Published:Updated:

எறும்புகளுக்கு மரியாதை... மண் வளத்தைப் பெருக்கி காட்டை உருவாக்கிய எறும்புகள்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

எறும்புகளுக்கு மரியாதை... மண் வளத்தைப் பெருக்கி காட்டை உருவாக்கிய எறும்புகள்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

லகின் முதல் விவசாயி யார்? என்ற கேள்விக்கு விடை தேடிப் புறப்பட்டால், மலை மலையாகத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. நாம் நினைப்பதுபோல, முதல் விவசாயி மனிதன் அல்ல. ஒரு வேளை மண்புழுவாக இருக்குமா? என்றால் அதுவும்கூட. எறும்புகள்தான் முதல் விவசாயி என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்து வருகிறார்கள்.

“இன்றைக்குச் சுமார் 250 எறும்பினங்கள் அமெரிக்கக் கண்டங்களின் மழைக்காடுகள், பாலைவனங்கள், புல்வெளிகளில் பூஞ்சைத் தோட்டங்களைப் பயிரிடு கின்றன. தட்பவெட்பம் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தரைக்கடியில் உருவாக்கிய மண்ணறைகளில் பூஞ்சைகளை எறும்புகள் பயிரிடுகின்றன. பயிரிடுவது மட்டுமல்லாமல் அவற்றில் களையெடுக்கின்றன; நீர் பாய்ச்சுகின்றன; சில வகைத் தீங்கான பாக்டீரியாவிடமிருந்து பூஞ்சைகளைக் காப்பதற்காகச் சில எறும்பினங்கள் நோயுயிர்முறிகளையோ (Antibiotics) வேதிப்பொருள்களையோ பயன்படுத்துகின்றன” என்கிறார் அமெரிக்காவின் இயற்கை வரலாற்றுக்கான ஸ்மித்ஸோனியன் தேசிய அருங்காட்சியகத்தின் பூச்சியியல் விஞ்ஞானி ஷுல்ட்ஸ்.

எறும்புகள் காடு வளர்த்த கதையைக் கேட்டு, உலகம் முழுக்க விஞ்ஞானிகள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். இந்த அதிசயம் நடந்தது நம் அஸ்ஸாம் மாநிலத்தில்தான்.

ஜாதவ் பயேங்
ஜாதவ் பயேங்

‘ஜாதவ் பயேங்’ இந்தப் பெயரை வாழ்வில் ஒரு முறையாவது கேட்டிருப்போம். ‘தனி மனிதன் வளர்த்த காடு’ என்ற செய்திக்குக் கீழ் சிவப்பு பூ போட்ட துண்டு போட்டுக் கொண்டு, ஒரு மனிதர் நிற்கும் காட்சியை வாட்ஸ் அப் வழியே பார்த்திருப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு விகடன் நம்பிக்கை விருது விழாவுக்கு வந்த அவரை, மேடைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குக் கொடுத்திருந்தார்கள். இந்திரலோகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு, பிரமாண்டமான அளவுக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி ஏற்பாட்டின்படி விருது கொடுப்பவர், மேடையின் பின்பக்கம் இருந்து வர வேண்டும். இதற்காக ஜாதவுடன் மேடைக்குப் பின்புறம் சென்று காத்திருந்தேன். ஏற்கெனவே, அவர் கதை தெரிந்திருந்தாலும் அவரிடமிருந்தே கேட்க வேண்டும் என்பதற்காக அந்தக் காத்திருப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்.

மணல் பரப்பில் மூங்கில் மட்டுமே வளரும். மற்ற மரங்கள் வளர வேண்டும் என்றால், வளமான மண்ணாக மாற்ற வேண்டும் என்பதைக் கண்டு கொண்டேன்.


‘‘1978-ம் ஆண்டு பெய்த பெருமழையும் அதைத் தொடர்ந்து நிலவிய வறட்சியும் தான் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. ஏறத்தாழ 12 நாள்கள் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் `உலகம் அழியப்போகிறது’ என நினைத்தோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சில நாள்களிலேயே மழை நின்றுவிட்டது. அந்த மழைக்குப் பிறகு, எங்கள் ஊரை கடும் வறட்சி தாக்கியது. கால்நடைகள் ஒவ்வொன்றாக மடியத் தொடங்கின. பிறகு, வெப்பம் தாங்காமல் பாம்புகள் செத்து மடிந்தன. வீதியெங்கும் செத்துப்போன பாம்புகள் கிடந்தன. இந்தக் காட்சி மனதை உலுக்கியது. பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில் அடிக்கடி மண் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஊருக்குள் அடிக்கடி வெள்ளம் புகுந்தது. இதற்குக் காரணம், மரங்கள் இல்லாமல் போனதுதான் என்று பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

1980-ம் ஆண்டில் ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் (சுமார் 500 ஏக்கர்) மணல் படுகையில் ‘சமூகக் காடுகள் வளர்ப்பு’ திட்டத்தின்படி வனத்துறையினர், ஊர் மக்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கினார்கள். மரக்கன்று நடும் பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட, நான் மட்டும் மரக்கன்றுகளைப் பராமரித்துக்கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கிவிட்டேன். வேறு யாரும் அந்தப் பக்கம் திரும்பிகூடப் பார்க்கவில்லை.

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மரங்கள் மட்டும் வளர்ந்தன. வேறு வகை மரக் கன்றுகளைக் கொண்டு வந்து நடவு செய்தேன். ஆனால், அவை சரியாக வளரவில்லை. அப்போதுதான் கவனித்துப் பார்த்தேன். மணல் பரப்பில் மூங்கில் மட்டுமே வளரும். மற்ற மரங்கள் வளர வேண்டும் என்றால், வளமான மண்ணாக மாற்ற வேண்டும் என்பதைக் கண்டு கொண்டேன். 200 ஹெக்டர் நிலத்தை வளமாக்கும் வேலையை நிச்சயம் நம்மால் செய்ய முடியாது. ஆனால், இயற்கை நினைத்தால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், எறும்புகள் நிலத்தை வளப்படுத்தும் என்று பேச்சு வாக்கில் சொன்னார்கள். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். என் கிராமத்திலிருந்து ‘சிவப்பு எறும்பு’களை (முசுடு) சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விடுவதை வழக்கமாகக் கொண்டேன். சிவப்பு எறும்புகள் கடிப்பதைக்கூட கண்டுகொள்ளாமல் மாதக்கணக்கில் எறும்புகளைச் சேகரித்து வந்தேன். காரணம், அந்த எறும்புகளின் மீது நான் வைத்த நம்பிக்கைதான். அது வீண்போகவில்லை’’ என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னவர், தொடர்ந்தார்.

‘‘ஆயிரக்கணக்கான மனிதர்கள் நினைத்தாலும் எளிதில் செய்து முடிக்க முடியாத காரியம் அது. மண் திட்டுகளில் வளமான மண் குவியல், குவியலாக மேலே தெரியத்தொடங்கின. எறும்பு புற்றுகள், மணல் திட்டுகள் முழுவதும் நீண்டுகொண்டே சென்றன. ஒரு கட்டத்தில் 200 ஹெக்டர் மணல் பரப்பு வளமான மண் கொண்ட நிலமாக மாறியது. உடனே, மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கினேன். மரக் கன்றுகள் பச்சைக் கட்டி வளரத் தொடங்கின.

புற்று
புற்று

காட்டை உருவாக்கிய என் வெற்றியில் எறும்புகளுக்குத்தான் அதிக பங்கு உண்டு. எறும்புகள் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் அதிக அளவுக்கு செய்யப்படவில்லை. 30 ஆண்டுகளில் எறும்புகளின் துணையுடன் நான் உருவாக்கிய காடு வெளி உலகத்துக்குத் தெரிய வந்ததே யதேச்சையான நிகழ்வுதான். ஒரு முறை யானைக் கூட்டம், இந்தக் காட்டுக்குள் நுழைந்துவிட்டன. அதைத் தேடி வனத்துறையினர் காட்டுக்குள் வந்தார்கள். அத்தனை பேர் முகத்திலும் ஆச்சர்யம். காரணம், வனத்துறையின் ஆவணப்படி, அந்த இடத்தில் காடு கிடையாது; வெறும் மணல் திட்டுதான்.

‘எப்படி, இந்த அதிசயம் நிகழ்ந்தது. யார், இந்தக் கட்டை உருவாக்கினார்கள் ?’ என்று அங்கு கால்நடை மேய்த்துக் கொண்டிருந் தவர்களிடம் கேட்டுள்ளார்கள். காட்டுக்கு உள்ளே, செல்லுங்கள். அதை உருவாக்கியவர் இருக்கிறார் என்று சொல்லி, நான் இருக்கும் இடத்தைக் காட்டியுள்ளார்கள்.

முதலில் வனத்துறையினர் நான்தான், இந்தக் காட்டை உருவாக்கினேன் என்று சொல்லியதை நம்பவில்லை. 1980-ம் ஆண்டுச் சமூகக் காடு வளர்ப்புத் திட்டத்தைப் பற்றிச் சொல்லிய பிறகுதான், நான் சொல்வதில் உள்ள உண்மையைக் கண்டு கொண்டார்கள். சில தினங்களில் அரசு அலுவலர்கள் கூட்டம், கூட்டமாக இந்தக் காட்டைப் பார்க்க வந்தார்கள். அப்புறம்தான் உலகம் ஜாதவ் என்ற மனிதனையும், இந்தக் காட்டையும் கண்டுகொண்டது’’ என்று சிரித்தவரிடம், வருமானத்துக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

‘‘வீட்டில் தறி வைத்து நெசவு செய்கிறோம். அதில் நெய்த துண்டுதான் இது. கறவை மாடுகள் இருக்கின்றன. இதனால், வீட்டில் என்னிடம் யாரும் வருமானம் கொண்டு வந்து கொடு என்று கேட்பதில்லை. என் வாழ்நாளை மரம் வளர்ப்புக்காக அர்ப்பணித்துவிட்டேன்’’ என்று தோளிலிருந்த துண்டை எடுத்துக் கம்பீரமாக அணிந்தார் ஜாதவ் பயேங். அதற்குள் விருது வழங்க அழைப்பு வர, புன்னகையுடன் மேடை ஏறினார், அந்தப் பச்சை மனிதர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism