Published:Updated:

80 நாட்களாக கொள்முதல் செய்யப்படாத 4,000 மூட்டை நெல்; வீணான 1000 மூட்டைகள்; கவலையில் விவசாயிகள்!

முளைத்து வீணான நெல் மணிகளைப் பார்வையிடும் எம்.எல்.ஏ ரவி
முளைத்து வீணான நெல் மணிகளைப் பார்வையிடும் எம்.எல்.ஏ ரவி

``இக்கொள்முதல் நிலையத்துக்கு 4,000 நெல் மூட்டைகள் வந்துள்ளன. இவற்றில் 1,000 மூட்டைகளுக்கு மேல் முளைத்துவிட்டன. இங்கு நெல் வாங்கப்படுவதே இல்லை’’ என்று புகார் கூறுகின்றனர் விவசாயிகள்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள செய்யூர் நெல் கொள்முதல் நிலையத்தில், சுமார் நான்காயிரம் மூட்டை நெல், கடந்த 80 நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல், நிலைய வளாகத்திலேயே கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கொள்முதல் செய்யப்படாததால், நெல்மணிகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் முளைப்பு விட்டு வீணாகிவிட்டன. இதனால், விவசாயிகள் மனம்நொந்து அ.தி.மு.க சட்டப்பேரவைத் துணை கொறடாவும், அரக்கோணம் எம்.எல்.ஏ-வுமான சு.ரவியிடம் முறையிட்டனர். இதையடுத்து, எம்.எல்.ஏ சு.ரவி நெல் கொள்முதல் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

அரக்கோணம்
அரக்கோணம்
நெல் கொள்முதல் லஞ்சம்: அடுத்தடுத்து பிடிபடும் அதிகாரிகள்; துணிச்சலோடு அம்பலப்படுத்தும் விவசாயிகள்!

அவரிடம் வேதனை தெரிவித்த விவசாயிகள், ``இக்கொள்முதல் நிலையத்துக்கு 4,000 நெல் மூட்டைகள் வந்துள்ளன. இவற்றில் 1,000 மூட்டைகளுக்கு மேல் முளைத்துவிட்டன. இங்கு நெல் வாங்கப்படுவதே இல்லை’’ என்று புகார் கூறினர். முளைவிட்ட நெல்மணிகளைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ ரவி, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் வேலூர் மண்டல மேலாளர் நாகராஜனை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யுமாறும், வீணாகிய நெல்லுக்கு அரசிடம் உரிய நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த மண்டல மேலாளர், இரண்டு நாட்களில் அந்த நெல்மணிகளை கொள்முதல் செய்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நிருபர்களிடம் பேசிய எம்.எல்.ஏ ரவி, ``என் தொகுதியில், 26 நெல் கொள்முதல் நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. அ.தி.மு.க ஆட்சியில், நெல் கொள்முதல் செய்ததும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் உடனடியாக செலுத்தப்பட்டுவிடும். ஆனால், `விவசாயத்துக்குத் தனி பட்ஜெட் போடப்படும்’ என்று சொல்லும் தி.மு.க அரசு, விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யாமல் அவர்களின் மனதை நோகடிக்கிறது.

முளைத்து வீணான நெல் மணிகளைப் பார்வையிடும் எம்.எல்.ஏ ரவி
முளைத்து வீணான நெல் மணிகளைப் பார்வையிடும் எம்.எல்.ஏ ரவி
குறுவை நெல் சாகுபடி சிறப்பு திட்டம்: `இந்தக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றவேண்டும்!' - விவசாயிகள்

விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள். அவர்கள் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், `அளவுக்கு அதிகமாக நெல் விளைந்துவிட்டது. குடோனில், நெல் மூட்டைகள் அடுக்கி வைப்பதற்கு இடமில்லை’ என்று சப்பைகட்டுக் காரணம் சொல்கிறார்கள். காரணம் சொல்வதைத் தவிர்த்து, விவசாயிகளை அரசு காப்பாற்ற வேண்டும். கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உண்டான பணத்தையும், முளைத்து வீணான ஆயிரம் மூட்டை நெல்லுக்கான நிவாரணத் தொகையையும் விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு