Published:Updated:

இலை கருகுது... பழம் அழுகுது!

வாழை விவசாயி
பிரீமியம் ஸ்டோரி
News
வாழை விவசாயி

வேதனையில் துடிக்கும் வாழை விவசாயிகள்

‘விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கும் தடையில்லை’ என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், நடைமுறை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக சந்தைக்கு எடுத்துச் சென்ற விவசாயியை, மணிக் கணக்கில் காக்கவைத்திருக்கின்றனர் போலீஸார். இதனால் கடுப்பான விவசாயி அவ்வளவு காய்கறிகளையும் வீதியில் வீசிச் சென்ற வீடியோ, கடந்த வாரத்தில் வைரலானது. ‘`போக்குவரத்து வசதியின்மை, காவல்துறை கெடுபிடி உள்ளிட்ட பல காரணங்களால் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளோம்’’ என்று கண்ணீர் வடிக்கின்றனர் வாழை விவசாயிகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்துப் பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளையொட்டியுள்ள திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடை மருதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. வாழை இலை மற்றும் வாழைத்தார்களை மார்க்கெட்டுக்குக் கொண்டுபோய் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வோம். திருமண முகூர்த்தங்கள், திருவிழா சீஸன்களின்போது வியாபாரிகள் தோப்புக்கே வந்து கொள்முதல் செய்வார்கள்.

இலை கருகுது... பழம் அழுகுது!

இந்தப் பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கர் பரப்பில் வாழைமரங்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது. இதனால், வாழைத்தார் மற்றும் இலை விற்பனை முற்றிலுமாக நின்றுபோய்விட்டது. இலைகள் காய்ந்து சருகாகின்றன. காய்கள் மரங்களிலேயே பழுத்து அழுகத் தொடங்கிவிட்டன. நல்ல விளைச்சல் இருந்தும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை நினைத்து விவசாயிகள் வேதனையில் துடிக்கின்றனர். சில விவசாயிகள் வேறு வழியில்லாமல் பழுத்துவிட்ட வாழைத் தார்களை வெட்டி கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘தோட்டக்கலைத் துறை மூலம் விளைபொருள்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, வாகனங்கள் மூலம் மக்களிடம் நேரடியாக விற்பனைக்கு அனுப்பப்படும்’ என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதற்கான மாவட்டவாரியான தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்களுக்குத் தொடர்புகொண்டு பேசியபோது, ‘நீங்களே வெளி மாவட்டங்களுக்குச் சென்று விற்பனை செய்துகொள்ளும் வகையில் வாகன அனுமதி பாஸ் வாங்கித் தருகிறோம்’ என்கிறார்களே தவிர, அவர்கள் கொள்முதல் செய்ய முன்வரவில்லை.

இலை கருகுது... பழம் அழுகுது!

ஆனால், சில இடங்களில் வாழைத்தார்களை கொள்முதல் செய்வதுபோல் புகைப்படம் எடுத்து கணக்குக்காட்டிக்கொண்டார்கள். விவசாயி களுக்கு ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வேளாண்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை என்றால், மற்ற மாவட்டங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை” என்றார் வேதனையுடன்.

சுகுமாறன்
சுகுமாறன்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாழை விவசாயி ஜெகன், ‘‘நாலு ஏக்கர்ல வாழை சாகுபடி செஞ்சிருக்கேன். வாழை இலை விற்பனை மூலமா தினமும் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். ஊரடங்கால என்னோட வருமானம் மொத்தமா போயிருச்சு. இலையெல்லாம் மரத்திலேயே கருகுது... காய்கள் பழுத்து அழுகுது. தஞ்சாவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல இருக்கிற குளிர்பதனக் கிடங்கை தனியாருக்கு வாடகைக்கு விட்டிருக்காங்க. அதனால எங்களால அதையும் பயன்படுத்த முடியலை. எங்க நிலைமையைப் புரிஞ்சுக்காம அதிகாரிங்க அலட்சியம்காட்டுறதால, நாங்க பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியிருக்கோம். போர்க்கால அடிப்படையில அரசாங்கமே வாழைத்தார்களை கொள்முதல் செஞ்சுக்கணும். இல்லைன்னா, எல்லா விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கணும்’’ என்றார்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘விவசாயிகளையும் மொத்த விற்பனையாளர்களையும் இணைத்து விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். தஞ்சாவூரில் இரண்டு இடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன. ஆனால், அவை இரண்டும் குறைந்த கொள்ளளவுகொண்டவை. அதனால், அனைத்து விவசாயிகளும் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்’’ என்றனர்.

ஜெகன் - துரைக்கண்ணு
ஜெகன் - துரைக்கண்ணு

வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசினோம். ‘‘வாழை விவசாயிகள் எந்த வகையிலும் நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. போக்குவரத்துப் பிரச்னை தீர்ந்த பிறகு அவர்களின் கஷ்டங்கள் முழுமையாகத் தீர்ந்துவிடும்” என்றார்.

ம்... விவசாய அமைச்சரிடமிருந்து என்னவொரு பொறுப்பான பதில். போக்குவரத்து சீராவதற்குள் பழங்கள் அழுகாமால் இருக்குமா? இதை எங்கே போய்ச் சொல்லி அழுவது என்றுதான் தெரியவில்லை!