Published:Updated:

நெல் கதிரடிக்கும் கருவி! அஸ்ஸாம் விவசாயியின் அசாத்திய முயற்சி!

கருவியின் உதவியுடன் நெல் கதிரடிக்கும் பணி
பிரீமியம் ஸ்டோரி
கருவியின் உதவியுடன் நெல் கதிரடிக்கும் பணி

கருவி

நெல் கதிரடிக்கும் கருவி! அஸ்ஸாம் விவசாயியின் அசாத்திய முயற்சி!

கருவி

Published:Updated:
கருவியின் உதவியுடன் நெல் கதிரடிக்கும் பணி
பிரீமியம் ஸ்டோரி
கருவியின் உதவியுடன் நெல் கதிரடிக்கும் பணி

‘தேவையே கண்டு பிடிப்புகளின் பிறப்பிடம்’ என்று சொல்வார்கள். அதுவும் சவால்கள் நிறைந்த விவசாயத் தில் தினம் தினம் புதிய கண்டு பிடிப்புகளின் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்தத் தொடர்.

தமிழ்நாடு, இந்தியாவுக்குத் தெற்கு எல்லையாக அமைந் திருப்பதுபோல அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்கு எல்லையாக அமைந்திருக்கிறது. அங்கு நான் சந்தித்த விவசாயி யின் பெயர் முகமது பஸ்லூல் ஹக் (Fazlul Haque).

அகமதாபாத்திலிருக்கும் ‘இன்னோவேஷன் பவுண் டேஷன்’ குழுவினர், அவரது கண்டுபிடிப்பைப் பதிவு செய்டு வைத்துள்ளார்கள். அது அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று சொல்லி,

யானை கட்டி போரடித்தவர்கள் தமிழர்கள்.’ நெல் அறுவடைக்காக மாடுகளைக் கட்டிப் போரடித்து, கதிர்களிலிருந்து நெல்மணி களைப் பிரித்தெடுப்பது அந்தக் கால வழக்கம். நெற்கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கட்டி, அவற்றைத் தூக்கி கல்லில் அடித்தால் நெல் மணிகள் உதிர்ந்து விழும். அதைச் சேகரித்து மூட்டைகளில் பிடிப்பார்கள். ஆனால், தற்போது நெல் அறுவடை செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டன.

கருவியுடன் முகமது பஸ்லூல் ஹக்
கருவியுடன் முகமது பஸ்லூல் ஹக்

இந்த இயந்திரங்கள் நெல் அறுவடை செய்யும்போது நெல்மணிகளைத் தனித் தனியாக டிராக்டரில் கொட்டுவதும், வைக்கோலைத் துண்டு துண்டாகவும் வெட்டி விடுகின்றன. இப்படித்தான் தற்போது நெல் அறுவடை பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது.

இப்படித் துண்டு துண்டுகளாக வெட்டப் பட்ட வைக்கோல், ஆடு, மாடுகளுக்குப் பெரிதாகப் பயன்படுவதில்லை. அவற்றை மாடுகள் விரும்பிச் சாப்பிடுவதுமில்லை. வேறு வழியே இல்லாமல் அவற்றையும் சேகரித்து வைத்துச் சிலர் ஆடு மாடுகளுக்குக் கொடுக்கிறார்கள். குஜராத்தில், இந்த மாதிரி வைக்கோலில் வெல்லத்தூள் தூவி தண்ணீரில் ஊறவைத்து, மாடுகளுக்குக் கொடுக்கிறார்கள்.

நெல் அறுவடை செய்யும் அந்த இயந்திரத்தின் வாடகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதனால் சாகுபடிச் செலவு அறுவடைக்குப் பிறகும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தக் குறையைப் போக்கும் விதமாகச் சிறிய விவசாயி களுக்கான நெல் அறுவடை இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் முகமது பஸ்லூல் ஹக்.

அவர் கண்டுபிடித்த இயந்திரத்தில் நெல்லை அறுவடை செய்து, அந்த நெற்கதிர்களை இயந்திரத்தின் உள்ளே செலுத்தினால், அது நெல்மணிகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும். அத்துடன், பதர்களையும் அதில் உள்ள மின்விசிறி சுத்தம் செய்து தூய்மையான நெல்மணிகளைத் தருகிறது.

கருவியுடன் முகமது பஸ்லூல் ஹக்
கருவியுடன் முகமது பஸ்லூல் ஹக்

வைக்கோலும் எந்தச் சேதாரமும் இல்லாமல் தனித்தனியாகக் கிடைக்கிறது. இதை நாம் சேகரித்துப் ‘பண்டல் பண்டல்’களாகக் கட்டி வைத்துக்கொண்டு கால்நடைகளுக்கு வழங்கலாம்.

முகமது பஸ்லூல், பெரிதாகப் படிக்கவில்லை. சிறுவயதிலேயே ‘இயந்திரப் பொறியியல்’ துறையில் ஆர்வம். ஒரு சிறு பட்டறையில் சேர்ந்து வேலையைக் கற்றுக்கொண்டார். தனியாக ஒரு ‘மெக்கானிக் ஷாப்’ வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண் டிருந்தார். கூடவே விவசாயமும் செய்து கொண்டிருந்தார். ஆனால், அறுவடைக்கு ஆள்களை அழைக்கும்போதெல்லாம் பிற வேலைகளை காரணம் காட்டி யாரும் வரவில்லை. இதனால் அறுவடைக்கும், அறுவடை செய்த நெல்லை கதிரடிப்பதற்கும் ஆட்களை அழைத்து வருவதே பெரும் வேலையாக இருந்தது. வேலைக்கு ஆள்களை அடிக்கடி போய் கூப்பிடுவது அவருக்கு மிகவும் அலுப்பாக இருந்தது. அப்போதுதான் அவருடைய ‘மெக்கானிக்’ மூளை வேலை செய்யத் தொடங்கியது. அதில் பிறந்ததுதான் இந்த நெல் கதிரடிக்கும் இயந்திரம்.

குடியரசு தலைவரிடம் விருது பெறும்போது
குடியரசு தலைவரிடம் விருது பெறும்போது

மன்சூரி என்ற நெல் ரகம் அஸ்ஸாமில் மிகவும் பிரபலம். அதைத்தான் அவரும் சாகுபடி செய்திருந்தார். அதை ஆட்களை வைத்து அறுவடையும் செய்திருந்தார். அதிலிருந்து நெல்லை எடுக்கத்தான் இந்தக் கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

நெல்மணிகளைப் பிரித்து எடுப்பதற்குச் சின்னச் சின்ன பற்களைப் போன்ற இரும்பில் செய்யப்பட்ட முட்களை இயந்திரத்தில் பதித்திருக்கிறார். அந்த முட்களைச் சரிசெய்துகொள்வது போன்ற அமைப்பையும் உருவாக்கி இருக்கிறார். கிட்டத்தட்ட இவை ‘பிளேடு’களைப் போலவே பயன்படுகின்றன. நெற்கதிர்களை உள்ளே வைத்ததும் நெல்மணிகள் அழகாக உதிர்ந்துவிடுகின்றன. இந்த இயந்திரத்தின் எடை 280 கிலோ. 5 ‘ஹெச்.பி மோட்டார்’ பொருத்தியிருக்கிறார். டிராக்டர் மோட்டாரிலும், தனி மோட்டாரிலும் பொருத்தி இயக்கலாம். 300 கிலோ நெற்கதிர்களை ஒரே சமயத்தில் இதில் பயன்படுத்த முடியும். இந்த இயந்திரத்தின் விலை சுமார் 40,000 ரூபாய். இதை நம்முடைய இடத்துக்கு எடுத்து வருவதற்கான போக்குவரத்துச் செலவுகள் தனி. இந்த இயந்திரத்தை ‘ஆர்டர்’ கொடுத்த ஒரு வாரத்தில் கொடுக்கிறார். ‘ஒரு மாதத்துக்கு 50 இயந்திரங்களைத் தயாரித்துத் தர முடியும்’ என்கிறார்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

2003-ம் ஆண்டு இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 2005-ம் ஆண்டுச் சின்னச் சின்ன மாறுதல்களைச் செய்திருக்கிறார். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வேளாண் துறை சார்பாகவும் சிலருக்கு இந்த இயந்திரத் தைத் தயாரித்து வழங்கியிருக்கிறார்.

அங்கிருக்கும் வேளாண் அதிகாரிகள் இவரது கண்டுபிடிப்பைப் பார்த்து, இவரின் பொறியியல் அறிவைக் கண்டு மிகவும் வியந்து பாராட்டி இருக்கிறார்கள்.

அஸ்ஸாம் ஒரு பின்தங்கிய மாநிலம். இப்படிப்பட்ட கண்டுபிடிப்பு அந்த மாநிலத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையால் இவர் விருது வாங்கி யிருக்கிறார். குடியரசுத் தலைவரின் மாளிகை யான டெல்லி ராஷ்டிரபதி பவனில் இந்த இயந்திரம் இயங்கும் விதத்தைச் செய்து காண்பித்திருக்கிறார். தேசிய கண்டு பிடிப்பாளர் அமைப்பின் கீழ் செயல்படும் அடித்தளக் கண்டுபிடிப்பாளர் அமைப்பு அவருக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறது.

ஒரு பண்பட்ட விவசாயி, ஒரு பல்கலைக் கழகத்துக்குச் சமம் என்பார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் பஸ்லூல் ஹக் மட்டும் விவசாய விஞ்ஞானி அல்ல. நம்முடைய மாநிலத்திலும் எத்தனையோ விவசாய விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு ஊக்குவிப்பது நம்முடைய கடமை.

இப்படிப்பட்ட விஞ்ஞான விவசாயிகளைக் கண்டுபிடிக்கும் ‘நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன்’ அமைப்பின் அர்ப்பணிப்பான உழைப்பை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.



தொடர்புக்கு,

Md. Fazlul Haque,

Moirabari, (Village&Post),

Morigaon (Dist),

Assam-782126.

Cell: 98594 09637, 70027 04889

கருவியின் உதவியுடன் நெல் கதிரடிக்கும் பணி
கருவியின் உதவியுடன் நெல் கதிரடிக்கும் பணி

டீசல், மின்சாரம் இரண்டிலும் இயங்கும்

நமது ஊரில் நெல் கதிரடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நெல்லைப் பிரித்தெடுக்கிறார்கள். இதன் விலை லட்சங்களில் இருக்கிறது. இதைச் சாதாரண விவசாயிகளால் வாங்க முடியாது. அதனால்தான் பெரும்பாலான விவசாயிகள் வாடகைக்கு நெல் கதிரடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 600 - 1000 ரூபாய் வரை ஆகிறது. வழக்கமான இந்தக் கருவியில் நெல் தாள்கள் சிறு சிறு துண்டுகளாக உடைபடுவதால் மாடுகள் சாப்பிடச் சிரமம் ஏற்படுகிறது. ஆனால், முகமது பஸ்லூல் ஹக் கண்டுபிடித்த கருவியைப் பயன்படுத்தினால், தாள்கள் உடையாமல் நெல்லைப் பிரித்தெடுக்கும். இது ‘டீசல்’, மின்சாரம் இரண்டிலும் இயங்கும். இந்தக் கருவியை இயக்க இரண்டு ஆள்களே போதும். நெல், தாள்கள், கூளம் வெளியேறுவதற்கான பிரத்தியேக வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே இருக்கும் ‘பிளேடு’களுக்கு நன்கு இடைவெளிவிட்டிருப்பதால் நெல் தாள்கள் உடைபடாமல் இருக்கும். நெல் மணிகளும் எளிதாகப் பிரிந்து வெளியே வந்துவிடும்.