Published:Updated:

வாழை + தென்னை + பாக்குக் கூட்டணி! - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒய்யாரமாக வளர்ந்து நிற்கும் வாழைமரங்களுடன் ராமசாமி
ஒய்யாரமாக வளர்ந்து நிற்கும் வாழைமரங்களுடன் ராமசாமி

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி
ந்தையில் எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும் பழங்களில் முக்கியமானது வாழைப்பழம்.

இதில், பல ரகங்கள் இருந்தாலும் ரஸ்தாளி, மொந்தன், கதலி, பூவன், நாடன் ஆகிய ரகங்கள்தான் அதிகமாக விற்பனையாகின்றன. அதனால், வாழை விவசாயிகள் பலரும் இந்த ரகங்களை விரும்பிச் சாகுபடி செய்துவருகிறார்கள். அந்தவகையில், கதலி, நேந்திரன், நாடன் வாழையைத் தென்னைக்கு ஊடுபயிராகப் பயிரிட்டு லாபம் ஈட்டிவருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், வரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது ராமசாமி வாத்தியார் தோட்டம். அரசுத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வுக்குப் பிறகு முழு நேர விவசாயியாக மாறிவிட்டார். 80 வயதிலும் தனது ஆறு ஏக்கர் பூமியில் நேந்திரன், கதலி, நாடன் வாழைகளையும், தென்னை, பாக்கு போன்றவற்றையும் பயிரிட்டுவருகிறார் ராமசாமி.

தோட்டத்துக்குள் நடந்தபடியே ராமசாமியிடம் பேசினோம். “நாங்க பாரம்பர்யமா விவசாயக் குடும்பம். நான் படிச்சு முடிச்சு ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன். வேலையில இருக்கும்போதே விவசாயம் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். அப்போ ரசாயன விவசாயம்தான். வேலையிலிருந்து ஓய்வு கிடைச்ச பிறகு, முழு நேரமா விவசாயத்தைப் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ கிடைச்ச நேரங்கள்ல அரசு நடத்துற வேளாண் விழாக்கள்ல கலந்துகிட்டேன். அதுபோக, நம்மாழ்வார் ஐயாவோட பேச்சுகளைக் கேட்டேன்; அவரோட கட்டுரைகளைப் படிக்க ஆரம்பிச்சேன். அது மூலமாத்தான் மண்ணை எவ்வளவு பாழாக்கி வெச்சிருக்கோம்னு புரிஞ்சுது. அதனால ரசாயன உரங்களைத் தவிர்த்துட்டு இயற்கை விவசாயம் பக்கம் என்னோட கவனம் திரும்ப ஆரம்பிச்சுது. அதுக்குப் பிறகு, இயற்கை விவசாயக் கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு அதிகமா தெரிஞ்சுக்கிட்டேன். 2013-ம் வருஷம் முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். அப்போதிருந்து இப்போவரைக்கும் இயற்கை விவசாயம்தான்.

2015-ம் வருஷம் சான்றளிப்புத்துறையில இருந்து இயற்கை விவசாயச் சான்றிதழ்கூட வாங்கிட்டேன். இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் ஒரு விஷயம் தெரிய ஆரம்பிச்சுது. இயற்கை தானாவே சரி பண்ணிக்கிற விஷயத்தை, நாம் ரசாயனம் போட்டுச் சரிசெய்ய முயற்சி செஞ்சிருக்கோம்னு புரிஞ்சுது.

இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் ஒரு விஷயம் தெரிய ஆரம்பிச்சுது. தென்னைக்கு நடுவே நாடன், கதலி ரகங்களை ஊடுபயிராக நடவு செஞ்சிருக்கேன்.

மொத்தம் இருக்கிற ஆறு ஏக்கர்ல, நான்கு ஏக்கர் தென்னை, ஒரு ஏக்கர் கதலி, ஒரு ஏக்கர் நேந்திரன் வாழை இருக்கு. நேந்திரன் வாழைக்குள்ள ஜி.9., கதலி வாழைகளை ஊடுபயிரா நடவு செஞ்சிருக்கேன். தென்னைக்கு ஊடுபயிரா ரெண்டு ஏக்கர் நேந்திரன், ஒரு ஏக்கர் கதலி, ஒரு ஏக்கர் பாக்குனு பயிர் செஞ்சிருக்கேன். இது எல்லாத்துலயும் மகசூல் கிடைக்குது.

ஒய்யாரமாக வளர்ந்து நிற்கும் வாழைமரங்களுடன் ராமசாமி
ஒய்யாரமாக வளர்ந்து நிற்கும் வாழைமரங்களுடன் ராமசாமி

நிலத்துல நவதானியங்கள், எண்ணெய் வித்துகள்னு ரெண்டு முறை பயிர் செஞ்சு நல்லா உழவோட்டுவேன். அதுக்குப் பிறகுதான் நிலத்தை மட்டப்படுத்தி, பார்பிடிச்சுப் பயிர்களை நடுவேன். வாழைக்கன்று நடும்போது ரெண்டு கன்றுகளுக்கிடையே ஆறடி இடைவெளி விட்டு நடவு செஞ்சிருக்கேன். அதேபோல ஒரு வரிசைக்கும், இன்னொரு வரிசைக்கும் இடையே ஆறடி இடைவெளி விட்டிருக்கேன். ஒரு ஏக்கருக்கு 1,200 கன்றுகளை நடுவேன். எப்படியும் 200 கன்றுகள் வராம போயிடும். மீதம் 1,000 முளைச்சு மரங்களா வளர்ந்துடும்.

வாழையிலும் தென்னையிலும் களை எடுத்தவுடனே அதை எடுத்து மூடாக்கு மாதிரி போட்டுருவேன். மாட்டுச் சாணத்துல அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ், வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து, மரத்துக்கு 500 கிராம் வீதம் உரமாகக் கொடுப்பேன். பூப்பிடிக்கிற சமயங்கள்ல பஞ்சகவ்யா தெளிப்பேன். மத்தபடி எந்த உரத்தையும் கொடுக்குறதில்லை. தென்னைக்கு நடுவே நாடன், கதலி ரகங்களை ஊடுபயிராக நடவு செஞ்சிருக்கேன். ஊடு பயிர்ங்கிறதால, எட்டடி இடைவெளியில மூணு வரிசைதான் நடுவேன்” என்றவர், வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். “வாழை நட்டு 12 மாசம் ஆகுது. தாய் மரங்கள், பக்கக் கன்றுகள்னு எல்லாத்துலயும் தேவையைப் பொறுத்து, தார்களை அறுவடை செஞ்சு விற்பனை செய்யறேன். இதுவரைக்கும் ஒரு ஏக்கர் கதலியில 900 தார் அறுவடை செஞ்சிருக்கேன்.

‘‘வாழையிலும், தென்னையிலும் களை எடுத்தவுடனே அதை எடுத்து மூடாக்கு மாதிரி போட்டுருவேன். பூப்பிடிக்கிற சமயங்கள்ல பஞ்சகவ்யா தெளிப்பேன். மத்தபடி எந்த உரத்தையும் கொடுக்குறதில்லை.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு தார் ஆறு கிலோ எடையிருக்கும். கிலோ 35 ரூபாய்னு விற்பனை செஞ்சிருக்கேன். ஆக, மொத்தம் 1,89,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் நேந்திரன்ல 900 தார் அறுவடை செஞ்சிருக்கேன். ஒரு தார் எட்டு கிலோ எடையிருக்கும். கிலோ 35 ரூபாய்னு விற்பனை செய்யறேன். ஆக, மொத்தம் 2,52,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு.

சொட்டுநீர்ப் பாசனக் குழாய், வரப்புப் பயிராக மலைவேம்பு
சொட்டுநீர்ப் பாசனக் குழாய், வரப்புப் பயிராக மலைவேம்பு

இதுபோக, தென்னைக்கு ஊடுபயிரா மூணு ஏக்கர்ல நேந்திரன், கதலி வாழைகளும், ஒரு ஏக்கர்ல பாக்கும் இருக்கு. ஊடுபயிர்ங்கிறதால கம்மியான அளவுல மட்டும்தான் நடவு செய்ய முடியும். அதனால 700 கன்றுகள் நடவு செஞ்சேன். அதுல 600 மட்டும்தான் நல்லா வளர்ந்துச்சு. நாடன் ஒரு ஏக்கர்ல 600 தார். ஒரு தார் 10 கிலோ வீதம் 6,000 கிலோ மகசூல் கிடைச்சுது. கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 1,80,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதேபோல ஒரு ஏக்கர் நேந்திரன்ல 600 தார். ஒரு தார் எட்டு கிலோ வீதம் 4,800 கிலோ மகசூல் கிடைச்சுது. கிலோ 35 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 1,68,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுதவிர, ஒரு ஏக்கர் கதலியில 600 தார். ஒரு தார் ஆறு கிலோ வீதம் 3,600 கிலோ மகசூல் கிடைச்சுது. கிலோ 35 ரூபாய்னு விற்பனை செஞ்சப்போ 1,26,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது.

நாட்டு மாடுகள், அறுவடையான வாழை
நாட்டு மாடுகள், அறுவடையான வாழை

மொத்தமா சொல்லணும்னா நேந்திரன்ல 4,20,000 ரூபாயும், கதலியில 3,15,000 ரூபாயும், நாடன்ல 1,80,000 ரூபாயும் வருமானம்னு மொத்தமா வாழையில 9,15,000 ரூபாய் கிடைச்சுது. இதுபோக நாலு ஏக்கர்ல 275 தென்னை மரங்கள் இருக்கு. போன வருஷம் அஞ்சு வெட்டு நடந்தது. ஒரு வெட்டுக்கு 3,500 காய்கள் கிடைச்சுது. மொத்தமா அஞ்சு வெட்டுக்கு 17,500 காய்கள் கிடைச்சுது. ஒவ்வொரு காயும் 500 கிராம் எடைனு கணக்குவெச்சா, 8,750 கிலோ அளவுல தேங்காய் கிடைச்சிருக்கு. கிலோ 20 ரூபாய்னு விற்பனை செஞ்சது மூலமா 1,75,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. போன வருஷம் 400 பாக்கு மரங்கள்ல ரெண்டு அறுவடை நடந்துச்சு. மொத்தமா 30 மூட்டை (50 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சுது. கிலோ 25 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 37,500 ரூபாய் வருமானமா கிடைச்சுது.

மொத்தமா ஆறு ஏக்கர்ல 11,27,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல ஒரு ஏக்கருக்கு ஆள்கூலி, இடுபொருள், போக்குவரத்து, கன்றுகள்னு 1,00,000 ரூபாய் வீதம் ஆறு ஏக்கருக்கு 6,00,000 ரூபாய் செலவாகிடும். அதுபோக 5,27,500 ரூபாய் லாபமா நிக்கும். இதுபோக ஊடுபயிரா காய்கறிகள், வாழை இலைனு தனியா வருமானம் வந்துக்கிட்டிருக்கு.

செயற்கை விவசாயத்துக்கும், இயற்கை விவசாயத்துக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கு. மக்களுக்குத் தரமான பொருள்களைக் கொடுக்கிறோம்கிற மன நிறைவு என்னை நிம்மதியா வெச்சிருக்கு” என்று நம்பிக்கையுடன் சொல்லி விடைகொடுத்தார், ராமசாமி.

தொடர்புக்கு, ராமசாமி, செல்போன்: 94424 25799.

இப்படித்தான் வாழைச் சாகுபடி!

ரு ஏக்கரில் இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்து ராமசாமி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

வாழை + தென்னை + பாக்குக் கூட்டணி! - 6 ஏக்கர், ரூ.11 லட்சம்!

தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஆறடி இடைவெளியில் இரண்டடி நீள, அகல, ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழிக்கு ஒரு கிலோ மாட்டு எருவைப் போட வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து, அந்தக் கரைசலில் வாழைக் கட்டைகளை (விதைக்கிழங்கு) நனைத்துக் குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் குழிகளைச் சுற்றி மிதித்துவிட்டு, தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். 15-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை பாசன நீரில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் கலந்துவிட வேண்டும்.

75-ம் நாள் ஒவ்வொரு வாழைத்தூரிலும் 10 கிலோ எரு போட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 85-ம் நாள் ஒவ்வொரு தூரிலும் கைப்பிடியளவு வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். 90-ம் நாள், மண்ணைக் கொத்தி, களைகளை அகற்ற வேண்டும். 105-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டு லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டு லிட்டர் இ.எம் கரைசல், 500 மி.லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து, இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 120-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 500 மி.லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 130-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை 130 லிட்டர் தண்ணீருக்கு மூன்று லிட்டர் பஞ்சகவ்யா, மூன்று லிட்டர் இ.எம் கரைசல், ஒரு லிட்டர் மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளித்துவர வேண்டும். எட்டு மாதங்கள் வரை தெளித்தால் போதும்.

9-ம் மாதம் குலைவிடத் தொடங்கியதும், 100 லிட்டர் தண்ணீரில் மூன்று லிட்டர் பஞ்சகவ்யா, மூன்று லிட்டர் இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து குலைகள்மீது தெளிக்க வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில் குலைகள்மீது மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். தொடர்ந்து பக்கக்கன்றுகளில் தரமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிட வேண்டும். 10-ம் மாதத்துக்குப் பிறகு முற்றிய குலைகளை அறுவடை செய்யலாம்.

கூன்வண்டு தாக்குதல்!

``நேந்திரனில் கூன்வண்டு தாக்குதல் பிரச்னை இருக்கிறது. அதற்கு ஊறல் தொட்டியில், தலா இரண்டு கிலோ எருக்கன் இலை, கருஊமத்தை இலை, கருநொச்சி பாசான் இலை ஆகியவற்றை மூட்டைக் கட்டிப் போட்டுவிடுவேன். அது ஒருபக்கம் ஊறிக்கொண்டிருக்கும். அந்தத் தண்ணீரை வழைக்கன்றுகளுக்குப் பாய்ச்சுவேன். இதனால், கூன்வண்டு பிரச்னை எங்கள் வாழைத்தோட்டத்தில் வந்ததில்லை. கூன்வண்டு மட்டுமல்ல, வேர்ப்புழு உட்பட எந்த நோய்த் தாக்குதலும் இல்லை.

தண்டு துளைப்பானுக்கு வேப்பங்கொட்டை!

யற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை பூச்சி, நோய்த்தாக்குதல் குறைவுதான் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூச்சிவிரட்டி தெளிப்பது நல்லது. வாழையில் குலைதள்ளும் நேரத்தில் தண்டு துளைப்பான் தாக்குதல் இருக்கும். தண்டில் துளை ஏற்பட்டு அதில் பிசின் வடிவது, தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறி. குலைதள்ளும் பருவத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, ஒரு வார இடைவெளியில் மூன்று முறை தெளித்துவந்தால், தண்டு துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்கலாம். மூன்று கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இடித்து, துணியில் கட்டி, அதை 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாள்கள் வரை ஊறவைத்து வடிகட்டினால், வேப்பங்கொட்டைக் கரைசல் தயாராகிவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு