Published:Updated:

களைகட்டும் கசப்பில்லாத பழுபாகற்காய் விற்பனை... விலையேற்றத்திலும் வாங்க அலைமோதும் மக்கள்!

பழுபாகற்காய்
பழுபாகற்காய்

இந்தப் பழுபாகற்காய் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டும்தான் விளையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில்  இந்த சீஸனில் கிடைக்கும் கசப்பு தன்மையில்லாத பழுபாகற்காய் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர்.

கோடியக்கரையில் 25 சதுர கி.மீ பரப்பளவில் பசுமை மாறாக்காடுகள் உள்ளன. இந்தக் காட்டில் 154 மூலிகை செடிகள் உட்பட 271 வகையான தாவரங்கள் உள்ளன. இதில் பலா, நாவல், கருந்துவரை, வாசா, காசான் போன்ற மரங்களும் உள்ளன. இந்தக் காட்டில் 17 சதவிகித மரங்களும் 43 சதவிகிதம் மூலிகைகளும் 25 சதவிகிதம் புதர்களும் 16 சதவிகிதம் கொடிகளும் உள்ளன.

பழுபாகற்காய்
பழுபாகற்காய்

கொடி வகையைச் சேர்ந்த பழுபாகற்காய் என்றழைக்கப்படும் கசப்பில்லாத பாகற்காய் அதிகளவில் இயற்கையாக இந்தக் காடுகளில் விளைந்து வருகின்றது. 

இந்தப் பாகற்காய் விதை மூலம் உற்பத்தி செய்யாமல் ஆண், பெண் கிழங்கு எனப்படும் கிழங்கின் மூலம் பரவுகிறது. இந்தப் பாகற்காய்களை முன்பெல்லாம் அங்கு வசிக்கும் ஆதிவாசிகள் காட்டுக்குள் சென்று பறித்து வெளியில் விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் இந்தப் பாகற்காய்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் அங்குள்ள பறவைகளுக்குப்  பயன்படுத்தும் வகையில் பாதுகாத்து வருகின்றனர்.

இப்படி காட்டிலேயே விளையும் பழுபாகற்காயைப் பல ஆண்டுகளாக வேதாரண்யம் பகுதியிலுள்ள கருப்பம்புலம், கத்தரிப்புலம், செம்போடை ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் காட்டிலிருந்து இந்தப் பழுபாகற்காய் விளையும் ஆண், பெண் கிழங்குகளை எடுத்து வந்து பயிரிட்டு அதிகளவில் விளைவித்து வருகின்றனர். இந்தப் பாகற்காய் பார்ப்பதற்கு பலா பிஞ்சு போல் காட்சியளிக்கிறது. இந்தப் பழுபாகற்காயை இறால், மாமிசத்துடன் சேர்த்து அசைவ பிரியர்கள் சமைத்து உண்பார்கள். சைவ பிரியர்களும் இதை சாம்பார் மற்றும் வறுவல் செய்து சாப்பிடுகிறார்கள். இதை இந்தப் பகுதியிலிருந்து வெளியூரில் வாழும் தங்களது உறவினர்களுக்கு பழுபாகற்காயைக் கொடுத்து அனுப்புகின்றனர். கசப்பில்லாத இந்தப் பழுபாகற்காய் வேதாரண்யம் காய்கறிக் கடைகளில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பழுபாகற்காய் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டும்தான் விளையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பழுபாகற்காய்
பழுபாகற்காய்

காடுகளில் இயற்கையாக விளையும் பழுபாகற்காய் மிகுந்த ருசியானது. அது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், தற்போது விவசாயிகள்  உற்பத்தி செய்யும் பழுபாகற்காய் தோட்டத்துக்கு ரசாயன  உரங்கள் பயன்படுத்துவதால் அது இயற்கை தன்மையை இழந்துவிட்டது.  இயற்கைச் சீற்றத்தால் கோடியக்கரை வனப்பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் பழுபாகற்காய் கொடிகளும் அழிந்துவிட்டன. இதனால் பழுபாகற்காய் வரத்து மிகக் குறைவாக உள்ளது. கிலோ ரூ.120 என விலை ஏற்றமாக இருந்தாலும் பொதுமக்கள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு