Published:Updated:

நாட்டு மாடுகளைக் காப்பாற்றிய கிடை மாடுகள் கலாசாரம்... தற்போது அழிவின் விளிம்பில்... ஏன்?

மாடுகள்

ஒரு நாட்டு மாட்டினம் என்பது இன்று நேற்று வந்ததல்ல; நமது முன்னோர்கள் பல தலைமுறைகளாகப் பழக்கப்படுத்தி நமக்கு விட்டுச் சென்ற அளப்பரியா சொத்து. நாட்டு மாட்டு அழிவு என்பது மனித நலனைப் பெரிதும் பாதிக்கும்.

நாட்டு மாடுகளைக் காப்பாற்றிய கிடை மாடுகள் கலாசாரம்... தற்போது அழிவின் விளிம்பில்... ஏன்?

ஒரு நாட்டு மாட்டினம் என்பது இன்று நேற்று வந்ததல்ல; நமது முன்னோர்கள் பல தலைமுறைகளாகப் பழக்கப்படுத்தி நமக்கு விட்டுச் சென்ற அளப்பரியா சொத்து. நாட்டு மாட்டு அழிவு என்பது மனித நலனைப் பெரிதும் பாதிக்கும்.

Published:Updated:
மாடுகள்

இந்தியாவின் பல பகுதிகளில் பழங்காலம் தொட்டு பல்வேறு நாட்டு கால்நடைகள் பாரம்பர்யமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டுக் கால்நடைகள் அப்பகுதியில் நிலவும் தட்பவெட்ப சூழ்நிலைகளைத் தழுவி பரிணமித்துள்ளன. வயல்களில் உழவு ஓட்ட, வண்டிப் பாரம் இழுக்க, கிணறுகளில் தண்ணீர் இறைக்க, எண்ணெய் செக்கிழுக்க போன்ற கடினமான பணிகளைச் செய்ய நாட்டுமாடுகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டு மாடுகளின் சாணம் வயல்களுக்கு நல்ல உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மாடுகள் கடின மற்றும் வலுவான தேகத்துடன் உள்ளதால் பருவநிலை மாற்றத்தைத் தாக்குப் பிடித்து வாழ முடியும். இவற்றுக்கு மேய்ச்சல் மட்டும் போதும், தனியாகத் தீவனம் கொடுக்கத் தேவையில்லை. குறைந்த அளவு மேய்ச்சல் இருந்தால்கூட தாக்குப்பிடித்து வாழக்கூடியவை நாட்டு மாடுகள்.

கீதாரிகளிடம் ஆய்வு
கீதாரிகளிடம் ஆய்வு

மேலும், நாட்டு மாடுகள் சிறப்பான நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 43 இனத்தைச் சார்ந்த நாட்டு மாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் நாட்டு மாடுகள் முக்கியப் பங்காற்றுவதுடன் அவர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டோடு ஒன்றிணைந்துள்ளது. சமீப காலமாக இந்நாட்டு மாடுகள் பெருமளவில் குறைந்து வருகின்றன. இது குறித்து புலிக்குளம் மாடு மற்றும் மலை மாடு மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வரும் தென் மாவட்டக் கீதாரிகளைச் சந்தித்து பேசினோம். கிடை மாட்டுத் தொழில் அருகி வருவதற்கு அவர்கள் முன்வைத்த முக்கியப் பிரச்னைகள், பாரம்பர்ய கால்நடைகள் மற்றும் அத்தொழிலில் ஈடுபட்டு வரும் சமூகங்களுடன் நீண்ட நாள் களப்பணிகளை மேற்கொண்டு செயல்பட்டு வரும் மதுரையைச் சார்ந்த சேவா தொண்டு நிறுவனத்தின் ஆய்வுக் குறிப்புகளில் சேகரிக்கப்பட்ட சில தகவல்களையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டில் நாட்டு மாடுகள்

நாட்டு கால்நடை இனங்கள் என்பவை பாரம்பர்ய அறிவு நுணுக்கத்தால் பெறப்பட்டவை. இவை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற விலை மதிக்க முடியாத சொத்து. நாட்டு மாடுகளை எடுத்துக்கொண்டால் தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் காணப்படும் மலை மாடுகள், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் காணப்படும் புலிக்குளம் மாட்டினம், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் காங்கேயம் மாட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உம்பளச்சேரி மாட்டினம், தர்மபுரி, ஈரோடு, சேலம் பகுதிகளில் ஆலம்பாடி மாட்டினம், ஈரோடு மலைப்பகுதிகளில் பர்கூர் மாட்டினம் என அந்தந்தப் பகுதிகளின் நில அமைப்பு, தட்ப வெப்பநிலை, பயன்பாட்டைப் பொறுத்து வளர்த்தெடுக்கப்பட்டவை. இவற்றில் மலை மாடு மற்றும் புலிக்குளம் மாட்டினங்கள் கிடைமாடுகளாகப் பல தலைமுறைகளைத் தாண்டி தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. லட்சங்களில் இருந்த இம்மாடுகளின் எண்ணிக்கை தற்போது சில ஆயிரங்களாகச் சுருங்கிவிட்டன.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

கிடைமாடுகள்

கிடைமாடுகள் விவசாயத்துக்கு மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன. இம்மாடுகள் பயிர் அறுவடைக்குப் பிறகு, வயல்வெளிகளில் பகல் வேளைகளில் மேய்ந்துவிட்டு இரவு நேரங்களில் கிடைகளாக அமர்த்தப்படுகின்றன. இம்மாடுகள் கழிக்கும் சாணம் மற்றம் சிறுநீர் மண்ணுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகளை வழங்குகின்றன. இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைகிறது. இச்சாணத்தின் மகிமையைப் புரிந்துகொண்டுள்ள கேரள மக்கள் இங்கு வந்து கிடைமாட்டுச் சாணத்தை நல்ல விலைக்கு, அதாவது 80 கிலோ சாணத்தை ரூ.120-க்கு வாங்கிச் செல்வதாக கீதாரிகள் சொல்கிறார்கள். இச்சாணம் அங்குள்ள மலைத்தோட்டப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கிடை மாட்டு காளைக்கன்றுகள் ஜல்லிக்கட்டுக்கு வாங்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் அடிப்படை கிடைமாடுகள்தான். குறிப்பாக, புலிக்குளம் காளை இனங்கள் ஜல்லிக்கட்டில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற்று வருவதால் காளைக் கன்றுகளுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் கீதாரிகள் தெரிவிக்கின்றனர். முன்பு ரூ.3,000-க்கு விற்கப்பட்ட கன்றுகள் தற்போது ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை விற்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ``கிடைமாடுகளின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் உயர்ந்திருந்தாலும், இத்தொழிலை எடுத்துச் செல்வதற்குச் சாதகமான சூழ்நிலைகள் தற்போது குறைந்து வருவது வருத்தமளிக்கிறது" என்கிறார் மதுரையைச் சார்ந்த தொழுவம் அமைப்பின் நிறுவனர் கபிலன்.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

கிடைமாட்டுத் தொழிலின் முக்கியப் பிரச்னைகள்

கிடை மாடுகளுக்கு மேய்ச்சல் ஆதாரம் மிக முக்கியம், கீதாரிகள் இம்மாடுகளை மதுரை மாவட்டத்திலுள்ள தங்கமலை, வாசிமலை, நாகமலை மற்றும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோவிலாறு, பிளவக்கல் போன்ற மலைப்பகுதிகளில் பாரம்பர்யமாக மேய்த்து வந்ததாகவும், ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் பாரம்பர்ய மேய்ச்சல் உரிமை மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், காட்டையொட்டிய நிலப்பரப்புகளும் சமீப காலங்களில் தோட்டங்கள், குவாரிகள், கட்டடங்கள் என பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதிகளவில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த வறண்ட புல்வெளிகள், அதாவது தரிசு நிலங்களும் தற்போது வளர்ச்சித் திட்டங்களுக்காகச் சூறையாடப்பட்டு வருவதும் தொடர்கதையாகிறது. இந்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நில வளங்கள் துறையால் வெளியிடப்பட்டுள்ள தரிசு நில நிலப்பட தொகுதியில் (Wasteland Atlas) 2003 – 2006 காலகட்டத்தில 926 ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்களை தமிழ்நாடு இழந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் மேய்ச்சல் நிலங்களின் இழப்பு அதிகம். இதுபோக, கோயிலுக்கு பாத்தியப்பட்ட வறண்ட புல்வெளிகளும் மாடுகளுக்கு மேய்ச்சல் பூமியாக இருந்து வந்துள்ளன. ஆனால், தற்போது அந்நிலங்களும் மாற்று பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் கீதாரிகள். மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் மந்தை புறம்போக்கு ஆகிய இடங்கள் காணாமல் போய்விட்டதும் கிடை மாடுகளின் தொழிலை பாதிப்புக்குள்ளாக்குகிறது.

உழவு மாடுகள்
உழவு மாடுகள்

கோடைக்காலங்களில் அறுவடை செய்யப்பட்ட விளைநிலங்களில் மாடுகளை மேய்ப்பது பன்னெடுங்காலமாக பின்பற்றப்படும் வழக்கம். ஆனால், அப்பகுதிகளில் உள்ள தற்போதைய தலைமுறையினர் ஒரு சில இடங்களில் பிரச்னைகளில் ஈடுபடுவதும் அவ்வப்போது நிகழ்கிறது. இது ஒருபுறமிருக்க குளங்கள் மற்றும் கண்மாய்களில் மீன் குத்தகை எடுப்பவர்கள் மனசாட்சி இல்லாமல் மாடுகள் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இது குறித்து எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் முகநூலில் பதிவிட்டதை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குளம், கண்மாய்களில் மாடுகள் தண்ணீர் குடிக்க அனுமதி மறுக்கக் கூடாது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் பெரிய பரப்பளவில் குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் வற்றும் காலங்களில் கீதாரிகள் மாடுகள் மேய்ப்பது வழக்கம். ஆனால், தற்போது பெருமளவில் கண்மாய்களில் வெள்ளரி போன்ற காய்கறிகளை உள்ளுர் மக்கள் பயிரிடுவதால் அங்கு மேய்ச்சல் மறுக்கப்படுவதாகச் சொல்கின்றனர். இவ்வாறு மேய்ச்சல் மற்றும் தண்ணீர் உரிமை மறுக்கப்படுவது இத்தொழில் அருகி வர முக்கியக் காரணங்களாகின்றன.

ஆலம்பாடி மாடுகள்
ஆலம்பாடி மாடுகள்

கிடைமாட்டுத் தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் தங்கள் சமூகத்தில் போதுமான மரியாதை கிடைப்பதில்லை என்று வருத்தமடைகின்றனர். தங்களுக்கு பெண் கொடுப்பதற்கு தங்கள் சமூகத்தினரே தயங்குகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர். முந்தைய காலத்தில் மேய்ச்சலில் ஈடுபடும் ஆண்மகன் தன்னுடைய திருமணத்துக்குக்கூட செல்ல முடியாமல் மாடுகளை ஓட்ட பயன்படுத்தும் கம்பை மணமகனாகப் பாவித்து திருமணம் நடந்த காலங்களும் உண்டு என்கின்றனர். அந்த அளவுக்கு மரியாதை மிகுந்த தொழிலாகக் கருதப்பட்ட மேய்ச்சல் தற்போது இகழ்வாகக் கருதப்படுவது வருத்தமான செய்தி.

மீட்டெடுக்க என்ன வழி

ஒரு நாட்டு மாட்டினம் என்பது இன்று நேற்று வந்ததல்ல, நமது முன்னோர்கள் பல தலைமுறைகளாகப் பழக்கப்படுத்தி நமக்கு விட்டுச் சென்ற அளப்பரியா சொத்து. நாட்டு மாட்டு அழிவு என்பது மனித நலனைப் பெரிதும் பாதிக்கும். தற்போது வெண்மை புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பின மாடுகளால் மாறிவரும் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க இயலாது. நோய்கள் இவற்றை எளிதில் தாக்கும். மேலும், அவற்றுக்கு அதிகமான தீவனம் தேவைப்படும். அதேபோல் தொழில்மயமாக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக இருந்தாலும் நீண்ட கால வளர்ச்சிக்கு இது சாத்தியப்படாது. பெருகிவரும் விலங்கியல் நோய்த் தொற்றுகளுக்கு இது போன்ற தொழில் மயமாக்கப்பட்ட கால்நடை வளர்ப்பும் முக்கியக் காரணம் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அதிகமான அரசுத் திட்டங்கள் உள்ளதாகவும் ஆனால், நாட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு போதுமான அரசுத் திட்டங்கள் இல்லையென கீதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

அருகிவரும் பர்கூர், காங்கேயம், ஆலம்பாடி மற்றும் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையங்கள் அவற்றின் வாழ்விடத்திலேயே அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆராய்ச்சி மையங்கள் இத்தொழிலில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வரும் சமூகத்தைப் பெருமளவில் ஈடுபடுத்த முன் வர வேண்டும். இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சமூகத்தின் பாரம்பர்ய அறிவைக் கொண்டுதான் இவ்வினங்களைக் காக்க முடியும் என்பதை மறுக்க முடியாது. நாட்டின மாடுகளின் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் பாரம்பர்ய மேய்ச்சல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் வழித்தடங்களை அவர்களின் துணையோடு பதிவு செய்து அவற்றை மீட்டெடுக்க வேண்டும்.

காங்கேயம் மாடுகள்
காங்கேயம் மாடுகள்

குளங்கள் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் மற்றும் மேய்ச்சலுக்கு அனுமதிக்க ஆவன செய்ய வேண்டும். நாட்டின மாடுகளைப் பாதுகாக்கவும் அத்தொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் முறையான அரசுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

`உண்ணாமல் கெட்டது உறவு,

முறுக்காமல் கெட்டது மீசை,

பார்க்காமல் கெட்டது பயிர்,

ஏறாமல் கெட்டது குதிரை,

மேய்க்காமல் கெட்டது மாடு’.

எனவே மேய்ச்சலுக்கான ஆதாரத்தை மீட்டெடுக்கத் தவறினால் கிடை மாட்டுத் தொழிலுடன் நமது கலாசாரமும் அழிந்து போகும்.

- மு.மதிவாணன்,

மூத்த ஆராய்ச்சியாளர்,

அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம்,

மணிமுத்தாறு, திருநெல்வேலி மாவட்டம்.

தொடர்புக்கு: 94880 63750

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism