Published:Updated:

நிதியமைச்சரின் அறிவிப்புகள்... ஊக்குவிப்புத் திட்டமா? ஏமாற்றுத் திட்டமா?

அறிவிப்பு

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப் பட்ட ஊரடங் கால், விவசாயிகள் பல்வேறு வகைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

அவர் களுக்கு உதவும் விதமாகவும், ஊக்கப்படுத்துவதற்காகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பலவிதமான அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்புகளில், ‘கிஷான் கிரெடிட் கார்டு மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். நபார்டு மூலம் கூட்டுறவு வங்கிகளுக்குக் கூடுதலாக 30ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் மூன்று கோடி விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்கப்படும். விவசாயத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கப்படும். கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பு, குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்டவற்றுக்கு இந்த நிதிச் செலவிடப்படும்.

ஜெகதீசன், வையாபுரி, இளங்கீரன்
ஜெகதீசன், வையாபுரி, இளங்கீரன்

தமிழ்நாட்டு மரவள்ளிக்கிழங்கு, ஆந்திரா மிளகாய், தெலங்கானா மஞ்சள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விளையக்கூடிய உற்பத்திப் பொருள்கள் சார்ந்த தொழில் மையங்கள் அமைக்க, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ உள்ளிட்டப் பலவிதமான ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு எந்த அளவுக்குப் பலன் அளிக்கும், ஊரடங்கால் முடங்கிப்போன வாழ்வாதாரங்களை மீட்க இவை கைகொடுக்குமா? கேள்விகளை விவசாயப் பிரதிநிதிகளிடம் முன்வைத்தோம்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ஜெகதீசன், ‘‘புதிய பயிர்க்கடன் வழங்கப்படும், இதன் மூலம் மூணு கோடி விவசாயிகள் பயன் அடைவாங்கனு மத்திய அரசோட அறிவிப்புல சொல்லப்பட்டிருக்கு. இது ஓர் கண் துடைப்பு. விவசாயிகள் ஏற்கெனவே வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில இருக்காங்க. பழைய கடன் நிலுவையில் இருக்கும்போது, கூட்டுறவு வங்கிகளாக இருந்தாலும், வணிக வங்கிகளாக இருந்தாலும் புதிய கடன் கொடுக்க மாட்டாங்க. ஏற்கெனவே உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தால்தான், புதிய பயிர்க்கடன் கிடைக்கும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்தால், அவை ஏற்கெனவே வாங்கிய கடன் நிலுவையில் இருந்தாலும் புதிய கடன் வழங்கப்படுவது வழக்கமாக இருக்கு. கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிய கடன்களையெல்லாம் தள்ளுபடி செய்யறாங்க. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு மட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகள், கட்டுபாடுகள். தமிழ்நாட்டோட பிரதான பயிர்களான நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், மலர்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்யும் விவசாயிகள்தான் இப்ப அதிகமாக பாதிக்கப்பட்டுருக்காங்க. இவங்களுக்குப் பயன்தரும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படலை. ஊரடங்கால் தமிழ்நாட்டு விவசாயிகள் முடங்கிக் கிடக்குற நேரத்தைப் பயன்படுத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையில் இணைக்க, மத்திய அரசு சதி செய்யுது. தமிழக விவசாயிகள் பலர் உயிர்த்தியாகம் செஞ்சு, பெற்றுக் கொடுத்த இலவச மின்சாரத்தைப் பறிக்கவும் மத்திய அரசு தீவிரம் காட்டுது. இதற்காகத்தான் மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள மின்சாரத்தை, புதிய திருத்தச் சட்டத்தின் மூலம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போறாங்க. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளால விவசாயிகள் மன உளைச்சலில் இருக்குற நேரத்துல இதெல்லாம் மேலும் வேதனை அளிக்கக் கூடியது. மத்திய அரசு விவசாயிகளுக்கு நன்மை செய்யும்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்க முடியாது” என்றார்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி பேசும்போது, “மத்திய அரசு விவசாயிகளுக்கு இவ்வளவு கொடுத்தேன்னு சொல்றது பேப்பர்ல மட்டும்தான் இருக்குது. விவசாயிகள் கைகளுக்கு ஏதும் வந்து சேர மாட்டேங்குது.

இவங்க அறிவிச்சிருக்குற திட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது. சாதாரண விவசாயிக்கு என்ன தேவைங்குறதை எந்த அரசு வந்தாலும் கேட்க மாட்டேங்குது. ‘விவசாயிகளுக்கு விளைபொருளுக்குரிய விலையைக் கொடுப்போம், விவசாயிகள் தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனை செய்யலாம்’னு சொல்லியிருக்காங்க. கார்ப்பரேட் நிறுவனம் விவசாயத்துக்கு வந்தா அவங்க இஷ்டத்துக்கு விலையை வெச்சுக்கலாம்னு அரசே சொல்லுதோனு சந்தேகம் வருது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு இப்போ அறிவிச்சிருக்குறதுல ஏதாவது ஒரு திட்டம் விவசாயிகளுக்குப் பயன் கொடுத்தாலே ஆச்சர்யம்தான். பல வருஷமா நான் பயிர்வாரி முறையைச் சொல்லிக்கிட்டே இருக்கேன். அதுதான் நிலத்தடிநீர் வளம் அதிகமா பாதிக்கப்பட்டதுக்குக் காரணம். இதை முறைப்படுத்தினாலே விவசாயம் தன்னாலே செழிக்கும். கொரோனோ காலத்துல காய்கறிகள், மலர்கள் பயிர் செஞ்ச விவசாயிகள் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்காங்க. இந்த நேரத்தில்கூட விவசாயிகளுக்குக் கொடுத்து உதவணுங்கற மனப்பான்மை மத்திய அரசுக்கு இல்லை. விவசாயிகளுக்கு எந்த உதவியையும் மத்திய அரசும் செய்யாது, மாநில அரசுகளும் செய்யாது” என்றார், ஆதங்கத்துடன்.

காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், “விவசாயிகளுக்கான ஊக்குவிப்புத் திட்டங்கள்னு மத்திய அரசு சொன்னாலும்கூட, உண்மையில் இதெல்லாம் தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகள்தான். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த எந்த ஒரு தனிப்பட்ட விவசாயியும் பலன் அடையக்கூடிய வகையில் எந்ந ஒரு சலுகையும் இதுல இல்லை. ‘வேளாண் பொருள்களின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாயில் நிதியம் உருவாக்கப்படும். கங்கை நதிக்கரையில் மூலிகைச் செடிகளை வளர்க்க தேசிய மருத்துவத் தாவர வாரியத்துக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.’ இப்படி இன்னும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கு. இதெல்லாம் விவசாயிகளுக்கான திட்டங்களா? பெரிய அளவிலான பதனீட்டு நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தச் சலுகைகள் எல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கு. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களையும் சேர்த்து, இப்போ புதுசா கவர்ச்சிகரமாக அறிவிச்சிருக்காங்க. இதெல்லாம் கண்துடைப்பு, ஏமாற்றுவேலை” எனப் பொங்கித் தீர்த்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேளாண்துறை சார்ந்த நிதியமைச்சரின் அறிவிப்புகள்

  • விவசாய கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு. இதனால் குளிர்பதனக் கிடங்குகள், கூட்டுறவு வங்கிகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் பலனடையும்.

  • சிறிய உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. ரூ.10 ஆயிரம் கோடி நிதி மூலம் 2 லட்சம் சிறு நிறுவனங்கள் பயனடையும்.

  • கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக ரூ.13,343 கோடி ஒதுக்கீடு. 53 கோடி கால்நடைகளுக்கு 100% தடுப்பூசியை உறுதி செய்ய நடவடிக்கை.

  • தேனீ வளர்ப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. தேன்கூட்டு வளர்ப்பிற்கான அரசின் உதவிகள் மூலம் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்.

  • கங்கை கரையில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.

  • ஆபரேஷன் கிரீன் திட்டத்தில் தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள், பழங்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் வேளாண் பொருள் விற்பனை செய்யத் திட்டம் வகுக்கப்படும். தானியம், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்து, பருப்பு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

  • மாநிலங்களுக்கு இடையே விளைபொருள்களின் தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைபயிரை மையமாகக் கொண்டு உணவு நிறுவனப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

  • பால்வள மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு