Published:Updated:

1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!

Tea plant
பிரீமியம் ஸ்டோரி
Tea plant

ஆச்சர்யம்

1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!

ஆச்சர்யம்

Published:Updated:
Tea plant
பிரீமியம் ஸ்டோரி
Tea plant

மாறிவரும் சீதோஷ்ண நிலை, வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்றவற்றால் தேயிலை உற்பத்தி, கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் பாதிப்பினால் தேயிலையின் தரம் குறைந்து அதற்கான விலையும் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால், 180 ஆண்டுப் பழைமையான தேயிலைத் தொழில் நலிவடைந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், குன்னூர் டீசர்வ் ஏல மையத்தில் 1 கிலோ தேயிலை 81.34 ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. சமீப காலங்களில் தேயிலைக்குக் கிடைத்த அதிகபட்ச விலை 167 ரூபாய்தான். அதுவும் எகிப்து, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் ஏலத்தில் பங்கேற்றால் மட்டும்தான், இந்த அளவுக்கு விலை உயரும்.

1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!

இந்தியாவில் பொதுவாகத் தேயிலையின் நிலை இப்படியிருக்க, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள ஒரு தேயிலை ஏல மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில், ‘கோல்டன் பட்டர்ஃப்ளை’ என்ற தேயிலை ரகம், 1 கிலோ 75,000 ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட தேயிலை உற்பத்தியாளர்கள், பிரமிப்பு அடைந்துள்ளனர்.

மிகப் பழைய வர்த்தக நிறுவனமான, ‘அஸ்ஸாம் தேயிலை நிறுவனம்’தான் இவ்வளவு விலைகொடுத்து, இந்த ரகத்தைக் கொள்முதல் செய்துள்ளது.

“இதுவரை எந்தத் தேயிலை ரகமும் இந்த விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டதில்லை. இந்தச் சாதனை, எங்கள் ஏல மையத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்’ என்கிறார் ஏல மையச் செயலர் தினேஷ் பிஹானி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!

“சாதாரணமாக மணம், சுவை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேயிலையின் தரம் நிர்ணயம் செய்யப்படும். ஆனால், கோல்டன் பட்டர்ஃப்ளை தேயிலையின் தனித்துவம், அதன் பளபளப்பான பொன்னிறம், மிருதுவான இனிப்பான ‘கேரமல்’ சுவை ஆகியவைதான்” என்கிறார் டீகோம் தேயிலை நிறுவன உரிமையாளர் லலித்குமார் ஜலன்.

கோல்டன் பட்டர்ஃப்ளை ரகம், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. மற்ற ரகங்களைப்போலக் கறுப்பாக இல்லாமல் இந்த ரகத் தேயிலையின் விளிம்புகள் தங்க நிறத்தில் மின்னுகின்றன. 2012-ம் ஆண்டில் லண்டனிலிருந்து கொள்முதல் செய்யவந்த வர்த்தகர்கள்தான், இந்த ரகத்துக்குக் கோல்டன் பட்டர்ஃப்ளை எனப் பெயர் வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!

“இந்த ரகத்தைப் பயிரிடும்போது தேயிலைத் தோட்டங்களில் கூட்டங்கூட்டமாக ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் படையெடுத்து வந்தன. வண்ணத்துப்பூச்சிகள் புடைசூழத்தான் நாம் தோட்டத்தில் நடமாட வேண்டிவரும். அவற்றின் நினைவாகத்தான் கோல்டனுடன் பட்டர்ஃப்ளையும் ஒட்டிக்கொண்டது. இந்தத் தேயிலையை உற்பத்தி செய்ய, இலைகளின் நுனி மட்டும்தான் பயன்படுத்தப் படுகிறது. இலைகளைப் பறிக்கும் காலம்கூட மிகவும் முக்கியம். அறுவடைக்காலம் ஜூன் மாதம் மட்டுமே. அப்போதுதான் இலைகள், சரியான தரத்தில் இருக்கும். காலதாமதம் செய்தால் தரம் குறையும். பயிர் வளரும் காலத்திலும் பல விஷயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், பல விஷயங்கள் இதன் சுவை மற்றும் தரத்தை நிர்ணயிக்கின்றன. இந்த ஆண்டு எட்டுக் கிலோ தேயிலை மட்டும்தான் உற்பத்தி செய்யப்பட்டது. அதில் 1 கிலோ அளவு உயர்தரமான தேயிலை மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது. பல ஆண்டு களாக நாங்கள் கடைப்பிடித்து வரும் தரக்கட்டுப்பாடு இது” என்கிறார் எஸ்டேட் மேற்பார்வை மேலாளர் சமர் ஜோதி.

1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!

அஸ்ஸாம் மாநிலத்தில், டீகோம் என்ற இடத்தில் கிடைக்கும், இனிப்பான அதீத சுவை யான நீர்தான் இங்கு விளையும் தேயிலையின் தரத்துக்கு முக்கியக் காரணம். இந்த நீரின் தனித்துவத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள், அஸ்ஸாமின் போடோ கச்சாரி மன்னர்கள்தான். அவர்கள்தான் இந்த இடத்துக்கு டீகோம் என்று பெயரிட்டுள்ளனர். ‘டீ’ அல்லது ‘டாய்’ என்றால் போடோ மொழியில் நீர் என்று அர்த்தம். மேலும் அங்கு நிலவும் ஈரப்பதம், மண்வளம், மழை, பாரம்பர்யமாகக் கடைப்பிடிக்கப்படும் சாகுபடி முறைகள் போன்றவையும் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. இந்தத் தேநீரை அருந்தியபின் ஒருவித இனிப்புச்சுவை நாவில் தங்கும். அதுதான் இதன் தனித்துவம்.

ஒவ்வோர் ஆண்டும், புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி, தேயிலைச் சந்தையைக் கலக்கி வருகின்றனர், அஸ்ஸாம் தேயிலை உற்பத்தியாளர்கள். கடந்த சில ஆண்டுகளாகக் கொள்முதல் விலையிலும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது கௌஹாத்தி ஏல மையம். கடந்த மாதம், ‘மனோஹரி கோல்ட் ஸ்பெஷல்’ என்ற தேயிலை ரகம், 1 கிலோ 50,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு இதே ரகம், 39,001 ரூபாய்க்கு ஏலம் போனது. அதுதான் அப்போதைய உலகச் சாதனை என்று சொல்லப்படுகிறது.

2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஊதா நிறத் தேயிலையை (Purple Tea) அறிமுகப்படுத்தினர், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள். 1 கிலோ பர்ப்பிள் டீ தயாரிக்க 10,000 இலைகள் தேவைப்படும். பர்ப்பிள் தேயிலை உற்பத்தியாளர்கள் 15,000 ரூபாய் வரை விலை கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால், அறிமுக நாளன்றே 1 கிலோ தேயிலை 24,000 ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரை யும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அகமதாபாத்தில் செயல்படும் ஒரு வர்த்தக நிறுவனம் மொத்தமாகக் கொள்முதல் செய்தது.

இந்த ஆண்டு, ஒரு கிலோ பர்ப்பிள் தேயிலையின் விலை 40,000 ரூபாய். ஹர்மட்டி ரகம் 22,000 ரூபாய்க்கும், மைஜன் கோல்டன் டிப்ஸ் ரகம் 70,501 ரூபாய்க்கும் விற்பனையாகி யுள்ளன. கையால் சுருட்டி சூரிய ஒளியில் காயவைத்துப் பதப்படுத்தப்படுவதுதான் மைஜன் ரகத்தின் தனித்துவம். இன்றும் அஸ்ஸாம் மாநிலம்தான் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம், பசுந்தேயிலைக்கான வரியை ரத்து செய்தது அரசு. தேநீரை அருந்தியபின் ஒருவித இனிப்புச்சுவை நாவில் தங்கும். அதுதான் இதன் தனித்துவம்.

நாட்டின் மொத்தத் தேயிலை உற்பத்தி, 1,200 மில்லியன் கிலோ. அஸ்ஸாம் மாநிலம் மட்டும் 652 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்கிறது. அதிகளவில் பசுந்தேயிலையை உற்பத்தி செய்வது சிறு உற்பத்தியாளர்கள்தான். அஸ்ஸாம் மாநில அரசு, தேயிலைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம், பசுந்தேயிலைக்கான வரியை ரத்து செய்தது. பல புதிய சாகுபடி யுக்திகளையும், புதிய ரகங்களையும் அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதால், உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

சாதாரணமாக, 1,150 மில்லி மீட்டர் மழையளவு இருக்கும் இடங்களில்தான் தேயிலையைப் பயிரிட முடியும். வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸுக்கு மேலும் 13 டிகிரி செல்சியஸுக்குக் கீழும் இருக்கக்கூடாது. அஸ்ஸாமில் தேயிலைக்குச் சரியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பிரம்மபுத்திரா நதிப் பள்ளத்தாக்கிலிருந்து வரும் அதிவேகமான காற்று, வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. இதனால் நிழலுக்காகத் தோட்டங்களில் மரங்கள் நட வேண்டிய அவசியம் இல்லை. புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்துவதும் பாரம்பர்ய ரகங்களைப் பாதுகாப்பதும், பாரம்பர்யமான தொழில்நுட்பங்களைக் கையாள்வதும்தான் அஸ்ஸாம் தேயிலை உற்பத்தியாளர்களின் சிறப்பு.

“மணம், சுவை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேயிலையின் தரம் நிர்ணயம் செய்யப்படும். ஆனால், கோல்டன் பட்டர்ஃப்ளை ரகத் தேயிலையின் தனித்துவம், அதன் பளபளப்பான பொன்னிறம், மிருதுவான, இனிப்பான ‘கேரமல்’ சுவை ஆகியவைதான்.’’

“பாரம்பர்யமான உயர்தரத் தேயிலை ரகங்களுக்கு எப்போதும் நல்ல தேவை இருக்கிறது. தரத்தை விரும்புபவர்கள் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார்கள் அஸ்ஸாம் ஏல மைய அதிகாரிகள்.

தரம் இருந்தால் விலை கிடைக்கும் என்பது, தேயிலைக்கு மட்டுமல்ல அனைத்து விளைபொருள்களுக்குமே பொருந்தும்!

6 ஏல மையங்கள்

இந்தியாவில் மொத்தம் 6 தேயிலை ஏல மையங்கள் செயல்படுகின்றன. 1861-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கொல்கத்தா ஏல மையம்தான் மிகவும் பழைமையானது. கௌஹாத்தி ஏல மையம் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சிலிகுரி, கொச்சின், கோயம்புத்தூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் ஏல மையங்கள் தொடங்கப்பட்டன.

தேயிலை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனா!

ஒவ்வொரு நாடும் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யும் தேயிலையின் அளவு…

1. சீனா- 2,500 மில்லியன் கிலோ.

2 இந்தியா- 1,200 மில்லியன் கிலோ.

3 கென்யா- 473 மில்லியன் கிலோ.

4 இலங்கை- 307 மில்லியன் கிலோ.

5 வியட்நாம்- 214 மில்லியன் கிலோ.

இந்தியாவில் தேயிலை உற்பத்தி…

இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 1,200 மில்லியன் கிலோ. அதில் அஸ்ஸாமின் பங்கு 55%...

1 அஸ்ஸாம்- 652 மில்லியன் கிலோ.

2 மேற்கு வங்கம்- 300 மில்லியன் கிலோ.

3 தமிழ்நாடு- 9.25 மில்லியன் கிலோ.

4 கேரளா- 4.45 மில்லியன் கிலோ.