கட்டுரைகள்
Published:Updated:

மட்டி, செம்மட்டி, நீல ஜாவா - விவசாயிகளைக் கவர்ந்த வாழைத் திருவிழா!

பாரம்பர்ய நெல் விதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய நெல் விதைகள்

விவசாயத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தும் விதமாக இந்தத் திருவிழா அமைந்திருந்தது. விவசாயிகளுக்குப் புத்துணர்வும் பலவகை அனுபவங்களையும் கொடுத்தது.

உலகமயம், நகரமயம் என்று போய்க்கொண்டிருக்கும் சூழலில் நம் இயற்கை வளங்களையும் பாரம்பர்யத்தையும் அறிய வேண்டிய, பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் விளைவாகத்தான் இயற்கை விவசாயம், பாரம்பர்ய விதைகள், பாரம்பர்ய உணவு போன்றவற்றை நமக்கும், நம் வருங்காலத் தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயற்கை விவசாயிகளும், பாரம்பர்ய விதைப் பாதுகாவலர்களும், தன்னார்வ அமைப்புகளும் இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல், நாட்டு மாடுகள், சிறுதானியங்கள், பாரம்பர்யக் காய்கறிகள், பழங்களின் விதைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல கண்காட்சிகள், கருத்தரங்குகள் நடத்திவருகிறார்கள்.

அதன் ஓர் அம்சமாக கர்நாடக மாநிலம் மைசூரில் கிசான் ஸ்வராஜ் சம்மேளனம் நடத்திய மாபெரும் வேளாண் திருவிழா நவம்பர் 11 முதல் 13 வரை 3 நாள்கள் நடைபெற்றன.இந்தத் திருவிழாவில் வாழைப்பழங்கள், பாரம்பர்ய விதைகள், உருளைக்கிழங்குகள், சிறுதானியங்கள், பாரம்பர்ய நெல் விதைகள், காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இயற்கை விவசாயம், பருவநிலைக்கு உகந்த வேளாண்மை, உயிர்ச்சூழல் வேளாண்மை ஆகியவை குறித்த பயிற்சியும், மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கருத்தரங்குகளும் கண்காட்சியும் நடைபெற்றன.

மட்டி, செம்மட்டி, நீல ஜாவா - விவசாயிகளைக் கவர்ந்த வாழைத் திருவிழா!

நிகழ்வை ஒருங்கிணைத்த சகஜ சம்ருதா அமைப்பின் நிறுவனர் கிருஷ்ண பிரசாத்திடம் பேசினோம். அவர், “இந்தியாவின் 27 மாநிலங்களிலிருந்து 2000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பாரம்பர்ய விதைகளைப் பாதுகாத்து வரும் 75 விதைக் குழுக்கள், இயற்கை விவசாய அமைப்புகள் கலந்துகொண்டன. இந்தத் திருவிழாவில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. திருவிழாவின் முக்கிய அம்சமாக வாழைத் திருவிழா நடைபெற்றது. வாழைப்பழத்தின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியாவாக இருந்தாலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வாழைப்பழங்கள் நுழைந்துவிட்டன. வாழை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடாக இந்தியா இருந்துவருகிறது. என் நண்பர் வினோத் சுமார் 70 வகையான நாட்டு வாழை ரகங்களைத் திருவிழாவில் காட்சிப்படுத்தியிருந்தார். அவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

பாரம்பர்ய நெல் விதைகள்
பாரம்பர்ய நெல் விதைகள்

இதில் முக்கியமானவை கன்னியாகுமரியில் விளையும் மட்டி வாழை, தென்கிழக்கில் விளையும் நீல ஜாவா, தென்னிந்தியாவில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் செம்மட்டி உள்ளிட்டவை. வாழை விவசாயி வினோத் 400 வகையான வாழைகளைத் தன் நிலத்தில் விளைவித்தாலும் 70 வகையான வாழைப்பழ ரகங்களைத்தான் காட்சிப்படுத்த முடிந்தது. நம் நாட்டின் உயிர் பன்முகத்தன்மை எப்படி இருந்தது என்பதற்கு இதுவே சாட்சி. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாழைப் பழங்களை மக்கள் இலவசமாக சுவைத்துப் பார்ப்பதற்கும் வழங்கப்பட்டது. வேளாண் பல்கலைக்கழகங்கள் முன்னெடுக்க வேண்டிய விஷயங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். வாழை மட்டுமல்ல, நெல், காய்கறிகள், எண்ணெய் வித்துகள் என்று எல்லாவற்றுக்கும் பல நாட்டு ரகங்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் பணியைத்தான் நாம் செய்ய வேண்டும். இதற்கான ஒரு முயற்சியாக வேளாண் திருவிழா மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யிருக்கிறோம். இதை அரசுகள் கையில் எடுத்து இன்னும் வீரியமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

Iகிருஷ்ண பிரசாத் - Iஜெயச்சந்திரன்
Iகிருஷ்ண பிரசாத் - Iஜெயச்சந்திரன்

இந்த வேளாண் திருவிழாவில் தமிழ்நாட்டிலிருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அரியனூர் ஜெயச்சந்திரனிடம் பேசியபோது, “விவசாயத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தும் விதமாக இந்தத் திருவிழா அமைந்திருந்தது. விவசாயிகளுக்குப் புத்துணர்வும் பலவகை அனுபவங்களையும் கொடுத்தது. விவசாயிகள் தங்களிடம் இருக்கும் மரபு விதைகளைப் பரிமாறிக்கொண்டனர். ஆனால் ஒரு மாநிலத்தின் விவசாயி பேசுவதை இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தது. இந்த விழாவில் நடைபெற்ற கருத்தரங்குகள், உயிர்ச்சூழல் வேளாண்மையை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வாழைப்பழ ரகங்கள், அவற்றை விதைக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டின. தனி விவசாயி ஒருவரால் இவை எல்லாவற்றையும் எல்லாருக்கும் பரப்பிவிட முடியாது. அதனால், வாழை ரகங்களைப் பரவலாக்குவதற்கு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். நெல், காய்கறிகள், வாழை பற்றித் தெரிந்துகொள்ள பயனுள்ள நிகழ்ச்சியாக இது இருந்தது” என்றார்.

பரவட்டும் பாரம்பர்யம்...