Published:Updated:

3 ஏக்கர்... ரூ.15 லட்சம் லாபம்!இயற்கை வழி இலை வாழை சாகுபடி!

ஓங்கி உயர்ந்த வாழை இலைகளுடன் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
ஓங்கி உயர்ந்த வாழை இலைகளுடன் சீனிவாசன்

மகசூல்

3 ஏக்கர்... ரூ.15 லட்சம் லாபம்!இயற்கை வழி இலை வாழை சாகுபடி!

மகசூல்

Published:Updated:
ஓங்கி உயர்ந்த வாழை இலைகளுடன் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
ஓங்கி உயர்ந்த வாழை இலைகளுடன் சீனிவாசன்

ந்தவொரு தொழிலிலும் தனித்துவமான வியூகங் களைக் கடைப்பிடிப் பவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்குக் கூடுதல் லாபம் பார்த்து, தொழிலில் வெற்றிகரமாகப் பயணிக்கிறார்கள். இது விவசாயத்துக்கும் பொருந்தும்.

வாழைச் சாகுபடி என்று சொன்னாலே, பழங்கள் உற்பத்திதான் பிரதானமாக இருக்கும். வாழை விவசாயிகளில் பெரும்பாலானோர் அதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், இயற்கை முறையில் பூவன் வாழை இலை உற்பத்தியில் ஈடுபட்டு நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

அவரைச் சந்திப்பதற்காக, ஒரு பகல் பொழுதில் சென்றோம். அறுவடை செய்த வாழை இலைகளை, சிறு சிறு இலைகளாக நறுக்கி, கட்டுகள் போட்டுக்கொண்டிருந்த சீனிவாசன் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இளநிலை அறிவியல் பட்டப்படிப்புப் படிச்சிருக்கேன். நான் கல்லூரியில் படிச்சிக் கிட்டு இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டதால, விவசாயத்தைக் கவனிச்சிக் கிட்டே கல்லூரிப் படிப்பை முடிச்சேன். 1980-கள்ல விவசாயிகள்கிட்ட டிராக்டர் அதிகம் கிடையாது. சொந்தமா ஒரு டிராக்டர் வாங்கி, எங்களோட உழவுக்கும் பயன் படுத்திக்கிட்டு, மற்ற விவசாயிகளுக்கு வாடகைக்கும் கொடுத்தேன். அதுக்கு மிகப் பெரிய வரவேற்பு. நிறைய வருமானம் கிடைச்சிது. அடுத்தடுத்த ஆண்டுகள்ல டிராக்டர்களோட எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கிட்டே இருந்தேன். அதேசமயத்துல விவசாயத்துலயும் தீவிர கவனம் செலுத்தினேன். எங்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கு. நெல், வாழை, கரும்புச் சாகுபடி செஞ்சிகிட்டு இருக்கோம்.

ஓங்கி உயர்ந்த வாழை இலைகளுடன் சீனிவாசன்
ஓங்கி உயர்ந்த வாழை இலைகளுடன் சீனிவாசன்


1980 - 90 வரைக்கும் எங்க பகுதிகள்ல ரசாயன உரங்களோட புழக்கம் அதிகம் கிடையாது. அதுக்குப் பிறகுதான் அதிகமாச்சு. நானும் கூட அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தினேன். நிலம் மலட்டுத்தன்மை அடைய ஆரம்பிச்சதுனால, உற்பத்தி அளவைத் தக்க வைக்க, ரசாயன உரங்களுக்கு இன்னும் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாச்சு. படிப்படியா அதோட அளவைக் குறைச்சிக்கிட்டே வந்து, கடந்த 6 வருஷமா, நெல், வாழைச் சாகுபடியை முழுமையாக இயற்கை முறையில செஞ்சிக்கிட்டு இருக்கேன். கரும்பையும் கூடிய சீக்கிரத்துல முழுமையாக இயற்கைக்கு மாத்திடுவேன்’’ என்று அறிமுகம் சொன்ன சீனிவாசன், ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். ‘பாரம்பர்ய நெல் ரக விளைச்சலால் உற்சாகமான தஞ்சை விவசாயி’ என்ற தலைப்பில் 2019-ம் ஆண்டு இவரைப் பற்றிய கட்டுரை வெளியானது. மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி அனுபவம் குறித்து அதில் பதிவு செய்திருந்தார். தற்போது பூவன் வாழை இலை சாகுபடி அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

விலையைக் குறைக்கும் வியாபாரிகள்

‘‘6 வருஷத்துக்கு முன்னாடி நானும்கூட ரசாயன முறையில் ரஸ்தாலி, பச்சைநாடன், கற்பூரவள்ளி, பூவன் வாழைச் சாகுபடி செஞ்சேன். என்னோட அனுபவத்துல அதுல ஏகப்பட்ட இடர்ப்பாடுகள். தார்கள் நல்லா தரமா வரணும்ங்கறதுக்காக, ரசாயன உரங்களுக்கு நிறைய செலவு பண்ணுவேன். ஆனாலும் கூட, ‘தார்கள் பார்வையா இல்ல, புள்ளிகள் விழுந்திருக்கு, நிறம் குறைவா இருக்கு’னு விதவிதமான காரணங்களைச் சொல்லி வியாபாரிகள் விலையைக் குறைப்பாங்க. வாழை விவசாயிகள் நிறைய பேர், தார்கள் கொண்டு வர்றதுனால, சந்தையில மலிஞ்சிப் போயி போட்டி அதிகமாக இருக்கும். இதைப் பயன் படுத்திக்கிட்டு வியாபாரிகள் முடிஞ்சவரைக்கும் விலையைக் குறைச்சிடுவாங்க.

வாழைத்தோட்டம்
வாழைத்தோட்டம்


இலை சாகுபடியில் இம்சை இல்லை

என்னோட தார்கள் சில சமயங்கள்ல 50 ரூபாய்க்குக் கூட விலை போயிருக்கு. அப்போதெல்லாம் மனசுக்கு வருத்தமா இருக்கும். பெரும்பாலும் ஒரு தாருக்கு, சராசரியா 250 ரூபாய்தான் விலை கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஆயிரம் தார்கள் உற்பத்தி செஞ்சோம்னா, ரெண்டரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதுல எல்லாச் செலவுகளும் போக, ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அந்த லாபத்தைப் பார்க்க, 12 மாசம் காத்திருக்கணும். தார்களோட கணத்துனால, வாழைமரங்கள் கீழே சாயாமல் இருக்க, முட்டுக் கொடுக்கணும். இதுக்கு நிறைய செலவு செஞ்சாகணும். அப்படியே செலவு செய்தாலும் காற்று வேகமா அடிச்சு, வாழை மரங்கள் கீழே சாய்ஞ்சு கடுமையான நஷ்டத்தைச் சந்திச்சிருக்கேன். ஆனால், இலை உற்பத்தியில் அதுமாதிரியான பிரச்னைகள் எதுவுமே இல்ல. எப்போதும் ஒரே மாதிரி நிரந்தர விலை கிடைக்குது. பெரும்பாலும் விலை குறைவு ஏற்படாது. விஷேச காலங்கள்ல கூடுதல் விலை கிடைக்கும். வருமானம் பார்க்க, வருஷம் முழுக்கக் காத்திருக்க வேண்டிய தில்ல. அன்றாடம் வருமானம் பார்க்கலாம். வாழைத்தார் உற்பத்தியை எதிர்பார்க் காததால, குறைவான அளவு இயற்கை இடுபொருள்கள் கொடுத்தாலே போதும்... இலைகள் நல்லா செழிப்பா, வாளிப்பா, அகலமா கிடைச்சிடுது.

‘‘ஓர் இலை சராசரியா 7 அடி நீளம் இருக்கும். இதுல 2 அடி நீளம் கொண்ட ஒரு நுனி இலை, தலா 2 அடி நீளம் கொண்ட 4 ஏடு, தலா 1 அடி நீளம் கொண்ட டிபன் ஏடு நறுக்குவோம்.’’சென்னை, பெங்களூரு செல்லும் இலைகள்

ரசாயன முறையில் உற்பத்தி செய்யப்படும் வாழை இலைகள் சீக்கிரத்துல வாடி வதங்கிப் போயிடும். ஆனால், நான் இயற்கை முறையில் உற்பத்தி செய்றதுனால, என்னோட இலைகள், சீக்கிரமா வாடிப்போகாது. என் தோட்டத்தோட இலைகள் மொட மொடப்புத் தன்மை இல்லாம, நல்லா இலகுவா இருக்குறதுனால, ஹோட்டல்கள்ல பார்சல் கட்ட இதை அதிகமாக விரும்புறாங்க. நான் உற்பத்தி செய்யக்கூடிய இலைகளைத் தினம்தோறும் சென்னை, பெங்களூருக்கு அனுப்புறேன்’’ என்றவர் வாழை தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

வாழை இலை அறுவடை
வாழை இலை அறுவடை

ஒரு ஏக்கர் 4,000 வாழைகள்

‘‘மூணு ஏக்கர்ல பூவன் இலை உற்பத்தி செய்றேன். இது, 5 வருஷத்துக்கு முன்னாடி கன்றுகள் நடவு செஞ்சது. தலா 6 அடி இடைவெளியில ஏக்கருக்கு 1,200 பூவன் வாழைக்கன்றுகள் நடவு செஞ்சோம். அதுல 1,000 வாழை மரங்கள் நல்லா தரமாகத் தேறி வந்துச்சு. நடவு செஞ்ச 8-ம் மாசத்துல இலைகள் அறுக்க ஆரம்பிச்சோம். ஒவ்வொரு வாழையில இருந்தும், வருஷத்துக்கு 5 முதல் 10 பக்க கன்றுகள் உருவாகும். அதுல தரமான 4 கன்றுகளை மட்டும் வச்சிக்குவோம். ஒரு குத்துக்கு 4 வாழைகள் வீதம் ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு, 4,000 வாழைகள் வளர்ந்து, இலைகள் கொடுக்குது. ஒரு ஏக்கர்ல இருந்து தினமும் 500 முழு இலைகள் வீதம் அறுப்போம். ஒரு வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 250 நாள்கள் வீதம், 1,25,000 இலைகள் கிடைக்கும்’’ என்றவர் வருமானக் கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.

ஓர் இலை மூலம் 12 ரூபாய்

‘‘ஓர் இலை சராசரியா 7 அடி நீளம் இருக்கும். இதுல 2 அடி நீளம் கொண்ட ஒரு நுனி இலை, தலா 2 அடி நீளம் கொண்ட 4 ஏடு, தலா 1 அடி நீளம் கொண்ட டிபன் ஏடு நறுக்குவோம். நுனி இலை 3 ரூபாய், சாப்பாட்டு ஏடு தலா 2 ரூபாய், டிபன் ஏடு தலா 50 பைசா வீதம் விலை போகும். ஆக மொத்தம் ஒரு முழு இலைக்கு 12 ரூபாய் விலை கிடைக்கும். விஷேச காலங்கள்ல இதைவிடக் கூடுதலாகவும் விலை கிடைக்கும். சில நாள்கள்ல 1 - 2 ரூபாய் விலை குறைவாகுறதுக்கும் வாய்ப்பிருக்கு.

செலவு-வரவு கணக்கு
செலவு-வரவு கணக்கு


முழு இலை ஒண்ணுக்குக் குறைந்தபட்சம் 10 ரூபாய் வீதம் 1,25,000 இலைகள்மூலம் 12,50,000 வருமானம் கிடைக்கும். இலை அறுக்க, துண்டுகள் நறுக்க, கட்டுக்கட்ட, மார்க்கெட்டுக்குக் கொண்டு போக 6 லட்சம் ரூபாய் செலவாகும். இதோடு, வாழைத்தோட்டம் பராமரிப்புச் செலவு எல்லாம் சேர்த்து ஏக்கருக்கு மொத்தம் 7,50,000 ரூபாய் செலவாகிடும். மீதி 5 லட்சம் ரூபாய் நிகர லாபமாகக் கையில மிஞ்சும். மூணு ஏக்கருக்கும் சேர்த்து 15 லட்சம் ரூபாய் கிடைக்கும். இலைகள் அறுக்க, கட்ட ஆள்கள் கிடைக்கிற பகுதிகள்ல தாராளமா வாழை இலை சாகுபடியில் இறங்கலாம்’’ என்றவர் இலைகளைக் கட்டும் பணியில் கவனம் செலுத்தவே, நாம் வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.


தொடர்புக்கு,
சீனிவாசன்,
செல்போன்: 94431 08174.

வாழை இலை சாகுபடி தொழில்நுட்பங்கள்..!

வாழை இலை உற்பத்திக்கு, பூவன்தான் சிறந்த ரகம். இது நீளமாகவும் அகலமாகவும் நல்லா நிறத்துல இருக்கும்.

வாழைச் சாகுபடிக்கு வடிகால் வசதியுடைய மேட்டு நிலம் மிகவும் அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நன்கு ஆழமாக உழவு ஓட்டித் தலா 6 அடி இடைவெளியில் 1.5 அடி சுற்றளவு, 1.5 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். கன்று நடவு செய்து, அதன் மீது மண்ணைப் போட்டு மூடி, கால்களால் நன்கு மிதிக்க வேண்டும். இரு வாழை வரிசைகளுக்கு இடையே, நடுப்பகுதியில் 3 அடி அகலம், அரையடி ஆழத்தில் வாய்க்கால் எடுக்க வேண்டும். இதற்கு அடுத்துள்ள இரண்டு வாழை வரிசைக்குக் குழி எடுக்கக் கூடாது. அது மேட்டுப்பகுதியாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த இரண்டு வரிசைக்கு நடுவில் வாய்க்கால் எடுக்க வேண்டும். இதுபோல் வாய்க்கால் அமைத்த பிறகு, தண்ணீர் விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். வாய்க்காலில் நாம் தரும் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. மண்ணை நனைத்துவிட்டு ஓடும் அளவுக்கு மட்டும் தண்ணீர் தர வேண்டும். 40, 160 மற்றும் 210 ஆகிய நாள்களில் ஒரு குத்துக்கு 5 கிலோ வீதம் எரு வைக்க வேண்டும். 8-ம் மாதத்திலிருந்து இலைகள் அறுக்கத் தொடங்கலாம். அதன் பிறகு மேலே சொன்னவாறு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு முறை கன்றுகள் நடவு செய்து, இயற்கை முறையில் சாகுபடி பணிகளை மேற்கொண்டால் அடுத்த 6 - 10 ஆண்டுகள் வரை இலை உற்பத்தி மேற்கொள்ளலாம். இதனால் உழவு, குழி எடுப்பு, கன்றுச் செலவு மிச்சமாகிறது.

வாழைச் சருகுகள்
வாழைச் சருகுகள்

இலை அறுப்புக்கு ஆள்கள் கிடைப்பது சவால்

இலை சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லிய சீனிவாசன், ‘‘வாழை இலை அறுப்புக்குத் தினம்தோறும் ஆள்கள் தேவைப்படுவாங்க. இலையைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கட்டுகள் கட்டவும், வேலையாள்கள் தேவைப்படுவாங்க. இதுக்கு வாய்ப்புள்ள விவசாயிகள் மட்டும்தான் இதுல ஈடுபடணும். இலையைச் சரியான பக்குவத்துல உரிய நேரத்துல அறுக்கலைன்னா, தரம் இழந்துடும். இலைச் சுருளாக இருக்கும்போதே அறுத்திடணும். விரிய ஆரம்பிச்சிடுச்சுனா, அறுக்கறது கஷ்டம். கிழிய ஆரம்பிச்சிடும். விரிஞ்ச இலைகளை, ஒருவேளை பாதிப்பு இல்லாமல் அறுத்தாலுமே கூட, அதுல மென்மை தன்மை இருக்காது. அதைக் கையாளும்போது கிழிஞ்சிடும். வாழை இலைகள், நல்லா மென்மையாகவும், வெளிர் மஞ்சள் மற்றும் வெளிர் பச்சை கலந்த நிறத்துல இருந்தால்தான் அது தரமான இலைகள். இதுமாதிரியான இலைகளைத்தான் வியாபாரிகளும் ஹோட்டல்காரங்களும் விரும்பி வாங்குவாங்க’’ என்றார்.

வழை இலைகள்
வழை இலைகள்

இயற்கை களைவிரட்டி

‘‘அதிகமாகக் களைகள் மண்டிடுச்சினா, எல்லாச் சமயங்கள்லயும் ஆள் வச்சி களை எடுக்க முடியாது. களைகளைக் கட்டுப்படுத்த, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட களை விரட்டியைப் பயன்படுத்துறேன். 20 லிட்டர் மாட்டு சிறுநீர்ல 2 கிலோ உப்பு, 6 எலுமிச்சைப் பழங்கள்ல இருந்து பிழியப்பட்ட சாறு கலந்து 15 நாள்கள் மூடி வச்சி, தினமும் கலக்கி விடணும். கருமை நிறத்துல ‘டிக்காஷன்’ போல மாறிடும். இதை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து தெளிப்பான் மூலம் நிலம் முழுக்கப் பரவலாகத் தெளிக்கணும். அடுத்த ஒரு வாரத்துல களைகள் வாடி வதங்கி மண்ணுக்கு உரமாக மாற ஆரம்பிச்சிடும். இயற்கை களைவிரட்டியால், வாழைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. காரணம், வாழை நீண்டகாலப் பயிர்... ஆனால் களைகள் சில வாரங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். அதனால்தான் களைவிரட்டியால் களைகளைக் கட்டுப்படுத்த முடியுது. களைகள் அதிகமாக உள்ள பகுதியில மட்டும்தான் இதைத் தெளிப்போம், வாழை மேல படுவதற்கு வாய்ப்பே இல்ல. ஆனால், ரசாயன களைக்கொல்லி பயன்படுத்தினால், பிரதான பயிர்களோட வீரியம் குறைந்துவிடும். மண்ணுல உள்ள நுண்ணுயிர்கள் செத்துப்போயிடும்’’ என்கிறார் சீனிவாசன்.

காய்ந்த சருகுகளே உரம்

“கோடைக்காலத்துல ஏக்கருக்கு 10 டன் வீதம் எரு போடுவோம். மண்ணின் இறுக்கத்தைக் குறைத்து, காற்றோட்டத்தை ஏற்படுத்தவும், பழைய வேர்கள் அறுபட்டு, புதிய வேர்கள் உருவாகவும், 3 மாசத்துக்கு ஒரு தடவை பவர் டில்லர்ல உழவு ஓட்டுவோம். தேவைக்கு ஏற்ப ஆள்கள் மூலம் களையெடுத்து, மண் அணைப்போம். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொடுப்போம். வாழை மரங்கள்ல உள்ள காய்ந்த சருகுகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை உரிச்செடுத்து, தோட்டத்துலயே போட்டு, அது மேல மண்ணைப் போட்டு, உரமாக்கிடுவோம்” என்கிறார் சீனிவாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism