நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அள்ளிக்கொடுக்கும் அத்தி! - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்!

அத்திப்பழங்களுடன் ஜெகதீஷ் தம்பதி...
பிரீமியம் ஸ்டோரி
News
அத்திப்பழங்களுடன் ஜெகதீஷ் தம்பதி...

மகசூல்

‘காணாமல் பூப்பூக்கும்... கண்டு காய்க்கும்... அது என்ன மரம்?’ என்று ஒரு விடுகதை உண்டு. அதற்கான விடை `அத்தி மரம்.’ ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்த்துவந்த அத்தியை தற்போது பல விவசாயிகள் ஊடுபயிராகவும் சாகுபடி செய்கிறார்கள். சிலர் தனிப்பயிராகவும் சாகுபடி செய்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜெகதீஷ், ஒரு ஏக்கர் நிலத்தில் அத்திச் சாகுபடி செய்துவருகிறார்.

அத்திப்பழங்களுடன் ஜெகதீஷ் தம்பதி...
அத்திப்பழங்களுடன் ஜெகதீஷ் தம்பதி...

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையிலிருந்து தென்மேற்கு திசையில் 26 கி.மீ பயணம் செய்தால் வருகிறது பொன்னாலம்மன் சோலை. அங்குதான் ஜெகதீஷின் தோட்டம் இருக்கிறது.

மேகங்கள் வலம்வரும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். அங்கிருந்து ஒரு குழந்தைபோல் மலையிலிறங்கி, தவழ்ந்து, ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிவரும் பாலாறு. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தென்னை மரப் பந்தலிட்ட சமவெளி என இயற்கை அன்னை துயில் கொள்ளும் அழகிய அமைதிப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது அந்தப் பண்ணை.

பண்ணை வீட்டிலிருந்த ஜெகதீஷைச் சந்தித்தோம். வரவேற்பறையில் நம்மை வரவேற்றது நம்மாழ்வார் புகைப்படம். “நாள் தவறாமல் பூப்போட்டு ஐயா படத்தைக் கும்பிட்டுட்டுத்தான் வேலையைத் தொடங்குவோம். நாங்க மட்டுமல்ல... இப்பவும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஐயாவை மனசார வணங்கிட்டுத்தான் இருக்காங்க’’ என்றவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். “நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே இந்த ஊர்தான்.

அள்ளிக்கொடுக்கும் அத்தி! - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்!

இங்கே 13 ஏக்கர் நிலம் இருக்கு. தென்னை விவசாயம்தான் இந்தப் பகுதியில பிரதானம். ஆனா, மாற்றுப்பயிர் சாகுபடியில எனக்கு ஆர்வம் அதிகம். ஏற்கெனவே 11 ஏக்கர் தென்னையில ஊடுபயிரா கோகோ, மிளகு, முள்சீத்தா நடவு செஞ்சிருக்கோம். மீதமுள்ள ரெண்டு ஏக்கர்ல தனிப்பயிரா ஒரு ஏக்கர்ல நாவல் நட்டிருக்கோம். அது இன்னும் பலனுக்கு வரலை. இன்னொரு ஏக்கர்ல இருக்க்கும் அத்திமரங்கள் இப்ப காய்ப்புல இருக்கு. கடந்த 10 வருஷமா என் பண்ணையில இயற்கை விவசாயம்தான் நடக்குது’’ ஜெகதீஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தித்திக்கும் அத்திப்பழச்சாறு நிறைந்த டம்ளரை நம் கையில் கொடுத்தார் அவர் மனைவி சுசித்ரா. பழச்சாற்றைப் பருகினோம். அற்புதமாக இருந்தது. ‘பிரமாதம்’ என்றோம். “அதுக்குக் காரணம் அத்தி மரங்களுக்கு நாங்க கொடுக்கும் அமுதக்கரைசலும் பஞ்சகவ்யாவும்தான்’’ என்ற ஜெகதீஷ், அத்தித் தோட்டத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

ஏற்காடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராயச்சி மையத்திலிருந்து ஒரு செடி 200 ரூபாய் விலையில வாங்கிட்டு வந்தேன். ஒரு மரத்துல இருந்து மாசம் குறைஞ்சபட்சம் 1,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.

பச்சைக்குடை பிடித்ததுபோல் பெரிய பெரிய இலைகளுடன் வரவேற்றன அத்தி மரங்கள். வேர்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கி கொத்துக்கொத்தாகக் காய்த்துத் தொங்கும் ரத்தச் சிவப்பு நிற அத்திப்பழங்கள்.

அத்திமரத் தோட்டம்...
அத்திமரத் தோட்டம்...

“இது ரசாயன வாடையே பார்க்காத பூமி. ஒரு ஏக்கர்ல அத்தி மரம் சாகுபடி செஞ்சிருக்கோம். ஒரு தடவை சேலம் ஏற்காடு மலைக்கு வேளாண் சுற்றுலா போயிருந்தோம். அங்கேயிருந்த அரசு பழப்பண்ணையில காய்ச்சுக் குலுங்கம் அத்தி மரங்களைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டேன். `நம்ம பண்ணையிலயும் அத்தி மரம் சாகுபடி செய்யலாமே’னு யோசனை வந்தது. பழப்பண்ணையில இருந்த விஞ்ஞானிகள்கிட்ட அத்தி மரச் சாகுபடி பத்தி ஆலோசனை கேட்டேன்.

`குளிர்ந்த காற்று வீசும் மிதமான தட்பவெப்பநிலையுள்ள பகுதிகளுக்கு ஏற்றச் சிறப்பான பயிர். உடுமலைப்பேட்டை பகுதி மிதமான தட்பவெப்ப நிலையுள்ள இடம். அங்கே தாராளமா அத்தி மரச் சாகுபடி செய்யலாம்’னு சொன்னாங்க. கூடவே சில தொழில்நுட்ப ஆலோசனைகளும் கொடுத்தாங்க. ஊருக்கு வந்ததும், வீட்ல பேசினேன். அவங்களும் ஆதரவும் ஊக்கமும் கொடுத்தாங்க. உடனே நடவுல இறங்கிட்டேன்’’ என்றவர், அத்தியைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இடுபொருள்..., நாட்டு மாட்டுடன்...
இடுபொருள்..., நாட்டு மாட்டுடன்...

திம்பா அத்தி

“ஏற்காடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒரு செடி 200 ரூபாய் விலையில வாங்கிட்டு வந்தேன். ஒரு ஏக்கர் ஆறு சென்ட் நிலத்துக்கு 88 செடிகள் தேவைபட்டுச்சு. நான் நடவு செஞ்சது `திம்பா’ என்ற ரகம். அத்தி மரத்துக்குத் தண்ணி அதிகம் தேவைப்படும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு செடிக்கும் 120 லிட்டர் தண்ணி கொடுக்கணும். தண்ணி சரியா கொடுக்கலைன்னா, செடிகள்ல இருக்கும் பிஞ்சுக உதிர்ந்து போகும். இலைகளும் செடியில தங்காது. இதுலதான் ரொம்ப கவனமா இருக்கணும். அக்கம் பக்கம் செழிப்பான வனப்பகுதியா இருக்கறதால இங்கே அத்தி செழிப்பா வளருது. நடவு செஞ்ச மூணாம் வருஷத்துல இருந்து காய்க்க ஆரம்பிக்கும். நாலாம் வருஷம் குடைபோலப் படரும் கிளைகளைக் கவாத்து செய்யணும். ஆரம்பத்துல செடியா இருந்தாலும் அஞ்சு வருஷ முடிவுல அது மரமாக வளர்ந்து 20 வருஷம் வரைக்கும் சிறப்பான மகசூலைக் கொடுக்கும்’’ என்றவர் விற்பனை வாய்ப்புகள்குறித்துப் பேசினார்.

‘‘நடவு செஞ்ச மூணாம் வருஷத்துல இருந்து காய்க்க ஆரம்பிக்கும். பிறகு 20 வருஷம் வரைக்கும் சிறப்பான மகசூலைக் கொடுக்கும்.’’

ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம்!

“அதிக மருத்துவ குணமும், அற்புதமான சுவையும் கொண்ட அத்திப்பழ விற்பனையில எந்தப் பிரச்னையும் இல்லை. பக்கத்து நகரங்கள்ல இருக்கிற பழக்கடைக்காரங்களே வாங்கிக்கிறாங்க. கடையில கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகுது. என்கிட்ட கிலோ 100 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஒரு மரத்துல இருந்து மாசம் குறைஞ்சபட்சம் 1,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். என்கிட்ட இருக்கும் 88 மரங்கள்ல இருந்து மாச வருமானமா 88,000 ரூபாய் கிடைக்குது.

வருஷம் முழுக்கக் காய்க்கும்; ஆனாலும் 10 மாசம்தான் சராசரி மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 8,88,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். தினமும் ரெண்டு ஆள்கள் தேவைப்படும். ஆள்கூலி 300 ரூபாய். அதுக்கு மாசம் 18 ஆயிரம் ரூபாய் ஆகுது. பழங்களைக் கடைகளுக்குக் கொண்டுபோற போக்குவரத்துச் செலவு மாசம் 10 ஆயிரம் ரூபாய் ஆகிடுது. மண்புழு உரம், தொழுவுரம் இதர செலவுன்னு 10 ஆயிரம் ரூபாய் செலவாகிடும். மொத்தம் மாசத்துக்கு 38 ஆயிரம் ரூபாய் செலவு. செலவுபோக, 5,00,000 ரூபாய் லாபமாக நிக்கும்.

நடவுக்கு முன்பாக சோதனை முக்கியம்!

இப்போதுதான் இரண்டாவது போகம். மரங்கள் வளர வளர வருங்காலத்துல ஒரு மரத்துல இருந்து ஒருநாள்விட்டு ஒருநாள் ரெண்டு கிலோ பழங்கள் கிடைக்கும். அதாவது மாசம் 20 கிலோ கிடைக்கும். இப்போ கிடைக்கிறதைவிட வருமானம் ரெட்டிப்பாகும்’’ என்றவர் இறுதியாக, ‘‘மலைச்சாரல் இருக்கும் பகுதிகள்லதான் இந்த மகசூல் கிடைக்கும்கிறதை கவனத்துல வெச்சுக்கணும்.

எல்லாப் பகுதிகள்லயும் இதே மகசூல் கிடைக்காது. ஏற்காடு, பொள்ளாச்சி, கம்பம், தென்காசி, ஒட்டன்சத்திரம் போன்ற ஈரக்காற்று வீசும் மேற்குத் தொடச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் சிறப்பாக வளரும். மற்ற பகுதி விவசாயிகள் ஓரிரு கன்றுகளை அவங்க பகுதியில நடவு செஞ்சு பார்த்துட்டு நல்ல பலன் இருந்தால் சாகுபடியில இறங்கலாம்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஜெகதீஷ், செல்போன்: 99422 50143

இயற்கை வேளாண் கூட்டமைப்பு

கார்த்திக், மணியரசு, நித்தியானந்தம் போன்ற முன்னோடி விவசாயிகளுடன் இணைந்து ‘நலவிதி’ இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு என்ற பெயரில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார் ஜெகதீஷ். 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக இருக்கும் இந்தக் கூட்டமைப்பு சார்பில், ‘மாதம் ஒரு மாலைப்பொழுது’ என்ற தலைப்பில் மாதந்தோறும் ஒரு பண்ணையில் கூடி, ரசாயன விவசாயிகளை அழைத்து இயற்கை வேளாண்மை குறித்து வகுப்பெடுத்துவருகிறார்கள்.

அத்திச் சாகுபடி

த்திச் சாகுபடி பற்றி ஜெகதீஷ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக...

நடவுக்குத் தயார் செய்த நிலத்தில் செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை 23 அடி இடைவெளியில் குழியெடுக்க வேண்டும். மூன்றடி ஆழ, அகலத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ தொழுவுரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து நிரப்ப வேண்டும்.

வேப்பம் பிண்ணாக்கு வேர் தொடர்பான நோய்களைத் தடுக்கும். தொழுவுரம் இட்ட குழிகளில், இரண்டடி உயரம்கொண்ட அத்தி மரக்கன்றுகளை நடவுசெய்து, மேல் மண்ணைக் கொண்டு குழியை மூட வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு குழியைச் சுற்றிலும் வேளாண் கழிவுகளைக்கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும். களைச்செடிகளைக் கட்டுப்படுத்தவும், மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் மூடாக்கு அவசியம். செடிகளுக்கு வாய்க்கால் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது. எனவே, சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும்.

அத்திச் செடிகளுக்குப் பெரும்பாலும் நோய்த்தாக்குதல் இருக்காது. அப்படியே வந்தாலும், மூலிகைப் பூச்சிவிரட்டி பயன்படுத்தித் தடுக்கலாம். வாரம் ஒரு முறை பஞ்சகவ்யாவும் அமுதக்கரைசலும் மாற்றி மாற்றிக் கொடுத்துவந்தால், செழிப்பான இலைகளுடன், வளமான காய்களுடன் சிறப்பாக வளரும் அத்தி. நான்காவது ஆண்டு முதல் அறுவடை செய்யலாம். ஒருநாள்விட்டு ஒருநாள் பறிக்கலாம். மாதம் ஒன்றுக்கு 10 முதல் 15 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து சராசரியாக மாதம் 10 கிலோ மகசூல் கிடைக்கும்.

அள்ளிக்கொடுக்கும் அத்தி! - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்!

தென்னையில் மூடாக்கு

மூடாக்கின் மகிமை பற்றிப் பேசும் ஜெகதீஷ், “தென்னை மரங்களுக்கு அதன் கழிவுகளே நல்ல உரம். அதனால மரத்துல இருந்து விழும் காய்ஞ்ச மட்டை, பாளைகளை மரங்களைச் சுத்தி மூடாக்காகப் போட்டுடுறோம். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 110 கிலோ கழிவு கிடைக்குது. அதை மூடாக்குப் போட்டு, நல்லா நனையுற மாதிரி பஞ்சகவ்யா பாசனம் செஞ்சா போதும். கழிவுகள் மட்கி தென்னைக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். இயற்கை விவசாயத்துக்கு மாறின பிறகு, ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 142 தரமான தேங்காய்கள் கிடைக்குது. அதுக்கு முன்னே 72 காய்கள்தான் கிடைச்சிட்டு இருந்தது’’ என்கிறார்.

நம்மாழ்வார் கொடுத்த ஆலோசனை

‘‘என்னோட பண்ணைக்கு ஒரு முறை ஐயா நம்மாழ்வார் வந்திருந்தார். பண்ணை முழுக்கச் சுற்றிப் பார்த்தவர், ‘தென்னை விவசாயம் மட்டும்தான் செய்யறீங்க. தேங்காய் மட்டும்தான் வருமானமா இருக்கு. அதனால, உங்க தோப்புல விளையுற தேங்காய்கள்ல ஒரு பகுதியைக் கொப்பரையா மாத்துங்க. சின்ன அளவுல செக்கு அமைச்சு இயற்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தி செஞ்சு விற்கலாம்’னு யோசனை சொன்னார்.

அவர் சொன்னபடியே சிறிய அளவுல செக்கு இயந்திரம் அமைச்சு, ரெண்டு வருஷமா தேங்காய் எண்ணெய் உற்பத்தி செஞ்சு விற்பனை செய்யறோம். இந்த விஷயத்தை ஐயாகிட்ட சொல்ல நினைச்சிருந்தேன்” என்றார் நெகிழ்ச்சியோடு.

சீதோஷ்ணநிலை முக்கியம்!

த்திச் சாகுபடி தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தடியன்குடிசைத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் தங்க செல்வபாய், ‘`அத்திச் சாகுபடிக்கு சீதோஷ்ணம் முக்கியம். ஆண்டுக்கு 1,200 மி.லி மீட்டர் மழையளவு, காற்றில் 60-70 சதவிகித ஈரப்பதமுள்ள பகுதிகளில் இது சிறப்பாக வளரும். மலைப் பகுதிகள், மலையடிவாரப் பகுதிகளில் இதைச் சாகுபடி செய்யலாம். சமவெளிப் பகுதிகளில் காய் சிறுத்துவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே சமவெளிப் பகுதிகளில் வளர்க்க விரும்புபவர்கள், ஓரிரு மரங்களை நடவு செய்து சோதனை செய்து பார்த்து, அதன் பிறகு நடவு செய்வது நல்லது’’ என்றார்.

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், தொலைபேசி: 04542 224225.