Published:Updated:

நீர்ப்பாசனத்துக்கு உதவிய பொற்கொல்லர்கள்; 1000 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு; வரலாற்று சுவாரஸ்யம்!

புதிதாக 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசன முறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே சத்தியமங்கலம், மேலூர் பாசனக் கண்மாயில் உள்ள குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் பகுதியைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் நாராயணமூர்த்தி என்பவர், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் நிறுவனர் மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மணிகண்டன் அங்கு சென்று கல்வெட்டைப் படியெடுத்து வாசித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது, ``பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள்
புதுக்கோட்டை: தொன்மை பேசும் பொற்பனைக்கோட்டை - ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசன முறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழிக்கல்வெட்டு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், கந்தர்வக்கோட்டை நொடியூரில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ஆதித்தன் சோழன் ஆட்சிக்காலத்தில் மங்கனூரைச்சேர்ந்த இரணசிங்க முத்தரையன் என்பவர் மருதனேரிக்கு குமிழி அமைத்துக்கொடுத்த கல்வெட்டையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்தியுள்ளோம்.

இந்த நிலையில்தான், தற்போது, மேலூர் கண்மாயில் கண்டெடுக்கப்பட்டுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், `ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்' என்று எழுதப்பட்டிருக்கிறது.

அதாவது, சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டு வித்ததாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவான பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்றும் அழைக்கப்படுகின்றனர். தட்டான் என்று அழைக்கப்படுபவர்கள் சோழர் காலத்தில் பொன்னிலும் வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண் கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்துக்கான தட்டார்கள், பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர்.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள்
கீழடி: பாசிமணிகள், பானைகள், உறை கிணறு; 7-ம் கட்ட அகழாய்வில் கிடைக்கும் பொக்கிஷங்கள்!

இப்புதிய கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கலாம். இந்தக்கல்வெட்டின் மூலமாகத் தொழிலையும் அதற்குத் தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்துச் செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழகத்தில் சோழ, பாண்டியர், வணிகர்கள், பொதுமக்கள், தொழில் புரிவோர் ஆகிய அனைவரும் அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும் பயிர்த்தொழில்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழ்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு