கொள்ளும் ஒரு மாடு 24 மணி நேரத்தில் ஆறு லிட்டர் சிறுநீரைக் கொடுக்கும். ஒரு விவசாயி இரண்டு மாடுகளை வைத்திருந்தால், ஆண்டுக்கு 4,380 லிட்டர் சிறுநீர் கிடைக்கும். இது 65 கிலோ தழைச்சத்துக்குச் சமம். 136 கிலோ யூரியாவை மண்ணில் கொட்டுவதற்குச் சமம்.

மாட்டுச் சிறுநீரில் சத்துகள்:

மாட்டுச் சிறுநீரில் தண்ணீர்சத்து 95 சதவிகிதம், யூரியா 2.5 சதவிகிதம் இருக்கிறது. தாது உப்பு, `ஹார்மோன்கள்’ எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், `என்சைம்கள்’ எனப்படும் நொதிகள் அனைத்தும் 2.5 சதவிகிதம் இருக்கின்றன. ஒரு லிட்டர் சிறுநீரில் 1-1.7 மி.லி அம்மோனியம் நைட்ரேட் இருக்கிறது. மேலும் இதில் உலர்ந்த பொருள்கள் ஐந்து முதல் ஏழு சதவிகிதம், அங்ககப் பொருள்கள் 2.3 சதவிகிதம், மொத்த நைட்ரஜன் 0.6-1.2 சதவிகிதம், மொத்த பாஸ்பரஸ் 0.02 சதவிகிதம், மொத்த பொட்டாசியம் 1.3 முதல் 1.4 சதவிகிதம் இருக்கின்றன.

நல்ல ஆரோக்கியமான மாடு நாள் ஒன்றுக்கு அதன் மொத்த எடையில் கிலோ ஒன்றுக்கு 17 முதல் 45 மி.லி சிறுநீர் கழிக்கும். அதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ மாட்டு எடையில் சராசரியாக வெளிப்படும் 30 மி.லி சிறுநீரில் கிரியாட்டினின் 15-20 மில்லிகிராம், யூரிக் அமிலம் 1-4 மில்லிகிராம், சல்ஃபேட் 3-5 மில்லிகிராம், மக்னீசியம் 3-7 மில்லிகிராம், கால்சியம் 0.1-1.4 மி.லி, பொட்டாசியம் 0.08-0.15 மில்லிமோல், சோடியம் 0.02-1.1 மில்லிமோல், குளோரைடு 0.1-1.1 மில்லிமோல் (ஆதாரம்: சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி தொகுப்பிதழ்-2017)

வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நொதிகள்:

இயற்கை இடுபொருள்களில் சாணத்தை மட்டும் போடாமல், அதனுடன் மாட்டுச் சிறுநீரைச் சேர்க்கக் காரணம் இதிலுள்ள நொதிகள்தான். சாணத்திலிருக்கும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கும் பெருகுவதற்கும் உதவி செய்வது இந்த நொதிகள்தான். இவை இரண்டும் சேரும்போதுதான் இயற்கை இடுபொருள்களின் செயல்பாடு அபரிமிதமாக இருக்கும். ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில், லாக்டேஸ் 3.78 மில்லிமோல், லாக்டேஸ் டீஹைடிரோஜீனேஸ் 21.78 மில்லிமோல், அமேலேஸ் 90.236 யூனிட், யூரிக் அமிலம் 135.08 மில்லிகிராம், பினோலிக் அமிலங்கள் 4.758 மில்லிகிராம் ஆசிட் பாஸ்போடேஸ் 456 மில்லிமோல், கார பாஸ்போடேஸ் 110 மில்லிமோல் இருக்கின்றன. இவை தவிர, வைட்டமின் பி1-444.1 மைக்ரோகிராம், வைட்டமின் பி2-0.633 மில்லிகிராம், வைட்டமின் சி-216.408 மில்லிகிராம் ஆகியவை இருக்கின்றன. அதனால்தான் மாட்டுச் சிறுநீர் மூலமாகத் தயாரிக்கப்படும் இடுபொருள்களைப் பயன்படுத்தும்போது, பயிர்களில் இயற்கையாகவே உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கிகள் தூண்டப்பட்டு, தாவர வளர்ச்சி ஊக்கிகள் பெருக்கத்தின் மூலம் பயிர்கள் வளர்ச்சி அதிகமாகிறது; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மேலும், இத்தனை சத்து்களும் இருப்பதால்தான் அந்தக் காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில், மனிதனுக்கு வரும் நோய்களைத் தீர்க்க இது பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

பூச்சிவிரட்டி தயாரிக்க அடிப்படையாக இருப்பது மாட்டுச் சிறுநீர். பயிர்களிலிருந்து பூச்சிகளை விரட்டக்கூடிய தன்மை வேப்பெண்ணெய்க்கும், மாட்டுச் சிறுநீரிலுள்ள யூரிக் அமிலம் இரண்டுக்கும் உண்டு. இதனால் ஏற்படும் ஒவ்வாமையால் பூச்சிகள் பயிரைவிட்டுப் பறந்துவிடும். பூச்சிவிரட்டிக் கரைசல் தெளித்த பிறகும் பூச்சி தெறித்து ஓடாமல், பயிரிலேயே தங்கிவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. மாட்டுச் சிறுநீரிலுள்ள வேதியியல் தன்மையால் பூச்சிகளின் உடலில் வளர்சிதை மாற்றம் உருவாகும். அதனால் பூச்சிகளின் இனப்பெருக்கத்தன்மை பாதிக்கப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
‘‘தமிழர்கள் மாடுகளின் திட மற்றும் திரவக்கழிவுகளை தமிழ்க்குடிகளின் உயர்தொழிலாம் வேளாண்மையில் ஓர் அங்கமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.’’

மனித மருத்துவத்துக்குப் பயன்பட்டுவந்த மாட்டுச் சிறுநீர் விவசாயத்துக்கு வந்த கதை சுவரஸ்யமானது. ஒரு விவசாயி தவறுதலாக மாட்டுச் சிறுநீரைப் பயிரில் தெளித்துவிட்டார். அடுத்த நாள் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது பயிர்கள் கருகிய நிலையில் இருந்திருக்கின்றன. உடனடியாக, பயிரோடு சேர்த்து அங்கிருந்த மண்ணை வெட்டியெடுத்து வேறு இடத்தில் கொட்டி வைத்தாராம். என்ன ஆச்சர்யம்... அந்த இடத்தில் செடிகள் செழிப்பாக வளர்ந்தன. அதற்குப் பிறகு சில சோதனைகல் மேற்கொள்ளப்பட்டு மாட்டுச் சிறுநீர் விவசாயப் பயன்பாட்டுக்கு வந்தது. இதை யார் கண்டுபிடித்தது, எங்கே பயன்படுத்தினார்கள் என்பதற்கான வரலாறு இல்லை. ஆனால், இதை முதன்முதலில் விவசாயத்துக்குப் பயன்படுத்தியது தமிழர்கள் என்பதற்கு புறநானூற்றில் ஒரு பதிவு இருக்கிறது. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப் பட்டுவந்த புறநானூற்று நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலையை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து, தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், 1894-ம் ஆண்டு டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் முதன்முதலாக புறநானூறைப் பதிப்பித்து வெளியிட்டார்.

மாடு
மாடு

அந்தப் பதிப்பின் பாடல் வரிகளில் `மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட...’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (புறம், 61-3) `தமிழர்கள் மாடுகளின் திட மற்றும் திரவக்கழிவுகளை தமிழ்க்குடிகளின் உயர்தொழிலாம் வேளாண்மையில் ஓர் அங்கமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்’ என்கிறது வரலாறு. அதற்குப் பிறகு, ‘சர் ஆல்பர்ட் ஹோவர்டு’ என்பவர் 1900-களில் அங்கக வேளாண்மையிலும், 1924-களில் ரூடால்ப் ஸ்டெய்னர் என்பவர் பயோடைனமிக் வேளாண்மையிலும் மாட்டு சிறுநீர் குறித்த ஆராய்ச்சிபூர்வமான உண்மைகளை உலகுக்கு வழங்கினார்கள். அதற்குப் பிறகுதான் ‘பயோடைனமிக் ஃபார்ம்’ எனப்படும் உயிராற்றல் வேளாண்மை உருவாகியது.

மாட்டுச் சிறுநீரை எடுத்த சில மணித்துளிகளில் பயன்படுத்த வேண்டும். மண் உள்ளிட்ட அனைத்திலும் கார அமிலத்தன்மை நடுநிலையாக அதாவது, 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். மாட்டுச் சிறுநீரிலும் அப்படித்தான். கார அமிலத்தன்மை இருக்க வேண்டும். நடுநிலை தவறிய சிறுநீரைப் பயன்படுத்தினால் பலன் இருக்காது. சிறுநீர், 6 முதல் 6.5 அமில காரத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பயன்படுத்தும்போது முழுமையான பலன் கிடைக்கும். இந்த அளவுக்குக் கீழே போகும்போது, அமிலமாக மாறிவிடும். அளவு அதிகரிக்கும்போது காரநிலைக்குச் சென்றுவிடும். எனவே, நடுநிலையில் இருக்க வேண்டும். சிறுநீரைச் சேகரித்தவுடனே பயன்படுத்தினால் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், அமில காரத்தன்மை அதிகமாகவோ குறைவாகவோ ஆகும்போது, அந்தச் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யமும், மற்ற இடுபொருள்களும் எந்தப் பயனையும் தராது என்பதை விவசாயிகள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரைச் சேமித்துப் பயன்படுத்துபவர்கள் குளிர்ச்சியான இடங்களில் சேமிக்க வேண்டும். 32-37 டிகிரி செல்சியஸ் சூரிய வெப்பத்தில் மாட்டுச் சிறுநீர் சேமித்துவைத்த பாத்திரங்கள் சூடாகும்படி இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு அங்கிருந்து எடுத்து, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். இப்படிச் சேமிக்கும் மாட்டுச் சிறுநீர் பல நாள்கள் ஆனாலும் நடுநிலையான கார அமிலத்தன்மையுடன் இருக்கும். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல மண்ணில் பல்வேறு நன்மை செய்யும் பாக்டீரியா இருக்கின்றன. நாம் போடக்கூடிய சத்துகளைப் பயிருக்கு ஏற்றவாறு எடுத்துக்கொடுக்கும் வேலையை அவை செய்கின்றன. மாட்டுச் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை இடுபொருள்களை நிலத்தில் விடும் போதுதான் நுண்ணுயிர்கள் தூண்டப்பட்டு, சத்துகளைச் சிதைத்து பயிர் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றிக்கொடுக்கின்றன.

மட்கிய தேநீர்

பஞ்சகவ்யா, அமுதக்கரைசலைப்போல மாட்டுச் சிறுநீரை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஒருவகையான வளர்ச்சி ஊக்கி `மட்கிய தேநீர்’ (Compost Tea).

இதற்கு மாட்டுச் சிறுநீர் கழிக்கும்போது எடுத்த சிறுநீரை உடனே பயன்படுத்த வேண்டும். சில மணி நேரங்களுக்கு முன்னர் பெய்த சிறுநீரைப் பயன்படுத்தக் கூடாது. சுடச்சுடப் பெய்த சிறுநீர், சாணம் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 10 மடங்கு தண்ணீரைக் கலந்துகொள்ள வேண்டும். அதை 12 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 10 லிட்டர் கரைசலுக்கு 100 கிராம் என்ற அளவில் நாட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை வேர்வழி பாசனத்தில் தண்ணீருடன் கலந்து கொடுக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் செய்யும் விவசாயிகள் இதை உரத் தொட்டி மூலமாகக் கலந்துவிடலாம். 100 லிட்டர் மட்கிய தேநீர் தயார் செய்தால், அதை ஐந்து ஏக்கருக்குப் பயன்படுத்தலாம். அரை ஏக்கர் பாசனத்துக்கு, 10 லிட்டர் அளவுக்குச் சொட்டு நீர்த் தொட்டியில் கலந்துவிட வேண்டும்.

மண்ணிலுள்ள சமையல்காரர்களுக்கு (நுண்ணுயிர்கள்) ஊக்கம் கொடுக்கிறது இந்த மட்கிய தேநீர். இதனால் மண்ணில் பெருகும் நன்மை செய்யும் பாக்டீரியாவின் அளவு ஆச்சரியப்படத்தக்கது. இதைப் பயன்படுத்தும்போது நன்மை செய்யும் பாக்டீரியா, பூஞ்சைகள், ஆக்டினோமைசஸ் மூன்றும் பிரமிக்கத்தக்க அளவுக்கு உயரும். இந்த மட்கிய தேநீரைப் பயன்படுத்துவதால், ஒரு கிராம் மண்ணில் நுண்ணுயிரிகளான 47.01 கோடி நன்மை செய்யும் பாக்டீரியா காலனிகளும், 3.467 கோடி பூஞ்சை காலனிகளும், 4.0 லட்சம் ஆக்டினோமைசீட்ஸ் காலனிகளும் பெருகும். ஒரு கிராம் மண்ணில் இவ்வளவு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு வீரேஷா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இதை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். `இதைப் பயன்படுத்துவதால் மண் மலட்டுத் தன்மையிலிருந்து உயிர்த்தன்மைக்கு மாறுகிறது’ என்கிறது ஆராய்ச்சி முடிவு.

மேலும், 15 சதவிகித மாட்டுச் சிறுநீர்க் கரைசலை நீர் உரத்தொட்டிகளின் மூலமாகவோ, பயிர்களின் தூர்கள் நனையுமாறு அளிப்பதன் மூலமாகவோ பயிர்களில் வேர் அழுகல் வராமல் தடுக்கலாம். இதன் செயல்திறனானது, வேர் அழுகலுக்குக் காரணமான தீமை செய்யும் மூன்று கிருமிகளான ஃபியூசேரியம் ஆக்ஸிஸ்போரம், ரைஸோக்டோனியா சொலானி, ஸ்கிலிரோஷியம் ரோப்அஃஸி ஆகியவற்றின் செயல்பாட்டை முடக்கும். ஃபியூசேரியம் 78.52 சதவிகிதமும், ரைஸோக்டோனியா 78.31 சதவிகிதமும், ஸ்கிலிரோஷியம் 73.84 சதவிகிதமும் முடக்கப்படுகிறது.

- ஆராய்ச்சி தொடரும்

முனைவர் செந்தூர்குமரன்

சத்துகள் எக்கச்சக்கம்!

மாட்டுச் சிறுநீரில் நைட்ரஜன், பொட்டாசியம் சத்துகள் அதிகம். மாடு தீவனம் எடுக்கும்போது தழைச்சத்து மிகுந்த தீவனங்களை உட்கொள்கிறது. அவற்றில் 20 சதவிகித தழைச்சத்துகள் கழிவுகளாக மாட்டின் வயிற்றில் தங்குகின்றன. அங்கு சில மாற்றங்கள் நடந்து, கழிவுகளாக வெளியேறும்போது அந்தக் கழிவில் தழைச்சத்து 80 சதவிகிதம் இருக்கிறது. இது சிறுநீரில் 52 சதவிகிதம், சாணத்தில் 28 சதவிகிதமாக வெளியேறுகிறது. சிறுநீரில் வெளியேறும் 52 சதவிகிதத்தில், நைட்ரஜன் 40 சதவிகிதம், பொட்டாசியம் 88 சதவிகிதம், பாஸ்பரஸ் 60 சதவிகிதம் இருக்கின்றன.

மாட்டுச் சிறுநீருக்குக் காப்புரிமை வாங்கிய அமெரிக்கா!

நாட்டு மாடு, ஜல்லிக்கட்டு என நாம் பாரம்பர்யம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், மாட்டுச் சிறுநீரின் மதிப்பை அறிந்து ஐந்து காப்புரிமைகளை இந்திய நிறுவனங்களுக்குத் தந்திருக்கிறது அமெரிக்கா. (காப்புரிமை எண்கள்: 6,816,901 மற்றும் 6,410,059, 7718360, 7235262, 7297659). மொத்தமுள்ள ஐந்து காப்புரிமைகளில், காப்புரிமை எண்கள்: 6,816,901 மற்றும் 6,410,059 ஆகிய இரண்டும் முக்கியமானவை.

முதல் காப்பீடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்களுக்கானது. இரண்டாவது, எம்.எஃப்.சி-7 என்ற உருளைத்திசு கட்டுப்பாட்டுக்கானது. உருளைத்திசு கட்டுப்பாடில்லாமல் போனால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. அந்தத் திசுக்களை வளரவிடாமல் செய்யும் `டாக்ஸல்’ என்ற பொருள் மாட்டுச் சிறுநீரில் இருக்கிறது. உருளைத்திசுவுக்கு (செல்லையன் எம்.சி.எஃப்-7) எதிராக டாக்ஸல் செயல்படும். இந்தக் காப்புரிமைகளோடு மாட்டுச் சிறுநீரிலுள்ள சத்துகள், வளர்ச்சி ஊக்கிகள், நொதிகள் ஆகியவற்றுக்கான காப்புரிமைகளை லக்னோ நகரிலுள்ள `சிமாப்’ என்ற மத்திய நிறுவனம் மற்றும் ‘நீரி’ எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையோடு `கோ விக்யான் அனுசந்த கேந்த்ரா’ என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவிடம் பெற்றிருக்கிறது.

மாட்டுச் சிறுநீரை, தண்ணீர் கலக்காமல் நேரடியாகப் பயிர்கள்மீது தெளித்தால் பயிர்கள் கருகிவிடும். பயிர்களில் பச்சையம் அதிகமாக இருந்தால்தான் பயிர் செழிப்பாக வளரும். மாட்டுச் சிறுநீர் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் பயிரில் பச்சையத்தை உருவாக்குகின்றன. எனவே, சிறுநீரை நேரடியாகப் பயன்படுத்தாமல் 10 மடங்கு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.

எறும்பு, கறையான் கட்டாயம் இருக்க வேண்டும்!

யற்கை விவசாயம் செய்யும் விவசாயி, ஐந்து ஆண்டுகள் கழித்து மண்ணைச் சோதனை செய்து பார்க்கும்போது அந்த மண் எப்படி இருக்க வேண்டும்... அங்கு கார்பன் 0.8 முதல் 1.5 சதவிகிதமும், ஒரு கிராம் மண்ணில் ஐந்து லட்சம் கோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், ஒரு கன அடி மண்ணில் மூன்று முதல் ஐந்து மண்புழுக்களும் இருக்க வேண்டும். போதுமான அளவுக்கு நிலத்தில் ஆங்காங்கே எறும்புப் புற்றுக்களும், தரைதளத்திலிருந்து இரண்டு அடி ஆழத்தில் போதுமான அளவுக்குக் கறையான்களும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், அந்த நிலம் முழுமையாக இயற்கை விவசாயம் செய்யும் நிலமாக மாறிவிட்டதாக அர்த்தம்.