Published:Updated:

`பென்னி குயிக்கைப் போல நினைவுகூர வேண்டியவர்!' - ஆர்தர் காட்டனுக்கு சிறப்பு செய்த டெல்டா விவசாயிகள்

கல்லணை
கல்லணை

கல்லணையிலிருந்து பாய்கின்ற நீரால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமே விவசாயத்தில் செழித்து விளங்குவதுடன், நெற்களஞ்சியம் என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணமாகவும் அமைந்த கல்லணை தஞ்சையின் ரத்த ஓட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

கல்லணை - டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருவதுடன் அதன் கட்டுமான அமைப்பை எண்ணி இன்றைக்கும் உலகமே வியந்து வருகிறது. இந்தநிலையில் கல்லணையின் கட்டுமானத்தை மேம்படுத்திய பொறியாளரான சர்.ஆர்தர் காட்டனின் பிறந்தநாளையொட்டி கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர், விவசாயிகள்.

சர்.ஆர்தர் காட்டன் சிலை
சர்.ஆர்தர் காட்டன் சிலை

மாமன்னன் கரிகாலச் சோழன் எந்தவித அறிவியல் தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் ஓடி வருகின்ற நீரைத் தேக்கிவைத்து, தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கக் கூடிய வகையில் கல்லணையைக் கட்டினார். இது நீரியல் மேலாண்மையில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கு இன்றைக்கும் சாட்சியாக இருப்பதுடன் தஞ்சை மாவட்டம் நெற்களஞ்சிய பூமியாக திகழ்வதற்கும் காரணமாக இருக்கிறது. சர்.ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயே பொறியாளர் கல்லணையின் கட்டுமானத்தை எண்ணி வியந்ததுடன் அதன் பெருமையை உலகம் முழுக்க எடுத்துச் சென்றார்.

சர்.ஆர்தர் காட்டனின் 217 -வது பிறந்தநாளையொட்டி அவருக்குச் சிறப்பு செய்யக் கூடிய வகையில் விவசாயிகள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுகுறித்து சி.பி.ஐ கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் பாரதியிடம் பேசினோம்,

``சோழப் பேரரசன் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணையிலிருந்து பாய்கின்ற நீரால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமே விவசாயத்தில் செழித்து விளங்குவதுடன், நெற்களஞ்சியம் என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணமாகவும் அமைந்தது. கல்லணை தஞ்சையின் ரத்த ஓட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

மாலை அணிவித்து மரியாதை
மாலை அணிவித்து மரியாதை

இந்த நிலையில் நீரியல் துறையில் சிறந்து விளங்கிய பொறியியல் வல்லுநரான ஆர்தர் காட்டன் என்பவரை இந்தியாவில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளைச் செய்வதற்காக ஆங்கிலயே அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்பட்டார்.

அத்துடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரியியல் தொடர்பாகவும், விவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறுப்பும் ஆர்தர் காட்டனிடம் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணையின் கட்டுமானத்தை எண்ணி பெரும் வியப்படைந்தார்.

Vikatan

அத்துடன் காவிரி ஆறு முக்கொம்பிலிருந்து காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. இதில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் முக்கொம்பில் மேலணை கட்டினார். மேலும் கல்லணையில் மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்தது. அதைத் தீர்க்கும் வகையில் மணல் போக்கிகளை அமைத்து கல்லணையின் கட்டுமானத்தை மேம்படுத்தினார்.

கல்லணை
கல்லணை

ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைத்து கல்லணையை உருவாக்கிய கரிகாலனின் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கண்டு மெய்சிலிர்த்துடன், `இதுபோன்ற அணை கட்டுமானம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை' எனப் பாராட்டினார். இதையடுத்து கல்லணையிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்கரையில் கீழணை கட்டினார். மேலும் பல்வேறு நீர்ப் பாசன கட்டமைப்புகளை எழுப்பி பாசன நீர் பல பகுதிகளுக்குச் செல்கிற வகையில் முறைப்படுத்தி காவிரி டெல்டாவை மேலும் வளமாக்கினார். கல்லணையின் பிரமாண்ட அமைப்பைக் கண்டு எழுந்த ஆச்சர்யத்தால் கல்லணைக்கு ‘கிராண்ட் அணை கட்’ என்ற பெயரையும் சூட்டினார்.

கல்லணையின் கட்டுமானத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் செய்து தனிப் பெருமையை ஏற்படுத்தித் தந்தார். இவருடைய சீரிய பணிகளால் காவிரி டெல்டா பாசனப் பகுதி மேம்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகியது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக சர்.ஆர்தர் காட்டனின் சிலை கல்லணையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதி
பாரதி

அவருடைய பிறந்தநாளையொட்டி விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் காட்டனின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்குக் கொடுக்கப்படுகிற மரியாதைகூட ஆர்தர் காட்டனுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற வருத்தம் டெல்டா விவசாயிகள் மத்தியில் உள்ளது" என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு