வெற்றிலைக்கு பெயர் போன வத்தலக்குண்டு பகுதியில் வெற்றிலை சாகுபடி குறைந்துள்ள நிலையில் வாழை விவசாயத்தில் அப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கணவாய்ப்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, கோம்பை பட்டி, விருவீடு உள்ளிட்டப் பகுதிகளில் வாழை விவசாயம் நடந்து வருகிறது. வைகையாறு, மஞ்சளாறு, மருதாநதிகள் மூலம் வீரங்குளம், கன்னிமார் சமுத்திரம், ரங்கசமுத்திரம் உள்ளிட்ட 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இருப்பதால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரும் வாழை விவசாயத்துக்கு கிடைத்து வருகிறது.

வாழையில் வாழைத்தார், வாழை இலை, வாழை பூ, வாழை மட்டை நார் என அனைத்திலும் வருமானம் கிடைக்கிறது. 15 நாள்களுக்கு ஒரு முறை வாழை இலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு பண சுழற்சி இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் நெல் பயிரிடுவதைவிட அதிக பரப்பில் வாழை விவசாயம் நடந்து வருகிறது. இதில் நாட்டுக்காய், செவ்வாழை, ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி வகை வாழை சாகுபடி நடக்கிறது.
இதனால் வத்தலக்குண்டுவில் வாழைத்தார் விற்பதற்கு இரண்டு பெரிய வாழை சந்தைகள் உள்ளன. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடக்கும். இதில் ஒவ்வொரு சந்தைக்கும் 10 ஆயிரம் தார்கள் வரத்து உள்ளது. வாழைத்தார் வாங்க சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வத்தலக்குண்டுக்கு வருகின்றனர். அதேபோல வாழை இலையை விற்பதற்கும் இரண்டு சந்தைகள் உள்ளன. வாழைத்தார் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடையும் போது வாழைத்தார்கள் பழமாகி வீணாகும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் அரசு சார்பில் வாழைப்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைத்து தர வேண்டும் என்பது வாழை விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து வத்தலகுண்டுவைச் சேர்ந்த விவசாயி மரியலூயிஸிடம் பேசினோம். ''வத்தலகுண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் சந்தைக்கு வருகிறது. இதேபோல வரத்து அதிகரித்து விலை குறையும் காலங்களில் குளித்தலை, திருக்காட்டுபள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் அதிகமாக வத்தலகுண்டு சந்தைக்கு வருகிறது. வத்தலகுண்டு சுற்றுவட்டார விவசாயிகள் அதிகமாக வாழை சாகுபடி செய்கின்றனர். வாழை விலை மிகவும் குறையும் போது வெட்டுக் கூலி கூட கிடைப்பது இல்லை. இதில் சுமை கூலி, வண்டி வாடகை வேறு இருப்பதால் விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டாமல் கூட விட்டுவிடுகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மதிப்பிலான வாழைத்தார்கள் பழமாகி வீணாகிவிடுகிறது. சிலர் குளிர்சாதன வசதி கொண்ட குடோன் அமைக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது சரியான தீர்வாக இருக்காது.

மாம்பழத்தை கூழாக்கி சாக்லேட், கூல் டிரிங்ஸ் தயாரிப்பதால் தான் மாம்பழத்துக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கிறது. அதேபோல கோவாவில் வாழைப்பழத்தில் இருந்து பீர் தயாரிக்கப்படுவது போலவும், வத்தலகுண்டுவில் வாழைப்பழத்தை கூழாக்கும் தயாரிப்பு கூடம் அமைத்து கொடுக்க வேண்டும். அதில் இருந்து வாழைப்பழக் கூழ் எடுத்து, கூல் டிரிங்ஸ், வாழைப்பழ பவுடர், சாக்லேட் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரிக்க பயன்படுத்தி கொள்ளமுடியும்'' என்றார்.