Published:Updated:

600 வாழை மரங்கள், ரூ.1,58,000 வருமானம்... மூன்றாம் மறுதாம்பிலும் வாரிக்கொடுக்கும் வாழை!

தென்னையில் ஊடுபயிராக வாழை
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னையில் ஊடுபயிராக வாழை

படிச்சோம் விதைச்சோம்

தூத்துக்குடி மாவட்டம் மேலத் திருச்செந்தூர் அருகிலுள்ள காந்திபுரத்தில் உள்ளது மருத்துவர் சிவகுமாரின் தோட்டம். காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப் படுத்திக் கொண்டதும் உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார். ‘‘தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிதான் என்னோட சொந்த ஊரு. தாத்தா, அப்பா, நான், என் மகன் என 4 தலைமுறையா மருத்துவர் தொழில் பார்த்துட்டு இருக்கோம். உடன்குடியில ‘கற்பகம் மருத்துவமனை’யை நடத்திட்டு வர்றேன்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண் டவர், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

காய்கறிப் பயிர் செய்திருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றவர் தொடர்ந்து பேசினார். ‘‘மருத்துவம் பார்த்தாலும் விவசாயத்து மேல ஆர்வம் அதிகம். எந்த ஊருக்குப் போனாலும் வயல்வரப்பு, தென்னந்தோப்பு, பழத் தோட்டங்களைப் பார்த்து ரசிப்பேன். நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம்னு நினைச்சு, 10 வருஷத்துக்கு முன்ன இந்த இடத்தை வாங்குனேன். மொத்தம் 8 ஏக்கர். வாங்கும்போது 80 தென்னை மரங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயத்துல ஆர்வம் இருந்துச்சே தவிர, விவசாயத்தைப் பத்தி முழு விவரம் தெரியல.

உள்ளூர் விவசாயிககிட்ட, ‘இந்த மண்ணுல என்ன பயிர் சாகுபடி செய்யலாம்’னு கேட்டேன். ‘கிணத்துத் தண்ணி செழிப்பா இருக்குறதுனால தென்னை, வாழைச் சாகுபடி செய்யலாம்’னு சொன்னவங்க, ‘எந்தப் பயிரை சாகுபடி செஞ்சாலும் உரம் போடாம, மருந்தடிக்காமச் செய்ய முடியாது’ன்னு அடிச்சு சொன்னாங்க. எனக்கு ஆரம்பத்துல இருந்தே ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மேல ஈடுபாடு இல்ல. மகசூல் மட்டும் போதும்னு நினைக்கிறவங்கதான் ரசாயனத்தைத் தேடுவாங்க. நான், மகசூலை மட்டும் பார்க்காம, மண்ணோட வளத்தையும் பாதுகாப்பையும் யோசிச்சேன்.

பண்ணையில் டாக்டர் சிவகுமார்
பண்ணையில் டாக்டர் சிவகுமார்

இயற்கை முறையில எப்படி விவசாயம் செய்யலாம்னு தேடல்ல இறங்கினப்போதான் பசுமை விகடன் எனக்கு அறிமுகமாச்சு. ஒரு புத்தகக் கடையில வாழைக்குலை அட்டைப்படம் போட்ட பசுமை விகடன் தொங்குச்சு. எங்க பகுதியில பரவலா வாழைச் சாகுபடி செய்யுறதுனால, வாழையைப் பத்தி தெரிஞ்சுக்க அதை வாங்கிப் பொறுமையாப் படிச்சுப் பார்த்தேன். ‘மண் வளம், இயற்கை இடுபொருள்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதலுக்கான தீர்வுகள், விற்பனை வாய்ப்பு’னு இயற்கை விவசாயத் தகவல்கள் ததும்பிக் கிடந்துச்சு.

படிக்கும்போதே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. தொடர்ச்சியா ‘பசுமை விகடனை’ வாங்க ஆரம்பிச்சேன். அதுமட்டுமல்லாம, மகசூல் கட்டுரைகளோட முடிவுல அந்த விவசாயியோட போன் நம்பரும் போட்டிருந்ததால சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற உதவியா இருந்துச்சு. நம்மாழ்வார் ஐயா, சுபாஷ் பாலேக்கரை எனக்கு அறிமுகப்படுத்தியதும் பசுமை விகடன்தான்’’ என்றவர், தென்னை மர நிழலில் ஒதுங்கியபடி பேச்சை தொடர்ந்தார்.

‘‘அந்த வருஷமே நிலத்துல தொழுவுரம் போட்டு, நாலஞ்சு தடவ உழுதேன். முதல்லயே அகலக்கால் வைக்கக் கூடாதுன்னு, 50 சென்ட்ல மட்டும் நாடன் ரக வாழையைச் சாகுபடி செஞ்சேன். ஓரளவு மகசூல் கிடைச்சுது. ஆனா, மார்க்கெட்ல கேட்குற விலைக்குக் கொடுக்குற நிலைமை. அந்த நேரத்துல, ‘ஒரே ரக வாழையைச் சாகுபடி செய்தால் உரிய லாபம் கிடைக்காமல் போகலாம். பல ரக வாழையைச் சாகுபடி செய்யும்போது தேவையைப் பொறுத்து விற்பனை செய்வதால் நஷ்டமில்லாமல் கணிசமான வருமானம் கிடைக்கும்’னு ஒரு கட்டுரையில் வாழை விவசாயி ஒருவர் சொன்னதைப் படிச்சேன். பல ரக வாழைகளைச் சாகுபடி செய்யலாம்னு யோசனை வந்துச்சு.

இயற்கை இடுபொருள்களுடன்
இயற்கை இடுபொருள்களுடன்

50 சென்ட்ல கற்பூரவள்ளி, நாடன், சக்கை, பூலாஞ்செண்டு, கதலி என ஒவ்வொன்னுலயும் 100 வாழை வெச்சேன். நல்ல விலை கிடைச்சுது. ‘மறு தாம்பு’லயும் வாழை வாரிக்கொடுக்கும்னு இன்னொரு கட்டுரையைப் படிச்சு மறுதாம்பு விட்டேன். அதுலயும் நல்ல மகசூல், விலை கிடைச்சுது. தென்னைக்கு ஊடுபயிரா வாழைச் சாகுபடி செய்யுறதும் அப்படித்தான். என்னோட ஒவ்வொரு புது முயற்சியும் பசுமை விகடன்ல படிக்குற கட்டுரைகள் அடிப்படையிலதான் இருக்கும்’’ என்றவர், தனது விவசாயம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இந்த 8 ஏக்கர் நிலமும் கரிசல் கலந்த உவர்மண் நிலம். அதுல 50 சென்ட் நிலத்துல 5 ரக வாழைகள் 3-வது தாம்பு அறுவடை நிலையில இருக்கு. 4 ஏக்கர் தென்னைக்குள்ளேயும் ஊடுபயிரா கற்பூரவள்ளி, சக்கை ரக வாழைகளைச் சாகுபடி செஞ்சிருக்கேன். 2 ஏக்கரில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல், சாத்துக்குடி, ஆரஞ்சுனு கலப்புப் பயிரா நட்டு ஒரு வருஷமாகுது. வீட்டுத்தேவைக்காக 50 சென்ட்ல குலசை கத்திரி, தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம், நிலக்கடலைச் சாகுபடி செஞ்சிருக்கேன். மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலம், ஏந்தன் சாகுபடிக்காகத் தயார்படுத்தி வெச்சிருக்கேன்” என்றவர், நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

‘‘இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுனாலதான் 3-வது தாம்பும் அருமையா வந்திருக்கு. ‘வாரிக்கொடுக்கும் வாழை’னு சொல்வாங்க.’’
600 வாழை மரங்கள், ரூ.1,58,000 வருமானம்... மூன்றாம் மறுதாம்பிலும் வாரிக்கொடுக்கும் வாழை!

வாழை வருமானம் ரூ.1,28,750

‘‘50 சென்ட்ல தனிப்பயிரா 500 வாழைகளும், 4 ஏக்கர்ல 320 தென்னைகளும் அதுல ஊடுபயிரா 2,000 வாழைகளும் இருக்கு. அதுல 100 வாழைகள் மட்டும் மறுதாம்பு மகசூல்ல இருக்கு. மீதமுள்ள 1,900 வாழைகள் அறுவடைக்கு வர இன்னும் 4 மாதங்கள் ஆகும். தனிப்பயிர், ஊடுபயிர்னு ஆக மொத்தம் 600 வாழைகள் 3-வது தாம்புல இருக்கு. போன முறை, ரெண்டாவது தாம்புல 600 வாழைகள் விற்பனையில, 350 வாழைத்தார்கள் ரூ.250-க்கும், 150 வாழைத்தார்கள் ரூ.275-க்கும், 100 வாழைத்தார்கள் ரூ.300-க்கும் விற்பனையாச்சு. அந்த வகையில மொத்தம் ரூ.1,58,750 வருமானமாக் கிடைச்சுது. ரெண்டாவது தாம்புங்கிறதுனால தொழுவுரம், பராமரிப்பு, இடுபொருள் செலவு மட்டும்தான். அந்த வகையில ரூ.30,000 செலவு கழிச்சா ரூ.1,28,750 லாபமாக் கிடைச்சுது.

14,000 காய்கள்... 1,12,000 ரூபாய்

4 ஏக்கர்ல உள்ள 320 தென்னை மரங்கள்ல இருந்து 45 நாளுக்கு ஒருதடவைன்னு வருஷத்துக்கு 7 முறை காய் வெட்டுறேன். ஒரு வெட்டுக்கு 2,000 காய்கள் வரை கிடைக்கும். 7 வெட்டுல 14,000 காய்கள் வரை கிடைக்கும். கிலோ கணக்குலதான் விற்பனை செய்றேன். ஒரு கிலோவுக்கு 2 அல்லது 3 காய்கள் நிக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரைக்கும் விலை போகும். சராசரியா ஒரு காய் 8 ரூபாய் கணக்குல விலை போகும். அந்த வகையில வருஷத்துக்கு ரூ.1,12,000 வரை தனி வருமானம் கிடைக்குது. ஊடுபயிரா வாழை போட்டிருக்கிறதுனால தென்னைக்குன்னு தனிப்பராமரிப்பு எதுவுமில்லை. திருச்செந்தூர், உடன்குடி சந்தையிலதான் வாழை, தேங்காயை சந்தைப்படுத்துறேன். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வாழைங்கிறதுனால தனி விலை கிடைக்கிறதில்ல. அதுக்காக, கிடைச்சது போதும்னு அடிமாட்டு விலைக்கும் விற்கிறதில்ல. விலை ரொம்பக் குறைவாப் போகும்போது எங்க மருத்துவமனையிலேயே விற்பனை செஞ்சிருக்கேன்.

இயற்கை முறையில சாகுபடி செஞ்சதுனால தான் 3-வது தாம்பும் அருமையா வந்திருக்கு. ‘வாரிக்கொடுக்கும் வாழை’னு சொல்வாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அது உண்மைதான். விவசாயத்துல என்னைச் சரியான பாதைக்கு அழைச்சுட்டு வந்து, வழிகாட்டிக்கிட்டே இருக்குறது பசுமை விகடன்தான். இயற்கை விவசாயத்துக்கான டிக்ஸ்னரியே ‘பசுமை விகடன்’தான்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு,

சிவகுமார்,

செல்போன்: 78718 27794.

தென்னையில் ஊடுபயிராக வாழை
தென்னையில் ஊடுபயிராக வாழை

இயற்கை வாழைச் சாகுபடி!

50
சென்ட் நிலத்தில் வாழைச் சாகுபடி செய்வது குறித்து, சிவகுமார் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

வாழைச் சாகுபடிக்கு அனைத்து வகை மண்ணும் ஏற்றது. ஆனால், வண்டல், கரிசல் மண்ணில் வாழையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நேந்திரன், ஏலக்கி ரகங்களுக்கு ஆடிப்பட்டமும், மற்ற வாழை ரகங்களுக்குப் புரட்டாசிப் பட்டமும் ஏற்றது. நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். முதல்முறை உழவு செய்யும்போதே 2 டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்ய வேண்டும். மூன்றாவது உழவுக்குப் பிறகு, வரிசைக்கு வரிசை 6 அடி, கன்றுக்குக் கன்று 6 அடி இடைவெளியில் முக்கால் அடி ஆழ, அகலத்தில் குழி எடுக்க வேண்டும். குழியை 3 முதல் 5 நாள்கள் வரை ஆற விடலாம். அதற்குள் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துவிடலாம்.

குழியின் மேல் மண்ணைத் தனியாகவும், தோண்டி எடுத்த மண்ணைத் தனியாகவும் வைக்க வேண்டும். குழிக்குள் கிழங்கு நடவு செய்த பிறகு, மேல் மண், குழி தோண்டிய மண் இரண்டையும் கலந்து குழியை மூட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட கிழங்குகள் ஒவ்வொன்றும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடையுள்ளதாக இருக்க வேண்டும். விதைக்கிழங்கின் தோலை நன்றாகச் சீவி விட வேண்டும். நடவுக்கு முந்தைய நாள் மாலை, 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி சூடோமோனஸ் கரைசலைக் கலந்து அதில் கிழங்குகளை நன்றாக முக்கி எடுத்து நிழலில் வைக்க வேண்டும். அதை மறுநாள் காலையில் நடலாம்.

இதனால், வேர் அழுகல், தண்டு அழுகல், பூஞ்சண நோய்கள் கட்டுப்படும். கிழங்கு நடவு செய்த அன்று உயிர் நீர் விட வேண்டும். மூன்றாவது நாள் குழிக்குள் காற்றுப் போகாமல் இருப்பதற்காகக் கிழங்கைச் சுற்றிலும் மண் அணைத்து, இறுக்கமாக மிதித்து விட வேண்டும். இதனால், வேரின் வளர்ச்சி நன்றாக இருக்கும். பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும். 15-ம் நாளிலிருந்து 20 நாள்கள் இடைவெளியில் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 3-வது மாதம் ஒரு கன்றுக்கு ஒரு கூடை மட்கிய தொழுவுரத்தைத் தூர்ப்பகுதியில் வைக்க வேண்டும். பிறகு, மாதம் ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமிலம் கலந்து சொட்டுநீர்க் குழாய் மூலம் விட வேண்டும். 1, 3 மற்றும் 5-வது மாதங்களில் களை எடுக்க வேண்டும். அந்தக் களையே வாழையைச் சுற்றி மூடாக்காகவும் போடலாம்.

தென்னைக்கு ஊடுபயிராக வாழையைச் சாகுபடி செய்யும்போது, வரிசைக்கு வரிசை, கன்றுக்குக் கன்று 10 அடி இடைவெளியில் மேலே சொன்ன முறையில் சாகுபடி செய்ய வேண்டும். தென்னைக்கு ஊடுபயிராகக் கற்பூரவள்ளி, சக்கை ரகங்கள் ஏற்றவை. மழைக்கு முன்பாக வாழைமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வாழை மடல்களை எடுத்து அந்தந்த வாழைகளுக்கு நடுவில் அரை அடி ஆழத்தில் போடலாம். இது மட்கி உரமாகிறது. தென்னை மரத்திலிருந்து கீழே விழும் மட்டைகளை அப்படியே தென்னைகளுக்கு மூடாக்காகப் போடலாம்.

இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் தூர்வெடிப்பு, இலைப்புள்ளி, வேர் அழுகல், தண்டுதுளைப்பான் போன்ற நோய்களின் பாதிப்பு இருக்காது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது மாதத்திலிருந்து 20 நாள் களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி இஞ்சி-பூண்டு-மிளகாய்க் கரைசல் கலந்து தெளிப்பது நல்லது. 3-வது மாதத்தில் வாழைக்கன்றின் இலைகள் மஞ்சள் நிறமாகவும், கன்று சுருங்கியும் காணப்பட்டால் அது வாடல்நோயின் அறிகுறி. இதைக் கவனிக்காமல் விட்டால், விதைக்கிழங்கு கரைந்து கன்று விழுந்துவிடும்.

இதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் 3 முதல் 5 மாதங்கள் வரை மாதம் ஒருமுறை 100 லிட்டர் தண்ணீரில் 500 கிராம் சூடோமோனஸ், 500 கிராம் நாட்டுச்சர்க்கரை கலந்து ஒருநாள் முழுவதும் வைத்திருந்து, செயலூட்டப்பட்ட சூடோமோனஸ் கரைசலாகப் பாசன நீருடன் கலந்துவிடலாம். பக்கக் கன்றுகளை அவ்வப்போது வெட்டி மூடாக்காகப் போடலாம். மறுதாம்பு விடுவதாக இருந்தால், வாழைக் குலை தள்ளியதற்கு எதிர்புறமுள்ள பக்கக் கன்றை மறுதாம்புக்காக விட்டுவிடலாம்.