Published:Updated:

ஆடு, மாடு, கோழி, புறா, வாத்து, குதிரை, காய்கறிகள், மா, வாழை, தென்னை; அரை ஏக்கரில் ஓர் அடடே பண்ணை!

பண்ணையில் ஜனார்த்தனன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் ஜனார்த்தனன்

பண்ணை

ஆடு, மாடு, கோழி, புறா, வாத்து, குதிரை, காய்கறிகள், மா, வாழை, தென்னை; அரை ஏக்கரில் ஓர் அடடே பண்ணை!

பண்ணை

Published:Updated:
பண்ணையில் ஜனார்த்தனன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணையில் ஜனார்த்தனன்

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் கிராமத்தில் அரை ஏக்கரில் அமைந்திருக்கும் இந்தச் சிறிய பண்ணை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தப் பண்ணை உரிமையாளரின் ஆர்வத்தாலும், பரந்து விரிந்த தேடலாலும், இதுவரை நாம் பார்த்திராத விதவிதமான ஆடுகள், பல வகையான கோழிகள் இங்கு வளர்க்கப் படுகின்றன. கோழிகளோடு, எருமை, குதிரை, புறா, மீன்கள், காய்கறிகள், மா, தென்னை, பலா, வாழை, நெல்லி, சப்போட்டா எனப் பல வகையான பயிர்களும், கால்நடைகளுமாகக் களைகட்டுகிறது, இப்பண்ணை.

பொறியியல் பட்டதாரி ஜனார்த்தனனுக்குச் சொந்தமான இந்தப் பண்ணைக்கு ஒரு மாலை வேளையில் சென்றோம். தன்னுடைய செல்லப் பிராணிகளோடு அளவளாவிக் கொண்டிருந்த ஜனார்த்தனன், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.

ஆட்டுடன் ஜனார்த்தனன்
ஆட்டுடன் ஜனார்த்தனன்


“என்னோட பூர்வீகம் திருச்சி. சின்ன வயசுல இருந்தே, பறவைகள், கால்நடைகள் மேல எனக்குப் பிரியம் அதிகம். நகரப்பகுதியில வசிச்சதால, அப்ப என்னால எதுவுமே வீட்டுல வளர்க்க முடியலை. படிச்சு முடிச்சு வேலைக்குப் போயி, கல்யாணம் ஆன பிறகு, எங்க வீட்டுல லவ் பேர்ட்ஸ், கிளிகள்னு நிறைய வளர்க்க ஆரம்பிச்சோம். நான் மெக்கானிக்கல் இன்ஜினீயர். என் வேலை அனுபவத்தைப் பயன்படுத்தி, பறவைகளை வளர்க்கிறதுக்கான கூண்டுகளைப் பலருக்கும் வடிவமைச்சுக் கொடுத்தேன். அது மூலமா தான் இந்தியா முழுக்க உள்ள பறவைகள், செல்லப்பிராணிகள் ஆர்வலர்களோட விரிவான அறிமுகம் கிடைச்சது. என்னோட தேடல்கள் அதிகமாச்சு. இது சம்பந்தமான தகவல்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன்.

நாய்களுடன்
நாய்களுடன்

எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை ஆர்வமுள்ளவங்களுக்குப் பகிர்ந்துக்கிட்ட தோடு, பறவைகள், செல்லப்பிராணிகள் விற்பனை செய்றவங்களுக்கும், அதை வாங்கி வளர்க்க விரும்புறவங்களுக்கும் இடையே ஒரு தூதுவர் போல இருந்தேன். அதுமாதிரி யான சமயத்துலதான், ஆனந்த விகடன் குழுமத் தலைவரா இருந்த எஸ்.பாலசுப்ரமணியன் சாரோட அறிமுகம் எனக்குக் கிடைச்சது.

அவருக்கு பால்ம் காக்கட்டூ (Palm Cockatoo) வகைக் கிளியையும், சிராஜி ரகத்துல சில புறாக்களையும் வாங்கிக் கொடுத்தேன். இந்தத் தேடல்ல நாட்டம் அதிகமானதால, 2015-ல் இன்ஜினீயர் வேலையை விட்டுட்டு, முழுநேரமா பறவைகள் சார்ந்த வேலையை மட்டுமே செஞ்சேன்” என்பவர், தன் நீண்டகால ஆசைப்படி, 2018-ல் செங்கல்பட்டு மாவட்டம், பூந்தண்டலத்திலுள்ள இந்த நிலத்தை வாங்கி, விவசாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.

எருமையுடன்
எருமையுடன்

“இந்த அரை ஏக்கர் நிலத்தை நான் வாங்கினப்ப, பொட்டல் காடா கிடந்துச்சு. உழவு ஓட்டினப்போ நிலத்துல பாறைகள்தான் அதிகமா இருந்துச்சு. ‘சத்துகளே இல்லாத இந்த நிலத்துல விவசாயம் செய்றது சரிவாரது’னு சிலர் சொன்னாங்க. படிப் படியா வளப்படுத்திடலாம்ங்கிற நம்பிக்கை யில நிலத்துல நிறைய மாட்டு எருவை கொட்டி, 20 சென்ட் நிலத்துல வேர்க்கடலை யைப் பயிர் பண்ணினேன். அதுக்குப் பிறகு காய்கறிகள் சாகுபடியில இறங்கினேன். மா, பலா, வாழை, தென்னை, நெல்லி, சப்போட்டா எல்லாம் பயிர் பண்ணினேன்.

விவசாயத்துல மத்தவங்க சொல்ற ஆலோசனைகளை மட்டுமே கேட்டு செஞ்சுப் பார்க்குறதோடு, நாமலே புதுப்புது சோதனை முயற்சிகள்ல இறங்கி, நேரடி அனுபவம் கிடைச்சாதான், நமக்கேத்த நல்லது, கெட்டது களைத் தெரிஞ்சிக்க முடியும்னு என் மனசுக்கு தோணுச்சு.

காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி

மாட்டுச் சாணத்துக்கு மாற்றா, பிற கால்நடைகளோட கழிவுகள்ல இருந்து இயற்கை எரு தயாரிச்சுப் பயன்படுத்தினா, எந்த மாதிரி பலன் கிடைக்கும்னு சோதிச்சுப் பார்க்க நினைச்சேன். மாட்டுச் சாணத்தைச் சேகரிச்சு, ஒரு குழியில மக்க வெச்சேன். குதிரை, கோழி, ஆடு, வாத்து, புறா... இதோட கழிவுகளை வேறொரு குழியில போட்டு, மக்க வெச்சேன். அந்த ரெண்டு குழியில உள்ள எருவையும் தனித்தனியா, இங்கவுள்ள செடி களுக்குப் போட்டுப் பார்த்தேன். மாட்டு எரு பயன்படுத்தின பயிர்களைவிடவும், பிற கால்நடைகளோட எருவைப் பயன்படுத்தின பயிர்களோட வளர்ச்சி ரொம்ப சிறப்பா இருந்துச்சு. அந்த இடத்துல மண்புழுக்களும் அதிகமா உற்பத்தியாச்சு’’ என்று சொன்னவர், கோழி, ஆடு, குதிரை, புறா ஆகியவற்றை வளர்ப்பது குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

கோழியுடன்
கோழியுடன்

விதவிதமான கோழிகள்

“மொத்தமா 100 கோழிகள் இருக்கு. அதுல, வியட்னாம் ஜெயின்ட், ஒயிட் லெகான், ரோட் ஐஸ்லாண்டு ரெட் (Rhode Island Red), பிளாக் மைனார்கா, ஆஸ்டர் லோப்னு சில வகைக் கோழிகளை முட்டைத் தேவைக்கு வளர்க்கிறேன். தவிர, பிரம்மா, அமெரிக்கன் கொச்சின் பாண்டம், அமெரிக்கன் பிரிஸ்லெர் பாண்டம் உட்பட அழகு ரகக் கோழிகளும் வளர்க்கிறேன்.

பல வகையான ஆடுகள்

நைஜீரியன் டிவார்ஃப் (Nigerian dwarf) மற்றும் சைனிஸ் ஜிங்க் ரகத்துல மொத்தமா 9 ஆடுகள் இருக்கு. மொசுமொசுன்னு நாய்க்குட்டி மாதிரியே இருக்கும் இந்த ஆடுகள், அதிகபட்சமா ஒண்ணேமுக்கால் அடி உயரம் மட்டுமே வளரும்.

புறாக்கள்

இங்க 300 புறாக்கள் வளர்த்துகிட்டு இருக்கோம். கர்ண புறா, பந்தயப் புறா, டைமிங் புறா, ஆஸ்திரேலியன், கிங், ஹோமர், அங்கேரியன் ஜெயின்ட், மயில் தோகை புறா, சிராஜ்னு பலவிதமான அலங்காரப் புறக்களை வளர்க்கிறேன்.

தர்பூசணி
தர்பூசணி

குதிரைகள்

பராமரிப்புக்கு ரொம்ப எளிதா இருக்கக் கூடிய போனி ரக (குட்டை ரகம்) குதிரைகள் அஞ்சு இருக்கு. பாக்ஸர் வகையைச் சேர்ந்த இரண்டு நாய்கள் இருக்கு. இது காவலுக்கு ரொம்பவே உகந்த ரகம். கிர், காங்கிரேஜ் ரகங்களைச் சேர்ந்த ரெண்டு காளைகள் வளர்த்தோம். சமீபத்துல அந்த ரெண்டு காளை மாடுகளையும் வித்துட்டு, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முர்ரா ரகத்துல ஒரு எருமை வாங்கினேன். பத்துக்கும் மேற்பட்ட நாட்டு வாத்துகள் இருக்கு. கொய் ஃபிஷ்’ங், கோல்டு ஃபிஷ் ரகங்களைச் சேர்ந்த அலங்கார மீன்களும் வளர்க்குறோம். சீக்கிரமே ஒட்டக மும் வாங்கப்போறேன்.

இந்தப் பண்ணையில வளர்ற பெரும் பாலான கால்நடைகள் வெளிநாட்டு ரகமா இருந்தாலும், நம்மூர் சீதோஷ்ண நிலைக்குப் பழக்கமாயிடுச்சு. பண்ணையை அடிக்கடி சுத்தம் செய்றதோடு, கால்நடைகளுக்கு முறையா தடுப்பூசி போட்டு கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிறதால, பெருசா சொல்லிக்குற அளவுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டதில்ல” எனச் சொல்லும் ஜனார்த் தனன், இப்பண்ணையில் உள்ள பயிர்கள் குறித்துப் பேசினார்.

“கால்நடைக் கழிவுகளை மக்க வச்சு உரமா கொடுத்துக்கிட்டே இருந்ததுனால, மண்ணோட வளம் நல்லாவே கூடியிருக்கு. அதனாலதான், எல்லாவிதமான பயிர்களுமே வெற்றிகரமா விளைஞ்சு பலன் கொடுத்துக் கிட்டு இருக்கு. சப்போட்டா, வாழை, மா, பலா, நெல்லி, தர்பூசணி, வெள்ளரி, கொத்த வரங்காய், பீர்க்கன், சுரைக்காய், முந்திரி, மூங்கில், நாவல், சாத்துக்குடி, ஆரஞ்சு, சீதா, பலா, பல தரப்பட்ட கீரை வகைகள், கத்திரி, வெண்டை, பாகல், காராமணி, புடலைனு நிறைய பயிர்கள் சாகுபடி செய்றேன்.

வெயில் காலம், மழைக்காலம்... இதுக்கு ஏத்தமாதிரி சுழற்சி முறையில பயிர்கள் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். இப்போ தர்பூசணியும் வெள்ளரியும் பயிர் பண்ணி யிருந்தேன். செழிப்பா விளைஞ்சு மகசூல் கொடுத்துச்சு. கால்நடைகளுக்குத் தேவை யான பசுந்தீவனத்தையும் இங்கயே சாகுபடி செஞ்சிக்குறோம்.

மாங்காய்
மாங்காய்

இடுபொருள்கள்

இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்குற என் சித்தப்பாவோட தோட்டம் இந்தத் தோட்டத்துக்குப் பக்கத்துலதான் இருக்கு. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் உட்பட என் பண்ணைக்குத் தேவையான இயற்கை இடுபொருள்களை அவர்கிட்டேயிருந்து வாங்கிப் பயன்படுத் துறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பண்ணையிலயே ஒரு சின்னதா வீடு கட்டினேன். அதுல, தரைதளத்துல தீவனம் சேமிச்சு வைக்கிறதோடு, இரவு நேரத்துல கால்நடைகளை அடைக்கவும் பயன் படுத்துறேன்.

இந்தத் தோட்டத்துலயே பயோ கேஸ், சோலார் மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுக்கிட்டு இருக்கேன். என் வீடு தாம்பரத்துல இருக்கு. அங்கயும் பறவைகள், கால்நடைகள் வளர்க்குறேன். ரெண்டு இடத்துலயும் மாறி மாறி இருப்பேன். தினமும் என்னோட நேரம் முழுக்க இந்த ஜீவன்களோடதான் இருந்துகிட்டு இருக்கு. இதைவிட எனக்கு வேற என்ன சந்தோஷம் வேணும்’’ என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.

தொடர்புக்கு,

ஜனார்த்தனன்,

செல்போன்: 97909 89046.

குதிரையுடன்
குதிரையுடன்

செப்டிங் டேங்க்கைச் சுத்தமாக்கும் குதிரை சாணம்!

குதிரை சாணத்திலிருந்து கழிவுநீரைச் சுத்திகரிக்கும் சோதனை முயற்சியை விவரித்த ஜனார்த்தனன், “குதிரை சாணத்தைச் செப்டிக் டேங்க்ல கலந்தா, டேங்க்ல துர்நாற்றம் குறைஞ்சு, கழிவுநீரும் கூடுமானவரைச் சுத்தமாகிடும்னு கேள்விப்பட்டேன். குதிரை சாணத்தைச் சேகரிச்சு, அதைத் தண்ணீர்ல கரைச்சு, தாம்பரத்துல இருக்கிற என் வீட்டு செப்டிக் டேங்க்ல கலந்துவிட்டேன். வழக்கமா மூணு மாசத்துல நிரம்பக்கூடிய எங்க வீட்டு செப்டிங் டேங்க், ஆறு மாதங்களாகியும் நிரம்பலை. சந்தேகத்துடன் டேங்கைத் திறந்து பார்த்தேன். முக்கால் டேங்க் வரைதான் கழிவுநீர் இருந்துச்சு. வழக்கத்துக்கு மாறா, கழிவுநீர் அதிகம் கலங்கல் இல்லாம, அதன் மேற்புறத்துல கழிவுகள் தங்காம இருந்துச்சு. அந்த டேங்க்ல அதிக அளவுல இருந்த நுண்ணுயிரிகள் மனிதக்கழிவுகளைச் சாப்பிட்டு கழிவுநீரைச் சுத்தம் பண்ணியிருக்குனு தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறமா, என் வீட்டு செப்டிக் டேங்க்ல சில மாதங்களுக்கு ஒருமுறை குதிரை சாணக்கரைசலைக் கலந்துவிடுவேன். இப்போ எட்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் செப்டிங் டேங்கைச் சுத்தம் செய்றேன்” என்கிறார்.

சோதனை செய்ய ஆசை

“மனிதக்கழிவுகளாலும் முன்னாடி விவசாயம் செழிப்பா நடந்துகிட்டு இருந்துச்சு. ஆனா, இப்ப நாகரிகம்ங்கற பேர்ல தவிர்த்துக்கிட்டு இருக்கோம். மனிதக்கழிவுகளை எருவாக்கி, என் நிலத்துல உரமா பயன்படுத்தணும்னு எனக்கு ஆசை. இதை எப்படிச் சாத்தியப்படுத்தலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் என்னோட விருப்பம் நிறைவேறும்னு நம்புறேன்’’ எனத் தெரிவித்தார்.

புறாக்கள் தங்கும் இடம்
புறாக்கள் தங்கும் இடம்

சந்தோஷமான வாழ்க்கை

“என்னோட ஆத்ம திருப்திக்காகத்தான் இதையெல்லாம் செஞ்சிகிட்டு இருக்கேன். வருமானம் பார்க்குறது என்னோட நோக்கமில்லை. ஆனாலும், இந்தப் பண்ணையோட ஒரு சில செலவுகளை ஈடுகட்ட மட்டும் வருமானம் கிடைச்சிக்கிட்டு இருக்கு. காய்கறிகள், பழங்களை எங்களோட வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்திக்கிறோம். கோழிகளையும் புறாக்களையும் விற்பனை செய்வோம். தவிர, நாட்டுக்கோழி முட்டைகளும் விற்பனை செய்றோம். தோட்டம், அமைக்கிறவங்களுக்கும் கால்நடை வளர்க்கிறவங்களுக்கும் ஆலோசனைக் கொடுக்கிறேன். என் மனைவி சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை செய்றாங்க. அவங்க வருமானத்துல தான் எங்களோட குடும்பச் செலவுகளைப் பார்த்துக்குறோம். ‘நல்ல சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு, விவசாயம், ஆடு, மாடுகள் வளர்க்குறதுனு கஷ்டப்படுறதெல்லாம் தேவைதானா?’னு பலரும் கேக்கிறாங்க. ஆனா, அதைப்பத்தியெல்லாம் நான் கண்டுக்குறதே இல்லை. இந்த அரை ஏக்கர் பண்ணையிலதான் என்னோட சந்தோஷமான வாழ்க்கையே அடங்கி இருக்கு’’ என்கிறார் ஜனார்த்தனன்.