Published:Updated:

மாவுப்பூச்சிக்கு புளிச்ச மோர், இரும்புச் சத்துக்கு முருங்கை இலை... மாடித்தோட்ட அனுபவங்கள்! - 16

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவசாயி உருவாக வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 16

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் முனைவர் ஆனந்தலஷ்மி. வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் (IFGTB) விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். லாக்டௌன் காலத்துல வீட்டுத்தோட்டத்தை ஆரம்பிச்சவங்க, இன்னிக்கு வீட்டுத்தோட்ட விவசாயியாகிட்டாங்க. அவங்களோட வீட்டுத்தோட்ட அனுபவங்களை இந்தப் பகுதியில பகிர்ந்துக்கப் போறாங்க...

``எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். கணவர் பிசினஸ்மேன். பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. `லாக் டௌன்' வந்தது. பரபரப்பு குறைஞ்சு வீட்டுலேயே இருக்க வேண்டிய கட்டாயம். அந்த நேரத்துல காய்கறி கிடைக்குறதுல சிக்கல் இருந்துச்சு. அப்பதான் வீட்டுத்தோட்டம், அமைச்சா என்னனு தோணுச்சு. என்னோட பொண்ணு ஹார்டிக்கல்சர் படிக்குறாங்க. அவங்களுக்கும் ஒரு பிராக்டிக்கலா இருக்கும்னு நினைச்சு வீட்டுத்தோட்டம் அமைக்க ஆரம்பிச்சோம். ஜுலை 15-ம் தேதி ஆரம்பிச்சோம். இந்த 6 மாசத்துல வீட்டுத்தோட்டத்துல பல அனுபவங்கள் கிடைச்சிருக்கு.

முனைவர் ஆனந்தலட்சுமி
முனைவர் ஆனந்தலட்சுமி

வீட்டுத்தோட்டத்துல அனுபவம் இல்லாததால ஆரம்பத்துல பல தவறுகள் பண்ணுனோம். பிறகு, ஒவ்வொண்ணா சரி செய்து இப்ப ஓரளவுக்கு முழுமையான வீட்டுத்தோட்ட விவசாயியா மாறியிருக்கோம். குறிப்பா, வீட்டுத் தோட்டத்துல நாங்க பண்ண பெரிய தவறு, பயிர்களுக்கு அதிகமா தண்ணி கொடுத்ததுதான். ஒரு கட்டத்தில அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுக்கிறது தப்புன்னு தெரிஞ்சுகிட்டு அதை, சரி பண்ணிட்டோம். எனக்கு மரம் வளர்ப்பு தொடர்பான விஷயங்கள் தெரியும். காய்கறிப் பயிர்கள்ல அவ்வளவு அனுபவம் இல்லை. ஆனால், என் பொண்ணு ஹார்ட்டிகல்ச்சர் படிக்கிறதுனால அவங்களே ஆர்வமா பல வேலைகளைப் பார்த்துகிட்டாங்க. இந்த வீட்டுத்தோட்டத்தை பிராக்டிகல் கிளாஸ் மாதிரி எடுத்துக்கிட்டாங்க.

தோட்டம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி எங்க வீட்ல கொஞ்சம் மண் தொட்டியில் அழகுச் செடிகள் இருந்துச்சு. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, புதுசா ஆரம்பிச்சோம். மண் தொட்டிகள், குரோபேக் வாங்குனோம். மண், காயர் பித், தொழுவுரம் எல்லாம் கலந்து தொட்டி, பைகள்ல போட்டு செடிகளை நடவு செஞ்சோம். காய்கறிப் பயிர்களை நாற்று உருவாக்கிதான் நடவு செஞ்சோம்.

கொத்தமல்லி, கருவேப்பிலைதான் முதல்ல நடவு செஞ்சோம். யூடியூப் பார்த்து பல விஷயங்கள் கத்துகிட்டோம். என்னோட ரெண்டு பொண்ணுகளும் கணவரும் ரொம்ப ஆர்வமா ஒத்துழைச்சாங்க. இது எங்களுக்கு நல்ல ஒரு உடற்பயிற்சியாகவும் இருந்தது. மனசுக்கும் சந்தோஷமா இருந்துச்சு. ஆத்து மணல் கிடைக்குறதில சிரமம் இருந்துச்சு. அதுக்குப் பதிலா தேங்காய் மஞ்சு பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுகிட்டு அதைப் பயன்படுத்துனோம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கு. ஆரம்பத்துல அது எங்களுக்குத் தெரியல.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்
`மாடித்தோட்டத்துக்கு இந்த ரீசார்ஜ் அவசியம்!' - வழிகாட்டும் நிபுணர் - வீட்டுக்குள் விவசாயம் - 15

தென்னை நார் கழிவு கிடைக்கும்போது அதை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதைத் தண்ணியில ஊறவெச்சு அதுல இருக்க சில வேதிப்பொருள்கள் வடிஞ்ச பிறகுதான் பயன்படுத்தணும். அப்படியே பயன்படுத்துனா ஆரம்பத்துல செடிகளோட வளர்ச்சி நல்லா இருக்கும். அதுக்குப் பிறகு, வளர்ச்சி குன்றி காய்க்காம போயிடுது. எனவே, இதுல கவனமா இருக்கணும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடித்தோட்டத்துல செடிகளை வெச்சுட்டா போதும். தன்னால காய்ச்சிடும்னு பல பேர் நினைக்குறாங்க. ஆனால், மகரந்தச் சேர்க்கைக்கான வாய்ப்பை நாம ஏற்படுத்திக் கொடுக்கணும். அதுக்கு உதவி செய்றது பூக்கள்தான். குறிப்பா, செம்பருத்தி செடிகளை ஆங்காங்கே வெச்சாபோதும். அது மகரந்தச் சேர்க்கைக்கு ரொம்ப உதவியா இருக்கு. அதே போல, செண்டுமல்லி பூ மகரந்தச் சேர்க்கைக்கும் உதவி செய்யும், பூச்சி கட்டுப்பாட்டுலயும் உதவி செய்யும். எங்க வீட்டுல செம்பருத்தி, செண்டுமல்லி, ஜாதிமல்லி, பாரிஜாதம்னு பலவிதமான பூக்களை வெச்சிருக்கோம். இதுனால மாடிக்கு வந்தாலே ஒரு சுகந்தமான வாசனை இருக்கும். மனசு லேசாகிடும். சில செடிகளுக்குச் செயற்கை முறையில மகரந்தச்சேர்க்கை பண்ணணும். அதையும் நாங்க செய்யுறோம்.

செம்பருத்தி
செம்பருத்தி

இப்ப எங்க வீட்டுல தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை எப்பவும் நிரந்தரமா இருக்கு. அதே போல கீரைகள்ல சிறுகீரை, பாலக்கீரை, கொத்தமல்லி, புதினா இருக்கு. முருங்கை மரம் வெச்சிருக்கோம். முருங்கையை கீரைக்குத்தான் பயன்படுத்துறோம். அதே போல வீட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்துப் பூச்சி, நோய் தாக்குதலைச் சமாளிக்கலாம். நாங்க அதிகமாகப் பயன்படுத்துறது வேப்பெண்ணையைத்தான். இந்த ஆறு மாசத்துல மூணு லிட்டர் வேப்பெண்ணெய் வாங்கி இருக்கோம். வேப்பெண்ணெயில் கொஞ்சம் காதிசோப் கலந்து தெளிப்போம். அதுவே பெரும்பாலான பூச்சி, நோய் சிக்கலைத் தீர்த்து வெச்சிடுது.

அதே போல நல்லா புளிச்ச மோரை பயிர்கள்ல தெளிக்கும்போதும் நல்ல ரிசல்ட் கிடைக்குது. செடிகள் வளர்ச்சி நல்லா இருக்கு. அதோட மாவுப்பூச்சி கன்ட்ரோல் ஆகுது. முதல்ல மாவுப்பூச்சி தாக்குதல் இருந்தா, தண்ணியை ஊத்திதான் வாஷ் பண்ணிட்டு இருந்தோம். புளிச்ச மோர் தெளிச்ச பிறகு, மாவுப்பூச்சி ரொம்ப குறைஞ்சிருக்கு.

எங்க வீட்டைப் பொறுத்தவரைக்கும் இந்த மாவுப்பூச்சி முதல்ல தக்காளியிலதான் ஆரம்பிக்குது. பிறகு, மற்ற பயிர்களுக்கும் பரவுது. அதனால இந்தத் தடவை தக்காளியை ரொம்ப குறைச்சிட்டோம். அதேபோல இலை சுருட்டு பிரச்னைக்கும் மோர் நல்ல தீர்வா இருக்கு. எங்க மாடித்தோட்டத்தில் வெள்ளரி போட்டோம். அதுல நிறைய நோய்கள் வந்துச்சு. புளித்த மோர், வேப்பெண்ணைக் கொடுத்தும் கன்ட்ரோல் பண்ண முடியல. அதனால வெள்ளரியை எடுத்திட்டோம். அது மாடித் தோட்டத்துக்கு ஒத்துவராத பயிர். இது எங்க அனுபவம்.

பப்பாளி
பப்பாளி
மாடித்தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி... ரொம்ப எளிதாகத் தொடங்கலாம்! - வீட்டுக்குள் விவசாயம் - 14

தோட்டத்துல, சிலந்தி இருந்தா நல்லது. அது, பயிர்களுக்குத் தீமை செய்யுற பூச்சிகளைக் காலி பண்ணிடும். இதை நாங்க எங்க மாடித்தோட்டத்துல கண்கூடாப் பார்க்கிறோம். ஒரு தோட்டத்தில் இதெல்லாம் இருந்தாதான் அந்தத் தோட்டத்தில் தீமை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கை குறையும்னு சொல்றாங்க.

சமையலறை கழிவுகளை உரமாக்கி பலர் பயன்படுத்துறாங்க. நாங்களும் அதை முயற்சி பண்ணுனோம். ஆனா, அது மட்க அதிக நாள்கள் ஆகுது. அதோட அதுல இருந்து ஒருவகையான புழு உற்பத்தியாகி மாடி முழுக்க ஊர்ந்துட்டு இருக்கு. அது தொந்தரவா இருந்துச்சு. அதுனால நாங்க வேறொரு முறையில சமையலறை கழிவைப் பயன்படுத்துறோம். சமைக்காத கழிவுகளை ஒரு டப்பாவுல போட்டு அது மூழ்குற அளவுக்குத் தண்ணி ஊத்தி வெச்சிடுவோம். மூணுநாள் கழிச்சு அந்தத் தண்ணியை வடிகட்டிச் செடிகளுக்குப் பயன்படுத்துவோம். அந்தத் தண்ணி ஒரு மக்கு எடுத்தா, 10 மக்கு தண்ணி கலந்து பயிர்களுக்குத் தெளிப்போம். அதுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குது.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

அதுபோல, மீன் கழிவு, சம அளவு வெல்லம், கனிஞ்ச வாழைப் பழத்தைப் போட்டு டப்பாவுல டைட்டா மூடி வெச்சிட்டாப் போதும். 21 நாள் கழிச்சு எடுத்துப் பார்த்தா, பஞ்சாமிர்தம் மாதிரி இருக்கும். அதை 10 மடங்கு தண்ணி சேர்த்து செடிகளுக்குப் பயன்படுத்துறோம்.

இதைச் செய்றதால, பூக்கள் உதிர்றது குறைஞ்சுபோச்சு. எல்லாப் பூக்களுமே காயாகி மகசூல் கொடுக்குது. இதை நாங்க வீட்டிலேயே தயார் செய்றோம். அப்புறம் இன்னொரு விஷயம். ரொம்ப நாள் ஆன பைகள்ல மண் கெட்டியாகிடும். அதை அப்படியே விடக் கூடாது. உரம் வைக்கும்போது மண்ணைக் கிளறிவிட்டால் காற்றோட்டம் ஏற்பட்டு பயிர்கள் சிறப்பாக வளரும்.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

இரும்புச் சத்து குறைபாடுள்ள பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறக்கோடுகளோடு இருக்கும். அதற்கு முருங்கை இலை, வாழைப்பழத்தோல் இரண்டையும் பச்சையாக மிக்ஸியில் அடித்துத் தெளித்தால் இந்தக் குறைபாடு சரியாகிறது. வாழைப்பழத்தோலில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருள்களைப் பயன்படுத்தி பூச்சி, நோய் கன்ட்ரோல் பண்ணி காய்கறிகளை உற்பத்தி செய்தால் வீட்டுத் தோட்டம் உண்மையிலேயே நம்ம உடம்புக்கும் பொருளாதாரத்துக்கும் ஆரோக்கியமானதுதான்'' என்றார் பெருமையாக.

இன்னும் பல விஷயங்கள் இருக்கு… அதைப் பற்றி அடுத்தடுத்த பகுதிகள்ல பார்க்கலாம்.

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு