Published:Updated:

``நாம் செய்த பிழைகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டாமா?” - நெகிழும் அன்னவாசல் இளைஞர்கள் #MyVikatan

தற்போது முளைத்த நிலையில் பனை
தற்போது முளைத்த நிலையில் பனை

கஜா புயலால்கூட பனை மரத்திடம் நெருங்க முடியவில்லை. அவ்வளவு வல்லமை கொண்ட பனை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு சாம்பலாய்க் கொடுத்துவிட்டோம்.

நிலத்தடி நீரை இன்று நாம் சிறிது சிறிதாய் இழந்து நிற்கிறோம். இப்போதுதான் பனை மரங்களின் அவசியத்தை நாம் உணரத் தொடங்கி இருக்கிறோம். அதற்காகத் தமிழ்நாடு முழுவதும் பனை விதைத் திருவிழா சமூக ஆர்வலர்களாலும் இளைஞர்களாலும் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கான பணியில் 2015-ம் ஆண்டு முதல் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் உள்ள `பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கம்’ எனும் அமைப்பு. இந்த அமைப்பில் புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் எனத் தமிழ்நாட்டின் பல மாவட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எல்லோரும் படித்து வெவ்வேறு பணிகளில் உள்ளனர். இருந்தும் இந்த மண்ணின்மீது கொண்ட அக்கறையால் மரம் வளர்ப்பு, நீர் நிலைகளை சீரமைத்தல், பழங்கால வரலாற்றுத் தலங்களை பாதுகாத்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளில் இந்த அமைப்பின் இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

கஜா புயல் நிவாரணப் பணிகளில்
கஜா புயல் நிவாரணப் பணிகளில்

பனை விதைகளைத் தேடிச் சேகரித்து அவற்றைத் தமிழ்நாட்டின் பல இடங்களில் விதைத்து வருவதுடன் தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் இளைஞர்கள் எனக்கு பரிச்சயமானவர்கள். அவர்களில் ஒருவரான எடிசன் என்னிடம் அவர்களின் பணிகள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

“மரக்கன்றுகள் நடுதல், குளங்களை தூர் வாருதல் போன்ற காரியங்களைச் செய்வதற்காகத்தான் இந்த அமைப்பை 2015-ல் தொடங்கினோம். இந்த அமைப்பில உள்ளவங்க எல்லோரும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. ஆனால், ஒத்த கருத்துடைய நண்பர்கள். நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள். மண்ணையும் நீரையும் காக்க பனை விதை என்று நம்மாழ்வார் நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அதன் அவசியத்தை உணர்ந்துதான் பனை விதைகளைத் தீவிரமாக நடுவதற்கு இந்த அமைப்பில் உள்ள நாங்கள் முடிவு செய்தோம்.

``நாம் செய்த பிழைகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டாமா?” - நெகிழும் அன்னவாசல் இளைஞர்கள் #MyVikatan

கஜா புயலால்கூட பனை மரத்திடம் நெருங்க முடியவில்லை. அவ்வளவு வல்லமை கொண்ட பனை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்குச் சாம்பலாய்க் கொடுத்துவிட்டோம். இனியாவது நாம் செய்த பிழைகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டாமா?

பனையின் பயன்கள் எல்லோருக்கும் தெரியும். வெள்ளைச் சர்க்கரை என்ற சீனியால் பல்வேறு வியாதிகளும் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா சர்க்கரை நோய். இந்த சர்க்கரை நோய்க்கு மருந்து தயார் பண்றதும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். சீனியை வியாபாரம் செய்றதும் பெரிய கம்பெனிகள்தான். நம்மைச் சுரண்டி அந்தப் பெருநிறுவனங்கள் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. அதை விரட்டணும்னா வீட்டுக்கு வீடு கருப்பட்டி தங்கு தடை இல்லாம கிடைக்கணும்.

பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கத்தினர்
பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கத்தினர்

அதுவும் குறைஞ்ச விலையிலே. அதுக்கு பனை உற்பத்தியை அதிகமாக்கணும். பதனீர், நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, பனை வெல்லம், கருப்பட்டி என உடல் நலன் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் பனையிலே இருக்கு. இது இப்போ உள்ள தலைமுறைக்கே தெரியலை. இது எப்படி அடுத்த தலைமுறைக்கு தெரியும். இப்படியே போனால் பனை ஒரு அபூர்வப் பொருளாகவே மாறிடும்.

இதுமட்டுமல்லாம நிலத்தடி நீரை சேமிச்சு வைக்கிறதுலே பனை மரங்கள்தான் முதலிடத்திலே இருக்கு. அந்த அடிப்படையில்தான் பனை விதைகளை எங்கும் விதைப்பது; எல்லோருக்கும் கொடுப்பது என ஐயா நம்மாழ்வார் காட்டிய வழியில் செயல்பட்டுக்கிட்டு இருக்கோம்.

சேகரித்த பனைவிதைகள்
சேகரித்த பனைவிதைகள்

பனை விதைகளை நாங்களே இங்கே உள்ள அன்னவாசல் பெரியகுளம் பகுதி, கார்னாபட்டி, பனையபட்டி இதுமாதிரி பனை மரங்கள் அதிகமா உள்ள இடங்களுக்குப் போய் விதைகளைச் சேகரிச்சு ஒரு இடத்துலே குவிச்சிடுவோம். இந்தத் தகவல் அறிஞ்சு எங்களை தேடி வர்றவங்களுக்கு இலவசமா கொடுக்கிறோம். நாங்களும் எடுத்துட்டுப் போய் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலே விதைச்சிட்டு வர்றோம். எங்க அமைப்பு ஆரம்பிச்சதிலே இருந்து எப்படியும் ஒன்றரை லட்சம் பனை விதைகளை மற்றவர்களுக்குக் கொடுத்தும் நாங்கள் நேரடியாகவும் விதைச்சு இருக்கோம். பனை விதைகள் தேவைப்படுறவங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.

கேரளா பெருவெள்ளம், கஜா புயல், நீலகிரி வெள்ளப் பாதிப்பு இப்படி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களுக்கு நாங்கள் நேரடியாகப் போய் எங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்திருக்கோம்.

திருமண நிகழ்வில் இயக்கத்தினர்
திருமண நிகழ்வில் இயக்கத்தினர்

அப்படித்தான் கடந்த ஆண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயல் சமயத்துலே எங்க அமைப்பு மூலமா எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்தோம். அதுலே ஒண்ணுதான் கஜா புயலால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினத்துலே இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழத்தோட்டம் என்கிற மீனவ கிராமம். அங்கே போய் நாங்க பார்க்கும்போது அவங்களோட நிலைமை ரொம்ப மோசமா இருந்துச்சு. ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்ததாதலே எந்த உதவியும், நிவாரணப் பொருள்களும் அவங்களுக்குப் போய்ச் சேரலை. ஒரு சின்ன நிழற்குடை மாதிரி ஒரு கட்டடத்துலே ஒட்டு மொத்த கிராமமும் ஒதுங்கி இருந்துச்சு.. நூற்றுக்கணக்கான மக்கள். பிள்ளைகள் எல்லாம் பசி. அழுகை. எல்லோரும் இரவு பகலா மழையிலே நனைஞ்சு நடுங்கிக்கிட்டு இருக்காங்க. மாற்றுத் துணிகூட இல்லை. சாப்பாடு இல்லை. பார்க்கவே சகிக்கலை.

இந்தத் தகவலை எங்க நண்பர்கள் மற்ற அமைப்பினருக்குத் தெரியப்படுத்தி நிவாரணப் பொருள்களை உடனடியா அங்கே வரவைச்சுக் கொடுத்தோம். அவங்ககூடவே நாங்களும் மூன்று நாள்கள் தங்கி இருந்தோம். முகம் தெரியாத அந்தக் கீழத்தோட்டம் கிராம மக்களே ஒரு குடும்ப உறுப்பினர்கள் மாதிரி எங்களை பாசத்தால் கொண்டாடுனாங்க.

திருமண அழைப்பிதழில் பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கம்
திருமண அழைப்பிதழில் பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கம்

இப்படி இந்த மண்ணும் மக்களும் மேம்பட எங்களால் முடிந்த செயல்கள் எப்போதும் தொடரும்…” என்று உற்சாகமாய் பேசிய எடிசனிடம் இதற்கான அங்கீகாரம், விருதுகள், பாராட்டுகள்.. இந்த மாதிரி உங்கள் அமைப்புக்கு எதுவும் கிடைத்திருக்கிறதா..?’ எனக் கேட்டேன். அப்போது, அவரிடம் இருந்த திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்துக் காட்டினார். அது கீழத்தோட்டம் கிராமத்தில் 12.09.2019 அன்று நடைபெற்ற திருமண விழா ஒன்றின் அழைப்பிதழ். அந்த அழைப்பிதழில் ‘தங்கள் நல்வரை நாடும்...’ என்ற பகுதியில் திருமணம் நடத்துபவர்களின் உறவினர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது ‘பிரபாகரன் புரட்சி விதைகள் இயக்கம், புதுக்கோட்டை’ !

இதைவிட வேறு என்ன வேண்டும்..! அன்பின் விதை ஆழமாகவே ஊன்றி முளைத்திருக்கிறது..!

- பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு